இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

ஓ ரசிக்கும் சீமானே! 💖 கதை திரி

Status
Not open for further replies.

ORS:1

ஒ ரசிக்கும் சீமானே

ஒ ரசிக்கும் சீமானே

வா ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்

ஒ ரசிக்கும் சீமானே

ஒ ரசிக்கும் சீமானே

வா ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்...


"ஓ... ஓ... "என தன் அலைபேசியில் ஒலித்த பாடல்களின் வரிகளை வாயில் முணுமுணுத்து, தன் மேனியில் சோப்பினை தேய்த்து கொண்டே குளித்து கொண்டிருந்தவன், தேய்ந்து போன அந்த சோப்பை தூக்கி எறிந்தான்.


"ஏன்டா பங்கு முந்தாநேத்து தானே அந்த சோப்பை வாங்கின நீயி, அதுக்குள்ள முடிச்சி தூக்கி போடுற?" என ஆச்சர்யமாய் கேட்டான் அருமை நண்பன் சுப்பிரமணி என்ற சுப்புனி.

அவன் கேட்டதற்கு பதிலாய் 'டேய் நம்ம அந்த புள்ள மாதிரி வெள்ளையா வரணும்னா இப்படி தான் தேச்சு, தேச்சு குளிக்கனும்" என்றான் அவன்!

"எந்த புள்ள பங்கு?"

"அதேன் நம்ம ஐசு!"


"யாரு அந்த உலக அழகியா?"

"பின்ன உள்ளூரு கிழவியவா சொல்றேன்? "என மீண்டும் ஒரு முறை குளத்தில் முங்கினான் வீரா என்ற வீரவேல்.

அவன் மூழ்கி நொடிகள் கரைய, "டேய் பங்கு" என அழைத்தான் சுப்புனி.


வீராவிடமிருந்து எந்த பதிலுமின்றி போக, "டேய் வீரா " உரத்த குரலில் கத்த ஆரம்பித்தான்.

அப்போதும் எதுவும் சத்தமின்றி போக,

"அடேய் நண்பா!? உன்னை அருமை பெருமையா வளர்த்தனே என் தேசிங்கு ராசா , யாரும் படிக்காத படிப்பை படிச்சியே என் ராசா!!!ஊரு கண்ணு பட்டுச்சோ? இல்லை உறவு கண்ணு பட்டுச்சோ?!" மூக்கினை சிந்தியவன்,

"காரை வீடு கட்டுவேன், காருல போவேன் சொன்னியே!"

"சீமைக்கு போவேன் சில்லறையை எறிவேன்னு சொல்லிட்டு போனியே! என் சீமை ராசா இப்படி ஆத்தோட போகத்தேன் உன்ன வளர்த்தாளோ என் அத்தைகாரி!

"அவ என்கிட்ட கேட்டா என்னனு சொல்லுவேன்?! இல்லை எப்படின்னு சொல்லுவேன்" அழுது கரைந்து கொண்டிருந்தான்.

"அட எடுபட்ட பயலே?! எதுக்கு இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க?!" அங்கு வந்த முதாட்டி அதட்டி கேட்டார்.

"என் பங்கு குளத்துல மூழ்கிட்டான் ஆத்தா! "

"யாரு பாக்கியம் மவனா?"

"ஆமா!"

"அட கேனைப்பயலே! அவன் அந்த படித்தொரை வழியா போய்கிட்டு கிடக்கான். நீ இங்கின உட்காந்து ஒப்பாரி வைக்கிறவேய்ன்?" என கையிலிருந்த காலி குடத்தை கொண்டு அவன் முதுகில் அடித்து விட்டு, "சும்மா போவாம இத கொண்டு போய் என் வீட்ல இறக்கி வச்சிட்டு போ" தண்ணீர் எடுத்த நிறைகுடத்தை அவனிடம் நீட்டினார்.

"ஏன் உன் புருஷன் எங்க? அந்த ஆளுகிட்ட சொல்லாம என்கிட்ட சொல்லிட்டு இருக்க? "என வேஷ்டியை இறுக்கி கட்டி அவர் சொன்னது போல் குடத்தை எடுத்து தோளில் வைத்தான்.

"ஏன்டா அந்த ஆளுக்கே வயசான காலத்தில கண்ணுமண்ணு தெரியாம, ஒன்னும் புரியாம தடவிட்டு கிடக்காரு?! இதுல ஆத்துல வந்து தண்ணி புடிச்சு கொடுப்பாராக்கும்"

"ஓ.. உன் புருஷனுக்கு வயசாயிடுச்சு?" சலித்து கொண்ட கிழவியை ஏற இறங்க பார்த்தான்.

"இல்லையா பின்ன?"

"ஓ.. அதேன் நீ தினமும் வந்து பாய் அலசிட்டு கிடக்க, போத்தா போத்தா "எனும் போதே தூரத்தில் வீரா தன் டிவிஎஸ் எக்ஸலை உதைத்து ஸ்டார்ட் செய்ய தொடங்கியதை பார்த்தவன், "டேய்... பங்கு என்னத்துக்கு சொல்லாம கொல்லாம ஓடிட்டு இருக்க?" கேட்டு கொண்டே அவனருகே ஓடினான்.


"மாமா "என பின்னால் கேட்ட குரலில் சுப்புனி திரும்பி பார்க்க,

"அங்க என்னடா பார்வை உனக்கு? இதை கொஞ்சம் தள்ளி விடு" என்றான் வீரா கடுப்புடன்.

"அங்கயற்கன்னி கூப்பிடுது டா"

"ஏன் என் காது செவுடா?கிரகம் புடிச்சவனே வண்டியை தள்ளு டா பேசாம"

"ஏன் இவன் காலங்காத்தால இப்படி குதிக்கிறான்" முனங்கி கொண்டே வண்டியை தள்ளினான்.

"மாமா இந்தாங்க உங்க துண்டு" அவன் தள்ளுவதற்குள் மூச்சிரைக்க ஓடி வந்து நீட்டினாள் அங்கயற்கன்னி.

"மாப்பிள என்ன டா நீ கட்டுன துண்டை அந்த புள்ள எடுத்துட்டு வருது"என நக்கலாய் சிரிக்க,

"சீ.. கருமம் உன் கற்பனை எழவ மூட்டை கட்டிட்டு,உன் கதவ சாத்து டா" வாயில் கைவைத்து காட்டியவன், எதிரே நின்றவளிடம் திரும்பி "அடியே இனிமேட்டுக்கு இந்த மாதிரி செஞ்ச உன் அய்யன் கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோ, ஆள பாரு அரைக்கால் சைஸ் கூட இல்லை. இதுல காதல் கருவேப்பிலைனு சொல்லிக்கிட்டு திரிஞ்சுட்டு இருக்க நீ? வெளுத்து விட்ருவேன் பார்த்துக்க, போடி அரைடிக்கெட்டு" என கோபமாய் வண்டியை உதைக்க, அதுவோ ஊரில் உள்ள அனைத்து புகையையும் கக்கி விட்டு தன் ஓட்டத்தை தொடங்க, வேகமாக ஏறி பின்னால் அமர்ந்து கொண்டான் சுப்புனி.

"ஏன்டா அது மேல இம்புட்டு கோவ படுற, அதுவே சின்ன புள்ள டா "

"அவளா சின்ன புள்ள, கொழுப்பெடுத்தவ மச்சான். நான் தண்ணிக்குள்ள மூழ்குறேன்! என்னையே உள் நீச்சல் அடிச்சே அந்த படித்தொரைக்கு இழுத்துட்டு போய்!?"

"இழுத்துட்டு போயீ!!!" சுப்புனியின் குரலில் அத்தனை ஆர்வம்.

"ச்சே... எரும அது இன்னொரு வீட்ல வாழ போற புள்ள டா"

"எதேய்?! நீ தானடா திட்டிட்டு வந்த? இப்போ இப்படி பேசுற? "

"அதுக்குனு நீ சட்டுனு பொம்பள புள்ளயை பத்தி அப்படி பேசுவியா?"என அதட்டினான் வீரா.

"அய்யா பெண்கள் குல காவலரே!நீர் சொல்லும்"

"அந்த புள்ள இழுத்துட்டு போய் ஒரே அழுகை "

"ஏதே? அழுதுச்சா?! நீ எதுவும்?!" ... என ஆரம்பிக்க, வீரா பார்த்த பார்வையில் "வேணாம் நீயே சொல்லு பா" என்றான்.

"என்னை விரும்புறாலாம்! கட்டுனா என்னத்தேன் கட்டுவேன்னு ஒரே அழுகை தெரியுமா?" என சொல்ல தொடங்கியவன்" நான் பதிலுக்கு "என ஆரம்பிக்கும் போதே,

"வேணாம் பங்கு நானே சொல்றேன். இங்க பாரு அங்கயற்கன்னி என் லட்சியமே சிங்கப்பூர் போயி சம்பாரிக்கனும்.பின்ன இங்க வந்து ஓரு டீச்சர் புள்ளைய கட்டனும் அதேன் என் கொள்கை, கொடும, கோட்பாடுனு கிளாஸ் எடுத்துருப்ப அதானே!!"என்றான் சுப்பிரமணி.

"நக்கலு?!பாரு டா என் வென்று நான் சொன்னதை நடத்தி காட்டல? என் பேரு வீரவேல் இல்லை டா! "என்றான் சபதம் போல்.

"அதெல்லாம் கிடக்கட்டும் பங்கு! அதென்ன கட்டுனா டீச்சர் புள்ளதான்னு நிக்கிற? ஒரு சத்துணவு ஆயாம்மா இல்லை ஒரு நர்ஸ் கிரிசுன்னு கட்டலாமே!கிரகம் டீச்சர்தேன் வேணும்ன்னு நிக்கிற அந்த எழவு தான் எனக்கு புரிய மாட்டுது?."

"அதுக்கெல்லாம் என்னபோல படிச்சருக்கனும் டா சுப்புனி."

"எதேய்?! நீ படிச்ச ஐ டி ஐ ஒரு படிப்பு, அதுக்கு உனக்கு இத்தனை பில்டப்பு? சரி சொல்லி தொலை"

"சரி சரி சொல்றேன் கேளு. இப்போ டீச்சரா வேலை பார்த்தா எம்புட்டு சம்பளம்னு நெனைக்கிற?"

"என்ன ஒரு பத்து பதினஞ்சு இருக்குமா? "

அவனை ஏற இறங்க பார்த்தவன்" அடேய் இப்போ வாத்தியார்க்கு தான்டா அதிக சம்பளமே" என கூறி விட்டு அதுவும் "ஹெச்சம் ஆயிட்டா லட்சத்தில வரும் டா!" என கூறியவன்," போதாகுறைக்கு லீவ்க்கு லீவ் இப்படி அப்படினு வாழ்க்கை செட்டில் ஆயிடும்ல" என்றான்.

"அடப்பாவி!?என்ன ஒரு உயர்ந்த எண்ணம். சரி அதுக்கேன் டெஸ்ட் அடிக்கனும் சிங்கப்பூர் போகனும்னு நிக்கிற?"


