இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

தண்மதி ராஜா கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம்-24


"என்னடா ஒரு ரவுண்ட் போதுமா? ஜாகிங் பண்ணாம உட்கார்ந்துட்ட?!" தோட்டத்து கல் பெஞ்சில் அமர்ந்திருந்த ஜகதீஷை பார்த்து, மூன்றாவது ரவுண்ட் சுற்றி வந்த கௌதமன் மூச்சை இழுத்து விட்டு கொண்டே கேட்க, விடியலின் ரேகைகள் எட்டிப்பார்க்க தொடங்கியிருக்கும் வைகறைப்பொழுது கூட மனதிற்கு இதம் தராமல், ஜகதீஷை மாலினியின் நினைவே துரத்தி கொண்டிருந்தது. அதுவும் அஷ்வின் நேற்று நடந்து கொண்ட விதத்தில், ' தனது எண்ணத்தை ஏதும் ஊகித்து விட்டாரோ?' என்ற கலக்கமும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் அமர்ந்திருந்தான்.

முதல்நாள் தனது நண்பன் குமாருடன் வேக வேகமாக வேலையை முடித்து விட்டு வந்தவன், அரண்மனைக்குள் கூட செல்லாது நேராக மாலினியின் வீட்டுக்கு தான் சென்றான்.

ஹாலின் டைனிங் டேபிளில் அமர்ந்து காய்களை வெட்டி கொண்டிருந்த வாணி," அடடே.. வாங்க தம்பி.. " மகிழ்ச்சியுடன் அவனை‌ வரவேற்க, வீட்டுக்குள் நுழையும் போதே, மாலினி எங்கும் தென்படுகிறாளா?! என பார்த்து கொண்டே புன்னகையுடன் உள்ளே நுழைய, மகளின் அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் அஷ்வின்.

"உட்காருங்க தம்பி.. உங்ககிட்ட ஏதோ டவுட் கேட்கனுன்னு காலைல இருந்து எல்லாத்தையும் எழுதி வச்சிட்டிருந்தா மாலினி... இன்னைக்கு நீங்க இருந்து இங்க சாப்பிட்டுட்டு தான் போகனும்.." வாணி சமையலறைக்கு போக எழுந்து கொள்ள,

"அச்சோ.. அதெல்லாம் வேண்டாம் ஆன்டி..." ஜகதீஷ் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன் மறுத்து கொண்டிருக்க,

"வாங்க ஜகதீஷ்... " அஷ்வின் வரவேற்கும் விதமாய் புன்னகைத்தவர், அவனருகே அமர, அவரைப் பார்த்து இதழ் பிரித்தாலும், தேடி வந்தவள் மட்டும் கண்ணில் படவில்லை.

"பார்க்க ரொம்ப களைச்சு போய் தெரியறிங்களே?! " அஷ்வின் அவனது தோற்றத்தை பார்த்து கேட்க,

"ஆமா சார்.. காலேஜ் ஃப்ரெண்டை பார்த்துட்டு வந்தேன். அவன் ஏரியாவில் இருந்து இங்க வர்றதுக்குள்ள சரியான ட்ராஃபிக். சென்னை ட்ராஃபிக் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே?! " என்றவன் குமாரை பற்றிய விவரங்களை சொல்ல, கையில் புதிதாக பிழியப்பட்ட ஆரஞ்சுசாறுடன் வந்து கொண்டிருந்தார் வாணி.

நேராக அதை ஜகதீஷின் முன்பு நீட்ட," இல்லை வேண்டாம் ஆன்டி.." ஜகதீஷ் மறுக்க,

"காஃபி தானே அலர்ஜி.. ஜூஸூமா?! எடுத்துக்கோங்க தம்பி. போன தடவை தான் நீங்க எதுவுமே சாப்பிடலை?!" வாணி வற்புறுத்த,

"எடுத்துக்கோங்க ஜகதீஷ்..." அஷ்வின் தனக்கொன்றை எடுத்து கொண்டவர், ஜகதீஷிற்கும் எடுத்து கொடுக்க, அவன் வாங்கும் நேரம் அவரது கை திடீரென நழுவி, ஜூஸ் மொத்தமும் அவனின் சட்டையில் கொட்டிவிட்டது.

"அச்சோ.. என்னங்க இப்படி பண்ணிட்டிங்க?! " வாணி பதறி ஜகதீஷின் சட்டையில் தட்ட,

"இருக்கட்டும் பரவாயில்லை ஆன்டி... " சங்கடத்துடன் சட்டையில் கொட்டியிருந்த துளிகளை தட்டி விட்டுக்கொண்டே எழுந்து பின்னால் நகர்ந்தான் அவன்.

"சாரி ஜகதீஷ்..." தனது கையிலிருந்த ஜூஸை வாணியிடம் கொடுத்த அஷ்வின் மன்னிப்பு கேட்க,

"பரவாயில்லை சார்.. இங்க வாஷ் ரூம்..." என,

"நேரா போனிங்கன்னா.. இடதுபக்கம் இருக்கு... வாங்க.." அஷ்வின் அழைத்து செல்ல, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு ஜகதீஷ் வர, இருவரும் ஹாலிற்குள் நுழைய, தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள் மாலினி.

அதுவரை தனது சட்டையில் இருந்த பிசுபிசுப்பில் முகம் சுளித்து கொண்டே வந்தவன், எதிரில் மாலினி வந்ததும் முகம் மலர, தானும் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு நடந்தவள், அன்னையின் கையிலிருந்த ஜூஸை பிடுங்கி அருந்த,

"ஹேய்.. சாயங்காலம் நேரம்டி.. சளி பிடிக்கப்போகுது... இது நான் ஜகதீஷ்கு கொண்டு வந்தேன்.." வாணி மகளிடம் சொல்ல,

"அச்சோ.. இதுல ஜகதீஷ் பெயர் போடலையேம்மா?! .. " அன்னையை கலாய்த்தவள்,
"ஜூஸ் போச்சே..." ஜகதீஷை பார்த்து வேறு சிரிக்க, " சரியான வாலு..." வாணி மகளின் காதை திருக வர, அவரிடம் சிக்காது தந்தையின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

"நீங்க உட்காருங்க தம்பி. நான் உங்களுக்கு வேற ஜூஸ் எடுத்துட்டு வரேன்...." வாணி ஜகதீஷிடம் சொல்ல,

"எதுக்கு?! மிச்ச இருக்க பேன்டும் ஜூஸ் கேட்குதா?!" அஷ்வின் மனைவியை பார்த்து கேலி செய்ய,

"ஜூஸை கொட்டிட்டு உங்களுக்கு பேச்சு வேறயா?! " வாணி வாதாட, அனைத்தையும் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாலும், ஜகதீஷின் பார்வை மாலினியை சுற்ற , ஜூஸை குடித்து முடித்தவள் காலி தம்ளருடன் சமையலைறக்குள் சென்று கொண்டிருந்தாள்.

"இந்த ட்ரெஸ்ஸோட ரொம்ப நேரம் இருக்க வேண்டாம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க ஜகதீஷ்" அஷ்வின் ஜகதீஷை பார்த்து செல்ல,

"என்னங்க சாப்பிட்டு அனுப்பி வைக்கலாம்!" என்ற வாணியை,

"சட்டையெல்லாம் பிசுபிசுன்னு இருக்கும் வாணி. பாவம் அவர் வெளிவேலை வேற பார்த்துட்டு வந்துருக்காரு.. இன்னொரு நாள் உன் கைவண்ணத்தை எல்லாம் காட்டு.." அஷ்வின் மறுத்துவிட,

"சார் சொன்ன மாதிரி, நான் இன்னொரு நாள் வந்து சாப்பிடறேன் ஆன்டி... மாலினியோட டவுட்ஸ் மட்டும் என்னன்னு கேட்டுட்டே போறேன்" என, மாலினியும் ஹாலிற்கு வந்தவள்,

"அதெல்லாம் அப்பாவே க்ளியர் பண்ணிட்டாங்க ஜகதீஷ்!" சந்தோஷத்துடன் தந்தையின் அருகே சென்று தோளில் தொற்றிக்கொள்ள, " ஓ..." மனதில் கவிழ்ந்த ஏமாற்றத்தை வெளியில் காட்டி கொள்ளாது நிற்க, பெரும்பாடுபட்டான் அவன்.
"அப்ப உன் வேலை முடிஞ்சுதா?!உப்பு பாக்கெட்டை தூக்கி உங்க அப்பா மேல இருக்க செல்ஃப்ல வச்சுட்டாரு.. வா வந்து எடுத்து கொடு..அப்படியே எனக்கு கிட்சன்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" வாணி மகளை அழைக்க, அன்னையின் பின்னோடு ஓடிவிட்டாள் அவள்.
"இன்னைக்கு நான் லீவ் போட்டுருந்ததால சொல்லி கொடுத்துட்டேன் ஜகதீஷ்.. அதனால நீங்க கிளம்புங்க.. ஓரளவு மாலினி நல்லாவே பிக்கப் பண்ணிட்டா.. நீங்க கொடுத்த புத்தகமும் அதுக்கு ஒரு காரணம். அதனால இனி உங்களை தொந்தரவு பண்ண மாட்டா?! நீங்களும் இங்க இருக்கற நாட்கள்ல ஃப்ரீயா உங்க வேலையை மட்டும் பார்க்கலாம்" ஜகதீஷின் தோளில் கை போட்டு பேசிக்கொண்டே வாசல் வரை அஷ்வின் அழைத்து வந்திருக்க,

"ஓகே சார்..." பெயருக்கு புன்னகைத்து விட்டு வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அரண்மனைக்குள் நுழைந்தவனுக்கு மனம் மட்டும் ஆறவே இல்லை!! அஷ்வின் வேண்டுமென்றே தன் மீது பழரசத்தை கொட்டியது போலிருக்க,இனி மாலினியை எப்படி தனியே சந்திப்பது?! என்ற சிந்தனை மட்டுமே அவனை முழுதும் ஆக்கிரமிக்க மற்ற எதிலும் மனம் செல்லவில்லை. தூக்கம் கூட சரியாக வராமல் புரண்டு கொண்டிருந்தவன், அதிகாலையில் கௌதம் வந்து ஜாகிங் அழைக்கவும், இரட்டை மனதாக எழுந்து வந்தவனுக்கு, ஜாகிங்கிலும் ஈடுபட முடியாமல் போக,

"உன்னைத் தான்டா கேட்கிறேன்.. எதுக்கு இப்படி உட்கார்ந்துருக்க?! எதுவும் பிரச்சனையா?! உடம்புக்கு ஏதும் செய்யுதா?!" அக்கறையுடன் அவன் நெற்றியின் மீது கைவைத்து பார்க்க போக,அவனது கையை தடுத்தவன்,

"நல்லாதான் இருக்கேன்டா.. மூட் இல்லை.. தூக்கமும் வரலை.. எதுவும் பண்ண பிடிக்கலை..." என்றவன் எழுந்து கொள்ள,

"இன்னும் கேஸை பத்தியே நினைச்சுட்டிருக்கியா?! அதை தான் முடிவுக்கு கொண்டு வந்துடலான்னு சொல்லியாச்சே?! அப்பறமும் அதை பத்தியே ஏன்டா யோசிக்கிற!!" கௌதமன் அவன் தோளில் தட்ட,

"இல்லை கௌதம்... நான் அதைப்பத்தி நினைக்கலை.. " மழுப்பலாய் பதில் சொன்னவனை பார்த்து புன்னகைத்தவன்,

"சரி..‌வேணுன்னா.. ஒரு மாற்றத்துக்கு.. எங்க மாமாவோட ஃபார்மா யூனிட் நகரில இருக்கே.. அதை பார்த்துட்டு வரியா?! உனக்கும் உன்னோட பிஸ்னஸ்கு ஒரு ஐடியா கிடைக்கும் மச்சி!!" என, அவன் விரும்பும் தொழிலை பற்றி பேசவும் ஜகதீஷின் முகம் மலர்ந்தாலும்,

"அதெப்படி திடீர்னு அங்க போய் பார்க்க முடியும்?! " யோசனையுடனேயே பேசியவனை கண்டு கொள்ளாது, கௌதமன் தனது ஜாகிங்கை தொடர, வேறு வழியில்லாமல் அவன் பின்னோடு ஓடினான் ஜகதீஷ்.

