இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

தண்மதி ராஜா கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம்-24


"என்னடா ஒரு ரவுண்ட் போதுமா? ஜாகிங் பண்ணாம உட்கார்ந்துட்ட?!" தோட்டத்து கல் பெஞ்சில் அமர்ந்திருந்த ஜகதீஷை பார்த்து, மூன்றாவது ரவுண்ட் சுற்றி வந்த கௌதமன் மூச்சை இழுத்து விட்டு கொண்டே கேட்க, விடியலின் ரேகைகள் எட்டிப்பார்க்க தொடங்கியிருக்கும் வைகறைப்பொழுது கூட மனதிற்கு இதம் தராமல், ஜகதீஷை மாலினியின் நினைவே துரத்தி கொண்டிருந்தது. அதுவும் அஷ்வின் நேற்று நடந்து கொண்ட விதத்தில், ' தனது எண்ணத்தை ஏதும் ஊகித்து விட்டாரோ?' என்ற கலக்கமும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் அமர்ந்திருந்தான்.

முதல்நாள் தனது நண்பன் குமாருடன் வேக வேகமாக வேலையை முடித்து விட்டு வந்தவன், அரண்மனைக்குள் கூட செல்லாது நேராக மாலினியின் வீட்டுக்கு தான் சென்றான்.

ஹாலின் டைனிங் டேபிளில் அமர்ந்து காய்களை வெட்டி கொண்டிருந்த வாணி," அடடே.. வாங்க தம்பி.. " மகிழ்ச்சியுடன் அவனை‌ வரவேற்க, வீட்டுக்குள் நுழையும் போதே, மாலினி எங்கும் தென்படுகிறாளா?! என பார்த்து கொண்டே புன்னகையுடன் உள்ளே நுழைய, மகளின் அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் அஷ்வின்.

"உட்காருங்க தம்பி.. உங்ககிட்ட ஏதோ டவுட் கேட்கனுன்னு காலைல இருந்து எல்லாத்தையும் எழுதி வச்சிட்டிருந்தா மாலினி... இன்னைக்கு நீங்க இருந்து இங்க சாப்பிட்டுட்டு தான் போகனும்.." வாணி சமையலறைக்கு போக எழுந்து கொள்ள,

"அச்சோ.. அதெல்லாம் வேண்டாம் ஆன்டி..." ஜகதீஷ் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தவன் மறுத்து கொண்டிருக்க,

"வாங்க ஜகதீஷ்... " அஷ்வின் வரவேற்கும் விதமாய் புன்னகைத்தவர், அவனருகே அமர, அவரைப் பார்த்து இதழ் பிரித்தாலும், தேடி வந்தவள் மட்டும் கண்ணில் படவில்லை.

"பார்க்க ரொம்ப களைச்சு போய் தெரியறிங்களே?! " அஷ்வின் அவனது தோற்றத்தை பார்த்து கேட்க,

"ஆமா சார்.. காலேஜ் ஃப்ரெண்டை பார்த்துட்டு வந்தேன். அவன் ஏரியாவில் இருந்து இங்க வர்றதுக்குள்ள சரியான ட்ராஃபிக். சென்னை ட்ராஃபிக் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே?! " என்றவன் குமாரை பற்றிய விவரங்களை சொல்ல, கையில் புதிதாக பிழியப்பட்ட ஆரஞ்சுசாறுடன் வந்து கொண்டிருந்தார் வாணி.

நேராக அதை ஜகதீஷின் முன்பு நீட்ட," இல்லை வேண்டாம் ஆன்டி.." ஜகதீஷ் மறுக்க,

"காஃபி தானே அலர்ஜி.. ஜூஸூமா?! எடுத்துக்கோங்க தம்பி. போன தடவை தான் நீங்க எதுவுமே சாப்பிடலை?!" வாணி வற்புறுத்த,

"எடுத்துக்கோங்க ஜகதீஷ்..." அஷ்வின் தனக்கொன்றை எடுத்து கொண்டவர், ஜகதீஷிற்கும் எடுத்து கொடுக்க, அவன் வாங்கும் நேரம் அவரது கை திடீரென நழுவி, ஜூஸ் மொத்தமும் அவனின் சட்டையில் கொட்டிவிட்டது.

"அச்சோ.. என்னங்க இப்படி பண்ணிட்டிங்க?! " வாணி பதறி ஜகதீஷின் சட்டையில் தட்ட,

"இருக்கட்டும் பரவாயில்லை ஆன்டி... " சங்கடத்துடன் சட்டையில் கொட்டியிருந்த துளிகளை தட்டி விட்டுக்கொண்டே எழுந்து பின்னால் நகர்ந்தான் அவன்.

"சாரி ஜகதீஷ்..." தனது கையிலிருந்த ஜூஸை வாணியிடம் கொடுத்த அஷ்வின் மன்னிப்பு கேட்க,

"பரவாயில்லை சார்.. இங்க வாஷ் ரூம்..." என,

"நேரா போனிங்கன்னா.. இடதுபக்கம் இருக்கு... வாங்க.." அஷ்வின் அழைத்து செல்ல, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு ஜகதீஷ் வர, இருவரும் ஹாலிற்குள் நுழைய, தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள் மாலினி.

அதுவரை தனது சட்டையில் இருந்த பிசுபிசுப்பில் முகம் சுளித்து கொண்டே வந்தவன், எதிரில் மாலினி வந்ததும் முகம் மலர, தானும் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு நடந்தவள், அன்னையின் கையிலிருந்த ஜூஸை பிடுங்கி அருந்த,

"ஹேய்.. சாயங்காலம் நேரம்டி.. சளி பிடிக்கப்போகுது... இது நான் ஜகதீஷ்கு கொண்டு வந்தேன்.." வாணி மகளிடம் சொல்ல,

"அச்சோ.. இதுல ஜகதீஷ் பெயர் போடலையேம்மா?! .. " அன்னையை கலாய்த்தவள்,
"ஜூஸ் போச்சே..." ஜகதீஷை பார்த்து வேறு சிரிக்க, " சரியான வாலு..." வாணி மகளின் காதை திருக வர, அவரிடம் சிக்காது தந்தையின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

"நீங்க உட்காருங்க தம்பி. நான் உங்களுக்கு வேற ஜூஸ் எடுத்துட்டு வரேன்...." வாணி ஜகதீஷிடம் சொல்ல,

"எதுக்கு?! மிச்ச இருக்க பேன்டும் ஜூஸ் கேட்குதா?!" அஷ்வின் மனைவியை பார்த்து கேலி செய்ய,

"ஜூஸை கொட்டிட்டு உங்களுக்கு பேச்சு வேறயா?! " வாணி வாதாட, அனைத்தையும் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தாலும், ஜகதீஷின் பார்வை மாலினியை சுற்ற , ஜூஸை குடித்து முடித்தவள் காலி தம்ளருடன் சமையலைறக்குள் சென்று கொண்டிருந்தாள்.