"சம்பாரிக்கனும்! எனக்கு பின்னாடி ரெண்டு இருக்கே அதுகளையும் பாக்கணுமே?செல்வா கூட பையன் எங்கினயாவது பொழைச்சுகுவான்! கலைக்கு கல்யாணம் பண்ணணுமே? பின்ன எங்க அப்பாகிட்ட வாங்கி நான் அந்த எஜென்சில ஏமாந்த ரெண்டு லட்சத்தை திருப்பி கொடுக்கனும்!!"என கூறி விட்டு," ஒரு நாலு வருஷம் இதெல்லாம் பார்த்துட்டு கொஞ்சம் நிலத்தையும் வாங்கி போட்டுட்டு, ஒரு டீச்சரை பார்த்து கல்யாணம் கட்டி ஒரு கடை கன்னியை வச்சு பொழைச்சுகுவேன் பங்கு "என சொல்லி முடித்து அவன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தும் நேரம்,
"அண்ணே அம்மா உன்னை நம்ம செவலைய இழுத்துகிட்டு சுருக்கா கிளம்பி வயலுக்கு வர சொன்னுச்சு" என்றாள் அவனின் தங்கை கலை என்னும் கலையரசி.

"சரி மச்சான் நீ போய் வேலைய பாரு. நான் இப்படியே நடையை கட்டுறேன் " இறங்கி சென்றுவிட்டான் சுப்ரமணி.

கலை செல்லும் அவனை பார்த்தபடி நிற்க, அவளை கலைத்தது வீராவின் குரல்.

"நான் மாட்டை அவுத்துட்டு போகனுமா? அதெல்லாம் என்னால முடியாது. செல்வா எங்க? அவனை இழுத்துகிட்டு போவ சொல்லு" என்றவன்" சரி வந்து எனக்கு தோசை ஊத்தி கொடு பசிக்குது" வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.

"அண்ணே அம்மா கஞ்சி இருக்கு சொன்னதால தொட்டுக்க ஒன்னும் இல்லை" என்றாள்.

"என்ன கஞ்சியா!! என முனங்கியவன் "சரி அதை கொண்டா, வெஞ்சனம் என்ன?"

"கருவாடு" என்றாள்.

"சரி போட்டு எடுத்துட்டு வா" தங்கை கொண்டு வந்த உணவை உண்ண தொடங்கினான்.

சரியாய் அதே நேரம் அண்ணாமலையும் பாக்கியமும் உள்ளே வர,மகன் சாப்பிட அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு "கலை உன்கிட்ட என்ன சொல்லி அனுப்பினா உன் ஆத்தா?இங்க இவனுக்கு பணிவிடை பண்ணிட்டு கிடக்கியா?" மகளை அதட்டினார் அண்ணாமலை.

"இல்லப்பா அண்ணேன் இப்போ தான் குளிச்சிட்டு வந்துச்சு" குரல் உள்ளே போய்விட்டது கலைக்கு.

"ஓ... தொரை இப்போ தான் வந்தாராக்கும்,அவரு வந்ததும் நீங்க சோத்தை போட்டு வச்சுட்டீங்களாக்கும்?"

"உங்கள எத்தனை தடவ சொல்றது? அவன் சாப்பிடும் போது எதையும் சொல்லாதீங்கன்னு?" பாக்கியம் கணவனை முந்தி கொண்டு"யத்தா கொஞ்சம் தண்ணி கொண்டா"என மகனருகே அமர்ந்தார்.


"ஆமா அய்யா பெரிய தொரை வீட்டு புள்ள எதுவும் சொல்ல கூடாது. ஏழு கழுதை வயசாயிடுச்சு இன்னும் அப்பன் காசுல தின்னுட்டு கிடக்கான்.இவன் வயசுல எனக்கு இவனே பொறந்துட்டான்" என கூறியவர் "நம்ம மாரியப்பன் மக அங்கயற்கன்னிக்கு இவன கேக்குறாக, வர்ற கார்த்திகையில பேசி முடிச்சிட்டு வெள்ளாமை முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாம் சொல்றான். எனக்கும் அதான் சரின்னு படுது பாக்கியம்!? என்னன்னு கேட்டு சொல்லு? "என்றார்.

சாப்பிட்டு கொண்டிருந்தவன் உடனே எழுந்து "அம்மா நான் கட்டுனா ஒரு டீச்சர் புள்ளயைதேன் கட்டுவேன் சொல்லிட்டேன். பின்ன நான் சிங்கப்பூர் போயிட்டு வந்து தான் என் கல்யாணம்"என முடிவாய் சொல்லிவிட்டான்.

"இப்படி சொல்லி தானே டா ரெண்டு லட்சத்தை எவன் கிட்டயோ கொடுத்து ஏமாந்து நிக்க? இன்னும் திருந்தலையா நீ? "என அண்ணாமலை கோபமாய் கத்தினார்.

"அம்மா அதெல்லாம் இப்போ அவ்ளோ பணம் செலவாகாது. நான் டெஸ்ட் அடிச்சு தான் போக போறேன் சொல்லு. அதுக்கப்பறம் பாரு இவருகிட்ட வாங்கின காசேல்லாம் வட்டியோட தூக்கி போடுறேன்" என்றான்.

"எடு செருப்ப தூக்கி போடுவாராம் தூக்கி?!ஒத்த காசு சம்பாரிக்க துப்பு இல்லை? இதுல பேச்ச பாரு பேச்சை? பாக்கியம் உன் மயன்கிட்ட சொல்லு கார்த்திகையில மாரியப்பன் மகளோட தாம்பூலாம் மாத்தறது தான். இவரு கெட்ட கேட்டுக்கு டீச்சர் புள்ள வேணுமாம் டீச்சரு, ஏன் சீமையிலிருந்து வருவான்னு சொல்லேன்" என இன்னும் நாலு வசவுகளை பாடினார்.

சீமையிலிருந்து இல்லை அருகில் இருக்கும் மதுரையிலிருந்தே வேலனுக்கு ஏற்ற மயிலாய் தன் காக்கி உடுப்பை அயன் பண்ணி போட்ட படி கிளம்பி கொண்டிருந்தாள் தங்கமயில் மதுரை நகரின் துணை ஆயிவாளர்.
 
ORS:2

தன் காக்கி சீருடையை தொட்டு பார்த்து கொண்டாள் தங்கமயில் . அதில் இருந்த பெயரை ஆசையாய் வருடி கொண்டது அவள் கைகள். அவளின் லட்சியமே தந்தை போல் தானும் ஓர் காவல் அதிகாரியாக வேண்டும் என்பதே!அதற்கு ஒன்றும் கனகவேல் பெரிய அதிகாரியாய் இல்லை. அவர் பதவி ஓய்வு பெரும் போது அவர் தலைமை காவலராய் இருந்தார். ஆயினும் தங்கமயிலுக்கு அந்த உடுப்பு மீதும், அதன் மிடுக்கு மீதும் அத்தனை காதல். அதனால் தான் இளங்கலை வரலாறு முடித்த கையோடு அவள் காவலர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று துணை ஆய்வாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டாள்.

"அம்மாடி தங்கம்" என்ற தந்தையின் குரலில் "பா வரேன்" என வெளியே வர, அந்த காக்கி சீருடையில் தன் பெண்ணை கண்டதும் அத்தனை பெருமை கனகவேலிற்கு. எப்போதும் போல் அவர் பார்வையை உணர்ந்தவள் "பா போதும் இன்னைக்கு என்ன சாப்பாடு?"உண்ண அமர்ந்தாள்.

"இட்லி கடலை சட்னிடா " மகளுக்கு பரிமாற தொடங்கியவர் "தங்கம்" மீண்டும் அழைத்தார்.

"என்ன?" புருவங்கள் உயர்ந்து பார்வையிலேயே பேசினாள் மகள்.

"இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்திருடா "

"ஏன் பா? எங்குனயாவது போவணுமா?"

"என்னடா?! நான் தான் நேத்தே சொன்னேனே! இன்னைக்கு ஆறு மணிக்கு உன்ன பொண்ணு பார்க்க வராங்கன்னு" மெல்லிய கோபத்துடன் வந்தது தந்தையின் குரல்.

'ஆமாம்! நேற்று சொன்னார் தான்?!' தலையில் கை வைத்து கொண்டவள் "சாரி பா மறந்துட்டேன்..இன்னைக்கு கோர்ட்லருந்து கைதிகளை நான் தான் ஜெயில்ல கொண்டு போய் விடனும். முடிஞ்சதும் வரேன் பா"

"கொஞ்சம் சீக்கிரம் வந்திருத்தா"

"ம்ம்ம்...பா மாப்பிளை பேரு என்ன சொன்ன?" உண்டு முடித்து கையினை கழுவினாள்.

"கிழிஞ்சது போ அதையே மறந்துட்டியா நீ? பேரு சந்தோஷ் இங்க இருக்க சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறாக.நம்ம சோமு இருக்கானே அவன் தங்கச்சி மகன் தான். நம்ம குடும்பத்தை பத்தி எல்லாம் தெரியும்"

"எல்லாம் தெரியும்னா உன் காதல் கதையுமா?"

"தங்கம்" அவள் எதிர்பார்த்த தந்தையின் சிணுங்கல் அழகாக இருந்தது.

"சும்மா சொல்லுப்பா " மகளின் சீண்டலில் அவரின் புன்னகை விரிந்தது.

"ம்ம்ம்... சோமுக்குதேன் தெரியுமேத்தா. அவேன் சொல்லிருப்பான் போல "என்றவர் விழிகள் கலங்கி நான்கு சட்டத்திற்குள் நிழல் படமாய் வீற்றிருக்கும் அவர் காதல் மனைவியை தீண்டியது. மேரி கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். தாயும் தந்தையும் இறந்த பின் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்,ஓர் விபத்தில் கனகவேல் மருத்துவமனையில் இருக்க, அங்கே செவிலியாய் பணிபுரிந்தவர் மீது காதல் கொண்டு, தன் வீட்டின் எதிர்ப்பையும் மீறி மணம் முடித்து கொள்ள, தங்கமயில் பள்ளியில் இருக்கும் போதே காசநோய் அவர் உயிரையும் காவு வாங்கி கொண்டது.


மனைவியின் புகைப்படத்தை பார்த்து கொண்டு நினைவலையிலிருந்து மீண்டு," மேரி "என இதழ் முணுமுணுக்க விழிகளில் அவரின் காதல் கண்ணீராய் கலங்கி வழிந்தது.

தந்தையின் வேதனை புரிந்து "பா... போதும் போதும்! கண்ணை தொட நான் சாயங்கலாம் சீக்கிரம் வர பாக்குறேன்" தன் ஸ்கூட்டியை எடுத்து பறந்து சென்றாள்.

மகள் சென்றதும் நண்பனுக்கு அழைத்து எத்தனை மணிக்கு வருகிறார்கள் என விவரம் கேட்டு, அதற்கு தேவையானவற்றை வாங்கி ஓய்ந்து தான் போனார் மனிதர்.

சோமு எல்லாருக்கும் முன்னால் தன் மனைவியுடன் நண்பனை தேடி வந்துவிட்டார்.

"வா டா சோமு? எனக்கு கையும் ஓடல காலும் ஓடல எதை பண்ணனும் பண்ணலன்னு ஒன்னும் புரியல, நீ சொன்ன மாதிரி பலகாரம் எல்லாம் வாங்கி வச்சுட்டேன். பூ அப்புறம் ஸ்வீட் காபி டீ பால் எல்லாம் ரெடியா இருக்கு" படபடப்பாய் வரவேற்றார்.

"அண்ணே, எதுக்கு இத்தனை பதட்டம்? யாரு நம்ம சரஸ்வதி தானே?! எல்லாம் நான் பாத்துக்குறேன் "என்றார் சோமுவின் மனைவி.

"சரி மா" என்றவர் முகம் கண்ட சோமு "கனகு என்ன டா இப்போ? "என்றார்.