"டேய் நில்லுடா!! நான் கேள்வி கேட்டுட்டுருக்கேன்.. நீ பாட்டுக்கு ஓடற?!" மூச்சிரைக்க ஜகதீஷ் பின்னோடு ஓடிவர,

"இரண்டு ரவுண்டு நான் தனியா ஓடினேன்ல?! அதனால இப்ப இரண்டு ரவுண்டு என்கூட சேர்ந்து ஓடு.. அப்பதான் சொல்வேன்..." என, கௌதமனுடன் இணைந்து ஜாகிங் செய்தான் ஜகதீஷூம். அவனுக்கு இது நல்ல வாய்ப்பாக பட்டது?! குமாரிடம் தொழிலைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்று நினைத்தவனாய் கௌதமனுடன் ஓடி முடித்தவன் மீண்டும் அதே கல் பெஞ்சில் அமர்ந்து கொள்ள, புன்னகையுடன் அவனருகே அமர்ந்த கௌதம்,

"இன்னைக்கு ஊர்ல இருந்து சேதுபதி மாமா வர்றாருடா!!" என,

"யாரு உங்க தாய்மாமாவா?!" நெற்றியில் வழிந்த வியர்வையை அருகிருந்த பூந்துவாலையால் துடைத்து கொண்டவன் கேட்க,

"ஆமா.. அவரை நேர்லயே பார்த்து பர்மிஷன் வாங்கி தரேன்.. " என்றவன் எழுந்து கொள்ள,

"அப்போ அந்த பையன் கந்தமாறனும் வருவானே?! அவனுக்கு நீயின்னா உயிராச்சே?! உங்க அலம்பல் தாங்க முடியாதேடா?! அப்ப ஃபேக்டரி விசிட் பண்ணிட்டு நான் அப்படியே காலேஜ் ஹாஸ்டலுக்கு கிளம்பறேன்" என்ற ஜகதீஷ் தானும் எழுந்து கௌதமனுடன் நிற்க,

"அதெல்லாம் முடியாது. ஒழுங்கு மரியாதையா லீவ் முடிஞ்சு கிளம்பு!! அவங்க வந்த பிறகு எங்க அவுட்டிங் போறதுன்னு ப்ளான் பண்ணுவோம்!! இப்ப அத்தையை பார்க்க தான் மாமா வர்றாரு. நான் அவர்கிட்ட பேசி உனக்கு பர்மிஷன் வாங்கி தரேன்.. நீயும் குமாரும் சேர்ந்து போய் பார்த்துட்டு வாங்க" என,

"சரி.. அப்போ நான் போய் குளிச்சு ரெடி ஆகுறேன். குமாருக்கும் கால் பண்ணி சொல்லிடவா?!" உற்சாகத்துடன் பேசியவனின் தோளில் கைபோட்டு தன்னோடு அணைத்து கொண்ட கௌதம்,

"தாராளமா சொல்லுடா.. நீ இவ்வளவு சந்தோஷமா கிளம்புறதுக்காகவே மாமாவை ஓகே சொல்ல வச்சிடுவேன்.. எப்ப பாரு யோசனையிலேயே இருக்காத!! நடக்கிறதை அது போக்கில் நடக்க விடு!! அப்பதான் உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு நீ அனுமானிக்க முடியும்" என,

"சரி..‌அப்போ நான் போய் ரெடி ஆகுறேன்.." அப்போதைக்கு மாலினியை பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளே செல்லப்போக, அப்பொழுதுதான் கௌதம் அவனுடன் அரண்மனைக்குள் வராததை கவனித்தவன், வாயிலில் நின்று,

"நீ வரலையாடா?!" என,

"இல்லை... இன்னும் ஒரு அரைமணிநேரம் ஜாகிங் பண்ணிட்டு வரேன்.... " என்றவன், " நீ போ.." சைகை காட்டி விட்டு மீண்டும் ஓட ஆரம்பிக்க, உற்சாகத்துடன் அரண்மனைக்குள் சென்றுவிட்டான் ஜகதீஷ்‌.

"எல்லாத்துக்கும் ஒரு யோசனை இவனுக்கு... " ஜகதீஷின் இயல்பை முணுமணுத்தவனாய், மீண்டும் தனது ஓட்டத்தை தொடர்ந்தவனின் கால்கள், இப்பொழுது தானாக, மாலினி வீட்டின் பின்புறம் தோட்டத்தை இணைக்கும் பகுதிக்கு சென்றது.

அதுவும் அவளிருக்கும் அறையின் ஜன்னலில் வெளிச்சம் தெரிய, மெது மெதுவே தனது ஓட்டத்தின் வேகத்தை குறைத்தவன், சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தூரத்தில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த வேலைக்காரர்கள் இருவரும் சுவாரசியமாய் தங்களுக்குள் பேசிக்கொண்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருக்க, நொடி நேரத்திற்குள் அவள் வீட்டை ஒட்டி அழகாக வெட்டி வைக்கப்பட்டிருந்த ஆளுயர அலங்கார செடிகளுக்குள் புகுந்து நின்று கொண்டவன், மெதுவே நகர்ந்து ஜன்னலருகே செல்ல,

"ப்ச்.. ஏற்கனவே பதில் தெரிஞ்ச கேள்வி தானே?! எப்படி தப்பா போட்டேன்?!" தன்முன்னாலிருந்த புத்தகத்திலேயே பேனாவால் விடையை மாற்றி அவள் எழுத,

"பென்சிலில் பண்ணாம பென்லயா கரெக்ட் பண்ற?! அஷ்வின் சார் இங்க வந்து பாருங்க!!" என்ற கௌதமனின் குரலை முதலில் கவனிக்காது,

"அச்சச்சோ அப்பா.. நீங்க சொன்னதை மறந்துட்டேன்... பென்சில்ல தானே கரெக்ட் பண்ணனும்.." தன்னை மறந்து அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவள், அப்பொழுதுதான் வந்த குரலின் பேதத்தை உணர்ந்து எதிரில் பார்க்க, கண்கள் இரண்டையும் சிமிட்டிக்கொண்டு குறும்பு புன்னகை மலர, கௌதம் ஜன்னலுக்கு வெளியில் நிற்க,

"கௌ...கௌதமா... " திடீரென அவனை பார்த்ததும் பயத்தில் பேச்சு வராது பின்னால் திரும்பி பார்க்க, கதவு லேசாக தான் சாத்தியிருந்தது. எந்நேரமும் அன்னை உள்ளே வரக்கூடும் என்பதை நினைத்து மிரண்டவளாய்,

"நீங்க எதுக்கு இங்க வந்திங்க?! போயிடுங்க..." அதிகாலை தென்றலிலும் தனக்கு வியர்ப்பதை போலிருக்க, தன்னிச்சையாக அவள் நெற்றியை துடைத்து கொள்ள,

"ஹேய்.. தேனீ.. என்ன திடீர்னு மரியாதையெல்லாம் பலமா இருக்கு?! நான் வேணும்ன்னா வீட்டுக்குள்ள வந்து பேசட்டுமா?!" புருவம் உயர்த்தியவனை கண்டு, "ஹான்...." அவள் நெஞ்சில் கையை வைத்து வாய் பிளந்து விழிக்க,
"இந்த எக்ஸ்ப்ரெஷன் ரொம்ப க்யூட்டா இருக்கு!! இரு நான் கிட்ட வந்து பார்க்கறேன்..." கௌதமனுக்கோ அவளை பக்கத்தில் கண்டு விடும் பரவசம்.
"அச்சோ..வேண்டாம்..‌முதல்ல இங்க இருந்து போங்க.. " மாலினி சொன்னதையே திரும்ப சொல்ல,
"மாட்டேன்.. நீ முதல்ல வெளிய வா.. நேத்து முழுக்க உன்னை பார்க்கலை.. " என்றவனின் குரல் கொஞ்சியதோ?! தன்னை மீறி மனம் அவன்பால் சாய, ஜன்னலை நெருங்கி நின்றவள்,

"கௌதமா..‌ப்ளீஸ்.. அப்பா வந்துடுவாங்க.. நீங்க போயிடுங்க.." ஜன்னலின் கம்பிகளின் இடைவெளியில் முகம் பதித்து கெஞ்சியவளை வித்தியாசமாக பார்த்தவன்,

"ஹேய்.. ரிலாக்ஸ்.. என்ன ஆச்சு?! ஏன் இவ்வளவு பயந்து பேசுற தேனீ?!" என்றவன் ஜன்னல் வழியே கையை நீட்டி, தனது உள்ளங்கையால் அவள் கன்னம் தாங்க, அவனது ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் தனை மறந்து அவனது உள்ளங்கையில் சாய்ந்தவள், ஹாலில் ஏதோ விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு அவன் கையை தட்டிவிட்டவளின் கண்கள் கலங்கி விட,

"மாலினி... என்னைப் பாரு..." கௌதமின் குரலில் உள்ளம் சிலிர்க்க அவனை பார்த்தவள்,

"என்ன நடந்தது?!" என, அவனைப் பார்க்காது அவள் தலைகுனிந்து கொள்ள,

"நீ இப்ப பதில் சொல்றியா?! இல்லை உள்ள வந்து உங்க அப்பாகிட்டவே கேட்கவா?!" சொன்னதை செய்து விடும் வேகம் அதில் தெரிய, அதிர்ந்து பார்த்தவள்,

"வேண்டாம் நானே சொல்றேன்.." என்றவள் தந்தை தன்னிடம் பேசியதை பற்றி சொல்ல அஷ்வினின் பேச்சு சாதுர்யம் சபாஷ் போட வைத்தது. இருந்தாலும் அதை காட்டி கொள்ளாது,

"சரியாத்தான் சொல்லியிருக்காரு.." என்றவனை மாலினி கேள்வியாக பார்க்க,

"ஆமா.. நீ சின்ன பொண்ணுங்கறதால தான் நான் இன்னும் வெளிப்படையா உன்கிட்ட எதுவும் பேசலை. ஆனால் நம்மளோட உணர்வு மனம் நமக்கு முன்னே பேசிக்குதே?!" இதழ் மலர, ஒற்றை கண்ணை சிமிட்டியவனை கண்டு மாலினி வெட்கத்துடன் திரும்பி நிற்க போக, ஜன்னல் வழியே கைநீட்டி அவளை தடுத்தவன், மீண்டும் அவளை தன்னை பார்த்து பிடித்து நிறுத்தி,

"ஆனாலும்.. ஒரு விஷயத்தை உங்க அப்பா கவனிக்கலை தேனீ?! என் ஸ்வீட்டிக்கு இன்னைக்கும் என்னைத்தான் பிடிக்கும்.. இனியும் என்னை மட்டுமே பிடிக்கும்னு தெரியலை பாரேன்...." காதல் என வாய் திறந்து சொல்லவில்லை?! ஆனால் அதன் தாக்கத்தை அவளுக்கு தன் வார்தைகளால் அவன் கடத்தி கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை மென்சிறகுகள் வருடுவதை போல் ஓர் உணர்வு குறுகுறுப்பதை உணர்ந்தவள், அவனை காண முடியாது அவன் பிடியிலிருக்கும் தனது கையை எடுத்து விட முயற்சிக்க, முடியவில்லை.

"சோ.. எதைப்பற்றியும் பயப்படாம.. நீ படிக்கனும் நினைக்கிறதை படிச்சு முடி.. நானும் உன்கூடவே தான் ஐஐடில ஜாயின் பண்ண போறேன்..உன் நிழலை விட அதிகமா உன் கூட நான்தான் இருக்க போறேன் தேனீ.. ஓகே தானா?!" என, நிமிர்ந்து அவன் முகம் பார்த்து பதில் சொல்ல முடியாது அவள் தலை குனிந்தே இருக்க, தான்‌பிடித்திருந்த அவளது கையை பற்றி அவளை இன்னும் அருகிழுத்தான் கௌதமன்.

"எங்க அத்தைக்கு ஒரு பெரிய தாங்க் பண்ணனும் தேனீ!" சம்பந்தமே இல்லாமல் காதம்பரியை பற்றி பேச, மாலினி புரியாது அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க,

"இந்த அவுட் ஹவுஸ் பழைய காலத்து வீடு மாதிரி இருக்கு.. இதை மாத்தி கட்டலாம்னு அப்பா சொன்னப்போ.. இது இப்படியே இருக்கட்டுமேண்ணான்னு தடுத்துட்டாங்க!! இப்ப பாரு.‌..இந்த பெரிய ஜன்னல் எனக்கு எவ்வளவு வசதியா இருக்குன்னு?! இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்திருந்தா உள்ளே குதிச்சு..‌ஹாயா உன் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டிருப்பேன்..." என, அவன் பேச்சில் முகம் மலர்ந்தாலும்," கௌதமா..." சிணுங்கியவள், அவன் கையிலிருந்து விடுபட தனது கையை வலுவுடன் ஆட்ட,
"ஓகேன்னு சொல்லு... விட்டுடறேன்.." பேரம் பேசியவனை முறைக்க முயன்று தோற்றவளின் தலை தானாக ஆட, கொஞ்சம் கொஞ்சமாய் தனது கையால் உரசிக் கொண்டே அவளது கையை விடுவிக்க, கதவு அசையும் சத்தத்தில் மாலினி பயத்துடன் பின்னால் பார்க்க, காற்றில் அசைந்திருந்தது அது.