"இந்த ட்ரெஸ்ஸோட ரொம்ப நேரம் இருக்க வேண்டாம். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க ஜகதீஷ்" அஷ்வின் ஜகதீஷை பார்த்து செல்ல,

"என்னங்க சாப்பிட்டு அனுப்பி வைக்கலாம்!" என்ற வாணியை,

"சட்டையெல்லாம் பிசுபிசுன்னு இருக்கும் வாணி. பாவம் அவர் வெளிவேலை வேற பார்த்துட்டு வந்துருக்காரு.. இன்னொரு நாள் உன் கைவண்ணத்தை எல்லாம் காட்டு.." அஷ்வின் மறுத்துவிட,

"சார் சொன்ன மாதிரி, நான் இன்னொரு நாள் வந்து சாப்பிடறேன் ஆன்டி... மாலினியோட டவுட்ஸ் மட்டும் என்னன்னு கேட்டுட்டே போறேன்" என, மாலினியும் ஹாலிற்கு வந்தவள்,

"அதெல்லாம் அப்பாவே க்ளியர் பண்ணிட்டாங்க ஜகதீஷ்!" சந்தோஷத்துடன் தந்தையின் அருகே சென்று தோளில் தொற்றிக்கொள்ள, " ஓ..." மனதில் கவிழ்ந்த ஏமாற்றத்தை வெளியில் காட்டி கொள்ளாது நிற்க, பெரும்பாடுபட்டான் அவன்.
"அப்ப உன் வேலை முடிஞ்சுதா?!உப்பு பாக்கெட்டை தூக்கி உங்க அப்பா மேல இருக்க செல்ஃப்ல வச்சுட்டாரு.. வா வந்து எடுத்து கொடு..அப்படியே எனக்கு கிட்சன்ல கொஞ்சம் ஹெல்ப் பண்ணு" வாணி மகளை அழைக்க, அன்னையின் பின்னோடு ஓடிவிட்டாள் அவள்.
"இன்னைக்கு நான் லீவ் போட்டுருந்ததால சொல்லி கொடுத்துட்டேன் ஜகதீஷ்.. அதனால நீங்க கிளம்புங்க.. ஓரளவு மாலினி நல்லாவே பிக்கப் பண்ணிட்டா.. நீங்க கொடுத்த புத்தகமும் அதுக்கு ஒரு காரணம். அதனால இனி உங்களை தொந்தரவு பண்ண மாட்டா?! நீங்களும் இங்க இருக்கற நாட்கள்ல ஃப்ரீயா உங்க வேலையை மட்டும் பார்க்கலாம்" ஜகதீஷின் தோளில் கை போட்டு பேசிக்கொண்டே வாசல் வரை அஷ்வின் அழைத்து வந்திருக்க,

"ஓகே சார்..." பெயருக்கு புன்னகைத்து விட்டு வேக வேகமாக அந்த இடத்தை விட்டு அரண்மனைக்குள் நுழைந்தவனுக்கு மனம் மட்டும் ஆறவே இல்லை!! அஷ்வின் வேண்டுமென்றே தன் மீது பழரசத்தை கொட்டியது போலிருக்க,இனி மாலினியை எப்படி தனியே சந்திப்பது?! என்ற சிந்தனை மட்டுமே அவனை முழுதும் ஆக்கிரமிக்க மற்ற எதிலும் மனம் செல்லவில்லை. தூக்கம் கூட சரியாக வராமல் புரண்டு கொண்டிருந்தவன், அதிகாலையில் கௌதம் வந்து ஜாகிங் அழைக்கவும், இரட்டை மனதாக எழுந்து வந்தவனுக்கு, ஜாகிங்கிலும் ஈடுபட முடியாமல் போக,

"உன்னைத் தான்டா கேட்கிறேன்.. எதுக்கு இப்படி உட்கார்ந்துருக்க?! எதுவும் பிரச்சனையா?! உடம்புக்கு ஏதும் செய்யுதா?!" அக்கறையுடன் அவன் நெற்றியின் மீது கைவைத்து பார்க்க போக,அவனது கையை தடுத்தவன்,

"நல்லாதான் இருக்கேன்டா.. மூட் இல்லை.. தூக்கமும் வரலை.. எதுவும் பண்ண பிடிக்கலை..." என்றவன் எழுந்து கொள்ள,

"இன்னும் கேஸை பத்தியே நினைச்சுட்டிருக்கியா?! அதை தான் முடிவுக்கு கொண்டு வந்துடலான்னு சொல்லியாச்சே?! அப்பறமும் அதை பத்தியே ஏன்டா யோசிக்கிற!!" கௌதமன் அவன் தோளில் தட்ட,

"இல்லை கௌதம்... நான் அதைப்பத்தி நினைக்கலை.. " மழுப்பலாய் பதில் சொன்னவனை பார்த்து புன்னகைத்தவன்,

"சரி..‌வேணுன்னா.. ஒரு மாற்றத்துக்கு.. எங்க மாமாவோட ஃபார்மா யூனிட் நகரில இருக்கே.. அதை பார்த்துட்டு வரியா?! உனக்கும் உன்னோட பிஸ்னஸ்கு ஒரு ஐடியா கிடைக்கும் மச்சி!!" என, அவன் விரும்பும் தொழிலை பற்றி பேசவும் ஜகதீஷின் முகம் மலர்ந்தாலும்,

"அதெப்படி திடீர்னு அங்க போய் பார்க்க முடியும்?! " யோசனையுடனேயே பேசியவனை கண்டு கொள்ளாது, கௌதமன் தனது ஜாகிங்கை தொடர, வேறு வழியில்லாமல் அவன் பின்னோடு ஓடினான் ஜகதீஷ்.