"இல்லை டா வீட்ல ஒரு பொம்பள இல்லைனா, ஆம்பள பொழப்பு நாய் பொழப்பு தான் போ. பொண்ணு பாக்கவே ஒன்னும் புரியல?! இதுல கல்யாணம் எல்லாம் எப்படி முடிக்க போறேன்னு நெனைச்சாவே மலப்பா இருக்கு டா"

"விடு நான் இருக்கேன்ல எல்லாம் நான் பாத்துக்கிறேன்"

வீட்டிற்குள் சென்று அனைத்தையும் பார்த்த சோமுவின் மனைவி "அண்ணே எல்லாம் சரியா செஞ்சுட்டு ஏன் கலங்கி நிக்கிறீக. ஆமா தங்கம் எங்க? "

"அவளுக்கு இன்னைக்கு முக்கியமான டூட்டி அதான் கொஞ்சம் தாமசமா தான் வருவா"

"சரி சரி மாப்பிள வீடு வரும் முன்னே வந்தா சரித்தேன்" என அவர்கள் பேசும் போதே சந்தோஷ் தன் குடும்பத்துடன் வந்திறங்க, வந்தவனை பார்த்ததும் கனகவேலின் முகம் பிரகாசமானது.
"போட்டோல பாக்கறத விட மாப்பிள நேர்ல இன்னும் ஜம்முன்னு இருக்காருடா சோமு"

"ம்ம்ம்... வா வா அவுகள வரவேற்போம்" சோமு வெளியில் வந்து, " வா மா சரஸ்வதி வாங்க மாப்பிள" என அழைத்து வர,உள்ளே வந்து அமர்ந்தனர் அனைவரும்!சற்று நொடிகள் கரைய,

"அண்ணே நேரம் போவுது பொண்ண பார்த்துட்டா கிளம்பிடலாம்" என்றார் சந்தோஷின் தாயார்.

"சரிமா இந்தா என்னனு கேக்குறேன்" என கனகவேலை பார்க்க, நண்பன் பார்த்த பார்வையில் மகளுக்கு அழைக்க தொடங்கினார்.

ஒருமுறை அழைக்க அவளோ அதனை ஏற்காது போக, நண்பனை பார்த்தார்.

"என்ன டா?" என்றார் சோமு.

"தங்கம் எடுக்கல டா "

"இன்னொரு வாட்டி போனை போடு" என கூற,

மீண்டும் அழைத்தார்.

நீண்ட அழைப்பிற்கு பின் அதனை ஏற்றவள்" பா என்ன? " என்றாள்.

"தங்கம் இன்னைக்கு உன்ன சீக்கிரம் வர சொன்னேனே!"

சற்று நேரம் அமைதியாய் இருந்தவள்" பா நான்" என நிறுத்தி விட்டு, " சரி வரேன்" என வைக்க, தந்தை முகத்தில் அப்போது தான் ஓர் நிம்மதி. நண்பனிடம் திரும்பியவர் "இந்தா கிளம்பிடுவளாம் டா சோமு வந்திடுவா "என்றார்.

"அப்புறம் என்ன?! வா போய் வெளிய பேசுவோம் "என அனைவரும் பேசி கொண்டிருக்க, இன்னும் அரைமணி நேரம் கழித்தே வீட்டிற்கு வந்தாள்.

பெண்ணவளை அனைவரும் காண, தன் காக்கி உடையில் ஏற்கனவே மாநிறமாய் இருப்பவள் தான். இப்போது வெளியில் அலைந்து திரிந்து வந்ததின் பயனாய் இன்னும் கருத்து வந்தவளை கண்டு சோமுவின் மனைவி முகமே மாறி சந்தோஷை காண,அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் அமர்ந்திருந்தான்.

வீட்டினுள் வந்தவளை இழுத்து கொண்டு போய் " என்ன தங்கம் நீ என்னத்தேன் போலீஸ்காரியா இருந்தாலும் இன்னைக்கும் இப்படியா வருவ நீ? அவுக வந்து ஒருமணி நேரம் பக்கமாச்சு சட்டுனு மூஞ்சியை கழுவிட்டு புடவை கட்டிட்டு என்னை கூப்பிடு" அறைக்குள் கிட்டதட்ட தள்ளினார் சோமுவின் மனைவி.

"என்ன அத்தை அதேன் என்னை பார்த்துட்டாங்களே, இதுக்கு மேல புடவை எல்லாம் கட்டணுமா என்ன?"

"ஆத்தி இதென்ன பேச்சு தங்கம். இதுக்குதேன் ஒரு பொம்பள இருந்து வளர்க்கணும் சொல்றது. பாரு என்ன பேச்சு பேசுற நீ?"என்றார் ஆதங்கமாய்.

"ஏன் அத்தை இப்போ என்ன என் அப்பா என்னை நல்லா வளர்க்கல சொல்றிங்களா?" என கோபமாய் கேட்டவளை பார்த்து கண்ணை கட்டியது.

"ஆத்தி தெரியாம சொல்லிட்டேன் டி! நீ இப்போ என்கிட்ட வழக்காடம விரசா கிளம்பி வா"

அவர் சென்ற பின் கூட அவளுக்கு அத்தனை கோபம். இந்த சமூக கோட்பாடுகளின் மீது, அதற்காக பெண்ணியவாதியில்லை. ஆனால் இங்கு திணிக்கப்படும் பெண்ணிய கருத்துகளின் மீது அத்தனை கோபம் வந்தது. நேரம் செல்வதை உணர்ந்தவள் குளித்து முடித்து ஒரு காட்டன் புடவையை சுற்றி கொண்டாள். அங்கே மீண்டும் வந்த சோமுவின் மனைவி "இன்னும் கொஞ்சம் உன் நிறத்தை எடுப்பா காட்டுற மாதிரி எதாவது எடுத்து கட்டிக்க வேண்டியது தானே!"

"அத்தை எந்த புடவை கட்டுனாலும் நான் இப்படி தான் இருப்பேன். இத கட்டவா இல்லை பேண்ட் சட்டை எடுத்து போட்டுக்கவா சொல்லுங்க?"

"ஆத்தி நீ செஞ்சாலும் செய்வத்தா", அதற்கு மேல் வழக்காடாமல் வேகமாக அவளின் தலையில் மல்லி பூவை சூடி அழைத்து கொண்டு வெளிய வர, சந்தோஷின் விழிகள் ஓர் நிமிடம் பெண்ணவளை கண்டது. பின் அவன் வேறு பக்கம் திரும்பி கொள்ள, அவன் பார்த்த ஓர் நிமிட பார்வையிலேயே பெண்ணவள் விழிகள் யோசனையில் சுருங்கியது. அவன் விழிகளில் எந்த வித ஆர்வமோ விருப்பமோ இல்லை. ஏதோ தடுமாற்றம் இருப்பது போல் தோன்ற, மீண்டும் அவனை பார்த்தாள். அவனோ இப்போது கனகவேலிடம் பேசி கொண்டிருந்தான்.

'எல்லாரையும் போலீஸ்காரியாவே பார்க்காத தங்கம்'மனதிற்குள் தன்னையே குட்டி கொண்டாள்.

"ஏன் மா இப்போ நீ சப் இன்ஸ்பெக்டர் தானே?" என கேட்டார் சந்தோஷின் தந்தை.


"ஆமா"

"ஜாயின் பண்ணி எத்தனை வருஷமாச்சு? "

"இப்போ ஒரு ரெண்டு வருஷம் பக்கம் இருக்கும்"

"நீ எந்த ஏரியாகுள்ள வருவ?"


"சிம்மக்கல் வரைக்கும் எங்க கண்ட்ரோல் தான்."

"அப்போ நல்ல காசு பார்க்கலாம் சொல்லு" என ஏதோ பெரிய ஜோக் சொன்னது போல் சிரிக்க, அதனை கண்டு கோபமாய் பேச எழுந்தவளை கனகவேல் பாவமாய் பார்த்து வைத்தார்.

"அப்பா" என பல்லை கடித்தவள் அமைதியாய் அமர,கனகவேல் தன் நண்பனை பார்த்தார்.

சோமு உடனே "அதான் பொண்ணு வந்தாச்சு, எல்லாரும் பார்த்தாச்சு இனி மத்த விஷயங்களை பேசி முடிச்சுடுவோம்" என்றார்.

"என்ன மத்த விஷயம் மாமா?"

"கல்யாணத்தேதி அததான் சொன்னேன் டா தங்கம் "என்றார் வேகமாய் சோமு.

"ம்ம்ம்... " சோமுவின் பதிலில் திருப்தி இல்லாமல் கோபமாய் தந்தையை பார்த்தாள்.

"அண்ணே நீ என்ன சொல்றியோ அதான் தேதி, என் பையன் அன்னைக்கு வந்து தாலி கட்டுவேய்ன் அம்புட்டுதேன்" என்றார் வேகமாய் சரஸ்வதி.

"சரி என்ன சொல்ற கனகு? தைல கல்யாணம் வச்சுகுவோம் அதுக்கு முந்தின நாளே நிச்சயம். இப்போ தாம்பூலம் மட்டும் மாத்திப்போம் சரி தானே!"

"நீ சொன்னா சரித்தேன் "என கூறி அடுத்த கட்ட வேலையினை தொடங்க, பெண்ணவள் விழிகள் சந்தோஷை பார்த்தது. எந்த உணர்வுமின்றி அவன் முகமிருக்க அவளும் அவனை ஆராய்ச்சியாய் பார்த்து திரும்பி கொண்டாள்.

அவளின் திருமண தேதியை முடிவு செய்து அனைவரும் கிளம்பி செல்ல, கனகவேல் விழிகள் கலங்கி அமர்ந்திருந்தார்.

"அப்பா" அருகில் அமர்ந்தாள் தங்கமயில்.

"என்னடா தங்கம்?"

"உங்க தங்கம் நல்லாத்தேன் இருக்கு. ஆனா தங்கத்தோட அப்பாக்கு தான் ஏதோ ஆயிடுச்சு போல" மகளின் புன்னகையை நிறைவாக பார்த்தார் அவர்.

"உனக்கு மாப்பிள்ளயை பிடிச்சிருக்கா டா?"

"உனக்கு பிடிச்சிருக்கா அப்பா?" திருப்பி கேட்டாள் மகள்.

'தங்கம் "

"உண்மையா தான் பா சொல்றேன். உனக்காகத்தேன் இந்த கல்யாணம் பின்ன உனக்கு மாப்பிள்ளையை பிடிக்க வேணாமா சொல்லு?"


"தங்கம்" என்றார் அதிர்வாய்.

"அப்பா எதுக்கு இத்தனை விசனப்படுற?நான் உனக்காக சொன்னேன். நானும் மாப்பிளையை நல்லா சைட் அடிச்சேன் போதுமா!"

" சைட் அடிச்சியா நீ? "மகள் கூற்றில் சிரித்து விட்டார்.

"ஆமா நீங்க பிடிச்ச மாப்பிள்ளை நல்லா உரிச்ச கோழியாட்டம் வந்தா பாக்காம இருப்பாங்களா என்ன?" என்றவள் "அத்தேன் நீ சொன்னதுக்கு எல்லாம் சரின்னு சொல்லிட்டேனே பின்ன எதுக்கு இப்படி சோகமா கிடக்க?" தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள்.

"ப்ச்.. அதில்ல டா தங்கம். இன்னைக்கே மாப்பிள வீட்ல இருந்து வந்த ஜனக்கட்ட பார்த்த தானே!"

"சரி அதுக்கு?"

"இங்க நீ நானு சோமு "என கூறி நிறுத்தியவர் "சோமு கூட அவங்க பக்கம் தான்ல "என்றார் வருத்தமாய்.

அவர் தோளில் இருந்து எழுந்தவள் "பா இப்போ உன் பிரச்சனை என்ன?" என கேட்க,

அவரோ எதுவும் பேசாது அமைதியாய் இருந்தார்.