ஒரு விடுதலை பெருமூச்சுடன் மீண்டும் அவன்புறம் திரும்ப, அவளது பயத்தை விரும்பாதவனாய்," சரி...நீ ரிலாக்ஸா படி.. ஆனால் ஒரு விஷயம் மட்டும் கேட்டுக்கோ.. தினமும் உன்னை எப்படியாவது நான் பார்க்க வருவேன்.. அப்பல்லாம் இப்படி பயந்து நடுங்க கூடாது.. அதோ அங்க தெரியுது பார்.. அதுதான் என்னோட ரூம்.. நேத்து கூட உன்னை அங்க இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..." என்றவன் அரண்மனையை காட்ட, இரண்டாவது தளத்திலிருந்த அவனது அறை ஜன்னல் நன்றாகவே தெரிந்தது. அவன் தன்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறான் என்பதில் மாலினியின் மனதில் நேசச்சாரல்கள் தெறிக்க, கண்களை மூடி திறந்து தன்னை மீட்டவள்,


"ஒரு பொண்ணோட ரூமை இப்படி பார்க்குறது தப்பு..." கண்டிப்புடன் கூறுவதாய் நினைத்து, கன்னலாய் தித்திக்கும் குரலில் சொல்பவளை கண்டு பலமாக சிரித்தான் அவன்.
 
"அச்சோ..‌சத்தமா சிரிக்காதே கௌதமா..." பயத்தில் அவனது வாயை மூடியவளின் செயலில் கௌதமின் கண்கள் பளபளக்க, அவனது பார்வை சுழலுக்குள் சிக்காது வேகமாக கையை உருவிக்கொண்டவள்,

"ப்ளீஸ்.. போ..‌கௌதமா..." அவனுக்கு முகம் காட்டாது அருகிருந்த சுவற்றில் கைவைத்து மறைத்து கொள்ள,

"ப்ச்..ஒரு மூணு வருஷம் கழிச்சு உன்னை பார்த்துருக்கலாம் தேனீ.." வருத்தத்துடன் சொன்னவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். எதற்கு சொல்கிறானென தெரிகிறதே?! வார்த்தை ஜாலங்களில் தோட்டத்தின் குளுமையை வாரி இறைப்பவனை காண கூச்சமாய் இருக்க,இன்னும் அழுத்தமாக சுவற்றில் முகம் புதைத்து கொள்ள,

"ம்க்கும்...வாங்க அஷ்வின் சார்...." தொண்டையை செருமிய கௌதமனின் குரலில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்து பார்த்தவள், அங்கு யாரும் இல்லாததை கண்டு திரும்பி அவனை முறைக்க,

"சும்மா... " கண்களை சுருக்கி சிமிட்டியவன்,

"நீ முகத்தை அதில் அழுத்தறதால அந்த சுவற்றை பார்த்து பொறாமை வருது. அதான் அப்படி சொன்னேன். வேணும்ன்னா இங்க சாய்ஞ்சுக்கோ ஸ்வீட்டி..." தனது மார்பை சுட்டிக்காட்டிக்கொண்டே," எனக்கு போட்டியா எதுவும் இருக்க கூடாது?! காட் இட்.. " என,

"போ....கௌதமா.." ஒவ்வொரு வார்த்தைக்கும் பெண்ணவளின் மெல்லிய நுண்ணர்வுகளை தூண்டி விடுபவனை தாள முடியாது சொல்லிவிட்டு,அறையை திறந்து கொண்டு வீட்டு ஹாலிற்கு ஓடி விட்டவளை கண்டு புன்னகைத்தவன், உற்சாகத்துடன் ஓட்டத்தை முடித்து கொண்டு மெல்லிய சீழ்க்கை ஒலியுடன் அரண்மனைக்குள் நுழைந்தான் கௌதமன்.

தன்னறைக்கு சென்று சுத்தப்படுத்தி கொண்டு தயாராகி வந்தவன், காதம்பரியின் அறைக்கு செல்ல,அவர் கீழ் தளத்தின் வரவேற்பறையில் இருப்பதாக அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் கூற, படிக்கட்டில் இறங்கும் போதே,

"என்ன வயசாச்சுன்னு இப்படி ப்ரஷரெல்லாம் வருது காதம்பரி?!" சேதுபதி பேசும் சத்தம் உறக்க கேட்க,

"அப்படி சொல்லுங்க மாமா.‌ நாம ரெண்டு பேரும் இருக்கும் போது?! ப்ரஷர் எப்படி அத்தையை எட்டி பார்க்கலாம்!!" ஹாலில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மாமனை பார்த்து புன்னகையுடன் கீழே இறங்கி வந்தான் கௌதமன். ஜகதீஷூம் அங்குதான் இருந்தவன், கௌதமன் அருகே வந்து நிற்க, " ஜி.வி மாமா..." ஓடிவந்து அவனை கட்டி கொண்டான் கந்தமாறன்.

"வாங்க மருமகனே.. என்ன அங்கேயே நின்னுட்டிங்க?! டேய் நீ தள்ளுடா..‌ என்ற மருமகப்புள்ளைய பார்த்து எத்தினி நாளாச்சு?!" சோஃபாவில் இருந்து எழுந்து கைநீட்டி அழைத்தவரின் கையில் வாகாக அவன் சென்று நின்று கொள்ள, "ம்ம்.. போங்க டாடி.." கந்தமாறன் மட்டும் முகத்தை தூக்க, எதிரே அமர்ந்திருந்த காதம்பரியும், சேதுபதியின் மனைவி சமுத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.‌

"அப்படியே என்ற மாமனையும் அக்காளையும் கலந்து பாக்கற மாதிரியே இருக்குதுங்க.. நல்லா வளர்ந்துட்டிங்க" பாசத்துடன் கட்டிக்கொண்டவரின் பேச்சில் கௌதமன் சிரிக்க,

"போதும் விடுங்க... வளர்ந்த பிள்ளையை கண்ணு வைக்காதிங்க" எழுந்து வந்த அவரது மனைவி சமுத்ரா ஜிவியின் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க,

"நல்லா இருக்கிங்களா அத்தை?!" நலம் விசாரித்தவனிடம்,

"எங்க சௌக்கியத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லிங்க மருமகனே.. " என,

"அதெல்லாம் உன்ற அத்தை சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல் வரப்போவுது?! நம்மள படுத்தியாச்சும் அவ நினைச்சதை சாதிச்சு போடுவா!!" சேதுபதி மனைவியை வம்பிழுக்க,
"சரித்தான்...." மோவாயில் கைவைத்து முறுக்கி கொண்டார் சமுத்ரா.
"டாடி.. முதல்ல ஜி.வி மாமாவ விடுங்க.. நான்‌ மாமா கூட டென்னிஸ் விளையாடனும்" கந்தமாறன் இருவருக்கும் இடையில் புகுந்து பிரிக்க,

"என்னடா டாடி.. அப்பான்னு கூப்பிடுங்கன்னு‌ எத்தனை தரம் சொல்றது?!" தனது மகனை சேதுபதி கண்டிக்க,

"போங்க டாடி.." என்றவன் ஜிவியை கட்டிக்கொள்ள,

"மாமா.. நீங்கதான் உங்க ஊர் பாஷையும் விட மாட்டேங்கிறிங்க?! நம்ம பழக்கத்தையும் விடமாட்டேங்கறிங்க?! கந்தமாறனும் அப்படியே வரனுங்கறது கஷ்டம்தானே?!" அவனுக்கு ஆதரவாக பேசிய கௌதமிடம்,

"அப்படி சொல்லுங்க மாமா..." கந்தமாறன் ஹைஃபை கொடுக்க, குமாரிடம் இருந்து தொடர்ந்த அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, முதலில் கட் செய்த ஜகதீஷ், வேறு வழி இல்லாமல் தனது அலைபேசியை எடுத்து கொண்டு சற்று தள்ளி சென்று பேசினான்.

"ம்ஹூம்.. நம்ம கலாச்சாரத்தை.. நாம பிறந்த ஊரை என்னைக்கும் விட்டுக்கொடுக்க கூடாது மருமகனே.. எத்தனையோ பேரை பார்த்தாலும் பழகினாலும் நாம பிறந்த மண்ணோட சாயல்தான் நம்மளை தனித்துவமா தைரியத்தோட நிற்க வைக்கும்.. " என,

"ஒத்துக்க வேண்டிய விஷயம் தான் மாமா.." ஜிவியின் ஒப்புதலில் கந்தமாறன் முகம் தூக்க, அலைபேசியில் பேசி முடித்து விட்டு ஹாலிற்கு வந்தான் ஜகதீஷ்.

அவனை அப்பொழுதுதான் நன்றாக கவனித்த சேதுபதி," என்ன ஜகதீஷ் தம்பி படிப்பெல்லாம் எப்படி போகுது?!" என்று விசாரிக்க,

"நல்லா போகுது அங்கிள்..." அவரருகே வந்து பதில் சொல்ல,

"அதெல்லாம் டிஸ்டிங்க்ஷன் வாங்க போறான் மாமா..." காதம்பரி அவனைப்பற்றி பெருமையாக சொன்னவர்,

"நம்ம கௌதமும் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்குவான்.." எழுந்து வந்து கௌதமின் கைபிடிக்க,

"அசத்துறிங்க மருமகனே.." கௌதமை மெச்சி புருவங்களை தூக்கியவர், தனது மகனை பார்த்து,

"பார்த்துக்கடா.. மாமன் கூட சுத்துனா மட்டும் பத்தாது.. மாமனை போல அந்த அண்ணனை போல படிக்கோனும்.." என,

"அதெல்லாம் பார்த்துக்கலாம் டாடி...மாமா.. மாலுக்கு போகலாமா?!" அடுத்த திட்டத்தை ஆரம்பித்தவனை,

"சின்னு...இப்போ வேணாமுங்..." அன்னை சமுத்ரா கண்டிக்க, புன்னகையுடன் ஜகதீஷிடம் திரும்பிய சேதுபதி,

"நல்ல பொறுப்பான பிள்ளை.. எந்த உதவினாலும் தயங்காம கேளுங்க தம்பி.. அடுத்து என்ன பண்ண போறதா உத்தேசம்?!" அவன் கைபிடித்து கொண்டு அதில் தட்டிக் கொடுக்க,

"நிச்சயமா அங்கிள்..." என்றவன், தனது வருங்கால திட்டத்தை பற்றி சொன்னவன், கௌதமை பார்க்க,

"நல்ல விஷயம் தான்..‌ சிறப்பா செய்யுங்க..." பாராட்டியவரிடம் கந்தமாறனை விட்டுவிட்டு, நகரிக்கு செல்வதைப்பற்றி பேச கௌதம் அருகே வர,

"ஏங்கண்ணு.. பார்த்துட்டியே நிற்கிறியே?! நம்ம ஊர் பலகாரங்களை கொண்டு வந்து பிள்ளைங்களுக்கு கொடுக்க சொல்லு!.. அதுவும் என்ற மருமகனுக்கு நாம புதுசா செஞ்சு எடுத்து வந்த, சுத்த தேன்ல செஞ்ச ஜிலேபிய எடுத்துட்டு வரச்சொல்லு" மனைவியை பார்த்து சொல்ல, தேன் என்றதும் தனது தேனீயின் நினைவில் கௌதமன் மனம் மாலினியை நினைத்து ரீங்காரமிட, ஜகதீஷ் பேசியது பின்னுக்கு சென்றுவிட்டது.

"இதோ... நான் போய் டிரைவரை எடுத்துட்டு வரச்சொல்றேன்.." கிளம்பிய சமுத்ராவை தடுத்த காதம்பரி,

"நீங்க இருங்கக்கா.. சமையல்காரம்மாவை விட்டு நான் எடுத்துட்டு வரச்சொல்றேன்.." என்றவர்,

"பாரதிம்மா.." உரக்க அழைத்தவர், அவர் வந்ததும் விஷயத்தை சொல்லி, " ப்ளேட்ல வச்சு எல்லாருக்கும் எடுத்துட்டு வாங்க" என,

"நான் வாங்கிட்டு,எடுத்துட்டு வர்றேன் மேடம்..." பாரதிம்மா சமுத்ராவை பார்த்து சொல்லிவிட்டு வெளியே செல்ல, அரண்மனையின் உள்ளே வந்து கொண்டிருந்தார் அஷ்வின். அனைவரும் மீண்டும் பேச அமர்ந்து விட, ஜகதீஷ் கௌதமிடம் வந்தவன்,

"மச்சி.. குமார் இதோட பத்து தடவை கால் பண்ணிட்டான். மாமா கிட்ட பேசி பர்மிஷன் வாங்கி கொடுடா.. நேரமாகுது" என்றவன் அலைபேசியில் மணியை காட்ட,

"இதோ கேட்கறேன்.." கௌதம் சேதுபதியின் அருகே செல்ல, காதம்பரியை நோக்கி வந்து கொண்டிருந்தார் அஷ்வின்.