"டேய் நில்லுடா!! நான் கேள்வி கேட்டுட்டுருக்கேன்.. நீ பாட்டுக்கு ஓடற?!" மூச்சிரைக்க ஜகதீஷ் பின்னோடு ஓடிவர,

"இரண்டு ரவுண்டு நான் தனியா ஓடினேன்ல?! அதனால இப்ப இரண்டு ரவுண்டு என்கூட சேர்ந்து ஓடு.. அப்பதான் சொல்வேன்..." என, கௌதமனுடன் இணைந்து ஜாகிங் செய்தான் ஜகதீஷூம். அவனுக்கு இது நல்ல வாய்ப்பாக பட்டது?! குமாரிடம் தொழிலைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்று நினைத்தவனாய் கௌதமனுடன் ஓடி முடித்தவன் மீண்டும் அதே கல் பெஞ்சில் அமர்ந்து கொள்ள, புன்னகையுடன் அவனருகே அமர்ந்த கௌதம்,

"இன்னைக்கு ஊர்ல இருந்து சேதுபதி மாமா வர்றாருடா!!" என,

"யாரு உங்க தாய்மாமாவா?!" நெற்றியில் வழிந்த வியர்வையை அருகிருந்த பூந்துவாலையால் துடைத்து கொண்டவன் கேட்க,

"ஆமா.. அவரை நேர்லயே பார்த்து பர்மிஷன் வாங்கி தரேன்.. " என்றவன் எழுந்து கொள்ள,

"அப்போ அந்த பையன் கந்தமாறனும் வருவானே?! அவனுக்கு நீயின்னா உயிராச்சே?! உங்க அலம்பல் தாங்க முடியாதேடா?! அப்ப ஃபேக்டரி விசிட் பண்ணிட்டு நான் அப்படியே காலேஜ் ஹாஸ்டலுக்கு கிளம்பறேன்" என்ற ஜகதீஷ் தானும் எழுந்து கௌதமனுடன் நிற்க,

"அதெல்லாம் முடியாது. ஒழுங்கு மரியாதையா லீவ் முடிஞ்சு கிளம்பு!! அவங்க வந்த பிறகு எங்க அவுட்டிங் போறதுன்னு ப்ளான் பண்ணுவோம்!! இப்ப அத்தையை பார்க்க தான் மாமா வர்றாரு. நான் அவர்கிட்ட பேசி உனக்கு பர்மிஷன் வாங்கி தரேன்.. நீயும் குமாரும் சேர்ந்து போய் பார்த்துட்டு வாங்க" என,

"சரி.. அப்போ நான் போய் குளிச்சு ரெடி ஆகுறேன். குமாருக்கும் கால் பண்ணி சொல்லிடவா?!" உற்சாகத்துடன் பேசியவனின் தோளில் கைபோட்டு தன்னோடு அணைத்து கொண்ட கௌதம்,

"தாராளமா சொல்லுடா.. நீ இவ்வளவு சந்தோஷமா கிளம்புறதுக்காகவே மாமாவை ஓகே சொல்ல வச்சிடுவேன்.. எப்ப பாரு யோசனையிலேயே இருக்காத!! நடக்கிறதை அது போக்கில் நடக்க விடு!! அப்பதான் உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு நீ அனுமானிக்க முடியும்" என,

"சரி..‌அப்போ நான் போய் ரெடி ஆகுறேன்.." அப்போதைக்கு மாலினியை பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளே செல்லப்போக, அப்பொழுதுதான் கௌதம் அவனுடன் அரண்மனைக்குள் வராததை கவனித்தவன், வாயிலில் நின்று,

"நீ வரலையாடா?!" என,

"இல்லை... இன்னும் ஒரு அரைமணிநேரம் ஜாகிங் பண்ணிட்டு வரேன்.... " என்றவன், " நீ போ.." சைகை காட்டி விட்டு மீண்டும் ஓட ஆரம்பிக்க, உற்சாகத்துடன் அரண்மனைக்குள் சென்றுவிட்டான் ஜகதீஷ்‌.

"எல்லாத்துக்கும் ஒரு யோசனை இவனுக்கு... " ஜகதீஷின் இயல்பை முணுமணுத்தவனாய், மீண்டும் தனது ஓட்டத்தை தொடர்ந்தவனின் கால்கள், இப்பொழுது தானாக, மாலினி வீட்டின் பின்புறம் தோட்டத்தை இணைக்கும் பகுதிக்கு சென்றது.

அதுவும் அவளிருக்கும் அறையின் ஜன்னலில் வெளிச்சம் தெரிய, மெது மெதுவே தனது ஓட்டத்தின் வேகத்தை குறைத்தவன், சுற்றும் முற்றும் பார்க்க, சற்று தூரத்தில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த வேலைக்காரர்கள் இருவரும் சுவாரசியமாய் தங்களுக்குள் பேசிக்கொண்டு செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டிருக்க, நொடி நேரத்திற்குள் அவள் வீட்டை ஒட்டி அழகாக வெட்டி வைக்கப்பட்டிருந்த ஆளுயர அலங்கார செடிகளுக்குள் புகுந்து நின்று கொண்டவன், மெதுவே நகர்ந்து ஜன்னலருகே செல்ல,

"ப்ச்.. ஏற்கனவே பதில் தெரிஞ்ச கேள்வி தானே?! எப்படி தப்பா போட்டேன்?!" தன்முன்னாலிருந்த புத்தகத்திலேயே பேனாவால் விடையை மாற்றி அவள் எழுத,

"பென்சிலில் பண்ணாம பென்லயா கரெக்ட் பண்ற?! அஷ்வின் சார் இங்க வந்து பாருங்க!!" என்ற கௌதமனின் குரலை முதலில் கவனிக்காது,

"அச்சச்சோ அப்பா.. நீங்க சொன்னதை மறந்துட்டேன்... பென்சில்ல தானே கரெக்ட் பண்ணனும்.." தன்னை மறந்து அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவள், அப்பொழுதுதான் வந்த குரலின் பேதத்தை உணர்ந்து எதிரில் பார்க்க, கண்கள் இரண்டையும் சிமிட்டிக்கொண்டு குறும்பு புன்னகை மலர, கௌதம் ஜன்னலுக்கு வெளியில் நிற்க,

"கௌ...கௌதமா... " திடீரென அவனை பார்த்ததும் பயத்தில் பேச்சு வராது பின்னால் திரும்பி பார்க்க, கதவு லேசாக தான் சாத்தியிருந்தது. எந்நேரமும் அன்னை உள்ளே வரக்கூடும் என்பதை நினைத்து மிரண்டவளாய்,

"நீங்க எதுக்கு இங்க வந்திங்க?! போயிடுங்க..." அதிகாலை தென்றலிலும் தனக்கு வியர்ப்பதை போலிருக்க, தன்னிச்சையாக அவள் நெற்றியை துடைத்து கொள்ள,