"பா இதெல்லாம் நீ உன் மேரியை இழுத்துட்டு வரும் போது யோசிச்சுருக்கணும். சரி கல்யாணம் பண்ணதும் உன் அப்பா உன்ன அடிக்கும் போது அங்கேயே நின்னு, அவிக கூடயே வாழ்ந்துருக்கணும்.ரோசப்பட்டு கிளம்பி வந்துட்டு இப்போ உக்காந்து மூக்க சிந்திட்டு இருக்க "என்றாள் கடுப்பாய்.

கனகவேல் பாவமாய் மகளின் முகம்‌ பார்த்தார்.

"சரி சரி விடு என்ன இப்போ? உன் சொந்தத்தை பார்க்கணும் அதானே!"

"ம்ம்ம்... "என்றார்.

"அப்போ என் கல்யாணத்தை சாக்கா வச்சு போய் பத்திரிகையை கொடு, கூடவே உன் தொங்கச்சியையும் உன் மச்சான் அவர் பேர் என்ன?"

"அண்ணாமலை டா தங்கம்" என்றார் பூரிப்பாய்.

"அதேன் அந்த மலை அண்ணாமலையை இழுத்துட்டு வந்து மீசக்கார நண்பான்னு பாட்டு கூட படிக்கோ" என்றாள் நக்கலாய்.

மகள் சொல்ல சொல்ல கனகவேலின் முகம் மகிழ்ச்சியில் திளைக்க அதை செயல்படுத்தும் வழியை எண்ண தொடங்கி விட்டார்.
 
Ninaichen… padichittu pogumpodhe click aachu…
Kanagavel Veeravel ore pola name irukke reltives oh nu…

Bakkiyam annan than Kanagavel… appo Veera ku maman magal Mayil than pondatti…
 
ORS:3

சுப்பிரமணி வேகமாய் ஓடிவருவதை பார்த்த பாக்கியம்,"யய்யா எதுக்கு இத்தனை வேகம் உமக்கு?" அங்கிருக்கும் செடிகளுக்கு நீரை பாய்ச்சி கொண்டிருந்தவர் நிறுத்தி விட்டார்.

"அத்தை மச்சான் எங்க?" மூச்சிரைத்தது அவனுக்கு.

"அவேன் இங்கன காட்டு வேலைக்கு வந்தா எங்க இருப்பான்னு உனக்கு தெரியாதாய்யா?! எல்லாம் அந்த சூரியகாந்தி தோட்டத்துக்குள்ளத்தேன்! அப்படி என்னதான் இருக்குமோ அதுல அவனுக்கு?!"

"அதுசரி என் மச்சான் வேலை செஞ்சாலும் குத்தம்? வேலை செய்யாட்டியும் குத்தமா? என்னத்த நீங்க?" சிரித்துவிட்டான் சுப்ரமணி.

"ஓ... உன் கூட்டாளிக்கு குடை பிடிக்கிறீகளோ?! விவசாய வேலைன்னு வந்தா எல்லாந்தேன் பார்க்கணும்? நான் இத மட்டுந்தேன் பார்ப்பேன்னு திரிஞ்சா என்ன பண்ண?" வழக்கம் போல் வசை பாடினார் அண்ணாமலை.

"விடுங்க மாமா இன்னும் கொஞ்ச நாளுத்தேன்,பின்ன நானும் என் மாப்பிள்ளையும் சிங்கப்பூர் போக போறோமே!அத பத்தி சொல்லத்தேன் அவனை தேடிகிட்டு இருக்கேன்"

"என்னயா சொல்ற?சும்மா அவேன் சலம்பிட்டு கிடக்கான்னுல நெனச்சேன்" பாக்கியம் அதிர்ச்சியாய் கேட்டார்.

"அத சொல்லத்தேன் வந்தேன் அத்தை. அங்கே டெஸ்ட் அடிக்கிற கம்பெனில வேலை பாக்குறாரே சிங்கார அண்ணே?! அவர் போன் போட்டுருந்தாரு! என்னையும் அவனையும் அடுத்த வாரம் கிளம்பி வர சொல்றாரு"

"யய்யா எதுக்கு சீமைக்கெல்லாம்?! இங்க இருக்க ஆடு மாடு காடு வயல பாத்துட்டு கிடந்தாலே நம்ம சென்மத்துக்கு வாழ்ந்துடலாம்.எதுக்குயா இந்த வேலை?" மகனை பிரிய முடியாத கவலை பாக்கியத்திற்கு.

"விடு பாக்கியம் போய்ட்டு வந்தாத்தேன் இந்த மண்னோட அருமை தெரியும்" என்றார் அண்ணாமலை.

அந்நேரம் தன் வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு நனைந்த உடையுடன் வந்து கொண்டிருந்தான் வீரா.

கொஞ்சம் சிவந்த நிறம் தான் அவன். அவன் வயதுக்குரிய வனப்பும், விழிகளில் எப்போதும் மின்னும் குறும்பும் அவனை இன்னும் அழகனாய் காட்ட, அந்த காலை நேர சூரியன் அவன் தேகத்தில் பட்டு அவனை பேரழகனாய் காட்டவும் பெருமையுடன் மகனை கண்களில் நிறைத்து கொண்டார் பாக்கியம்.

"டேய் என்னடா நண்பா? இப்படி நனைஞ்சு வந்திருக்க?"

"அவரு செடிக்கு மட்டும் இல்லாம தனக்கும் தண்ணி பாய்ச்சிகிட்டு திரிவாரு" அண்ணாமலை திட்டியபடி நகர்ந்தார்.

"இவரே மாமனார் சொத்த ஆட்டைய போட்டு,எங்க அம்மாவ கவுத்து இங்க வந்துட்டு,என்ன பேச்சு பேசுறாரு?! இதெல்லாம் என் தாத்தேன் சொத்தாக்கும். அம்புட்டும் என் மாமனுக்குதேன்! இதுல இவரு வேற குறுக்க மறுக்கா வந்துகிட்டு" சற்று தூரம் நகர்ந்து விட்ட தந்தையை பார்த்து எகிறினான் வீரா.

பாக்கியம் வேகமாய் வந்து அவன் முதுகில் இரண்டு அடி போட்டவர் "மெதுவா பேசேன் டா உன் அய்யன் காதுல விழுந்துற போது " மகனை கண்டித்தார்‌.

"அத்தை அதுக்கேன் நீ இவ்வளவு மெதுவா பேசுற?"

"புருஷனுக்கு பயப்படுறாங்களாமா"

"டேய் வீரா அப்பாகிட்ட என்ன பேசுறதுன்னு இல்லையா உனக்கு?"திட்டினாலும்,,"யய்யா அம்மா சொன்னா கேளு யா! நீ ஏன் சீமைக்கெல்லாம் போகனும்? இங்கயே இரேன்"

"அம்மா நான் சொன்னா சொன்னதுதான்! நான் சிங்கப்பூர் போறேன்! நாலு வருஷம் கழிச்சு வருவேன்.ஒரு டீச்சர் புள்ளைய பார்த்து வைக்கிற, கல்யாணம் கட்டுறேன்.அப்புறம் இங்கேயே கடைகண்ணி வச்சு செட்டில் ஆயிருறேன். இவ்வளவுதான் இதுக்கு மேல இந்த மாரியப்பன் மகள கட்டு, அத கட்டுனு சொல்லிட்டு இருக்காத"
" நீ கூட சொல்லப்படாதயா சுப்னி,அங்கைக்கு என்ன குறைச்ச இவன் மேல பித்தா கிடைக்கா, இவேன் என்னடானா கட்டுனா டீச்சர் பிள்ளையைத்தேன் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கான்?! இவங்க ஐயனுக்கு மாரியப்பன் மகளை எடுக்கணும்னு எண்ணம் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தான் சிரிப்பா சிரிக்கிறேன்" மகனின் கடுப்பில் முகம் வாடினாலும், அவனின் நண்பனிடம் ஆதங்கத்துடன் முறையிட்டார் பாக்கியம்.

"அத்தை நீங்க இரண்டு பேர்கிட்டயும் இப்ப எதுவும் சொல்லாதீங்க! நாங்க போயிட்டு வர்றோம் அதுக்கு பின்ன பேசிக்கலாம்" என்றான் சுப்ரமணி.

"ம்ம்ம்... "என்றவர் கண்களைத் துடைத்துக் கொள்ள, அதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரா,'"இப்ப நான் சொன்னதுக்கு அழுகுதுன்னு நெனச்சியா மாப்பிள?நான் அவிக அண்ணனை சொன்னேன்ல அத நினைச்சு அழுது இருக்கும்" அன்னையை மீட்டுக்கும் பொருட்டு சீண்டினான்.

"என் அண்ணனை மட்டும் எதுனாச்சும் சொன்ன? உன்ன என்ன பண்ணுவேன்னு தெரியாது பார்த்துக்கோ!! "கண்களை துடைத்து கொண்டு மிரட்டினார் பாக்கியம்.

"பார்த்தியா பாக்கியம்மாக்கு லந்த?! இன்னும் அண்ணேன் ஊர் மெச்ச சீர கொண்டு வந்து இறக்கிட்டா? இந்தா என் மவன்னு என்னயே தூக்கியே கொடுத்துருவ?! போத்தா!"

"என் அண்ணன் மட்டும் வந்து கேட்கட்டும் மொத்தத்தையும் கொடுத்துடுவேன். உன்னை கொடுக்க மாட்டேனா?" அங்காலய்த்தாலும் பெருமை பேசினார் பாக்கியம்.

"கொடுப்ப கொடுப்ப, இந்த வீராவை அம்புட்டு சீக்கிரம் ஆரும் தூக்கினு போவ முடியாதாக்கும்?! இதுல உன் நொண்ணனுக்கு நான் மாப்பிளையா வேற போவணுமா?" தோட்டத்துக்குள் சென்றுவிட்டான்.

"அத்தை அவர் கல்யாணத்துக்கு அப்புறம், கனகு பெரியப்பா இங்கின ஊருக்குள்ள வரலயா?"என்றான் யோசனையாய்.

"ஏன் வராம அதெல்லாம் என் அம்மா சாவும் போது வந்தாகத்தேன். ஆனா என் அய்யன் வந்தவுகளை என்ன பேசணும் இல்லாம நல்லா பேசிப்புட்டாக, அதுக்கு பின்ன என் அண்ணே இங்குட்டு வரவேயில்லையா! உன் மாமனும் நானும் அவுகளுக்குனு உள்ள இடத்தை தரிசாத்தேன் போட்டுருந்தோம். இப்பதேன் ரெண்டு வருஷமா இவென் நான் வெள்ளமை பண்றேன்னு இறங்கி இருக்கான். அந்த மண்னுக்கு சூரியகாந்தி பூவும் நல்லா வருதே!சரி அவரு வரும் வரை, நம்ம பாப்போம்னு பார்த்துட்டு கிடக்கோம் " பெருமூச்சுடன் வேலையை பார்க்க சென்றுவிட்டார்‌.

******

"பாக்கியம்" வெளியில் சென்று வந்த அண்ணாமலை அழைத்து கொண்டே வீட்டுக்குள் வந்தார்‌.

செல்வம் தான் வந்தவன்," அப்பா.. அம்மா கொல்லைபுறம் நிக்கிறாக!" என்றவன் மெதுவாய்," அம்மா அண்ணனை நினைச்சு அழுதுட்டு இருக்காக" என்றான்.

"ஏன் என்னவாம் தொரையை நெனைக்கிற அளவுக்க?"