"வாங்க அஷ்வின் சார்.. உடம்பு இப்போ பரவாயில்லையா?!" காதம்பரி நலம் விசாரிக்க,

"இப்போ ஓகே மேடம்.. இன்னைக்கு காஞ்சிபுரம் யூனிட்டோட பிராஞ்ச் மேனேஜரோட வீடியோ மீட்டிங் இருக்கு மேடம். டைம் ஆச்சு... இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு..." என்று ஞாபகப்படுத்த,

"இவர்தான் அஷ்வினா?! புதுசா நீ சேர்த்துருக்கற காரியதரிசி?! " கண்களில் கேள்வியுடன் சேதுபதி காதம்பரியிடம் விசாரிக்க,

"ஆமாங்க மாமா.. " என்றவர் சேதுபதியிடம் அஷ்வினை அறிமுகப்படுத்த,

"வணக்கம் சார்.." அஷ்வின் மரியாதையுடன் வணக்கம் வைக்க, சேதுபதிக்கு அவரை முதற் பார்வையிலேயே பிடித்து விட்டது.

"வணக்கம் அஷ்வின். வேலையை வேகமாக முடிச்சு குடுக்கிறங்களாம்!! காதம்பரி அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டா!! ஆனால் பாராட்டுக்கு தகுதியான ஆள் தான் நீங்க" என்றதில் அஷ்வின் விரிந்த புன்னகையுடன் திரும்ப, அவரைப் பார்த்து புன்னகைத்தான் கௌதமும்.

"மேடம்..." பாரதிம்மா சேதுபதி சொன்ன தேனில் செய்த ஜிலேபிகளை எடுத்து வந்து கொடுக்க, தனது கையில் ஒன்றை எடுத்தவர், கௌதமிற்கும், ஜகதீஷிற்கும் கொடுக்க,

"சூப்பரா இருக்கு மாமா.. ஆனாலும் கொஞ்சம் தேன் அதிகம் தான்...."கௌதம் பாராட்ட,

"நான் போய் ஆஃபிஸ் ரூம்ல மீட்டிங்குக்கு தயார் செய்றேன் மேடம்..." அஷ்வின் அவர்களது குடும்ப உரையாடலில் இருந்து விலகிக்கொண்டு செல்ல தயாராக, கௌதம் அதிக தேன் என்றதும் மாலினியின் நினைவு காதம்பரிக்கு வர,

"நீங்க போய் ரெடி பண்ணுங்க சார்.. ஆனால் அதுக்கு முன்னாடி நம்ம வாணிக்கு கால் அடிச்சு மாலினியை இங்க வரச்சொல்லுங்க.. தேன் ஸ்வீட் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்குமே?!" என, கௌதமின் முகத்தில் தேனின் பளபளப்பு.

"இல்லை...‌மேடம்.. அவ படிச்சுட்டு இப்பதான் தூங்குறா!! நான் வேணும்ன்னா எடுத்துட்டு போய் கொடுக்கிறேன்.." அஷ்வின் சமாளிக்க,

"என்கிட்ட வேணும்ன்னா கொடுங்க அத்தை..‌நான் கொண்டு போய் கொடுக்கிறேன். சார் தான் மீட்டிங் இருக்குன்னு சொல்றாரே?!" ஜகதீஷ் முன்னே வர, அவனை முறைத்தான் கௌதம்.

'இந்த நல்லவன் காரியத்தை கெடுக்க பார்க்கிறானே?' நினைத்த கௌதமின் முகம் சுணங்குவதை கண்ட காதம்பரி,

" நீ இருடா.. எனக்கு அவளை பார்த்து நேர்ல தான் கொடுக்கனும்... நீங்க வரச்சொல்லுங்க சார்.. மீட்டிங்கை தள்ளி வச்சுக்கலாம்" என்றுவிட, மாலினியை இப்படி அழைப்பது அவரது வழக்கம் தானே?! வேறுவழியில்லாமல் அஷ்வின் அலைபேசியில் அழைத்து அவளை அங்கு வரச்சொல்ல,

"வெளில போகலாம் மாமா..." தொண தொணத்த கந்தமாறனிடம் தனது அலைபேசியை கொடுத்த கௌதம்,

"கொஞ்சநேரம் கேம் விளையாடுடா.. போகலாம்..." சமாளித்தவன், வாசலை பார்க்க, பழுப்பு நிறத்தில் சந்தன நிற பூக்கள் தெளித்த டிஷர்டும், சந்தன நிற லாங் ஸ்கர்டுமாய் வந்தவளை,

"உள்ளே வாம்மா..." அஷ்வின் அழைக்க, தன்னை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்கும் இரு ஆண்களையும் கவனிக்காது, நேராக தந்தையிடம் வர,

"உங்க பொண்ணா?! லட்சுமி களையோட அழகா இருக்குதுங்...." காதம்பரியிடம் பேசிக்கொண்டிருந்த சமுத்ரா அருகில் வந்து நின்று மாலினியின் தலை கோத, அவரைப் பார்த்து புன்னகைத்தவள், தந்தையை பார்க்க, அங்கு நடப்பதை கவனித்து கொண்டு அமர்ந்தார் சேதுபதி.

மாலினி உள்ளே நுழைந்ததிலிருந்து அவளை மட்டுமே கவனித்து கொண்டிருக்கும் கௌதமனை பார்த்தவர், மாலினியை பார்க்க அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

"கண்ணை மூடி வாயை திற மாலினி...." காதம்பரி சொல்ல, கண்களை மூடியவள் வாயை திறக்க, இனிப்பை அவளது வாயில் வைக்க, நாக்கில் கரைந்த இனிப்பில்,

"ம்ம்..‌சூப்பரா இருக்கு... காதும்மா..." தன்னை மீறி சொன்னவள், அப்பொழுதுதான் எல்லாரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளாய், வெட்கத்துடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ள,

"இதோ.. இந்த க்யூட் ரியாக்ஷனை பார்க்க தான்.. நேர்ல வரச்சொன்னேன்...." என்ற காதம்பரி கௌதமை பார்க்க, அவனோ அவள் நாவில் உறவாடும் தித்திப்பாய் தான் மாற ஆசை கொண்ட மனதை சிரமத்துடன் அடக்கி கொண்டு புன்னகைத்தான்‌.

அப்பொழுது மீண்டும் குமாரிடம் இருந்து ஜகதீஷிற்கு அழைப்பு வர, கௌதமும் அதை பார்த்தவன், " மாமா.. நம்ம நகரி ஃபார்மா தொழிற்சாலைய ஜகதீஷ் ஒருதடவை பார்க்கனுமே?! அவன் அது சம்பந்தப்பட்ட தொழில் ஆரம்பிக்க திட்டம் வச்சுருக்கதால நான்தான் இந்த ஐடியா கொடுத்தேன்?! அதுக்கு உங்க பர்மிஷன் வேணும்" சேதுபதியை பார்த்து கேட்க,

"இதுக்கெல்லாம் கேட்கனுமா தம்பி?! தாராளமா போங்க.. இருங்க மேனேஜருக்கு நீங்க வர்றதை சொல்றேன்..‌கூடவே இருந்து எல்லா தகவலும் உங்களுக்கு சொல்வாருங்க.." என்றவர் மேனேஜருக்கு அப்பொழுதே அழைக்க,
"தாங்க்ஸ் அங்கிள்‌.‌.." சேதுபதிக்கு நன்றி சொன்னவன், சந்தோஷத்துடன் மாலினியை பார்க்க, "ம்ஹூம்..." அவள் காதம்பரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு?! கௌதமும் என் கூடவே இருக்க போறான்?! இனி என்ன வேணும்!!" சமுத்ராவிடம் காதம்பரி சொல்லி கொண்டிருக்க, அஷ்வினின் அலைபேசி ஒலிக்க, காஞ்சிபுரத்தில் இருந்து தான் அழைத்து கொண்டிருந்தனர். அவர் அழைப்பை ஏற்று வெளியில் சென்றுவிட, ஜகதீஷ் கிளம்ப தயாராக பெண்களின் புறம் திரும்பினார் சேதுபதி.

"ஹாய் தம்பி.." பெண்களிடம் இருந்து நகர்ந்து மும்முரமாக மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்த, கந்தமாறனிடம் மாலினி பேச்சுக் கொடுக்க,

"ஹாய்கா...." புன்னகைத்தான் அவனும்.

"ஏன் மருமகனே? காதம்பரியை நான் பார்த்துக்க மாட்டேனாங்க?! நீங்க படிக்க ஆசைப்பட்ட படிப்பை கனடா போய் படிச்சு முடிங்க!! என்ன கஷ்டம் வந்தாலும் நினைச்ச காரியத்துல குறியா இருக்கனுங்.. அதுதான் தொழில் பார்க்க போறவனுக்கு அழகு... என்ற மாமனை மாதிரி நீங்களும் சீமைல படிச்சுட்டு வந்தா தானே நமக்கு கௌரவம்.." என,

"சேதுபதி மாமா.. அவன் என்கூடவே இருக்கட்டுமே... எப்படியும் இங்க படிக்க போறேன்னு தான் சொன்னான்..." காதம்பரி அவருக்கு பதில் கொடுக்க,

"இவ்வளவு தூரம் தொழில் பார்த்தும் பொண்ணுங்கறதை நிரூபிக்கிறிங்க பாருங்க?! டக்குன்னு இரக்கப்பட்டுடுறிங்க!!சட்டுன்னு அவன் இஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுத்தா?! அப்பறம் அவன் மனசு எல்லாத்துக்கும் அவன் நினைச்சபடி தான் போகச் சொல்லும்..." என்றவரின் பார்வை மாலினியின் மீது பட,

"இல்லை மாமா.. அத்தையோட உடல்நிலையும் பார்க்கனுமே.." கௌதமன் பேசவும் மாலினி அவனை பார்க்க,

"அதான் நானிருக்கேனில்ல... நாம நினைச்சதை போராடி செஞ்சு முடிச்சாதான் எதையும் சாதிக்கிற மனப்பக்குவம் வரும் கண்ணு.. நமக்கானது நம்மை விட்டு எங்கேயும் போகாது.. அப்படியே போற மாதிரி தெரிஞ்சாலும்...பிடிச்சு நம்ம பக்கம் எப்பவும் இழுக்க தெரியனும்.." பூடகமாக பேசியவரை கௌதமன் தயக்கத்துடன் பார்க்க,

சேதுபதி எழுந்து வந்தவர்," நானிருக்கேன் மருமவனே.. எல்லாம் நீங்க நினைச்ச படி தான் நடக்கும்..." என்றவர், அவனது படிப்பு பற்றிய விவரங்களை கேட்க,

"அப்பறம் என்ன?! இன்னும் இரண்டு நாள்ள விசா ரெடி ஆகிடுச்சுன்னா?! நீங்க முன்னாடியே கிளம்புங்க.. அதுதான் அடுத்த வாரம் ரிசல்ட் வந்துடுமே?! எல்லாம் பார்க்க சரியா இருக்கும்.." என,

"அத்தை..." என்றிழுக்க,

"மாமா.. சொல்றதும் சரிதான்.. நீ படிப்பை முடி கௌதமா.. மூணு வருஷம் தானே?! போறதே தெரியாது. இங்க நாங்க பார்த்துக்கறோம்..." காதம்பரிக்கு தெரியும் இனி சேதுபதி விடமாட்டார் என்பது. அதனால் தானும் அவரை ஒத்தே பேச,

"சமுத்ராவும் கந்தமாறனும் இங்கேயே இருக்கட்டும். எப்படியும் இந்த தடவை ப்ளஸ் ஒன் நான் இங்க தான் இவனை சேர்க்கறதா இருக்கேன்... அவன் இங்க இருந்தே படிக்கட்டும்.. நீங்க தைரியமா கிளம்புங்க.." சேதுபதி பேச்சை முடிக்க,

"அப்பறம் என்னடா?! அதான் அங்கிள் இவ்வளவு தூரம் சொல்றாங்களே?! ஒத்துக்கோ..." ஜகதீஷூம் மகிழ்ச்சியுடன் சொல்ல,

"சரி மாமா.. நான் கனடா கிளம்புறேன்..." ஈரம் பிரிந்த காற்றாய், வறண்ட குரலில் சம்மதம் சொன்னவனை மாலினி அதிர்ச்சியுடன் பார்க்க, அப்பொழுதுதான் அலைபேசியை அணைத்து விட்டு உள்ளே நுழைந்த அஷ்வின் நிம்மதியுடன் பார்த்தார்.