"ஹேய்.. தேனீ.. என்ன திடீர்னு மரியாதையெல்லாம் பலமா இருக்கு?! நான் வேணும்ன்னா வீட்டுக்குள்ள வந்து பேசட்டுமா?!" புருவம் உயர்த்தியவனை கண்டு, "ஹான்...." அவள் நெஞ்சில் கையை வைத்து வாய் பிளந்து விழிக்க,
"இந்த எக்ஸ்ப்ரெஷன் ரொம்ப க்யூட்டா இருக்கு!! இரு நான் கிட்ட வந்து பார்க்கறேன்..." கௌதமனுக்கோ அவளை பக்கத்தில் கண்டு விடும் பரவசம்.
"அச்சோ..வேண்டாம்..‌முதல்ல இங்க இருந்து போங்க.. " மாலினி சொன்னதையே திரும்ப சொல்ல,
"மாட்டேன்.. நீ முதல்ல வெளிய வா.. நேத்து முழுக்க உன்னை பார்க்கலை.. " என்றவனின் குரல் கொஞ்சியதோ?! தன்னை மீறி மனம் அவன்பால் சாய, ஜன்னலை நெருங்கி நின்றவள்,

"கௌதமா..‌ப்ளீஸ்.. அப்பா வந்துடுவாங்க.. நீங்க போயிடுங்க.." ஜன்னலின் கம்பிகளின் இடைவெளியில் முகம் பதித்து கெஞ்சியவளை வித்தியாசமாக பார்த்தவன்,

"ஹேய்.. ரிலாக்ஸ்.. என்ன ஆச்சு?! ஏன் இவ்வளவு பயந்து பேசுற தேனீ?!" என்றவன் ஜன்னல் வழியே கையை நீட்டி, தனது உள்ளங்கையால் அவள் கன்னம் தாங்க, அவனது ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் தனை மறந்து அவனது உள்ளங்கையில் சாய்ந்தவள், ஹாலில் ஏதோ விழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு அவன் கையை தட்டிவிட்டவளின் கண்கள் கலங்கி விட,

"மாலினி... என்னைப் பாரு..." கௌதமின் குரலில் உள்ளம் சிலிர்க்க அவனை பார்த்தவள்,

"என்ன நடந்தது?!" என, அவனைப் பார்க்காது அவள் தலைகுனிந்து கொள்ள,

"நீ இப்ப பதில் சொல்றியா?! இல்லை உள்ள வந்து உங்க அப்பாகிட்டவே கேட்கவா?!" சொன்னதை செய்து விடும் வேகம் அதில் தெரிய, அதிர்ந்து பார்த்தவள்,

"வேண்டாம் நானே சொல்றேன்.." என்றவள் தந்தை தன்னிடம் பேசியதை பற்றி சொல்ல அஷ்வினின் பேச்சு சாதுர்யம் சபாஷ் போட வைத்தது. இருந்தாலும் அதை காட்டி கொள்ளாது,

"சரியாத்தான் சொல்லியிருக்காரு.." என்றவனை மாலினி கேள்வியாக பார்க்க,

"ஆமா.. நீ சின்ன பொண்ணுங்கறதால தான் நான் இன்னும் வெளிப்படையா உன்கிட்ட எதுவும் பேசலை. ஆனால் நம்மளோட உணர்வு மனம் நமக்கு முன்னே பேசிக்குதே?!" இதழ் மலர, ஒற்றை கண்ணை சிமிட்டியவனை கண்டு மாலினி வெட்கத்துடன் திரும்பி நிற்க போக, ஜன்னல் வழியே கைநீட்டி அவளை தடுத்தவன், மீண்டும் அவளை தன்னை பார்த்து பிடித்து நிறுத்தி,

"ஆனாலும்.. ஒரு விஷயத்தை உங்க அப்பா கவனிக்கலை தேனீ?! என் ஸ்வீட்டிக்கு இன்னைக்கும் என்னைத்தான் பிடிக்கும்.. இனியும் என்னை மட்டுமே பிடிக்கும்னு தெரியலை பாரேன்...." காதல் என வாய் திறந்து சொல்லவில்லை?! ஆனால் அதன் தாக்கத்தை அவளுக்கு தன் வார்தைகளால் அவன் கடத்தி கொண்டிருக்க, உச்சி முதல் பாதம் வரை மென்சிறகுகள் வருடுவதை போல் ஓர் உணர்வு குறுகுறுப்பதை உணர்ந்தவள், அவனை காண முடியாது அவன் பிடியிலிருக்கும் தனது கையை எடுத்து விட முயற்சிக்க, முடியவில்லை.

"சோ.. எதைப்பற்றியும் பயப்படாம.. நீ படிக்கனும் நினைக்கிறதை படிச்சு முடி.. நானும் உன்கூடவே தான் ஐஐடில ஜாயின் பண்ண போறேன்..உன் நிழலை விட அதிகமா உன் கூட நான்தான் இருக்க போறேன் தேனீ.. ஓகே தானா?!" என, நிமிர்ந்து அவன் முகம் பார்த்து பதில் சொல்ல முடியாது அவள் தலை குனிந்தே இருக்க, தான்‌பிடித்திருந்த அவளது கையை பற்றி அவளை இன்னும் அருகிழுத்தான் கௌதமன்.

"எங்க அத்தைக்கு ஒரு பெரிய தாங்க் பண்ணனும் தேனீ!" சம்பந்தமே இல்லாமல் காதம்பரியை பற்றி பேச, மாலினி புரியாது அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க,

"இந்த அவுட் ஹவுஸ் பழைய காலத்து வீடு மாதிரி இருக்கு.. இதை மாத்தி கட்டலாம்னு அப்பா சொன்னப்போ.. இது இப்படியே இருக்கட்டுமேண்ணான்னு தடுத்துட்டாங்க!! இப்ப பாரு.‌..இந்த பெரிய ஜன்னல் எனக்கு எவ்வளவு வசதியா இருக்குன்னு?! இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்திருந்தா உள்ளே குதிச்சு..‌ஹாயா உன் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டிருப்பேன்..." என, அவன் பேச்சில் முகம் மலர்ந்தாலும்," கௌதமா..." சிணுங்கியவள், அவன் கையிலிருந்து விடுபட தனது கையை வலுவுடன் ஆட்ட,
"ஓகேன்னு சொல்லு... விட்டுடறேன்.." பேரம் பேசியவனை முறைக்க முயன்று தோற்றவளின் தலை தானாக ஆட, கொஞ்சம் கொஞ்சமாய் தனது கையால் உரசிக் கொண்டே அவளது கையை விடுவிக்க, கதவு அசையும் சத்தத்தில் மாலினி பயத்துடன் பின்னால் பார்க்க, காற்றில் அசைந்திருந்தது அது.