"இன்னைக்கு கருவாட்டு குழம்பு அதேன்!" என்றான் இன்னும் மெதுவாய்.

"சரி நீ பள்ளிக்கூடம் போ நான் பார்த்துக்குறேன் "என பின்னால் செல்ல, அங்கே அவர் மனையாட்டி திட்டி கொண்டே மாடுகளை பார்த்து கொண்டிருந்தார்.

அண்ணாமலை அவரை பார்த்து கொண்டே, "என்னத்துக்கு இப்படி பொலம்பிட்டு கிடக்க?"

"உங்களுக்கு என்ன கல்மனசு, ஆனா பெத்த மனசு அடிச்சுக்குதே" என்றார் கோபமாய்.

"எதுக்கு அடிச்சுக்கனுங்குறேன்? "

"என்ன?! இப்போ என்னாங்குறேன்? " கூட்டி கொண்டிருந்தவேலையை நிறுத்தி விட்டு கணவரை முறைத்தார்.

"இதென்னத்தா வம்பா போச்சு?!உன் மவன் சீமைக்கா போயிருக்கான்?! இங்கின இருக்குற ஊர்க்குதானே?அதுவும் ஒரு மாசம்! இதுக்கு இம்புட்டு அலப்பறை பண்ற? உன் மவன் சொன்ன கணக்கா சீமைக்கு ஏறுனா இங்கின யாரயையும் சோறு தின்னவிட மாட்ட போலயே? " துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு சென்று விட்டார்.

"பாத்தாலும் பாத்தேன் இந்த மாதிரி மனுஷனை பார்க்கலயே நானு, இங்கின என்ன?சீமை என்ன?, அவேன் இங்கின இல்லைதானே,அத சொல்லி அழுதா இவரு என்னன்னா நம்மளயே திட்டிட்டு போறத பாரேன்" என மீண்டும் மகனை நினைத்து புலம்ப ஆரம்பபித்தார் பாக்கியம்.

அவரின் புலம்பலுக்கு காரணமானவனோ ஏற்கனவே சிஙகப்பூர் சென்றவர்களை அங்கே கண்டு விசாரித்து கொண்டிருந்தான்.

"அண்ணே அங்கின மழை எல்லாம் பெய்யுமா?"

"அட ஏன்பா அதுவும் பூமில தானே இருக்கு, பின்ன பெய்யாம,"

"அண்ணே ரொம்பத்தேன் வெயில் அடிக்குமோ?"

"அடிக்கும் அடிக்கும் இங்கின மாதிரித்தேன்."

"அங்குன உள்ள காசு நம்மூருக்கு எம்புட்டுண்ணே வரும்?"

"அது வரும் பா! ஓர் ரூவாயே நம்மூருக்கு அறுபது ரூவாய்க்கு மேல"

"அப்படியாண்ணே!"என இன்னும் கேள்வியை அடுக்க, சுப்பிரமணி தான் "யோவ் மாப்பிள போதும் விடுயா, மிச்சத்தை நாம அங்கின போய் தெரிஞ்சுக்குவோம்"என்றான்.

"இரு டா "என்றவன் "அண்ணே நமக்கு எப்போ விசா வரும்?"

"அது உன் அதிர்ஷ்டம் தம்பி. ஒரு மாசம் இல்லை ஆறு மாசம் இல்லை ஒரு வருஷம் கூட ஆகலாம்" விட்டால் போதுமென ஓடினார் ஏஜென்ட்.

"டேய் மச்சான் நான் முருகன்கிட்ட வேண்டிட்டேன் டா?"

"என்னனு? "

"இன்னும் ஒரு மாசத்துல எனக்கு சிங்கப்பூர்க்கு விசா வந்துடுச்சுனா? நாக்குல அலகு குத்துறேன்னு"

"ஏன்டா? ரொம்ப வலிக்கும்ல?"

"ஆமா வலிக்குந்தேன்! என்ன பண்ண?நம்ம வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போகணும்னா, நம்ம சில வலியை அனுப்பவிச்சு தானே ஆகணும்."

"ஓ..ஆனாலும் அந்த காயம் ஆற ரொம்ப நாள் ஆகுமேடா மாப்ள!"

"வலிச்சாலும் உனக்குத்தானே எனக்கென்ன?" என வீரா தன் வேஷ்டியை கொஞ்சம் தூக்கி கட்டி கொண்டு முன்னால் செல்ல,"அடப்பாவி உன்ன" என துரத்தும் நேரம் அவன் அலைபேசி ஒலித்தது, அதுவும் வீராவின் வீட்டிலிருந்து.
அதனை கட் செய்தவன்,இந்த நேரத்தில் யார் அழைப்பார் என உணர்ந்தவன் இதயம் றெக்கை இல்லாது பறந்து போக, இறுதியாய் ஊரிலிருந்து கிளம்பிய நாளை எண்ணியவன், இதழ்கள் புன்னகை பூக்க, மனம் ஒரு மாதத்திற்கு முன்னால் சென்றது.

ஊருக்கு கிளம்பும் முன், சுப்ரமணி தன் உடமைகளை எடுத்தவன் வீட்டை பூட்டி கொண்டு திரும்ப கலை பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

"என்னத்தா இப்படி வந்து பின்னாடி நிக்கிற?" பையை தூக்கி தோளில் போட்டு கொண்டான்.

"எப்போவும் உங்க பின்னாடி நிக்கதேன் ஆசை படுறேன் மாமா"

'என்ன சொல்றா இவ? 'என விளங்காது பார்த்தவனை ரசித்து கொண்டிருந்தாள் கலை.

"நான் உங்கள கல்யாணம் கட்ட ஆசை படுறேன்"

"கலை"

"ஆமா"

"என்ன இப்படி பேசுற? உங்க அண்ணன் காதுல கேட்டான் அம்புட்டுத்தேன்.அவன் சிங்கப்பூர் போறதே உன் கல்யாணத்தை சிறப்பா செய்யத்தேன். ஆனா என்ன நீயி? பேசாம போத்தா வீட்டுக்கு! "

"அதெல்லாம் எனக்கு தேவையில்லை. நீங்க எங்கயும் போவவேணாம் இங்கனவே இருங்க, நானு இன்னும் ரெண்டு வருஷத்துல டீச்சர் ட்ரெயினிங் முடிச்சடுவேன், பின்ன நான் வேலைக்கு போறேன். நீங்க காடு வயல பார்த்துட்டு ஊரோட இருக்கலாம் "

"அடியே என்னடி உன் குடும்பமே இப்படிதேன் டீச்சர் டீச்சர்ன்னு அலைஞ்சுட்டு இருக்கீங்களா. போடி வேலையை பார்த்துகிட்டு! இதை சொல்ல வேற வீட்டுக்கு வந்துட்டா, அவ அண்ணனாட்டம் கதை சொல்லிக்கிட்டு?! " திரும்ப போனவனை கை பிடித்து தடுத்தவள் "மாமா நான் சீரியசாத்தேன் சொல்றேன்" என்றாள்.

"ப்ச்... கலை உனக்கும் எனக்கும் எல்லாம்... ப்ச்..வேணாம்த்தா" என்றான் தன்மையாய்.

அவளோ அவனை முறைக்க, "ப்ச்... நான் அப்பன் ஆத்தா இல்லாத அனாதை பய, எனக்குன்னு இருக்கிற ஒரே ஒருத்தன் உன் அண்ணந்தேன் கலை. அவன்கிட்ட போய் உன் தங்கச்சியை தான்னு கேக்க, என்னால முடியாது தா சொன்னா கேளு "

"ஓ... அப்போ என் அண்ணன் கூடவே கடைசி மட்டும் வாழ்ந்துருவிகளோ?" பொண்டாட்டி பிள்ளைகள் எல்லாம் கட்டமாட்டிகளோ, வந்துட்டாரு சாக்கு சொல்லிக்கிட்டு? போய்யா போய் உன் மச்சான் பின்னாடியே அவன் அருணாகயற பிடிச்சுகிட்டு திரியும் " பாதி தூரம் சென்றவள் மீண்டும் வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "இதையும் உன் மச்சாங்கிட்ட சொல்லு" சிரித்து கொண்டே ஓடி விட்டாள்.ஆணவனின் ஆழ்மனம் அவளை எண்ணியதுமே அவள் முத்தமிட்ட எச்சில் மட்டும் அவன் உயிர்வரை தித்தித்தது.

நாட்கள் யாருக்கும் காத்திராமல் செல்ல, கனகவேல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தார்.

"டேய் நீ சொன்ன மாதிரி கல்யாண மண்டபதுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.இப்போ சமையல்காரருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு" சோமு வந்து அமர்ந்தார்.

"ம்ம்ம்... "

"என்னடா கனகு? எதுக்கு கண் கலங்கி கிடக்க?"

"மேரி சாகும் போது தங்கம் தான் என்னை பார்த்துகிடுச்சு, அதுனால தானோ என்னவோ என்னால அதுலயிருந்து வெளிய வர முடிஞ்சது. ஆனா இப்போ தங்கம் என்றவர் கண்களை துடைத்து கொண்டே கொஞ்சம் கஷடமாதேன் இருக்கு டா சோமு"

"அட இதுக்கு தானா, பொம்பள புள்ளனா அப்படி தான் டா, மாப்பிள யாரு? நம்ம சந்தோஷ் தானே, வீடும் எங்க இருக்கு இங்குனகுள்ள தானே!சரி அதையும் விடு தங்கம் வேலை பாக்குற ஸ்டேஷன் நம்ம ஏரியா தானே, இதுக்கெல்லாம் கவலை பட்டுட்டு, சரி முக்கியபட்டவுகளுக்கு பத்திரிகை கொடுக்கணும் சொன்னியே கொடுத்துட்டியா"

"ம்ம்ம்... அதெல்லாம் முடிச்சிட்டேன் கொஞ்சம் பத்திரிகை எடுத்து வச்சிருக்கேன். ஊருக்கு போய் என் சொந்தக்காரங்களுக்கு கொடுக்க சொல்லி தங்கம் சொன்னுச்சு."

"என்ன உன் ஊருக்கா?"

"ம்ம்ம்..."

"என்னடா சொல்ற? நீ அங்க யார் கூடவும் பேசுறது இல்லனுல நெனச்சேன்".

"பேசுறது இல்லைத்தேன். ஆனா தங்கம் கல்யாணத்துக்கு எல்லாத்தையும் அழைக்கணும்னு சொன்னுச்சு"

"அப்போ ஊருக்கு போக போறியா கனகு?" சோமு கேட்கும் நேரம் சரியாக தன் பணி முடிந்து வந்த தங்கமும்" ஆமா அங்கிள். நானும் போய் உங்க பாசமலரை பாருங்கன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்" என்றாள்.

"இல்லம்மா அங்கின" சோமு நண்பனுக்கு முன்பு நடந்ததை யோசித்து தயங்க, புன்னகையுடன் தந்தையின் அருகே நின்றாள் தங்கம்‌.

"எல்லாரும் எப்போவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க அங்கிள். காலம் அவங்களுக்குரிய அவகாசத்தை கொடுத்துருக்கு பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு?அண்ட் இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோனு யோசிக்கறத விட? என்ன தான் நடக்குதுன்னு பார்த்துடாலமே? "என பெண்ணவள் கூறிவிட்டு அறைக்குள் செல்ல, சோமுவின் முகம் தெளிந்தது‌.