குளிர்வான் 🤍
 
அத்தியாயம்-25

"நல்லா பக்காவா ப்ளான் பண்ணி கட்டியிருக்காரு மச்சி.. லேப் மெயின்டெய்ன் பண்றதுக்கு கூட நல்லா டிசைன் பண்ணி இருக்காங்க... நான் அப்பாகிட்ட, உன்கூட சேதுபதி சார் ஃபேக்டரி பார்க்க போறேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாருடா... கோயம்புத்தூர்ல பெரிய ஆளாமே... " ஜகதீஷூடன் நடந்து வரும்போதே காரின் லாக்கை எடுத்து விட்டவன், டிரைவர் சீட்டின் புறம் ஏறி அமர, மற்றொரு புறம் ஏறி அமர்ந்தான் ஜகதீஷ்.

காரை ஸ்டார்ட் செய்த குமார்,"மேனேஜர் கிட்டதட்ட எல்லா டீடெயிலும் கொடுத்தது நாம ஆரம்பிக்க போற நம்ம தொழிலுக்கு நல்லாவே கைகொடுக்கும் மச்சி" சந்தோஷத்துடன் பேசிக்கொண்டே வர, தனது கையில் அவர்கள் தயாரிக்கும் மருந்துகளை பற்றிய விவரங்கள் அடங்கிய தாள்களில் பார்வையை ஓட்டினாலும், ஜகதீஷ் ஒருவித யோசனையுடனேயே," ம்ம்.." கொட்ட,

"என்னடா நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்?! நீ யோசிச்சுகிட்டே பதில் சொல்ற?! ரொம்ப யோசிக்காதடா!! மூளை கழண்டு கீழ விழப்போகுது!!" குமார் நண்பனை கலாய்க்க,

"ப்ச்.. எவ்வளவு யோசிச்சாலும் நடக்குறது தானே நடக்கப்போகுது?!" என்ற ஜகதீஷின் விரக்தியான பதிலில் கீறிச்சிட்டு நின்றது கார்.

"என்ன ஆச்சுடா?! வர்றப்போ நல்லாத்தானே வந்த?! இன்னைக்கு பார்த்த அளவிலேயே தொழிற்சாலையை எப்படி கொண்டு வர்றதுன்னு யோசிக்கிறியா?! இதை விட பெருசுடா சிட்டிக்குள்ள நம்ம இடம்!! இன்னைக்கு அதையும் நீ என்கூட வந்து பாரு... அப்பதான் உனக்கு தன்னம்பிக்கை அதிகமாகும்" காரை நிறுத்தி நண்பனை பார்த்த குமார் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச,

"நிச்சயம் நாம ஆரம்பிக்க போற விஷயம் நல்லாதான் வரும் குமார்.. அதில எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.. என் மனசை கஷ்டப்படுத்துறது வேற விஷயம். சொல்லப்போனா அதைப்பற்றி நான் இங்கே இப்போ பேசுறது கூட தப்புதான்..." என,

"என்னடா அந்த பொண்ணு விஷயமா?!" நேரடியாக விஷயத்துக்கு வந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தான் ஜகதீஷ்.

"என்ன இவ்வளவு ஆச்சரியமா பார்க்குற?!இதை தெரிஞ்சுக்க கம்ப்யூட்டர் ஜோசியமா பார்க்கனும்?! உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது!! இதுநாள் வரைக்கும் நீ ஒரு விஷயத்துக்கு தான் கவலைப்பட்ட?! அது உன்னோட தொழில்!! அதை இப்ப நாம ஆரம்பிக்க போறோம்.. அடுத்து மிச்சம் இருக்கறது அந்த பொண்ணு விஷயம்தானே?!" என்ற குமார் அவனை முறைக்க,

"சாரிடா.. நீ நேரா நம்ம இடத்துக்கு போ.. இதை இன்னொரு நாள் கூட பேசிக்கலாம்.." ஜகதீஷ் மன்னிப்பு கேட்க, அவனை ஆற்றாமையுடன் பார்த்தான் குமார்.

'சொல்லாமல் விடமாட்டான்...' என்பதை உணர்ந்தனாய் பெருமூச்சு விட்டவன்,

"நேத்து கௌதமோட மாமா பார்க்க வந்தாரில்லை!! " ஜகதீஷ் ஆரம்பிக்க,

"ஆமா.. அவர் வந்ததால தானே நம்ம இங்க சுத்தி பார்க்கறதுக்கு பர்மிஷன் கொடுத்தாரு.. அவருக்கும் மாலினிக்கும் என்னடா சம்பந்தம்?!"குமார் பொறுமையில்லாமல் கேட்க,

"பொறுமையா குறுக்க பேசாம கேளு.. நேத்து அங்க மாலினியும் இருந்தா!!அப்போ அவர் கௌதமை கனடா போய் படிக்கறதை நிப்பாட்ட வேண்டாம் நீ போய் படி.. நான் எல்லாம் இங்க பார்த்துக்கறேன் சொன்னாரு.. நானும் சொன்னேன்.. கௌதமும் ஒத்துக்கிட்டான்!! ஆனால் அவன் ஒத்துக்கிட்டதும் மாலினி அவனை ஒருவித வருத்தத்தோட பார்த்துட்டுருந்தா?! அது.. அதாவது.." பேச முடியாது திணறி,"உன்னை பார்க்க முடியாதான்னு கவலையோட பார்க்கற மாதிரி இருந்தது?!" சொன்னவன், ஒற்றை கையால் முகத்தை அழுந்த துடைத்து கொள்ள,

"என்னடா.. சொல்ற?! அப்ப அந்த பொண்ணுக்கு கௌதமை பிடிச்சுருக்கா?!" குமார் அதிர்ச்சியுடன் கேட்க,

"ப்ச்.. கௌதமுக்கு அவளை பிடிச்சுருக்குன்னு நினைக்கிறேன்.. ஏன்னா அவனும் அவளைத்தான் அப்ப பார்த்துட்டுருந்தான்..." ஜகதீஷ் வேதனையுடன் சொல்ல,

"எப்படிடா? அவன் எப்போ அந்த பொண்ணுகிட்ட பழகினான்?! நீ கண்ணால பார்த்தியா?! அப்படியே பழகியிருந்தா கூட நல்ல ஃப்ரெண்ட்ஸாக இருக்க கூட வாய்ப்பிருக்கே?! " குமார் தனது நண்பனின் காதல் கைகூட, இருக்கும் வழிகளையெல்லாம் தேடி பேச,

"ப்ச்...இல்லடா... நீ சொன்ன மாதிரி மாலினி என்ன நினைக்கிறான்னு எனக்கும் தெரியலை?! ஆனால் கௌதம்.. அவனோட பார்வை உரிமை பார்வையா இருந்தது... அதை நான் கவனிச்சேன்... ஆனால் மாலினிகிட்ட காதலை பத்தி பேசிருப்பானான்னு தெரியலை?!" யோசனையுடனே பதில் சொல்ல,

"பின்ன என்னடா?! அவன் சொன்னானா இல்லையான்னு தான் தெரியலையே?! அதுக்கு முன்னாடி மாலினிக்கு உன்னோட லவ்வை சொல்லிடு!! அவ சின்ன பொண்ணு அது இதெல்லாம் யோசிக்காத?! எப்படியும் அவன் கனடா போகப்போறான்?! உனக்கு அவளோட பேசி பழக வாய்ப்பு நிறைய கிடைக்குமே?! அதுக்குள்ள ஏன் மனசை தளர விடற?!" குமாரின் பேச்சில் நம்பிக்கை வந்தவனாய்,
"ஆமால்ல.. அப்போ மாலினி எனக்குத்தான்..." மலர்ந்த முகத்துடன் நண்பனை பார்க்க,
"அதேதான்.. இதே வேகத்தோடயே இரு.. எப்ப சான்ஸ் கிடைச்சாலும் உன் மனசை அவளுக்கு சொல்லிடு.. " உற்சாகத்துடன் அவனது தோளில் தட்டிய குமார், காரை எடுக்க, ஜன்னலை திறந்து விட்டு முகத்தில் மோதிய எதிர்காற்றில் மாலினியை தன் வசமாக்க போகும் கனவுகளில் புத்துணர்வுடன் அமர்ந்திருந்தான் ஜகதீஷ்.

"என்னருகே வர மாட்டாயா?!" மாலைத் தென்றலை தூதனுப்பி கௌதமை சீண்டிக்கொண்டிருந்தன அவனது அறையின் ஜன்னல்கள்.

வெறும் பார்வைக்கு கணினியின் முன்பு அமர்ந்திருந்தாலும் மனமெல்லாம் மாலினியின் மீதே இருந்தது. அதுவும் நடப்பது ஒன்றும் விளங்காது அவள் பார்த்த பார்வை?! உன்னை காண முடியாதா?! பரிதவிப்பில்லை!! ஆனாலும் ஓர் மெல்லிய ஏக்கம் இழையோடிய விழிகளை மறக்க முடியாது, அவள் அங்கிருந்து சென்று விட்ட பிறகு, யாருடனும் பேச்சை தொடராது, மதிய உணவு முடிந்ததும்,வேலை இருப்பதாக சொல்லி இங்கு வர, பின்னோடு தொடர்ந்து வந்த கந்தமாறனுக்கு அவனது அறையில் இருக்கும் ப்ளேஸ்டேஷனில் விளையாட விட்டுவிட்டு தனது பெற்றோரின் அறைக்கு வந்து அமர்ந்து விட்டான். பயணக்களைப்பில் சேதுபதி ஓய்வெடுத்து கொண்டிருக்க, வழக்கம்போல் மருத்துவமனைக்கு சென்று பார்த்து விட்டு வருவதாக காதம்பரியும் சென்றிருக்க, நேராக அவன் சென்று நின்றது அறையின் ஜன்னலுக்கு தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, அவளது அறையின் ஜன்னல் மூடப்பட்டிருக்க, இவனுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது. பெருமூச்சுடன் கணினியின் முன் அமர்ந்தவன்,

'கோபப்பட்டிருப்பாளோ?! வெளிப்படையா எதுவும் சொல்ல முடியாம அவளோட வயதும் படிப்பும் பெரிய தடையாக இருக்கே?!' தனக்குத்தானே நினைத்து கொண்டவன்,

'எதையும் தன்னிச்சையா முடிவெடுக்கற நான்?! மாமா சொன்னதும் ஏன் சம்மதித்தேன்?! ப்ச்.. தாய் வழி உறவென்பதால் மனம் தானாக அவர்புறம் சாய்ந்து விட்டதோ?!' தன்னை நினைத்து குழம்பிக்கொண்டிருந்தவனை சீண்டிய தென்றல் மீண்டும் அவனை ஜன்னலுக்கு அழைப்பது போல் இருக்க,

'ப்ச்.. போனால் தான் அவ தெரிய மாட்டாளே?! ஜன்னலை பூட்டி வச்சுருக்கா?! எவ்வளவு தைரியம்?!' செல்லக்கோபம் கூட எழ,

'பேசாம அவ வீட்டுக்கே போய் பார்த்துட்டு வந்துடலாமா?!' என யோசித்தவன் அந்த முயற்சியையும் கைவிட்டான். அவளது தந்தை அஷ்வின் ஏற்கனவே எச்சரித்ததை பற்றித்தான் சொல்லியிருந்தாளே?! எந்த காரணமும் இல்லாமல் தான் அங்கு சென்று நின்றால்?! நிச்சயம் அவர் வேறுவழி யோசிக்கத்தான் செய்வார்?!' பலவித யோசனைகளில் சுழன்றவன், ஒரு நப்பாசையில் எழுந்து சென்று ஜன்னலை பார்க்க,

'ம்ஹூம்.. ' இறுக்க மூடப்பட்டிருந்தது ஜன்னல். அத்தனை பேர் கூடியிருந்த ஹாலில் விழிமொழியிலேயே உத்தரவாதம் கொடுத்த அவனை அவள் நம்பவில்லையா?! எண்ணி தவித்து‌ போனான் கௌதம். இதற்கு மேலும் பொறுக்க முடியாது அறையின் குறுக்கே கூண்டுபுலியாய் நடை போட்டு கொண்டிருக்க,
"எத்தனை தடவை அளந்தாலும் அதே நாற்பதுக்கு அறுபது அளவு தாங்க மருமகனே" அறை வாயிலில் வந்து நின்ற சேதுபதியை பார்த்து, நடையை நிறுத்தி இதழ்களுக்கு எட்டாத புன்னகையை இழுத்து பிடித்தான் கௌதம்.

