இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

VVV-2

sudhahari

Moderator
Staff member

அத்தியாயம் - 2

காலையில் எழுந்தவுடன் எப்போதும் போல் தன் இரு கைகளையும் சேர்த்து தேய்த்து விட்டு, விழிகளைத் திறந்தார், கிருஷ்ணன். அவர் படுக்கைக்கு நேர் எதிரில் அவரின் சரிபாதி புன்னகை முகமாய் நான்கு சட்டத்திற்குள் அடங்கி இருந்தார்.
மணமான நான்கு வருடத்தில் சஹானாவை கையில் கொடுத்து விட்டு, மரணத்தை தழுவி இருந்தார். அவர் இறந்த பின் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து வந்து மறுமணம் செய்யச் சொல்ல, தன் இல்லாளுடன் வாழ்ந்த நான்கு வருடங்கள் போதும் என, சஹானாவை அணைத்துக் கொண்டார். ஓர் கட்டத்தில் அனைவரும் சொல்லி சொல்லி ஓய்ந்தும் போயினர்.
இதோ சஹானாவும் இருபதின் தொடக்கத்தில் இருக்க, வாழ்க்கை சற்று வேகமாய் செல்கிறதோ என எப்போதும் போல் இப்போதும் தோன்ற, புன்னகையுடன் எழுந்தவர். மனைவியின் புகைப்படம் பார்த்து,

“குட் மார்னிங் வேதா.” என சொல்லிக் கொண்டே, அவரிடம் ஓர் தலையசைப்போடு வெளியே வந்தார்.

நேரத்தை பார்த்துக் கொண்டே மகளின் அறையைத் திறக்க, அது இருக்கும் கோலம் கண்டு “சஹா” என இறைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டே எழுப்ப,

“பா, குட் நைட்”

“என்ன குட் நைட்டா! டேய் பாப்பா! மணி எட்டு. இன்னைக்கு ஏதோ ஆர்டிகில் சப்மிட் பண்ணணும் சொன்ன”

“யாரு?” என்றாள் கண்களைத் திறவாமலே,

“நீ தான்” என சிரிப்புடன் அவளின் அருகில் அமர,

“பா, நான் யாரு?” என்றாள் அவர் தோளில் சாய்ந்து,

“என் பொண்ணு”

“பா”

“ம்ம்ம்”

“நான் நைட் தூங்கவே இல்லை தெரியுமா!”

“ஏன்?”

“ப்ச்” என்றவள் சட்டென அவரை விட்டுத் தாவி, அருகில் இருந்த கைபேசியை எடுத்து மீண்டும் ஒரு முறை அனைத்து ஊடகங்களில் தேடி, “பா காணோம்.” என்றாள்.

“என்ன டா சொல்ல வர, ஒன்னும் புரியல. சொல்றதை பிட்டு பிட்டா சொல்லாம, ஒழுங்காச் சொல்லு.”

“பா, நேத்து நைட் உனக்கு உன் கோட்டா கொடுத்துட்டு வந்தேனா!”

“ம்ம்ம்”

“அப்புறம் நான் கொஞ்சம் ஆர்டிகில் விஷயமா தேடிட்டு இருந்தேன். தூக்கம் வந்தது. சரி, அப்படியே சோசியல் மீடியாகுள்ள போனேன். அப்போ திடீர்னு ஒரு வீடியோ வந்தது. சரி என்னடான்னு ஓபன் பண்ணுனேன். பா, சொன்னா நம்ப மாட்ட, செம்மையா ஒரு பையன், கொத்தா மாட்டிக்கிட்டான்.”

கிருஷ்ணன் அவள் பேசும் போது அசையும் விழி அசைவை பார்த்துக் கொண்டே, “அது என்னடா கொத்தா?”

“பா, உனக்கு இது கூட தெரியாமத்தான் இத்தனை வருஷமா சுத்திட்டு இருக்கியா சென்னையில? போ பா.”

“சரி, அப்புறம் என்னாச்சு?”

“என்னாச்சா அவனைக் காணோம் பா, காணோம். பா, என்ன பிசிக் தெரியுமா? அதிலயும் ஒரு போலீஸ் கூட்டமே வந்து நிக்குது. அப்படி திமிரா ஓர் லுக், பின்ன எடுத்து கூலர்ஸை மாட்டி, பா, சான்ஸே இல்லை. பார்க்க நம்ம ஊர் பையன் போல தான் தெரிஞ்சான்.”

“என்னடா போலீஸ் வந்ததுன்னு சொல்ற ஒருவேளை ரௌடியோ?”

“இருக்கட்டுமே!”

“சஹா நீ படிக்கிறது ஜர்னலிசம். ரௌடி பையன் மேல க்ரஷ், நல்லா இருக்கு.” என்றார் சிரிப்புடன்,

“பா, அது என் ப்ரோபஷன். இது என் லைப்.”