ஒரு விடுதலை பெருமூச்சுடன் மீண்டும் அவன்புறம் திரும்ப, அவளது பயத்தை விரும்பாதவனாய்," சரி...நீ ரிலாக்ஸா படி.. ஆனால் ஒரு விஷயம் மட்டும் கேட்டுக்கோ.. தினமும் உன்னை எப்படியாவது நான் பார்க்க வருவேன்.. அப்பல்லாம் இப்படி பயந்து நடுங்க கூடாது.. அதோ அங்க தெரியுது பார்.. அதுதான் என்னோட ரூம்.. நேத்து கூட உன்னை அங்க இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..." என்றவன் அரண்மனையை காட்ட, இரண்டாவது தளத்திலிருந்த அவனது அறை ஜன்னல் நன்றாகவே தெரிந்தது. அவன் தன்னை கவனித்து கொண்டு தான் இருக்கிறான் என்பதில் மாலினியின் மனதில் நேசச்சாரல்கள் தெறிக்க, கண்களை மூடி திறந்து தன்னை மீட்டவள்,


"ஒரு பொண்ணோட ரூமை இப்படி பார்க்குறது தப்பு..." கண்டிப்புடன் கூறுவதாய் நினைத்து, கன்னலாய் தித்திக்கும் குரலில் சொல்பவளை கண்டு பலமாக சிரித்தான் அவன்.
 
"அச்சோ..‌சத்தமா சிரிக்காதே கௌதமா..." பயத்தில் அவனது வாயை மூடியவளின் செயலில் கௌதமின் கண்கள் பளபளக்க, அவனது பார்வை சுழலுக்குள் சிக்காது வேகமாக கையை உருவிக்கொண்டவள்,

"ப்ளீஸ்.. போ..‌கௌதமா..." அவனுக்கு முகம் காட்டாது அருகிருந்த சுவற்றில் கைவைத்து மறைத்து கொள்ள,

"ப்ச்..ஒரு மூணு வருஷம் கழிச்சு உன்னை பார்த்துருக்கலாம் தேனீ.." வருத்தத்துடன் சொன்னவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். எதற்கு சொல்கிறானென தெரிகிறதே?! வார்த்தை ஜாலங்களில் தோட்டத்தின் குளுமையை வாரி இறைப்பவனை காண கூச்சமாய் இருக்க,இன்னும் அழுத்தமாக சுவற்றில் முகம் புதைத்து கொள்ள,

"ம்க்கும்...வாங்க அஷ்வின் சார்...." தொண்டையை செருமிய கௌதமனின் குரலில் தூக்கி வாரிப்போட நிமிர்ந்து பார்த்தவள், அங்கு யாரும் இல்லாததை கண்டு திரும்பி அவனை முறைக்க,

"சும்மா... " கண்களை சுருக்கி சிமிட்டியவன்,

"நீ முகத்தை அதில் அழுத்தறதால அந்த சுவற்றை பார்த்து பொறாமை வருது. அதான் அப்படி சொன்னேன். வேணும்ன்னா இங்க சாய்ஞ்சுக்கோ ஸ்வீட்டி..." தனது மார்பை சுட்டிக்காட்டிக்கொண்டே," எனக்கு போட்டியா எதுவும் இருக்க கூடாது?! காட் இட்.. " என,

"போ....கௌதமா.." ஒவ்வொரு வார்த்தைக்கும் பெண்ணவளின் மெல்லிய நுண்ணர்வுகளை தூண்டி விடுபவனை தாள முடியாது சொல்லிவிட்டு,அறையை திறந்து கொண்டு வீட்டு ஹாலிற்கு ஓடி விட்டவளை கண்டு புன்னகைத்தவன், உற்சாகத்துடன் ஓட்டத்தை முடித்து கொண்டு மெல்லிய சீழ்க்கை ஒலியுடன் அரண்மனைக்குள் நுழைந்தான் கௌதமன்.

தன்னறைக்கு சென்று சுத்தப்படுத்தி கொண்டு தயாராகி வந்தவன், காதம்பரியின் அறைக்கு செல்ல,அவர் கீழ் தளத்தின் வரவேற்பறையில் இருப்பதாக அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் கூற, படிக்கட்டில் இறங்கும் போதே,

"என்ன வயசாச்சுன்னு இப்படி ப்ரஷரெல்லாம் வருது காதம்பரி?!" சேதுபதி பேசும் சத்தம் உறக்க கேட்க,

"அப்படி சொல்லுங்க மாமா.‌ நாம ரெண்டு பேரும் இருக்கும் போது?! ப்ரஷர் எப்படி அத்தையை எட்டி பார்க்கலாம்!!" ஹாலில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மாமனை பார்த்து புன்னகையுடன் கீழே இறங்கி வந்தான் கௌதமன். ஜகதீஷூம் அங்குதான் இருந்தவன், கௌதமன் அருகே வந்து நிற்க, " ஜி.வி மாமா..." ஓடிவந்து அவனை கட்டி கொண்டான் கந்தமாறன்.

"வாங்க மருமகனே.. என்ன அங்கேயே நின்னுட்டிங்க?! டேய் நீ தள்ளுடா..‌ என்ற மருமகப்புள்ளைய பார்த்து எத்தினி நாளாச்சு?!" சோஃபாவில் இருந்து எழுந்து கைநீட்டி அழைத்தவரின் கையில் வாகாக அவன் சென்று நின்று கொள்ள, "ம்ம்.. போங்க டாடி.." கந்தமாறன் மட்டும் முகத்தை தூக்க, எதிரே அமர்ந்திருந்த காதம்பரியும், சேதுபதியின் மனைவி சமுத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.‌

"அப்படியே என்ற மாமனையும் அக்காளையும் கலந்து பாக்கற மாதிரியே இருக்குதுங்க.. நல்லா வளர்ந்துட்டிங்க" பாசத்துடன் கட்டிக்கொண்டவரின் பேச்சில் கௌதமன் சிரிக்க,

"போதும் விடுங்க... வளர்ந்த பிள்ளையை கண்ணு வைக்காதிங்க" எழுந்து வந்த அவரது மனைவி சமுத்ரா ஜிவியின் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்க,

"நல்லா இருக்கிங்களா அத்தை?!" நலம் விசாரித்தவனிடம்,

"எங்க சௌக்கியத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லிங்க மருமகனே.. " என,