"என்னடா கனகு? இப்படி தெளிவான பிள்ளையை பெத்துட்டு புலம்பிட்டு கிடக்க, ஆம்பள புள்ள இல்லாத குறையே இல்லாடா உனக்கு!" என அவர் சொல்லி சென்றதும், கனகவேலின் எண்ணமும் அதுதான். அவரின் பெண்ணரசி அவர் சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்று கொள்ளும் எண்ணம் கொண்டவள்! அதனால் தானே, சந்தோஷை பற்றி சொல்லியதும் எந்த தயக்கமுமின்றி உடனே சரி என்றதும், ஆனால் அவரின் இந்த முடிவே அவர் மகளின் கண்ணீருக்கு காரணமாய் மாறபோவதை யார் அறிவார்!!
 
ORS:4

எப்போதும் போல் வீராவின் வீட்டில் காலை நேர பரபரப்பு தொற்றி கொண்டது.

அண்ணாமலை காலையிலேயே வயலுக்கு சென்றிருக்க, கலை கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். செல்வா பன்னிரண்டில் இருப்பதால் அவனிற்காக உணவை டப்பாவில் அடைத்து கொடுத்த பாக்கியம்,"செல்வா நீ பள்ளிக்கூடம் போவும் போது அப்பாவுக்கு மோர கொடுத்துட்டு போ" என்றார்.

"மா லேட்டாவுது அக்காகிட்ட கொடுத்து விடு " தன் பையை எடுத்து கிளம்ப, மாரியப்பன் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார்.

"அம்மா மாரியப்பன் மாமா வந்துருக்காக, கூடவே இன்னொருத்தவுகளும்" குரல் கொடுத்து கொண்டே நாற்காலியை எடுத்து போட்டான் செல்வா.

"யாரு அது?" பாக்கியம் வெளியே வந்தவர், மாரியப்பன் கூட வந்த கனகவேலை கண்டதும் அப்படியே நின்று விட்டார்.

தங்கையின் அதிர்வை கண்டு, "என்னத்தா அண்ணனை வான்னு கூப்பிடமாட்டியா? இன்னும் கோவம் போவலையா உனக்கும்?" என்றவர் குரல் கலங்கி தான் போனது.

"யாத்தே!! என்ன பேச்சுண்ணே பேசுறிக?!"என அவர் அருகில் வந்தவர் அவரை கட்டி பிடித்து அழ ஆரம்பித்து விட்டார்.


அவரின் பாசத்தில் கனகவேலின் கண்களும் கலங்கி தான் போனது.

சற்று நேரம் அழுது கரைந்தவர் "நான் ஒரு கூறு கெட்ட சிறுக்கிண்ணே!? நீ சாப்பிட்டியான்னு கூட கேட்காம இப்படியே நின்னுட்டு கிடக்கேன்" தன்னை நிதானப்படுத்தி," கலை மாமாக்கு காபி போடுத்தா" என வீட்டு வாசல் படி வரைக்கும் போய் பின் மீண்டும் உள்ளே வந்தவர்" செல்வா அப்பாவை போய் கூட்டிட்டு வா, அப்புறம் வரும் போது கறி வாங்கிட்டு வரசொல்லு, அப்புறம் மீனு" பட்டியல் நீண்டு கொண்டே போனது.

தங்கையின் பாசத்தில் சிரித்தவர், "பாக்கியம் பேசாம இரு மச்சான் வேலையா இருக்க போறாக" சற்று சங்கடத்துடன் சொன்னார்.

"அதெல்லாம் நீ வெசனப்படாதண்ணே!அவருக்கு வேலைத்தேன் நித்தம் கிடக்குமே!"என கூறி விட்டு "போடா சீக்கிரம் போய் கூட்டிட்டு வா" செல்வாவை அனுப்பி வைத்தார்.



அவனோ வேகமாய் தந்தையிடம் வந்தவன், "அப்பா அம்மா கூப்பிடறாக" என்றான்.

"ஏன் உங்க அம்மாக்கு அந்த தொரை நினைப்பு வந்துருச்சோ?!சரித்தேன் இன்னைக்கு என்ன குழம்பு? மீனா இல்லை கருவாடா?" கண்டுகொள்ளாமல் வேலையை தொடர்ந்தார்.

"பா அதெல்லாம் ஒன்னும் இல்ல மாரியப்பன் மாமா கூட யாரோ நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அவங்களை கண்டதும் அம்மா அழுதுகிட்டு உங்கள கையோட கூட்டிட்டு வரச் சொன்னாங்க" பரப்பரப்பு இன்னும் குறையாமல் சொன்ன மகனை கண்டு யோசித்தார் அண்ணாமலை‌.

"ஏன்? உன் அம்மா அழுவுறா?அவளை கட்டினதுக்கு நாந்தேன் அழணும்" துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்ப, "அப்பா அம்மா கையோடு கறி மீனெல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க" என்றான்.

"ஏன்டா என்னத்துக்கு இத்தனை?" கேள்வி கேட்டாலும் மனைவி கேட்டதை வாங்கவும் தவறவில்லை அவர். அனைத்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றவர் கனகவேலை கண்டதும் அதிர்ச்சியில் நின்றுவிட்டார்.


அவரின் அதிர்வைக் கண்டு சுதாரித்தத கனகவேல், மனதில் சதிராடிய சங்கடங்களை பின் தள்ளிவிட்டு "மச்சான்.." என,அண்ணாமலையோ எதுவும் பேசாது அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டார்.

பின்னே அவர்களது திருமணம் முடிந்த சில நாட்களில் தான் கனகவேல் திருமணம் செய்து கொண்டது. மகனாய் இருந்து பெற்றவர்களை பார்க்காமல், காதலுக்காக அவர்களை நிராதரவாக விட்டு சென்று, யாருமற்ற நிலையில் வயதான காலத்தில் இருந்த மாமனார் மாமியார் இருவரையும் பார்க்கும் பொறுப்பு அண்ணாமலையின் தலையில் விழுந்தது. வேறு வழியின்றி மனைவிக்காக இங்கயே தங்கி விட்டார் அவர்.அதற்காக அவர் வாங்கிய ஏச்சுக்கள் ஏராளம். ஏன் சொந்த மகன் கூட அடிக்கடி சொல்லி காட்டுவதை கண்டும் காணாமல் கடந்து விடுபவர் என்றாலும் உள்ளுக்குள் அனைத்திற்கும் காரணமான கனகவேல் மீது வருத்தம் இருக்க தான் செய்தது. அதனால் தான் என்னவோ அண்ணாமலையை கண்டதும் சட்டென பேச முடியாது அமர்ந்து விட்டார்.

அவரை புரிந்தது போன்று கனகவேல் எழுந்து குற்ற உணர்வுடன் அவரது கையினை பிடித்தபடி "நான் செஞ்சது தப்புதான் மச்சான். என்னை மன்னிச்சுடுங்க! இங்கே எல்லாரையும் உங்களை நம்பி தான் விட்டுட்டு போனேன்.ஏன்னா என் இடத்துல இருந்து அவங்க எல்லாரையும் நீங்க நல்லா பாத்துப்பீங்க எனக்கு தெரியும். அது உங்களுக்கு எவ்வளவு சங்கடத்தை கொடுத்துருக்கும்னும் தெரியும்?! ஆனா எனக்கு வேறுவழியில்லை மச்சான். அன்னைக்கு அவளுக்கு நான் மட்டும் தான் இருந்தேன் மச்சான் அதான்" கலங்கிய குரலுடன் மனதார மன்னிப்பு கேட்டு கொள்ள, ஏனோ கனகவேலின் கலங்கிய விழிகளும் அவரின் குரலும் அண்ணாமலையை அசைத்துப் பார்க்க, எதுவும் பேசாது கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.

அதனை கண்ட மாரியப்பன் "விடுங்கண்ணே எல்லாமே ஒரு முடிவுக்கு வந்திருச்சுல்ல? பின்ன பழசை நினைச்சு என்ன ஆகப்போகுது? ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம் வாங்க" விஷயத்திற்கு வர, 'என்ன சொல்ல வருகிறான் இவன்!' அண்ணாமலை யோசனையாக பார்த்தார்.

"என்ன தம்பி சொல்ல வர்ற?" மாரியப்பனிடம் கேட்டார் பாக்கியம்.


"பாக்கிய அக்கா எல்லாம் நல்ல விஷயந்தேன்.உங்க மருமகளுக்கு கல்யாணம் தகஞ்சு வந்து இருக்காம்.அதை சொல்ல தான் அண்ணே இங்கிட்டு வந்து இருக்காரு"

"அண்ணே நெசமாலுமா? அவ்வளவு பெரிய பொண்ணா இருக்கு உனக்கு?"

"ஆமாத்தா மாப்பிள நமக்கு தெரிஞ்ச பையன் தான். அதேன் முடிச்சுடலாம்ன்னு"

"மாப்பிளை என்ன பண்றாக? "

"அக்கா மாப்பிள என்ன பண்றாரு கேக்காத பொண்ணு என்ன பண்ணுது கேளு? "என்றார் மாரியப்பன்.


அண்ணாமலையும் பாக்கியமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, கனகவேலோ சிரிப்புடன் "பொண்ணு போலீஸீத்தா! அதேன் சொல்றாரு தம்பி " பெருமையுடன் சொன்னார்.


"யண்ணே? பொம்பள புள்ள போலீசாவா இருக்கு? " மகிழ்ச்சியும் ஆர்வமும் நிறைந்திருந்தது பாக்கியத்தின் குரலில்.

"ஆமாத்தா சின்ன வயசுல இருந்தே அதுக்கு அப்படி ஒரு விருப்பம். பார்த்தா ஒரே தடவையில பரீட்சையில பாஸ் பண்ணிடுச்சு. இப்போ மதுரையில சிம்மக்கல்ல எஸ். ஐ யா இருக்கு"

கனகவேலின் தகவலில், அண்ணாமலை பாக்கியத்தை பார்த்து "பாரு பொம்பள புள்ள பொறுப்பா வேலைக்கு போவுது. ஆனா நம்ம வீட்டு மைனரு சிங்கப்பூர் போறேன் சீனாக்கு போறேன்னு ஊர் சுத்திட்டு இருக்காரு" வசை பாடினார்.

கனகவேலோ கலையிடம் பேசிக்கொண்டிருந்தவர்" என்னத்தா சொல்றாரு மச்சான்?" தங்கையை புரியாது பார்த்தார்.


"அவரு கிடக்கறாரு,எப்பவும் பெரியவன வசைபாடலனா,அவருக்கு தூக்கம் வராது.அவன் சிங்கப்பூர் போறேன் சொல்லிட்டு டெஸ்ட் அடிக்க போயிருக்கான்! அதைத்தான் சொல்றாரு."

"ஓ.... சரி விடுங்க மச்சான் இந்த காலத்துல பசங்க எல்லாம் அப்படித்தான் இருக்காங்க. எல்லாம் சரியா போயிடும். மாப்பிள்ளை விருப்பப்படி தான் போயிட்டு இருந்துதேன் வரட்டுமே"


"அப்படி சொல்லுங்கண்ணே! நான் சொன்னா எங்க மண்டைல ஏறுது இந்த மனுஷனுக்கு? ஏதாவது சொன்னா துண்ட உதறி தோள்ள போட்டுட்டு ஊருக்குள்ள நாட்டமை பண்ணிக்கிட்டு திரியிறது"என திட்டிக் கொண்டே உள்ளே சென்றவர், வேகமாய் அண்ணனுக்கு வேண்டியதை சமைத்து முடித்து அனைத்தையும் அவருக்கு பரிமாற, அவரின் பாசத்தில் விழிகள் கலங்கி கனகவேலும் உண்டு முடித்து, அனைவரும் குடும்பத்தோடு கண்டிப்பாய் வரவேண்டும் என்றும்," நான் தான் சாதிசனம் இருந்தும் இல்லாம அனாதையா நின்னேன்.ஆனா என் பொண்ணுக்கு அந்த குறை இல்லாமல் வந்து சீரும் சிறப்புமா பண்ணி கொடுத்தா" என பாக்கியத்திடம் வேண்டி நின்றார்.