“சஹா!”

“பா”

“என்ன இது லைப் அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு. இது போதும் போய் ரெடியாகு. இனி அவனைப் பத்தி பேசாத.” என்றார்.
எப்போதும் தான் பார்த்த ஆண்களைப் பற்றி விமர்சிப்பவள் தான். எனினும் இன்று ஏனோ அவள் கண்களில் தோன்றிய ஏதோ ஒர் ஆர்வம் அவரை கலவரமடையச் செய்தது.

ஓர் தந்தையாய் அவள் வாழ்க்கையின் மீதான பாதுகாப்பு உணர்வு அவளை கண்டிக்க,

“பா, ஐ நோ வாட் ஐ டூ. நான் குளிச்சிட்டு வரேன். இன்னைக்கும் நீ எப்போதும் போல உப்புமாவை கிண்டாம, வேற பண்ணு.” என சிரிப்புடன் உள்ளே சென்றாள்.

செல்லும் மகளைப் பார்த்தவர், மகளின் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை என அனைத்தும் தெரிந்தவர் தான். இந்த செல்லப் பேச்சுக்கள், குழந்தை என அடம் பிடிப்பதும் எல்லாம் அவரிடம் மட்டுமே! ஏன்? ஆண் நண்பர்கள் என்றாலும் கூட அதன் எல்லைக்குள் வைக்கும் கெட்டிக்காரி, அவள். அவளைப் பற்றிய நம்பிக்கை தான், என்ஜினீயரிங் சேர்ந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவர் முன் வந்து தனக்கு ஊடகத் துறையில் தான் விருப்பம் என்ற போது, தலையசைக்க வைத்தது.

ஆனால் யாரையும் இத்தனை எளிதில் வியக்காதவளின் மனதில், எங்கோ இருக்கும் யாரோ ஒருவன் மீது தோன்றிய இந்த ஆர்வம், அவள் விழிகளில் தெரிந்த ஏதோ ஓர் உணர்வு எல்லாம், மீண்டும் அவரை குழப்பமடைய செய்ய, மகளின் மேல் உள்ள நம்பிக்கையில் எழுந்து சென்றார்.

தந்தையின் அதட்டல் குரலில் அவரிடம் விடை பெற்று வந்தவள், எண்ணத்தில் எல்லாம் விஷ்வஜித்தே ஊர்வலம் செல்ல, நேற்றைய நிகழ்வை எண்ணிக் கொண்டாள்.

இறுதியாண்டு ஜெர்னலிசம் துறையில் இருப்பதால் பகுதி நேர வேலையாக அந்த பிரபலமான பத்திரிகையில் சேர, அதற்காக அவ்வார ஆர்டிகில் எழுதுவதற்காக தேடிக் கொண்டிருக்க,

சட்டென கண்களில் பட்ட வீடியோவை ஓட விட்டு, பேப்பரை தேடிக் கொண்டே நிமிர்ந்தவள் கண்டது, அவன் அசாத்திய உயரமும், அவன் அமர்ந்த விதமுமே!

‘யார் இவன்?’ என அவள் அலைபேசியை கையில் எடுக்க,

சட்டென, அந்த வீடியோ நின்றதும் இல்லாமல், யார் அனுப்பினவர்கள் என்று கூடத் தெரியாமல் போக, அவ்விரவு அவளுக்கு தூங்கா இரவாகிப் போனது.

தன்னவனைப் பற்றிய தேடலில் அவளிருக்க, அவள் தேடலின் நாயகனோ, வருண் முன் பவ்யமாய் நின்று கொண்டிருந்தான்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க மிஸ்டர் விஷ்வஜித்?” என்றான்,
அவன் விழிகளைப் பார்த்து குரலில் அடக்கப் பட்ட கோபம்,

“நின்னுட்டு தானேடா இருக்கோம்.” என்றான் மெலிதாய் அருகில் நின்ற ஜெய்யின் காதினில்,

“விஷ்” என்ற ஜெய்யின் குரலில்,

“ரைட்டு விடு” என்றவன், “எப்போ எங்க?” என்றான்.

“நேத்து நீங்க பார்ல என்ன பண்ணிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன்?” என்றான் வருண்.

“அங்க போய் எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ, அதைத் தான், நான் செஞ்சேன்.”

வருண் எழுந்து நிற்க,
எப்போதும் போல் அவனின் கம்பீரம் விஷ்வஜித்தை ஈர்க்க, விழி நோக்கிப் பார்த்தான்.

“விஷ்”

“ப்ச் ... என்னடா?” என்றான் நண்பனிடம்,

“டேட் உன்னை முறைக்கிறார்டா”

“சோ வாட், நான் அவரை சைட் அடிக்கிறேன்.”