"ரொம்ப தீவிர யோசனையில் இருக்கிங்க போலயே?! ஏதும் பிரச்சனையா?" உள்ளே வந்தவர் அவனது தோளில் கைபோட்டு கொள்ள,

"ஒண்ணும் இல்லையே மாமா" முயன்று வரவழைத்த திடமான குரலில் அவன் பதில் சொல்ல,

"நம்பிட்டேனுங்..." உன்னை நானறிவேன் என்பதைப்போல் அவர் பேச்சிருந்தாலும், அத்தனை சீக்கிரம் தன்னை வெளிப்படுத்துபவனா கௌதம்?!

"விசா ப்ராஸஸிங்தான் பார்த்துட்டுருந்தேன் மாமா.. தங்குறதுக்கு என் காலேஜ்மேட் ஒருத்தன் கூப்பிட்டுட்டே இருக்கான்.. இருந்தாலும் அவன் இருக்கற ஏரியாவிலேயே தனியா ஒரு ஃப்ளாட் வாங்கிடலாம்னு பார்க்கறேன்..." சாமர்த்தியமாக பேச்சை மாற்றுபவனின் பேச்சை கேட்டு கொண்டே எதிரில் இருந்த கட்டிலில் அமர்ந்த சேதுபதி, அவனையும் அமரச் சொல்லி கட்டிலை காட்ட, அவர் முகம் பார்த்து எதிரே அமர்ந்தான் கௌதம்.

"நல்ல முடிவுதான்.. அதுக்கான டீடெய்ல்ஸை நமக்கு அங்க இருக்க க்ளையன்ட் கிட்ட கேட்டு வாங்கிடலாமுங்க.. அங்க ப்ரைவசி ரொம்பவே முக்கியம்‌. அப்படின்னா கொஞ்சம் முன்னாடியே நீங்க கிளம்ப வேண்டியிருக்குமே?!" சேதுபதி கேட்க,

"ம்ம்.. ஆமா...மாமா..‌" என்றவன் பெருமூச்சுடன் எழுந்து நின்று அவருக்கு முதுகு காட்டி நிற்க,

"எல்லாம் திட்டமிட்டது போல நடந்தாலும் மருமகன் முகத்துல ஒரு சந்தோஷம் இல்லிங்களே?!" நேராக விஷயத்துக்கு வந்திருந்தார் சேதுபதி.

நினைத்தாற்போல் ஊகித்து விட்டார்?! இனி விடமாட்டார்?! என்பதை உணர்ந்தாலும், திரும்பி மாமனை பார்க்க, கால்மேல் காலிட்டு தனது தொடையில் இடது கையின் மேல் வலது கையை வைத்து அவர் கேள்வி கேட்கும் தோரணை, தனது தாயை நினைவுபடுத்தியது கௌதமிற்கு. அவரும் அப்படிதான் மகனின் சேட்டையை விசாரிக்கும் போது இப்படித்தான் அமர்ந்திருப்பார்!! தாயென்றால் தயக்கமில்லாமல் மனதை சொல்லியிருப்பேனோ?! என்றெல்லாம் எண்ணம் சென்றாலும்,

"எனக்கு பிடிச்ச விஷயத்தை செய்றதுல எனக்கு எப்படி சந்தோஷம் இல்லாம போகும் மாமா?! அத்தையை தனியா விட்டுட்டு போற யோசனைதான்?!" என்றவன் புன்னகையுடன் தனது பிடரியை கோதிக் கொள்ள,

"அத்தையை விட்டுட்டு போற யோசனைங்களா?! இல்லை அவுட்ஹவுஸ்ல இருக்க பொண்ணை விட்டுட்டு போற யோசனைங்களா மருமகனே?!" என்ற மாமனை ஏனோ அப்பொழுது மிகவும் பிடித்தது கௌதமிற்கு. இதுதான் அவரது இயல்பு!! எந்தவித மேற்பூச்சும் இல்லாமல் நேராக விஷயத்திற்கு வந்து விடுவார்!!...

"அதான் கண்டுபிடிச்சுட்டிங்களே?!" இப்பொழுது முன்னுச்சியை வெட்கத்துடன் அவன் விரல்களால் தேய்த்து கொள்ள,

"பார்த்ததுமே வர்ற முதல்காதல் என்னைக்குமே ஸ்பெஷல் தான்... இதோ இன்னைக்கு வரைக்கும் காதம்பரியை என்னால மறக்க முடியலங்களே!!" சேதுபதியின் இந்த தகவல் கௌதமிற்கு புதிது.

"என்ன மாமா சொல்றிங்க?!" ஆச்சரியத்துடன் அவரைப் பார்க்க,

"ஆமாங்.. காதம்பரியை நான் தான் கட்டிக்கனும்னு அக்காவும் மாமாவும் பேசினதுல இருந்தே.. அவமேல இருந்த ஈர்ப்பு காதலா மாற... ஆனால் அவளோ கூட படிக்கிற வேற ஒருத்தரை காதலிக்கறதா வந்து நின்னா?! அந்த காதலும் கைகூடாம அவ தனியா நின்னப்போ எத்தனையோ சொல்லி பார்த்தும், ஏன் நானே என் மனசை அவளுக்கு சொல்லியும்?! அவ காதலிச்சவனை தவிர வேற யாரையும் கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டா!!

என் மனசு தெரிஞ்ச அக்கா என்னை தனியா இருக்க விடலை!! சமுத்திரா கூட என் கல்யாணம் முடிஞ்சது!! ஆனால் இப்பவும் தனி ஆளா நின்னு எல்லாத்தையும் அவ சமாளிக்கும் போது மனசு கேட்காம தான் இங்கயும் அங்கயும் மாத்தி மாத்தி எல்லாத்தையும் கவனிச்சுட்டு இருக்கேன். இந்த விஷயம் சமுத்ராவுக்கும் தெரியும்.. அவமேல இருக்கற அக்கறைல நான் உதவி செய்றதை என்னைக்குமே அவ தடுத்து பேசுனதில்லை.. இன்னைக்கு முழுக்க ஒரு நலன்விரும்பியா நான் காதம்பரியை விட்டு தள்ளி நின்னாலும், அவளுக்காக அக்கறைப்பட்டாலும், அந்த முதல்காதல் உணர்வு என்னைக்கும் என்னை விட்டு போகாது" என்றவரின் கண்கள் சற்றே கலங்க,

"புரியுது மாமா...." அதுவரை நின்று கேட்டுக்கொண்டிருந்தவன், அவரருகே அமர்ந்து கைபிடித்து கொள்ள, கௌதமை பார்த்து இதழ் மலர்ந்தவர்,

"இத்தனையும் இன்னைக்கு உங்களுக்கு சொல்றதுக்கு காரணம்... காதம்பரியை போல காதல்ல தோற்கவும் கூடாது.. என்னைப்போல விட்டுக்கொடுக்கவும் கூடாது.. நின்னு போராடனும்.. சொந்தத்துக்குள்ள இருந்தப்பவே அத்தனை பிரச்சனை.. அப்ப அந்நியத்துக்குள்ள நுழையும் போது.. ரொம்ப கவனமா இருக்கனும்.." என, கௌதமின் கண்கள் தன்னைப்போல் ஜன்னல்களை தொட்டு மீள, "ஆனால் காதல் கவனமா இருக்க விடாதுங்க மருமகனே... அந்த பொண்ணை பார்த்தாலும் சின்ன பொண்ணாட்டம் இருக்குது..." நிறுத்தி விட்டு கௌதமை பார்க்க,

"ப்ளஸ்டூ முடிச்சு இப்பதான் ஐஐடி சேரப்போறா!!"

"அதனாலதான்.. இன்னும் வெளிப்படையா என் மனசை அவளுக்கு சொல்லலை மாமா"

"ஓ.. அதான்.. அப்படி குழப்பமா உங்களையே பார்த்துட்டு நின்னுட்டுருந்ததுங்களா?! அவங்க அப்பா கூப்பிட்டதை கூட கவனிக்காமல்ல உங்களை பார்த்துட்டுருந்தது!! எப்படியோ?! விஷயம் புரிஞ்சுடுச்சுல்ல.. நிம்மதியா பிள்ளை படிக்கட்டுமுங்.. நீங்களும் நல்லபடியா கனடா போயிட்டு வாங்க..‌ அதுக்கப்பறம் பேசி முடிவெடுக்கப்போறோமா? இல்லை முடிவெடுத்துட்டிங்களா?!" சேதுபதி கேள்வியுடன் நிறுத்தினார். மருமகனை பற்றிதான் தெரியுமே?!
மாலினியை எந்தளவிற்கு கவனித்திருக்கிறார் என்பதை நினைத்து சிரித்து கொண்டே எழுந்து நின்ற கௌதமன்,பேன்ட் பாக்கெட்டிற்குள் கைகளை விட்டுக்கொண்டு, நேருக்கு நேராக சேதுபதியை பார்த்து, "முடிவெடுத்துட்டேனுங்.."அவரைப் போலவே பேசிக்காட்ட, அடக்கமாட்டாது சிரித்தார் அவர்.

"இதுவரைக்கும் செயல்ல காண்பிச்சுதான் எனக்கு பழக்கம்.. ஆனால் இன்னைக்கு உங்ககிட்ட சொல்லனும் போல தோணுது மாமா. எனக்கு அவதான் காதலி மனைவி எல்லாமே.. நான் முடிவு பண்ணிட்டேன்..." என,

"இந்த விஷயம் காதம்பரிக்கு தெரியுமா?!" சேதுபதி யோசனையுடன் மருமகனை கேட்க,

"என்னோட யூகப்படி அவங்களுக்கும் என்னோட தேர்வு மாலினி தாங்கறது தெரியும்னு நினைக்கிறேன் மாமா... ஆனால் இன்னும் அத்தை என்கிட்ட கேட்கலை!!" என, கிட்டதட்ட உறுதியாக இல்லாமல் அவன் சொல்லமாட்டான் என்பதால்,

"அப்பறம் என்ன?! அவங்க குடும்பத்தை பத்தி விசாரிக்காம காதம்பரி ஆதரவு கொடுக்க மாட்டா?! இருந்தாலும் நானும் விசாரிக்க வேண்டிய இடத்துல விசாரிக்க சொல்றேன் மருமகனே!"

"தேவையில்லை மாமா... மாலினி எப்படி இருந்தாலும் என்னவா இருந்தாலும் எனக்கு உரியவள் தான்..." தீவிரத்துடன் பேசியவனிடம் எழுந்து வந்து நின்றவர்,

"சரிங்க மருமகனே.. நீங்க சொல்றபடியே ஆகட்டும்.‌ ஆனால் இனி பொண்ணு நம்ம கண்காணிப்புல இருக்குமுங்.. அதனால நீங்க கவலையில்லாம கிளம்புற வழியை பாருங்க... இதுக்கு மேல இங்க இருந்தா உங்க அத்தை கிளம்பி இங்க வந்துடுவா?!" அவனது நெஞ்சில் கைவைத்து தட்டிக்கொடுத்தவர், புன்னகையுடன் அவனது அறையை விட்டு வெளியே செல்ல, தெளிந்த முகத்துடன் அவரைப்பார்த்து கொண்டிருந்த கௌதமன், சேதுபதி சென்றதை உறுதிப்படுத்தி கொண்டு வேகமாக சென்று மீண்டும் ஜன்னலை போய் பார்க்க, இரவு நெருங்கியும் இன்னும் ஜன்னலை திறக்கவில்லை அவள்.

'ஸ்வீட்டி..‌ இன்னைக்கு உனக்கு இருக்கு!!' மாலினியை இன்று எப்படியும் சந்தித்து விடும் முடிவை உறுதிப்படுத்தியிருந்தான்.
 
கௌதமின் திட்டம் தெரியாது, அவன்மேல் இருந்த குழப்பத்தில் ஜன்னலை சாற்றி விட்டாள் தான்?! இருந்தும் நேசச்சாரல் நிறைந்து விளையாடும் முற்றமாய், திறந்துவிட்ட மனக்கதவுகளை சாற்றும் வழி தெரியாது, மூடிய ஜன்னல்களை பார்த்து கொண்டு தான் நின்றிருந்தாள் மாலினியும்.

"அவன் கனடா சென்றால் உனக்கென்ன?!" எதிரே விரித்து வைத்திருந்த புத்தகங்கள் அவளை பார்த்து கேள்வி கேட்பது போலிருந்தது அவளுக்கு.

"அதானே எனக்கென்ன?! அவனா வந்தான்.. பேசினான்... இப்ப கிளம்பி போகப்போறான்... " தனக்குதானே சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அவன் பிரிந்து சொல்லப் போகிறான் என்பதில் மனம் மீண்டும் கௌதமையே சுற்றி வந்தது.

'தான் என்ன எதிர்பார்க்கிறோம்?!' என்று புரியாமலேயே நேரத்தை கடத்தியவளுக்கு, படிக்கவும் முடியாமல் கௌதமை நினைக்கவும் முடியாமல் மழையில்லாத மேகமூட்டத்தை போல மூச்சு முட்ட, ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து தன்னை சரிசெய்ய முயன்றவளை,

"மாலு.. கதவை திறம்மா...." அன்னையின் குரலில் அப்போதைக்கு கௌதமின் நினைவை புறந்தள்ளியவளாய் வேகமாக சென்று கதவை திறந்தாள் மாலினி.