மாரியப்பன் விழிகள் கலங்க, "அண்ணே என்ன இருந்தாலும் நம்ம எல்லாம் ரத்த உறவு, அது விட்டு போய்டுமா என்ன? என்ன அக்கா நான் சொல்றது?" என பாக்கியத்தை பார்க்க,


"அதானே,என்னன்னே இப்படி சொல்ற?என் மருமவ கல்யாணம். பாரு எப்படி பண்றோம்னு?இன்னும் ரெண்டு நாள் கழிச்சு செல்வாக்கு பரீட்சை முடியும். அவனை பஸ் ஏத்தி விடுறேன் உனக்கு உதவி ஒத்தாசைக்கு இருக்கும்" தங்கையின் உரிமையான கரிசனத்தில் மனம் நிறைந்தது.

கனகவேல் விழிகள் கலங்கி அண்ணாமலை கையில் சில ரூபாய் தாள்களை திணித்து "துணிமணி எடுத்துட்டு வந்திருக்கனும்.ஆனால் எப்படி சூழ்நிலைனு தெரியாம வாங்கிட்டு வரமுடியலை மச்சான்.." எனக் கூறி "எல்லாருக்கும் புது உடுப்பு எடுத்து கொடுத்துடுங்க மச்சான்" என்றார் கனகவேல்.

"அதெல்லாம் என்னத்துக்கு வேண்டாம்" என சொன்ன அண்ணாமலையிடம், "இதுவரைக்கும் என் தங்கச்சி பிள்ளைகளுக்கு நான் எதுவும் செஞ்சதில்லை. இனி செய்வேன் அது வேற, ஆனா இது என் மக கல்யாணம் நான் சொல்றதை நீங்க செஞ்சுதான் ஆகணும் "என கூறிச் சென்றார்.

அவர் சென்றதும் விழிகள் கலங்கியவர் "பாருங்க அண்ணனுக்கு என் மேல் உள்ள பாசத்தை, சரி எல்லாரும் கல்யாணத்துக்கு போவனும்.அதுக்கு வேண்டிய துணிகளை எடுக்க பாருங்க" ,நீண்ட பெருமூச்சினை விட்டவர்," முன்னாடியே அண்ணன் வந்து பேசி இருந்தா?! எம் மருமவளை நம்ம வீராவுக்கே கேட்டிருக்கலாம் என்னங்க நான் சொல்றது?" ஏக்கத்துடன் பேசிய மனைவியை முறைத்தார் அண்ணாமலை.


"ஆமா உன் பையன் அப்படியே ஜில்லா கலெக்டரா இருக்காரு?!அவருக்கு பொண்ணு கொடுக்க எல்லாரும் வந்து நீயா நானான்னு முன்னாடி நிக்கிறாக பாரு.அவனே ஒன்னுக்கும் ஆவாமதேன் ஊர் சுத்திட்டு திரியிறான். இந்த லட்சணத்துல உனக்கு போலீஸ்காரபுள்ள மருமகளா வேணுமா! பேசாம போய் வேலை சோலியை பாருடி "என மீண்டும் துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு வெளியை சென்றுவிட்டார்.

"அவன பத்தி ஏதாச்சும் சொன்னா உடனே துண்ட உதறி தோளில் போட்டுக்கிட்டு கிளம்பிட வேண்டியது. என் மவன் இருக்க அழகுக்கு இந்த ஜில்லால பொண்ணு இல்லை'எனமீண்டும் அவர் வாய்க்குள்ளே முணுமுணுத்து கொண்டு வேலையை பார்க்கச் சென்றுவிட்டார் பாக்கியம்.

***************

நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர, பெண்ணவளின் திருமண வேலையும் ஜோராய் தொடங்கியது.செல்வா பாக்கியம் சொன்னது போல ஒரு வாரம் முன்னால் வந்து கனகவேலுக்கு உதவியாய் இருக்க,அதில் அவர் அகமகிழ்ந்து தான் போனார்.

இங்கு வந்ததால் தங்க மயிலோடு ஒரு நட்பு உணர்வும் செல்வாக்கு இயல்பாய் தோன்றியது. ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவள், செல்வா வந்ததும் மகிழ்வாய்,அவனோடு பேசிய படியே இருந்தாள்.

இடையில் அலைபேசி வாயிலாக பாக்கியம், கலை என அவர்களோடும் பாசத்தை வளர்க்கவும் தவறவில்லை அவள்.

செல்வா வாய் வழியே அவன் அண்ணன் வீரவேலின் வீர சாகசங்களையும் அவன் ஏஜென்டிடம் தொலைத்த இரண்டு லட்ச ரூபாய் பணத்தை பற்றியும் சொல்ல "ஏன்டா உங்க அண்ணே இவ்வளவு பண்றாருன்கிற? ஆனா பணத்தை மட்டும் எப்படி போய் தொலைச்சார்?" குரலில் சுவாரசியம் கூடியது தங்கத்திற்கு.

"அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணி. அண்ணனுக்கு சிங்கப்பூர் போனும் ஒரே ஆசை,அங்கின விசா கொடுப்பாகன்னு ஊர்ல ஒருத்தர் சொல்ல, அங்கின கொண்டு போய் காச கொடுக்க, அவேன் ஏமாத்திட்டு போயிட்டான்.அண்ணி நீங்க போலீஸ் தானே அத மீட்டு கொடுங்களேன்"என்றான்.


"அதை என்னனு பின்ன பாக்குறேன்டா.உங்க அப்பா எதுவும் சொல்லலையா? உங்க அண்ணனை?"



"ஏன் இதனால தானே அப்பாவுக்கும் அண்ணனுக்கு எப்பவும் சண்டை ."

"அச்சோ அப்புறம்?"

"அப்புறம் என்ன அம்மா ரெண்டு பேருக்கும் நடுவுல நின்னு சமாதானப்படுத்துவாங்க. இல்லையா ஓ.. ன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ண தொடங்கும் போதே,அப்பா துண்ட உதறி போட்டு வெளில போய்டுவாரா, அண்ணே உடனே, இந்த கிளம்பிட்டாருப்பா நாட்டாமை,இதுவே எங்க மாமா சொத்து நீயும் வீட்டோட மாப்பிள்ளையா வந்தன்னு! அப்பா வெளிய போனதுக்கப்புறம் சொல்லி அம்மா கிட்ட அடி வாங்குவாங்க" சொல்லி சிரித்தவனின்‌ புன்னகை அவளையும் தொற்றி கொண்டது.

அவள் சிரிப்பை பார்த்த செல்வா சிரித்துக் கொண்டே "அது மட்டும் இல்லை அண்ணி. இப்ப அண்ணன் டெஸ்ட் அடிக்க ஊருக்கு போயிருக்கா?!இங்கின வீட்ல எப்ப கருவாட்டு குழம்பு வச்சாலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்துடும்.உங்களால தான் என் மகன் போயிட்டான்னு அம்மா திட்டுவாங்க. இந்த கருவாட்டு குழம்புக்கு தான் இந்த பேச்சான்னு அப்பாவும் திட்டுவாங்க. அண்ணன் அந்த சமயத்துல போன் செஞ்சு வேணும்னே அம்மா நான் இங்கே அவ்வளவு கஷ்டப்படுகிறேன், சாப்பிடல அப்படி ஏதாவது சொன்னா அப்பாக்கு விழும் பாருங்க திட்டு?! அவ்ளோ தான்! " சொல்லி முடித்திருந்தான்.

ஏனோ முகம் தெரியாத வீராவை காண அவளுக்கு சுவாரசியம் கூடியது.அந்த குடும்பத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவன் அவன் தான் என்ற எண்ணம் மேலோங்கியது.ஏதோ ஓர் விதத்தில் அவன் குணம் அவளுக்கு பிடித்தும் போனது.

"உங்க அண்ணன் இந்த கல்யாணத்துக்கு வரேன்னு சொன்னாங்களா?" ஆர்வமாய் செல்வாவிடம் கேட்டாள்.
"அது தெரியலயே?! அண்ணனுக்கு மாமா எங்க கூட வந்து பேசுனதே தெரியாதே!"

"என்னடா சொல்ற? உங்க அண்ணாவுக்கு எங்க கூட பேசினது தெரியாதா?ஏன்? எங்கள அவருக்கு பிடிக்காதா? "

"அப்படின்னு சொல்ல முடியாது சில சமயம் மாமா செஞ்சது தான் சரின்னு சொல்லுவாரு. சில சமயம் தாத்தா ஆச்சியல்லாம் விட்டுட்டு போனதுக்கு அண்ணா, அம்மாவை திட்ட செய்வாங்க. என்ன இருந்தாலும் இங்க இருந்து மாமா அவங்கள பார்த்துருக்கணும் அப்படின்னு சொல்லுவாரு, கூடவே எங்க அப்பாரு இல்லைனா உன் பொழப்பு அம்புட்டுத்தேன் பாக்கியம்மா சொல்லுவாரு"

"ஓ... அதனால தான் அத்தை எதுவும் சொல்லலையா?"


"இல்ல அம்மா சொல்றேன்னு சொன்னாங்க! அப்பாதேன் அவன் கிடக்கிறான் எதுனா நொணநாட்டியம் பேசிட்டு கிடப்பான். நீ எதுவும் சொல்ல வேணாம்.அவேன் இங்கின வரட்டும் பின்ன சொல்லிக்கலாம்.எங்க சுத்தினாலும் செக்குமாடு வீட்டுக்கு தானே வரணும். அப்ப தெரிஞ்சுகிட்டா போதும்ன்னு சொல்லிட்டார்."

"ஓ... "என்ற குரலில் அவனைக் காண வேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கி நிற்க," இங்க வந்தா உங்க அண்ணனை பார்க்கலாம்னு நினைச்சேன் வரலையா பரவால்ல ஒரு நாள் உங்க வீட்டிலேயே வந்து பார்த்துக்கிறேன்"என்றாள் புன்னகையுடன்.


"ஆமா அண்ணி எங்க அண்ணன் பாக்கவும் ரொம்ப அழகா இருப்பாக! நானு கலை அக்கால்லாம் கருப்பு.ஆனா அண்ணே உங்க அப்பா மாதிரி நல்லா வெள்ளையா இருப்பாங்க."

"ஓ... அப்ப நான் எங்க அப்பா மாதிரி இல்லையா டா?"

அவளைக் கீழிருந்து மேல் வரை பார்த்தவன்" இல்லையே?!நீங்க போட்டோல இருக்க உங்க அம்மா மாதிரி இல்லை சில சமயம் எங்க ஆச்சியாட்டம் தான் இருக்கீங்க.எங்க மாமா எவ்வளவு வெள்ளையா இருக்காங்க! ஆனா நீங்க எங்கள மாதிரி கருப்பாத்தேன் இருக்கீங்க"

"அடப்பாவி நான் கருப்புனு என்கிட்டயே தைரியமா வேற சொல்லுவியா?" என செல்வாவை அடிக்க துரத்த அவனும் அவள் கைகளுக்கு சிக்காது ஓடினான். இதனை கண்ட கனகவேலுக்கு சிரிப்பு வர, மகளின் சிறு பருவ மகிழ்ச்சி மீண்டதொரு எண்ணம் தான் அவருக்கும்!!!..
 