"அதெல்லாம் உன்ற அத்தை சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல் வரப்போவுது?! நம்மள படுத்தியாச்சும் அவ நினைச்சதை சாதிச்சு போடுவா!!" சேதுபதி மனைவியை வம்பிழுக்க,
"சரித்தான்...." மோவாயில் கைவைத்து முறுக்கி கொண்டார் சமுத்ரா.
"டாடி.. முதல்ல ஜி.வி மாமாவ விடுங்க.. நான்‌ மாமா கூட டென்னிஸ் விளையாடனும்" கந்தமாறன் இருவருக்கும் இடையில் புகுந்து பிரிக்க,

"என்னடா டாடி.. அப்பான்னு கூப்பிடுங்கன்னு‌ எத்தனை தரம் சொல்றது?!" தனது மகனை சேதுபதி கண்டிக்க,

"போங்க டாடி.." என்றவன் ஜிவியை கட்டிக்கொள்ள,

"மாமா.. நீங்கதான் உங்க ஊர் பாஷையும் விட மாட்டேங்கிறிங்க?! நம்ம பழக்கத்தையும் விடமாட்டேங்கறிங்க?! கந்தமாறனும் அப்படியே வரனுங்கறது கஷ்டம்தானே?!" அவனுக்கு ஆதரவாக பேசிய கௌதமிடம்,

"அப்படி சொல்லுங்க மாமா..." கந்தமாறன் ஹைஃபை கொடுக்க, குமாரிடம் இருந்து தொடர்ந்த அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, முதலில் கட் செய்த ஜகதீஷ், வேறு வழி இல்லாமல் தனது அலைபேசியை எடுத்து கொண்டு சற்று தள்ளி சென்று பேசினான்.

"ம்ஹூம்.. நம்ம கலாச்சாரத்தை.. நாம பிறந்த ஊரை என்னைக்கும் விட்டுக்கொடுக்க கூடாது மருமகனே.. எத்தனையோ பேரை பார்த்தாலும் பழகினாலும் நாம பிறந்த மண்ணோட சாயல்தான் நம்மளை தனித்துவமா தைரியத்தோட நிற்க வைக்கும்.. " என,

"ஒத்துக்க வேண்டிய விஷயம் தான் மாமா.." ஜிவியின் ஒப்புதலில் கந்தமாறன் முகம் தூக்க, அலைபேசியில் பேசி முடித்து விட்டு ஹாலிற்கு வந்தான் ஜகதீஷ்.

அவனை அப்பொழுதுதான் நன்றாக கவனித்த சேதுபதி," என்ன ஜகதீஷ் தம்பி படிப்பெல்லாம் எப்படி போகுது?!" என்று விசாரிக்க,

"நல்லா போகுது அங்கிள்..." அவரருகே வந்து பதில் சொல்ல,

"அதெல்லாம் டிஸ்டிங்க்ஷன் வாங்க போறான் மாமா..." காதம்பரி அவனைப்பற்றி பெருமையாக சொன்னவர்,

"நம்ம கௌதமும் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்குவான்.." எழுந்து வந்து கௌதமின் கைபிடிக்க,

"அசத்துறிங்க மருமகனே.." கௌதமை மெச்சி புருவங்களை தூக்கியவர், தனது மகனை பார்த்து,

"பார்த்துக்கடா.. மாமன் கூட சுத்துனா மட்டும் பத்தாது.. மாமனை போல அந்த அண்ணனை போல படிக்கோனும்.." என,

"அதெல்லாம் பார்த்துக்கலாம் டாடி...மாமா.. மாலுக்கு போகலாமா?!" அடுத்த திட்டத்தை ஆரம்பித்தவனை,

"சின்னு...இப்போ வேணாமுங்..." அன்னை சமுத்ரா கண்டிக்க, புன்னகையுடன் ஜகதீஷிடம் திரும்பிய சேதுபதி,

"நல்ல பொறுப்பான பிள்ளை.. எந்த உதவினாலும் தயங்காம கேளுங்க தம்பி.. அடுத்து என்ன பண்ண போறதா உத்தேசம்?!" அவன் கைபிடித்து கொண்டு அதில் தட்டிக் கொடுக்க,

"நிச்சயமா அங்கிள்..." என்றவன், தனது வருங்கால திட்டத்தை பற்றி சொன்னவன், கௌதமை பார்க்க,

"நல்ல விஷயம் தான்..‌ சிறப்பா செய்யுங்க..." பாராட்டியவரிடம் கந்தமாறனை விட்டுவிட்டு, நகரிக்கு செல்வதைப்பற்றி பேச கௌதம் அருகே வர,

"ஏங்கண்ணு.. பார்த்துட்டியே நிற்கிறியே?! நம்ம ஊர் பலகாரங்களை கொண்டு வந்து பிள்ளைங்களுக்கு கொடுக்க சொல்லு!.. அதுவும் என்ற மருமகனுக்கு நாம புதுசா செஞ்சு எடுத்து வந்த, சுத்த தேன்ல செஞ்ச ஜிலேபிய எடுத்துட்டு வரச்சொல்லு" மனைவியை பார்த்து சொல்ல, தேன் என்றதும் தனது தேனீயின் நினைவில் கௌதமன் மனம் மாலினியை நினைத்து ரீங்காரமிட, ஜகதீஷ் பேசியது பின்னுக்கு சென்றுவிட்டது.

"இதோ... நான் போய் டிரைவரை எடுத்துட்டு வரச்சொல்றேன்.." கிளம்பிய சமுத்ராவை தடுத்த காதம்பரி,

"நீங்க இருங்கக்கா.. சமையல்காரம்மாவை விட்டு நான் எடுத்துட்டு வரச்சொல்றேன்.." என்றவர்,

"பாரதிம்மா.." உரக்க அழைத்தவர், அவர் வந்ததும் விஷயத்தை சொல்லி, " ப்ளேட்ல வச்சு எல்லாருக்கும் எடுத்துட்டு வாங்க" என,

"நான் வாங்கிட்டு,எடுத்துட்டு வர்றேன் மேடம்..." பாரதிம்மா சமுத்ராவை பார்த்து சொல்லிவிட்டு வெளியே செல்ல, அரண்மனையின் உள்ளே வந்து கொண்டிருந்தார் அஷ்வின். அனைவரும் மீண்டும் பேச அமர்ந்து விட, ஜகதீஷ் கௌதமிடம் வந்தவன்,

"மச்சி.. குமார் இதோட பத்து தடவை கால் பண்ணிட்டான். மாமா கிட்ட பேசி பர்மிஷன் வாங்கி கொடுடா.. நேரமாகுது" என்றவன் அலைபேசியில் மணியை காட்ட,

"இதோ கேட்கறேன்.." கௌதம் சேதுபதியின் அருகே செல்ல, காதம்பரியை நோக்கி வந்து கொண்டிருந்தார் அஷ்வின்.