“அடேய்!” என சொல்லிய ஜெய், சற்று சத்தமாய் சிரித்ததும்,
வருண் இருவரையும் முறைத்துப் பார்த்து, “உங்க முன்னாடி நிக்கறது உங்க சுப்பீரியர் மிஸ்டர். ஜெய்” என்றான்.

“சாரி சார்.” என ஜெய் சொல்லியதும், வருண் விஷ்வஜித்தைப் பார்க்க,.

அவன் விழிகளோ தயங்காமல் எதிர் பார்வை பார்த்தது.
வருண் கைகள் தன்னைப் போல் அருகில் இருந்த பேப்பர் வெய்ட்டை சுற்றிக் கொண்டே “இன்னும் நான் கேட்டதுக்கான பதில் வரலை.”

“சார், இந்த மனித உரிமை விசாரணைக் கமிஷன், என்னை டென்ஷன் பண்ணிச்சு. சோ கூல் பண்ண பார் போனேன். இதுக்கெல்லாம் கேள்வி கேட்பீங்களா?”

“நீங்க பார் போனது பிரச்சனை இல்லை. பின்ன அதுக்கு அப்புறம், ஏன் அங்க அப்படி ஒரு சண்டை வந்தது. சொல்லப் போனா நீங்க தான் முதல்ல அவனைத் தாக்கி இருக்கீங்க.”

“எஸ் அப்கோர்ஸ், நான் தான் அவனை முதல்ல அடிச்சேன். என் பெயரை தப்பா சொன்னான். அதான் அடிச்சேன்.” என தோள்களை குலுக்க,

“ஓ... இன்ட்ரெஸ்டிங்! சரி அப்போ அதுல முக்கியமான அந்த ஒருத்தன் எங்க?”

ஜெய் அதிர்ந்து விழிக்க, விஷ்வஜித்தோ சற்று அதிர்ந்தவன், ஒரு வேளை போட்டு வாங்கறாரோ என்ற எண்ணம் தோன்ற,

“யாரு? எனக்குத் தெரியாது. ஜெய் வரும் போது யார் இருந்தாங்களோ, அவங்களை மட்டும் தான் எனக்கும் தெரியும்.”

“ஆஹான்..” என்ற வருணின் வார்த்தையின் அழுத்தம், உன்னை நானறிவேன் என்பதை சொல்லாமல் சொல்ல,

இனி மறைப்பது பயனில்லை என எண்ணிய பின் “அவன் ஒன்னும் தியாகி இல்லை.” என்றான் விஷ்வஜித் எங்கோ பார்த்துக் கொண்டு,
“ஓ... அதைச் சொல்ல நீங்க கோர்ட் இல்லை மிஸ்டர்.விஷ்வஜித்.

நீங்க வேணா என்கவுண்டர்ல பெரிய ஆளா இருக்கலாம். பட் நீங்க இழக்கின்ற ஒவ்வொரு தோட்டக்களுக்கும் பதில் சொல்லணும்.” என்றான் இடக்காய்,

“செக் மை கன். என்னோடது எல்லாம் கரெக்ட்டா இருக்கு.” என விஷ்வஜித், ஜெய் முகம் பார்த்து கண் சிமிட்ட,

ஜெய் முகம் வெளிர, வருணுமே சற்று அதிர்ந்து தான் போனான்.

“விஷ்...” என்றான் அலறிய படி,.

“யா, மிஸ்டர் ஜெய்!” என்றான் விஷ்வஜித் நக்கலாக,

“விஷ்வஜித்” என்ற வருணின் குரலில்,

“வெல், நான் அவனை ஒன்னும் பண்ணலை. ஆனா, ஒன்னுமே பண்ண முடியாத படி செஞ்சிட்டேன். தட்ஸ் இட்.” என முடிக்க,

“நீ யார் மேல கை வைச்சிருக்க தெரியுமா?” என்றான் வருண்.
“ஓ... நல்லாத் தெரியும், ஸ்கூல்ஸ் காலேஜ் பசங்களுக்கு போதை மருந்து சப்ளை பண்ற கேங்க்ல இருக்க, ஒரு பொறுக்கி மேல” என அனைத்து ஆங்கில வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவனை, ஜெய்யின் “விஷ்” என்ற அழைப்பு நிறுத்தியது.

அவனின் ரௌத்திரத்தை வருண் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

விஷ்வஜித் இருவரையும் ஓர் முறை பார்த்து “அவ்ளோ தானா! ஐ கேன் லீவ் நவ்” என அறையில் இருந்து வெளியே வந்தான்.
அவன் சென்றதும் “டேட்” என்றான் ஜெய்,

விஷ்வஜித் செல்வதை பார்த்து கொண்டு இருந்த வருண் “எஸ் ஜெய்” .