உள்ளே நுழைந்த வாணி,மகளின் சோர்வுற்ற முகத்தை கண்டு," கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துதான் படியேன்டி.. நீ இவ்வளவு கஷ்டப்படுவ தெரிஞ்சா நான் உன்னை ஐஐடில படின்னு சொல்லியிருக்கவே மாட்டேன்..." தாய் நெஞ்சம் கேளாது மகளை நினைத்து உருக,

"அதெல்லாம் இல்லைம்மா.. இன்னும் கொஞ்சநேரம் படிச்சுட்டு வரேன்..." அவளுக்கு எதிலும் மனது செல்லவில்லை?! போகிற போக்கை பார்த்தால் தாயிடமே கௌதமை பற்றி புலம்பி விடுவோமோ என்ற பயம் வேறு நெஞ்சை கவ்வ?! படிப்பை சாக்காக வைத்து உள்ளேயே அடைந்து கிடப்பது கஷ்டமாக இருந்தாலும், அன்னையிடம் உண்மையை மறைப்பதும் கஷ்டமாக தான் இருந்தது. அதுவும் இன்று தந்தையிடம் இருந்து நூலிழையில் தப்பி இருந்தாள்.

கௌதம் கனடா செல்லப் போவதாக சொன்னதும் அவனையே பார்த்து கொண்டிருந்தவள், கையில் காதம்பரி கொடுத்திருந்த இனிப்பை கவனிக்க மறந்திருந்தாள். அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்திருக்க, இனிப்பிலிருந்த ஜீரா, கை வழியே வழிந்து அவளது ஸ்கர்டில் விழப்போக, சேதுபதியை பார்த்து கொண்டிருந்த அஷ்வின், அப்பொழுதுதான் மகளை கவனித்தார். கௌதமை சேதுபதி கட்டியணைத்திருக்க, அவர் பார்க்கும் போது, மகளும் சேதுபதியை பார்த்து கொண்டிருப்பது போல் இருக்க,

"மாலு..." முதல்முறை அழைத்ததை அவள் கவனிக்காது விட,
"மாலு.. இனிப்பு உன் ட்ரெஸை அழுக்காக்க போகுது..." அவளின் கைபிடித்து இனிப்பை தனது கையில் இருந்த கைக்குட்டையால் வாங்கிவிட்டு, தந்தை தொட்டதும் சுய நினைவிற்கு திரும்பியவள், அப்பொழுதுதான் தன்னை கவனித்து விட்டு,

"சாரி டாடி..." என,

"பரவாயில்லம்மா.. நீ வீட்டுக்கு போ கையை சுத்தம் பண்ணிக்கோ..." அஷ்வின் மகளை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருக்க,

"காதும்மாட்ட சொல்லிட்டு போறேன்பா.." என்றவள் திரும்பி பார்க்க, கௌதமிடம் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

"அவங்ககிட்ட நான் சொல்லிக்கறேன்.. நீ கிளம்புடா..." என, அவளது ஸ்கர்டை பிடித்து இழுத்தான் கந்தமாறன்.

"அக்கா.. நீங்க செஸ் விளையாடுவிங்களா?!"அவனுக்கு பதில் சொல்லும் மனநிலையில் மாலினி இல்லாததால் யோசனையுடன் நின்றிருக்க,
"அதெல்லாம் சூப்பரா விளையாடுவா தம்பி.. "அஷ்வின் பதில் சொன்னார்.

"அப்ப நாம உங்க வீட்டுல விளையாடலாமா அக்கா?!" கந்தமாறன் உற்சாகமாய் கேட்க, இப்பொழுது அவனை கவனித்தவள்,

"தாரளாமா விளையாடலாம்.." புன்னகையுடன் சொல்ல,

"அப்போ நாளைக்கு வரேன். இன்னைக்கு அப்பா விட மாட்டாங்க.." ரகசிய உடன்படிக்கை போட்டவனை‌ பார்த்து புன்னகை பூத்தவள், "ம்ம்.." தலையாட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாள். மகள் சென்றதும் நிம்மதியுடன் தனது வேலையை கவனிக்க அஷ்வின் சென்றுவிட, வீட்டிற்குள் வந்தவள், முதல் வேலையாக அவளது அறைக்கு சென்று ஜன்னலை பார்க்க, அன்று கௌதமன் பேசியதெல்லாம், நீர்குமிழிகளைப்போல் படபடவென்று கண்முன்னால் வெடித்து சிதறி அவளை சோதிக்க, வேகமாக ஜன்னலை சாத்தியவள், படிக்க போவதாக சொல்லி விட்டு அறைக்கதவையும் சாற்றிக்கொண்டு கைக்கு கிடைத்த புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்து கொண்டவள், பக்கங்கங்களை விழிகளுக்கு கொடுக்காமல், யோசனைகளுக்கு கொடுத்து கொண்டிருக்க, அன்னை வந்தபின்பு தான் எழுந்து வந்தாள்.

"சரி வா.. வந்து சாப்பிடுட்டு உட்கார்ந்துக்கோ... " மகளை வாணி அழைக்க,

"பசிக்கலம்மா.. அப்பறம் வரேன்.. நீங்க அப்பா கூட சாப்பிடுங்க..." மறுத்து பேசியவளை முறைத்த வாணி,

"அப்பாவும் பொண்ணும் என்ன தான் நினைச்சுட்டுருக்கிங்க?! உங்கப்பா ஏதோ சேல்ஸ் இன்ஸ்பெக்டரை பார்க்க அப்பாயின்மென்ட் கிடைச்சுருக்குன்னு காதம்பரி மேடம் அனுப்பியிருக்காங்கன்னு வீட்டுக்கு கூட வராம கிளம்பி போயிட்டாரு. நீயும் சாப்பிட வரமாட்டேன்னு சொன்னா எப்படி?!" முகத்தை தூக்கி வைத்து கொள்ள,

அன்னை வருந்துவதில்,"சாரிம்மா.. வாங்க சாப்பிட போகலாம். என்ன டிபன்?!",

"உனக்கு பிடிச்ச சப்பாத்தி குருமா தான்டா..." மகளின் தாடை பிடித்து கொஞ்சியவர்,

"சாப்பிட்டுட்டு நாம ரெண்டு பேரும் தோட்டத்துல நடந்துட்டு வரலாம். எனக்கென்னமோ இந்த இரண்டு நாளா நீ வீட்டுக்குள்ளயே அடைஞ்சு இருக்குற மாதிரி இருக்கு" பேசிக்கொண்டே டைனிங் டேபிளுக்கு வந்தவர்கள், ஆளுக்கொரு தட்டில் உணவை வைத்து எடுத்துக்கொண்டு சோஃபாவில் சென்று அமர, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தார் வாணி. அதில் ஓடிக்கொண்டிருந்த படத்தில் காதல் வயப்பட்டிருக்கும் நாயகனுக்கு தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்திலும் நாயகியே தெரிய, அதை உடனிருக்கும் நண்பன் கிண்டல் செய்ய, வாணி அதை ரசித்து சிரித்து கொண்டிருக்க, மாலினியோ வேகமாக தனது தட்டிலிருந்த உணவை பார்க்க,கௌதமின் முகம் ஒன்றும் தெரியவில்லை.
'நீ இன்னைக்கு எனக்கு கொடுத்த ஷாக்குக்கு இங்க வந்துடுவியா நீ?! அப்படியே வந்தாலும் இன்னொரு தட்டை வச்சு மூடிவச்சுடுவேன்..." மனதிற்குள் செல்லமாக அவனை கடிந்து கொண்டே புன்னகையுடன் உணவை உண்டு முடித்து விட்டு அன்னையுடன் சேர்ந்து எழுந்து கொள்ள,

"பனி விழுகுற மாதிரி இருக்கு மாலும்மா.. இதை போர்த்திக்கோ.." உள்ளறையில் இருந்து மகளுக்கு ஸ்டோலை எடுத்து வந்து கொடுத்தவர்,

"வா போகலாம்.. " என, சோஃபாவில் கிடந்த அவரது அலைபேசி அழைத்தது. மாலினி எடுத்து வந்து அன்னையிடம் கொடுக்க,

"ஹே.. உங்க அத்தை கால் பண்றாடி!! அவ மக ரிதிமா, புருஷன் கூட ஏன் வெளிநாட்டுக்கு போகலைன்னு கேட்டுட்டு வந்துடறேன்.. நீ முன்னாடி போய் நடந்துட்டுரு..." வாணி ஒரு பரபரப்புடன் புரணி பேச அழைப்பை ஏற்கும் முன், அழைப்பு நின்று,அஷ்வினின் கால் வந்தது.

அதைப்பார்த்ததும் சிரித்த மாலினி," ம்மா.. அப்பாம்மா... " என,

"தெரியுது உங்க அப்பாதான்னு.. கரெக்டான நேரத்துல இவருக்கு மூக்கு வேர்த்துடும்.. நீ அமைதியா நில்லுடி.. அவரு பெரியம்மா மக கால் பண்ணது தெரிஞ்சா.. எதுக்கு அவங்க வீட்டு கதை உனக்குன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிடுச்சுருவாரு.. சொந்தக்காரங்கன்னாலே இவருக்கு ஏன்தான் இப்படி அலர்ஜியா இருக்கோ?!" கணவனை திட்டிக்கொண்டே மகளுக்கு வாய் மீது விரல் வைத்து சைகை காட்டியவர், அஷ்வினின் அழைப்பை ஏற்க, சுவராசியத்துடன் அன்னையை வேடிக்கை பார்த்தாள் அவள்.

"வாணி.. நான் வர எப்படியும் பதினொரு மணிக்கு மேல ஆகும்மா.. சேல்ஸ் இன்ஸ்பெக்ட்ர் வெளியூர்ல இருந்து கிளம்பி வந்துட்டு இருக்காராம். நான் கிளம்பறேன்னு சொன்னதுக்கு.. இல்லை இருங்க.. வந்துடுவேன்னு சொல்லிட்டாரு... நீங்க சாப்பிட்டு பத்திரமா கதவை பூட்டிட்டு படுங்க" என,

"ப்ச்.. என்னங்க.. சரி.. சரி...நீங்க பார்த்து வாங்க..." புன்னகைக்கும் இதழ்களுடன் பொய்யான வருத்தத்தில் அலைப்பேசியை அணைத்த அன்னையின் தோளில் கைபோட்டு,
"நீங்க சரியான ராஜதந்திரி மம்மி..." தலையோடு தலை முட்டி சிரித்தாள் மாலினி.
"பின்ன யார்கிட்ட?! உங்கப்பால்லாம் எனக்கு ஜூஜுபி!!" வாணி கண்சிமிட்ட,
"சரி..‌அப்போ நீங்க அத்தைகிட்ட பேசுங்க.. நான் ரூமுக்கு போறேன்..." என்று திரும்பியவளை, பிடித்து நிறுத்தினார் வாணி.

"நான் பேசிட்டு கொஞ்ச நேரத்துல தோட்டத்துக்கு வர்றேன்.. நீ முன்னாடி போய் நடந்துட்டு இரு... ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடைக்காதே.. இங்கதான் ஒரு பயமும் இல்லையே.. காவல் நாய்ங்களை பதினொரு மணிக்கு மேல்தான் அவிழ்த்து விடுவாங்க.. அதுக்குள்ள நடந்துட்டு வந்துடலாம்.. நீ போ... நான்... வர்றேன்.." அலைப்பேசியில் அழைப்பெடுத்து கொண்டே, மகளிடம் சொல்லிவிட்டு போக, மனமில்லாமல் தான் தோட்டத்திற்குள் சென்றாள் மாலினி.

சிறிதுநேரம் அன்னையின் பார்வையிலேயே நடந்தவள், அவர் மும்முரமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்து புன்னகைத்து கொண்டே, வீட்டை சுற்றி நடக்க ஆரம்பித்தாள்.

தோட்டத்தின் குளுமையும், மெல்லிய கூச்சலுடன் காதை உரசிச் செல்லும் பனி வாடைக்காற்றும், ஒருவித புத்துணர்வை கொடுக்க, கண்கள் தானாக அன்று கௌதம் நின்றிருந்த இடத்தை தொட்டுவிட்டு மீள, அவன் சொன்ன வார்த்தைகளும் நினைவுக்கு வந்தது.