"வாங்க அஷ்வின் சார்.. உடம்பு இப்போ பரவாயில்லையா?!" காதம்பரி நலம் விசாரிக்க,

"இப்போ ஓகே மேடம்.. இன்னைக்கு காஞ்சிபுரம் யூனிட்டோட பிராஞ்ச் மேனேஜரோட வீடியோ மீட்டிங் இருக்கு மேடம். டைம் ஆச்சு... இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு..." என்று ஞாபகப்படுத்த,

"இவர்தான் அஷ்வினா?! புதுசா நீ சேர்த்துருக்கற காரியதரிசி?! " கண்களில் கேள்வியுடன் சேதுபதி காதம்பரியிடம் விசாரிக்க,

"ஆமாங்க மாமா.. " என்றவர் சேதுபதியிடம் அஷ்வினை அறிமுகப்படுத்த,

"வணக்கம் சார்.." அஷ்வின் மரியாதையுடன் வணக்கம் வைக்க, சேதுபதிக்கு அவரை முதற் பார்வையிலேயே பிடித்து விட்டது.

"வணக்கம் அஷ்வின். வேலையை வேகமாக முடிச்சு குடுக்கிறங்களாம்!! காதம்பரி அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டா!! ஆனால் பாராட்டுக்கு தகுதியான ஆள் தான் நீங்க" என்றதில் அஷ்வின் விரிந்த புன்னகையுடன் திரும்ப, அவரைப் பார்த்து புன்னகைத்தான் கௌதமும்.

"மேடம்..." பாரதிம்மா சேதுபதி சொன்ன தேனில் செய்த ஜிலேபிகளை எடுத்து வந்து கொடுக்க, தனது கையில் ஒன்றை எடுத்தவர், கௌதமிற்கும், ஜகதீஷிற்கும் கொடுக்க,

"சூப்பரா இருக்கு மாமா.. ஆனாலும் கொஞ்சம் தேன் அதிகம் தான்...."கௌதம் பாராட்ட,

"நான் போய் ஆஃபிஸ் ரூம்ல மீட்டிங்குக்கு தயார் செய்றேன் மேடம்..." அஷ்வின் அவர்களது குடும்ப உரையாடலில் இருந்து விலகிக்கொண்டு செல்ல தயாராக, கௌதம் அதிக தேன் என்றதும் மாலினியின் நினைவு காதம்பரிக்கு வர,

"நீங்க போய் ரெடி பண்ணுங்க சார்.. ஆனால் அதுக்கு முன்னாடி நம்ம வாணிக்கு கால் அடிச்சு மாலினியை இங்க வரச்சொல்லுங்க.. தேன் ஸ்வீட் தான் அவளுக்கு ரொம்ப பிடிக்குமே?!" என, கௌதமின் முகத்தில் தேனின் பளபளப்பு.

"இல்லை...‌மேடம்.. அவ படிச்சுட்டு இப்பதான் தூங்குறா!! நான் வேணும்ன்னா எடுத்துட்டு போய் கொடுக்கிறேன்.." அஷ்வின் சமாளிக்க,

"என்கிட்ட வேணும்ன்னா கொடுங்க அத்தை..‌நான் கொண்டு போய் கொடுக்கிறேன். சார் தான் மீட்டிங் இருக்குன்னு சொல்றாரே?!" ஜகதீஷ் முன்னே வர, அவனை முறைத்தான் கௌதம்.

'இந்த நல்லவன் காரியத்தை கெடுக்க பார்க்கிறானே?' நினைத்த கௌதமின் முகம் சுணங்குவதை கண்ட காதம்பரி,

" நீ இருடா.. எனக்கு அவளை பார்த்து நேர்ல தான் கொடுக்கனும்... நீங்க வரச்சொல்லுங்க சார்.. மீட்டிங்கை தள்ளி வச்சுக்கலாம்" என்றுவிட, மாலினியை இப்படி அழைப்பது அவரது வழக்கம் தானே?! வேறுவழியில்லாமல் அஷ்வின் அலைபேசியில் அழைத்து அவளை அங்கு வரச்சொல்ல,

"வெளில போகலாம் மாமா..." தொண தொணத்த கந்தமாறனிடம் தனது அலைபேசியை கொடுத்த கௌதம்,

"கொஞ்சநேரம் கேம் விளையாடுடா.. போகலாம்..." சமாளித்தவன், வாசலை பார்க்க, பழுப்பு நிறத்தில் சந்தன நிற பூக்கள் தெளித்த டிஷர்டும், சந்தன நிற லாங் ஸ்கர்டுமாய் வந்தவளை,

"உள்ளே வாம்மா..." அஷ்வின் அழைக்க, தன்னை ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்கும் இரு ஆண்களையும் கவனிக்காது, நேராக தந்தையிடம் வர,

"உங்க பொண்ணா?! லட்சுமி களையோட அழகா இருக்குதுங்...." காதம்பரியிடம் பேசிக்கொண்டிருந்த சமுத்ரா அருகில் வந்து நின்று மாலினியின் தலை கோத, அவரைப் பார்த்து புன்னகைத்தவள், தந்தையை பார்க்க, அங்கு நடப்பதை கவனித்து கொண்டு அமர்ந்தார் சேதுபதி.

மாலினி உள்ளே நுழைந்ததிலிருந்து அவளை மட்டுமே கவனித்து கொண்டிருக்கும் கௌதமனை பார்த்தவர், மாலினியை பார்க்க அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

"கண்ணை மூடி வாயை திற மாலினி...." காதம்பரி சொல்ல, கண்களை மூடியவள் வாயை திறக்க, இனிப்பை அவளது வாயில் வைக்க, நாக்கில் கரைந்த இனிப்பில்,

"ம்ம்..‌சூப்பரா இருக்கு... காதும்மா..." தன்னை மீறி சொன்னவள், அப்பொழுதுதான் எல்லாரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவளாய், வெட்கத்துடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ள,

"இதோ.. இந்த க்யூட் ரியாக்ஷனை பார்க்க தான்.. நேர்ல வரச்சொன்னேன்...." என்ற காதம்பரி கௌதமை பார்க்க, அவனோ அவள் நாவில் உறவாடும் தித்திப்பாய் தான் மாற ஆசை கொண்ட மனதை சிரமத்துடன் அடக்கி கொண்டு புன்னகைத்தான்‌.