“உண்மையிலே அவன் உயிரோட தான் இருக்கானா? இல்லை, செத்துட்டானா?” என்றான் நண்பனின் குணம் அறிந்து,

வருண் இதழ்கள் விரிய “அதான் உன் ஃப்ரெண்ட் சொல்லிட்டுப் போனானே, இருப்பான். ஏன் இருக்கோம் என்று தெரியாம இருப்பான்.”.

“இவனை” என்ற ஜெய் பல்லைக் கடிக்க,

“அவன் காட்டாறு ஜெய். உன்னால அவனை கண்ட்ரோல் பண்ண முடியாது. லீவ் இட்.”

“டேட்” என்றான் மீண்டும்,

“சொல்லு...”

“உங்களுக்கு எப்படி தெரியும் இன்னும் ஒருத்தன் அங்க வந்தான்னு.”
வருண் இதழ்கள் மீண்டும் விரிந்து “அவனை அனுப்புனவனே என்கிட்ட அவனைக் கேட்கிறான்.” என்றவன், நேற்று ஜெய்யை அனுப்பியதும் வந்த அழைப்பைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.
ஜெய்யை அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு அனுப்பியவன் வேலையில் கவனம் வைக்க,.

அவன் அலைபேசி அழைத்ததும் எடுத்து,

“வருண்” என்றான்.

“என்ன ஐ.ஜி சாப், என்கிட்டவே விளையாட்டு காட்டுறீங்களா?”

“யார் நீ?”

“உன் பையனை அனுப்பி ரெய்டு பண்ண சொன்ன, அதோட அடங்க மாட்டியா, எதுக்கு சோப்ராவை தூக்கின?”

“யார் அது சோப்ரா?” என்றவன் விழிகள் கைக்கடிகாரத்தைப் பார்த்தது, ஜெய் கிளம்பி அந்த ஹோட்டலுக்கு செல்லவே பத்து நிமிடம் பிடிக்கும் எனும் போது, ‘யார் இவன்?’ என்ற கேள்விகளை தொடர்ந்து அவன் மூளை செல்ல,

“வருண் விளையாடாத..”

“ப்ச்.. உன் கூட விளையாட, நீ எனக்கு மாமன் மச்சான் பாரு இடியட். உனக்கு என்ன சொல்லனுமோ அதைச் சொல்லு. இல்லயா போனை வச்சிட்டு போ!” என்றான் கடுப்பாய்.

“வருண் கடைசி முறையா கேட்கிறேன் எனக்கு அவன் வேணும். உங்க பிளான் படி பத்தரைக்குத் தானே எங்க ஆட்களை தூக்க பிளான் பண்ணிங்க. அதைச் செய்யாம இது என்ன பிளான் பி யா” என அவன் சொன்னதுமே,

வருண் செவிகள் கூர்மையாயின.
“என்னடா நீங்க போட்ட பிளான் எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு யோசிக்கிறீயா? நீ மட்டும் தான் எங்க கூடத்துல ஆள் வைப்பியா. ஏன் உங்க ஆட்கள்ல ஒரு கருப்பு ஆடு இருக்கக் கூடாதா!”

என சிரித்தவன் “சொல்லு சோப்ரா எங்க?” என்றான் மீண்டும் கலவரமாய்,

வருண் நன்றாக நாற்காலியில் சாய்ந்து சிரித்த படி, “இவ்ளோ தெரிந்த உனக்கு, இதுவும் தெரியணுமே! யார் உன் ஆளை தூக்கினதுன்னு”

“வருண்” என கோபமாய் அழைத்ததும்,

“ப்ச்... வேணும்னா அவன் பேரை மட்டும் சொல்லட்டுமா? விஷ்வஜித்... விஷ்வஜித் பிரபாகரன்.” என சொல்லி வைத்ததும்,
வருண் விழிகள் தன்னால் மூடிக் கொண்டது. வருண் அறிவான், இந்தக் காரியத்தை அவனைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்பதை.

மீண்டும் அவன் இதழ்கள் “விஷ்வஜித் யூ ஆர் இம்பாசிபில் மேன்” என அவன் நம்பரை ட்ராக் செய்ய,

அது இருக்கும் இடம் பார்த்ததும், அனைத்தும் அவன் வேலை தான் என்பதை உறுதி செய்ததை ஜெய்யிடம் கூற,

“டேட் எனக்கு அவன் வேகம் எப்போவும் ஒரு வித பதட்டத்தைக் கொடுக்குது.” என்றான் நண்பனாய்,

வருண் எழுந்து வந்து ஜெய்யின் தோள்களில் தட்டி,
“வேகம் இருக்கணும். அதே நேரம் விவேகமும் இருக்கணும் அண்ட் விஷ்வஜித் காண்ட் பி கண்ட்ரோல். அவனை அவன் போக்கிலே விடு”

என்றவன் மனதும், அவன் வேகத்தைக் கண்டு மிரண்டு தான் போனது.

 
Back
Top