'அங்க..ஜன்னல்லயிருந்து உன்னை பார்ப்பேன்..' வார்த்தைகள் ரீங்காரமிட, மூடியிருந்த தனது அறை ஜன்னலை பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

"ஜன்னல் மூடியிருக்கறது தெரிஞ்சா என்ன பண்ணுவான்?!" மலர்ந்த இதழ்கள் வார்த்தைகளை சத்தமாகவே முணுமுணுக்க,

"இப்படி பக்கத்துல வந்து நின்னுருப்பான்..." அருகில் கேட்ட குரலில் அரண்டு போனவள்,

"அம்...." மாஆஆஆ.. மாலினி கத்த போகும் முன்பே, கைகளால் அவளது வாயைப் பொத்திய கௌதமன்,

"ஹேய்.. தேனீ... நான்தான்டி..." அதட்ட,
அப்பொழுது தான் அவனது முகத்தை நன்கு கவனித்தவளின் கண்கள் பயத்திலிருந்து ஆசுவாசமாக, அவளை விடுவித்து விட்டு புன்னகைத்தவனை முறைத்தவள், வேகமாக முன்னே நடந்து போக,

"ஹேய்..நில்லுடி.. உன்னை பார்க்கத்தான் இங்க ஓடி வந்தேன்...!!" அவளது கைபிடித்து அருகிழுத்தவன், ஓடி வந்ததில் வேக மூச்சுக்களை விட்டு கொண்டு பேச, முகம் மோதிய மூச்சுக் காற்றில் தோட்டத்தின் குளுமையிலும் வியர்ப்பதை போல் இருக்க,

"கனடாக்கு ஓடப்போறவர் எதுக்கு என்னை பார்க்கனும்?!" அவனது கையை உதறிவிட்டு தள்ளி நின்று கொண்டாள் மாலினி.

"கனடா போயிட்டு மாஸ்டர்ஸ் பண்ணிட்டு வரனுங்கறது.. நான் ஹைஸ்கூல் போகும் போதே முடிவு பண்ண விஷயம்!! ஆனால் ஒரு தேனீயை பார்த்ததும் யாருக்காகவும் முடிவை மாத்திக்காத இந்த ஜிவி.. போகக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்னு சொன்னா நம்புவியா மாலினி!?" தன்னை விளக்கி விடும் பரிதவிப்புடன் பேசுபவனை கண்டு உள்ளுக்குள் உருகினாலும்,
"ந.. நம்பிட்டேன்?!" மென்னகையுடன் அதரங்களை பிரித்தவள், நம்பாமல் விரித்த விழிகளில் சிக்குண்டவனாய்,

"நிஜம்மா... எப்படியாவது உன்னை சந்திச்சு பேசனுன்னு ஓடிவந்தா?! அம்மான்னு கத்தி என்னை பயமுறுத்துற?!"
"இருட்டுல வந்து பயமுறுத்திட்டு நான் பயமுறுத்துறேன்னு சொல்றிங்களா?! ம்ஹூம்..நீங்க பேசிட்டே இருங்க!! அம்மா எப்ப வேணும்னாலும் இங்க வருவாங்க.. நான் கிளம்பறேன்.." இன்னும் அவன்மீது கோபமாக இருப்பதை போலவே காட்டி கொண்டவள், முன்னே நடக்க, இருட்டில் இருந்த கல் கண்ணில் படாது பெருவிரலில் இடித்து ,"ஷ்.. ஆ..." தடுக்கி விழுந்திருந்தாள்.

'வேணும்... என்னை விட்டுட்டா ஓடுற?! ' என்பதைப் போல் கௌதமன் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே, அவளருகே அமர்ந்து காயத்தை பார்க்க வர,
"ஒண்ணும் பார்க்க வேண்டாம்.. சிரிக்கிறிங்களா?!..தள்ளிப்போங்க.. " வலிக்கும் விரலைப் பிடித்து கொண்டு அவனைத் தள்ள, அவள் தள்ளினாள் தள்ளி அமருபவனா அவன்?! அவள் கையை தட்டிவிட்டு காயத்தை தொட்டு பார்க்க, மெலிதாக வீங்கியிருந்தது.

"ஷ்.. ஆஆஆ.. வலிக்குது கௌதமா..." வலியை தாங்காது முணுமுணுத்தவளை பொருட்படுத்தாது, சம்மணமிட்டு அமர்ந்தவன், காலை தூக்கி தன் மடியில் வைத்து பெருவிரலில் அழுத்தி தேய்க்க,

"அச்சோ..‌வலிக்குது..."

"ரொம்ப கத்தாதடி.. உங்க அம்மா வந்துட போறாங்க... இன்னைக்கு உன்கூட பேச முடியலைன்னா.. உங்க அம்மா முன்னாடியே உங்க வீட்டுக்கு உன்னை தூக்கிட்டு போய் காலுக்கு ஐஸ் க்யூப்ஸ் வச்சிட்டு.. உன்கூட உன்னோட ரூம்ல தனியா உட்கார்ந்து பேசிட்டு தான் கிளம்புவேன்...காட் இட்?!" சொன்னதை செய்துவிடும் வேகத்தில், ஒற்றை கண்ணை சிமிட்டியவனை பார்த்து வாயை கையால் பொத்தி கொண்டாள் மாலினி. அவன் அழுத்தி தேய்த்த சிறிது நேரத்தில் வலி மட்டுப்பட்டிருக்க, அவன் காலை விட்டதும் சற்று ஆசுவாசமானவள், புல்தரையில் அமர்ந்ததால் காலில் ஒட்டிய ஈரப்புற்களை அவள் தட்டிவிட, அந்தப் புல்லின் மீது கூட பொறாமையாக வந்தது கௌதமனுக்கு. அருகே அமைதியாக அமர்ந்திருந்தவனின் பார்வை மாற்றத்தை அப்பொழுதுதான் கவனித்தவள்," நா..நான்.. வீட்டுக்கு போறேன்...." அவனை கண்டு கொள்ளாமல் எழப்போக, அவளது கழுத்தில் இருந்த ஸ்டோலை பிடித்து கௌதம் இழுக்க, நிலை தடுமாறி அவன் மடி மீது விழுந்தவள் பதறி எழுந்து கொள்ள,
"எதுக்குடி ஜன்னலை மூடுன?!"தானும் எழுந்து நிதானமாக அவளை பிடித்து தன்னருகே நிறுத்தியவன் கேட்க,

"முதல்ல என்னை விடு கௌதமா!.. அம்மாவும் வாக்கிங் வர்றேன்னு சொன்னாங்க.. எப்ப வேணும்னாலும் வந்துடுவாங்க" வார்த்தைகளுக்கு வலிக்கும் போல் பதில் சொல்ல,

"வந்தா வரட்டும்.. நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு!!"அவனது அருகாமை உற்சாகத்தை கொடுத்தாலும், அச்சத்துடன் அன்னை பேசிக்கொண்டிருக்கும் வாயிலை பார்த்து கைகைளை பிசைந்தவள்,

"விளையாடாத கௌதமா.." அவன் முகம் பார்க்க திரும்பி வேகமாய் பதில் சொன்னவளின் கன்னம் அவனது வலக்கன்னத்தில் இடித்திருந்தது. தோட்டத்து விடிவிளக்கின் அரை வெளிச்சத்திலும் ஒருவித பரவசத்துடன் அவளை பார்ப்பவனை கண்டு, தான் செய்த செயலை உணர்ந்தவள்,

"சா..‌சாரி..." திக்கித்திணறி பேசியவள், அவ்விடம் விட்டு நகர முயற்சிக்க அவளால் முடியவில்லை. கௌதம் அவளது கையை இன்னும் விடாமல் பிடித்திருந்தான்.

"நான் கனடா போறேன்னு கோபமா மாலினி?!" பேதையின் முகம் பார்த்து கேட்க,

"ம்ம்..." சம்மதத்துடன் தலையாடியது.

"கோபத்துல தான் ஜன்னலை மூடியது?!"

"ம்ம்...."

"உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் வரும்னு சொல்வாங்க?! நான் உனக்கு உரிமையானவனா ஸ்வீட்டி?!" உயிர் உருக்கும் இந்த குரலுக்கு என்ன பதில் சொல்வாள்?! என்ன இன்று?! எனை வென்று விடும் முழு நோக்கத்திலேயே பேசுகிறானே? வார்த்தைகளால் காதல் சொல்லிக்கொள்ளவில்லை! ஆனால் இவன் அருகில் வந்தாலே காற்றுக்கு பதிலாக சித்தமெல்லாம் காதலாக நிறைந்து விடுகிறானே?! இதற்கு பெயர்தான் காதலா?! தர்க்கமாடும் மனதுடன் போராடிக்கொண்டு, நாணத்தில் அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து கொள்ள, ஒற்றை விரலில் அவள் தாடை தொட்டு நிமிர்த்தியவன்,
"நான் உனக்கு மட்டுந்தான் உரிமையானவன் மாலினி. என்னை நம்புறியா?" பாவையின் கண்ணோடு கண்கலக்க,
"ம்ம்...." ஓசையின்றி சம்மதம் சொன்னவளின் விழிமொழியில்,
"நீ இப்படி சொல்லும்போது.. ப்ச்...." உணர்வுகளை கொட்டும் வேளை,தன்னை கட்டுப்படுத்தி கொள்ள அரைச்சொல்லாக சொல்லாமல் விட்டவன், தனது பின்மண்டையை தட்டிக்கொண்டு தரையில் உதைக்க, அச்சத்துடனும், அவனது செயலை ஒருவித ரசிப்புடனும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள் அவனெதிரே அனிச்சமாய் நின்றிருந்த பேதையும்.

தன்னவளின் பார்வையில் ஈர்க்கப்பட்டவனாய்,"யூ ஆர் சோ ஸ்வீட்... மை ஸ்வீட்டி.." இருகைகளால் அவள் முகத்தை ஏந்த, உள்ளூற பயப்பந்து உருண்டாலும், அவனின் கைகள் ஏந்தியதும், இமைகள் தானாக மூட, அதரங்கள் துடிக்க நின்றிருந்தவளை நெருங்கும் வேளை,
"மாலினி....." மகளை காணாது, வாணி வாசலில் இருந்து அழைக்க, தூரத்தில் கேட்ட அன்னையின் குரலில் மிரண்டு நடுங்கி விலகி நின்றாள் மாலினி.

"அச்சோ.. கௌதமா.. அம்மா..ஆஆஆ..." பதற,

"ரிலாக்ஸ்... வா... நானே கூட்டிட்டு போறேன்.." கௌதம் அவளை ஆறுதல்படுத்த முயல,

"அம்மா நம்மளை இப்படி சேர்ந்து பார்த்தா அவ்வளவுதான்.. பிரச்சனை ஆகிடும்.. நான் போறேன்...." எழுந்து ஓடப்போனவளை தடுத்தவன்,

'போகாதே!!..' எனும் பார்வை பார்க்க,
"கௌதமா.. ப்ளீஸ்..." கெஞ்சியவளை,
"இப்போ போ.. இன்னும் கொஞ்ச நேரத்துல நீ திரும்பி வரனும்.. அதுவரைக்கும் நான் இங்க தான் இருப்பேன்.."
"அது எப்படி முடியும்?! அப்பா வந்துடுவாங்க... அம்மாவும் விட மாட்டாங்க!!" பரிதவித்தவளை பார்த்து,

"உங்க அப்பா வர லேட்டாகும்.. உன்னை பார்க்கனும்னு நான்தான் ப்ளான் பண்ணி அனுப்பி வச்சேன்..." கௌதம் தனது டீஷர்ட் காலரை தூக்கி விட்டு கொள்ள,

"அடப்பாவி.... அப்போ.. நான் வரமாட்டேன்..."

"அப்போ நான் இப்பவே உங்க வீட்டுக்கு வர்றேன்.." தானும் எழுந்து கொள்ள போனவனின் தோளில் இரு கைகளையும் வைத்து அழுத்தி அமர வைத்தவள்,

"ஷ்..." தனது உதட்டில் விரல் வைத்து, அமைதியாக அமர சொல்ல, இதழ் தீண்டிய விரல்களின் மென்மையை சுவைக்க தத்தளிக்கும் அதரங்களை கட்டுப்படுத்தி கௌதமன் இறுக்க மூடிக்கொள்ள, மாலினியோ பதட்டத்துடன் வாணியை பார்த்து கொண்டு அவனருகே அமர்ந்து ஒளிந்து கொண்டு பார்க்க,அன்னை அழைப்பை துண்டித்து விட்டு, தோட்டத்திற்கு வருவதை கவனித்தவள், இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்பதை உணர்ந்தவளாய்,

"வந்துடறேன்.. கௌதமா..." என்று விட்டு வேகமாக நடந்தவள், மறுபடியும் அவனை பார்க்கும் போது ஏன் வந்தோம் என தவித்து திரும்புவோம் என்பதை அறியாது துள்ளலுடன் அன்னையை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தாள்.


குளிர்வான்🤍....
 
Status
Not open for further replies.
Back
Top