அப்பொழுது மீண்டும் குமாரிடம் இருந்து ஜகதீஷிற்கு அழைப்பு வர, கௌதமும் அதை பார்த்தவன், " மாமா.. நம்ம நகரி ஃபார்மா தொழிற்சாலைய ஜகதீஷ் ஒருதடவை பார்க்கனுமே?! அவன் அது சம்பந்தப்பட்ட தொழில் ஆரம்பிக்க திட்டம் வச்சுருக்கதால நான்தான் இந்த ஐடியா கொடுத்தேன்?! அதுக்கு உங்க பர்மிஷன் வேணும்" சேதுபதியை பார்த்து கேட்க,

"இதுக்கெல்லாம் கேட்கனுமா தம்பி?! தாராளமா போங்க.. இருங்க மேனேஜருக்கு நீங்க வர்றதை சொல்றேன்..‌கூடவே இருந்து எல்லா தகவலும் உங்களுக்கு சொல்வாருங்க.." என்றவர் மேனேஜருக்கு அப்பொழுதே அழைக்க,
"தாங்க்ஸ் அங்கிள்‌.‌.." சேதுபதிக்கு நன்றி சொன்னவன், சந்தோஷத்துடன் மாலினியை பார்க்க, "ம்ஹூம்..." அவள் காதம்பரியிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு?! கௌதமும் என் கூடவே இருக்க போறான்?! இனி என்ன வேணும்!!" சமுத்ராவிடம் காதம்பரி சொல்லி கொண்டிருக்க, அஷ்வினின் அலைபேசி ஒலிக்க, காஞ்சிபுரத்தில் இருந்து தான் அழைத்து கொண்டிருந்தனர். அவர் அழைப்பை ஏற்று வெளியில் சென்றுவிட, ஜகதீஷ் கிளம்ப தயாராக பெண்களின் புறம் திரும்பினார் சேதுபதி.

"ஹாய் தம்பி.." பெண்களிடம் இருந்து நகர்ந்து மும்முரமாக மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்த, கந்தமாறனிடம் மாலினி பேச்சுக் கொடுக்க,

"ஹாய்கா...." புன்னகைத்தான் அவனும்.

"ஏன் மருமகனே? காதம்பரியை நான் பார்த்துக்க மாட்டேனாங்க?! நீங்க படிக்க ஆசைப்பட்ட படிப்பை கனடா போய் படிச்சு முடிங்க!! என்ன கஷ்டம் வந்தாலும் நினைச்ச காரியத்துல குறியா இருக்கனுங்.. அதுதான் தொழில் பார்க்க போறவனுக்கு அழகு... என்ற மாமனை மாதிரி நீங்களும் சீமைல படிச்சுட்டு வந்தா தானே நமக்கு கௌரவம்.." என,

"சேதுபதி மாமா.. அவன் என்கூடவே இருக்கட்டுமே... எப்படியும் இங்க படிக்க போறேன்னு தான் சொன்னான்..." காதம்பரி அவருக்கு பதில் கொடுக்க,

"இவ்வளவு தூரம் தொழில் பார்த்தும் பொண்ணுங்கறதை நிரூபிக்கிறிங்க பாருங்க?! டக்குன்னு இரக்கப்பட்டுடுறிங்க!!சட்டுன்னு அவன் இஷ்டத்துக்கு வளைஞ்சு கொடுத்தா?! அப்பறம் அவன் மனசு எல்லாத்துக்கும் அவன் நினைச்சபடி தான் போகச் சொல்லும்..." என்றவரின் பார்வை மாலினியின் மீது பட,

"இல்லை மாமா.. அத்தையோட உடல்நிலையும் பார்க்கனுமே.." கௌதமன் பேசவும் மாலினி அவனை பார்க்க,

"அதான் நானிருக்கேனில்ல... நாம நினைச்சதை போராடி செஞ்சு முடிச்சாதான் எதையும் சாதிக்கிற மனப்பக்குவம் வரும் கண்ணு.. நமக்கானது நம்மை விட்டு எங்கேயும் போகாது.. அப்படியே போற மாதிரி தெரிஞ்சாலும்...பிடிச்சு நம்ம பக்கம் எப்பவும் இழுக்க தெரியனும்.." பூடகமாக பேசியவரை கௌதமன் தயக்கத்துடன் பார்க்க,

சேதுபதி எழுந்து வந்தவர்," நானிருக்கேன் மருமவனே.. எல்லாம் நீங்க நினைச்ச படி தான் நடக்கும்..." என்றவர், அவனது படிப்பு பற்றிய விவரங்களை கேட்க,

"அப்பறம் என்ன?! இன்னும் இரண்டு நாள்ள விசா ரெடி ஆகிடுச்சுன்னா?! நீங்க முன்னாடியே கிளம்புங்க.. அதுதான் அடுத்த வாரம் ரிசல்ட் வந்துடுமே?! எல்லாம் பார்க்க சரியா இருக்கும்.." என,

"அத்தை..." என்றிழுக்க,

"மாமா.. சொல்றதும் சரிதான்.. நீ படிப்பை முடி கௌதமா.. மூணு வருஷம் தானே?! போறதே தெரியாது. இங்க நாங்க பார்த்துக்கறோம்..." காதம்பரிக்கு தெரியும் இனி சேதுபதி விடமாட்டார் என்பது. அதனால் தானும் அவரை ஒத்தே பேச,

"சமுத்ராவும் கந்தமாறனும் இங்கேயே இருக்கட்டும். எப்படியும் இந்த தடவை ப்ளஸ் ஒன் நான் இங்க தான் இவனை சேர்க்கறதா இருக்கேன்... அவன் இங்க இருந்தே படிக்கட்டும்.. நீங்க தைரியமா கிளம்புங்க.." சேதுபதி பேச்சை முடிக்க,

"அப்பறம் என்னடா?! அதான் அங்கிள் இவ்வளவு தூரம் சொல்றாங்களே?! ஒத்துக்கோ..." ஜகதீஷூம் மகிழ்ச்சியுடன் சொல்ல,

"சரி மாமா.. நான் கனடா கிளம்புறேன்..." ஈரம் பிரிந்த காற்றாய், வறண்ட குரலில் சம்மதம் சொன்னவனை மாலினி அதிர்ச்சியுடன் பார்க்க, அப்பொழுதுதான் அலைபேசியை அணைத்து விட்டு உள்ளே நுழைந்த அஷ்வின் நிம்மதியுடன் பார்த்தார்.

குளிர்வான் 🤍
 
Status
Not open for further replies.
Back
Top