ORS:5

திருமணத்திற்கு இன்னும் மூன்று நாள் இருக்கையில் பாக்கியம் குடும்பம் மற்றும் அவர்கள் ஊரினை சார்ந்தவர்கள் அனைவரும் கனகவேல் வீட்டிற்கு வருகை தர அந்த இல்லமே திருமணக்கோலம் பூண்டது.

தங்கமயிலை பார்த்ததுமே விழிகள் கலங்கி அணைத்து கொண்டார் பாக்கியம்.

"யாத்தி. நல்லா ராணியாட்டம் இருக்கிறத்தா "என்றவருக்கு, இவள் தான் வீராவிற்கு ஏற்ற பொருத்தமான ஜோடி என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை. அதனை அப்படியே அவரது விழிகளும் பிரதிபலிக்க அதனை கண்ட அண்ணாமலை முறைத்துக் கொண்டு 'வா வாசல்லேயே எல்லாத்தையும் பேசுவியா?' கோபத்துடன் மனைவியை உள்ளே இழுத்துச் சென்றார்.

"ஏண்டி அந்த பிள்ளை அப்படி பார்த்து வைக்கிற?"

"நீங்க கோபப்பட்டாலும் எனக்கு மனசு கேட்கலை!! தங்கம் அப்படியே எங்க ஆத்தா மாதிரி இருக்குங்க உசரத்திலையும் சரி, அழகுலயும் சரி,நம்ம வீராக்கு ஏத்த பொருத்தமான ஜோடிங்க.நான் வேணா எங்க அண்ணே கிட்ட பேசி பார்க்கவா? நான் கேட்டா எங்க அண்ணே முடியாதுன்னு சொல்லாது"

"அடியே கூறுகெட்ட சிறுக்கி. நம்ம வந்துருக்கறது அந்த புள்ள கல்யாணத்துக்கு அதை போய் மருமகளா கேப்பியா?உன்ன கொல்ல போறேன் பாரு. உன் மகன் இருக்க அழகுக்கு அந்த பிள்ளை வேணுமாக்கும்?பேசாம உள்ள போயிரு சொல்லிட்டேன்" எச்சரித்து விட்டு உள்ளே சென்றார்.

இருந்தும் பாக்கியத்தின் ஆழ் மனதிற்கு அந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றுவதை தடுக்க முடியவில்லை!!'

அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் பாக்கியம் பம்பரமாய் சுழன்று வேலையை பார்த்து கொண்டிருக்க, கலை அலைபேசியை கொண்டு வந்து கையில் திணித்தவள் "மா அண்ணே பேசுது" என்றாள்.

"என்னடி எப்போவும் நம்ம பேசுனா கூட வச்சிட்டு போறவன், இப்ப இந்த நேரத்துக்கு கூப்பிட்டு இருக்கான் என்னனு கேளுடி?"

அன்னையின் பேச்சில் அழைப்பை அழைப்பை ஏற்றிருந்தாள் கலை.
"அண்ணே"
"கலை எங்க போனீங்க எல்லாரும்? வீட்டை அப்படியே விட்டுட்டு? இத்தனை நேரம் போன் பண்ணிட்டு இருக்கேன்? எடுக்க உங்களுக்கு இம்புட்டு நேரம் தேவைப்படுது? ஆமா?! என்ன ஒருத்தரும் வீட்ல இல்ல? சரி அங்க ஒருத்தன் இருக்கானே? என்ன பண்ணுவான்? ஏது பண்ணுவான்னு யாருக்கும் அக்கறை இல்ல?எங்க நம்ம குடியிருந்த கோவில்?"

"இந்தா இருக்குண்ணே.. இரு கொடுக்கிறேன்" என்றவள், 'அம்மா அண்ணே வீட்டுக்கு வந்துட்டாம்" ரகசியமாய் அலைபேசியை கையால் பொத்திக்கொண்டு சொன்னாள்.

"ஏதேய் இன்னும் பத்து நாள் ஆவுமுன்னு சொன்னான்?! என்னத்துக்கு டி இப்போ வந்தான்?!" அதிர்ந்தாலும், அலைபேசியை வாங்கியதும் குரலை செருமி "ய்யயா ராசா சாப்டியா?" உருகி பேச, வந்த சிரிப்பை அடக்கினாள் கலை.

"மா உன் சரோஜா தேவி ஆக்ட்டிங்க என்கிட்ட போடாத, அதெல்லாம் உன் ஊட்டுக்கார் நம்புவார். என்கிட்ட படம் ஓட்டாத" என்றவன், "என்ன ஒரே சத்தமா இருக்கு எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க" பொறுமை பறந்தது வீராவுக்கு.

"ஒரு கல்யாணம் தம்பி! அதான் நாங்க மதுரை வரைக்கும் வந்து இருக்கோம்".

"என்ன மதுரையா?மதுரைல யாரும் நமக்கு உறவுக்காரர் இல்லையே?அதுவும் இப்படி குடும்பத்தோட வீட்டையே காலி பண்ணிட்டு போற அளவுக்கு யாரு அந்த முக்கியமானவுக?"

" அது வந்து, எல்லாம் எங்க அண்ணேன்தேன். நீ அங்கின ஊருக்கு போனதுக்கு அப்புறம் வந்தாக, அவுக பொண்ணுக்கு கல்யாணமாம்!அதேன் வந்து நடத்தி கொடுக்கனும் கேட்டாக"

"அதுனால எல்லோரும் வீட்டை காலி பண்ணி போய்ட்டீங்களோ?"

"இல்லை... இல்லை..." அவசரமாய் பதில் சொன்னார் பாக்கியம்.

"சும்மா இருமா எதாவது சொல்லிட போறேன்"என்றான் கடுப்பாய்.

"ராசா எதுக்கு இவ்ளோ கோவம்?"

"கறி சோறு போடுறாங்கன்னு எல்லாரும் அங்க போயிட்டு பேச்சை பாரேன்?!உங்கள இத்தனை நாள் அந்த ஆளுக்கு கண்ணு தெரியலையாமா? பெத்த அம்மா அப்பாவை விட்டுட்டு யாரோ பின்னாடி ஓட தெரிஞ்சவருக்கு? இப்பதான் தங்கச்சி பாசம் பெருகிட்டு அடிக்குது?இதுக்கு நீங்க எல்லாம் தேவையில்லாம போய் உட்கார்ந்து கிடக்கிறிங்க. சரி எங்க அந்த ரோசக்காரரு?! உன் புருஷன் ?!நான் எதுனா சொன்னா மட்டும் வந்து சண்டைக்கு நிப்பாரு? இப்போ மச்சான் கூப்பிட்ட உடனே குடுகுடுன்னு ஓடிட்டாரா?".


"தம்பி என்னையா இப்படி பேசுற? என்ன இருந்தாலும் உறவு விட்டு போய்டுமாயா?" அன்னையின் குரல் கலங்கிவிட,அனைத்தையும் சொல்லி கலை அண்ணாமலையை அழைத்து வந்து விட்டாள்.

அங்கே வந்தவர் மனைவியின் முகம் பார்த்து, "என்னடி என்னவாம் உன் மவனுக்கு?" அலைபேசியை வாங்கியவர்,"என்னடா? என்ன சொன்ன அவளை?" என்றார்.

"சொல்றாக சொரக்காய்க்கு உப்பில்லன்னு, நீ என்னத்துக்கு அங்க போன?"


"அடேய் ஏன் இப்பிடி பேசுற யார் காதிலையும் விழுந்திட போகுது?"

"விழுந்தா எனக்கென்ன?நான் இங்க அப்பன் ஆத்தாவை பாக்கணும்னு கிளம்பி வந்தா குடும்பமே அங்க போய் உட்கார்ந்து இருக்கீங்க,இப்ப நான் எங்க போறது? கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா உமக்கு?" கடிய தொடங்கிவிட்டான்.


"சொல்ல வந்துட்டான் பொறுப்ப பத்தி?உன் ஆத்தா கண் கலங்கிட்டு கிடக்கா?பேசாம கிளம்பி இங்க வாடா ! ரொம்ப ரோஷக்காரந்தேன் நீயி எனக்கு தெரியும். நான் சொல்லிட்டேன் பேசாம கிளம்பி வந்து சேரு"

"நான் ஏன் வரேன்? நான் எல்லாம் அங்கன வரமாட்டேன்"

"சரி போனை சுப்பிரமணிகிட்ட கொடு"என்றார் அண்ணாமலை.

அவன் கையில் கொடுத்து வீரா நகர "மாப்ள நாங்க மதுரைக்கு உங்க பெரியப்பன் மவ கல்யாணத்துக்கு வந்திருக்கிறோம் நீ இங்க வந்துட்டு போ" உத்தரவில், ஆச்சரியமாயனது சுப்ரமணிக்கு.

"என்ன மாமா சொல்றீங்க இது எப்ப நடந்துச்சு? "என்றான் ஆர்வமாய்.

வீரா சுப்பிரமணியை முறைக்க,"அவரு திடீர்னு தான் வந்தாருயா! பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கோம், வந்து நின்னு பண்ணிக்கொடுக்கணும் கேக்கும் போது?!கூட பொறந்தவ மனசு என்ன பாடுபடும் சொல்லுயா?! அது புரியாம இவன் இப்போ இந்த பேச்சு பேசுறான்.அவனையும் நீ இங்க கூட்டிட்டு வா பின்ன அதெல்லாம் இங்கின பேசிக்கலாம். ஊர் வரைக்கும் வந்தவங்க இங்குட்டு வந்துட்டு போறதுக்கு என்ன?"என கூறும் போதே, கனகவேல் வந்து அண்ணாமலையிடம் ஃபோனை வாங்கி "நான் கனகவேல் பேசுறேன் " என, முழித்தான் அவன்.

"நான் சுப்பிரமணி பேசுறேன்..நல்லா இருக்கீங்களா?" சமாளித்து பேசிவிட, வீரா செய்கையால் யார் என்றான்.
'உன் மாமா' என சொல்ல,"ம்ம்க்கும் "என்றவன் வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

"தம்பி" என்றார் மீண்டும்.

"பெரியப்பா" இப்பொழுது உரிமையுடனே அழைத்தான் சுப்ரமணி.

"தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு போயா,எங்க மாப்பிள்ளை கிட்ட கொடு" என்றதும் அவன் வீரா கையில் போனை திணித்தான்.

"ஹலோ.." வேண்டாவெறுப்பாய் பதில் வர,
"மாப்பிள்ளை நான் மாமா பேசுறேன். நான் பின்ன வந்து என் அப்பா அம்மையை பாத்துருக்கணும்ந்தேன்.நான் செஞ்சது தப்புதான் என்னை மன்னிச்சிரு, உன் தாத்தா என்னை அடிச்ச கோவத்துல அப்படியே இருந்துட்டேன். இப்போ வயசான பின்ன அந்த கோவ எல்லாம்" என நீண்ட மூச்சினை விட்டவர், "நீர் வந்து என் பொண்ணு கல்யாணத்தை முடிச்சிட்டு சந்தோஷமா போகணும். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் என் தங்கச்சி கூட இப்பதான் எனக்கு பேச சந்தர்ப்பம் கிடச்சுருக்கு, அது சொன்னுச்சு என் மேல உனக்கு ரொம்ப கோவமுன்னு!? நான் செஞ்சது தப்புதான்யா. நீ என்னை மன்னிக்க கூடாதா " வயதில் பெரியவர் தனக்காக இறங்கி பேச, அவர் கலங்கிய குரலைக் கேட்டதும் அவனையும் மீறி "பரவாயில்ல" என்றவன் "வரோம்" என வைத்து விட்டு வீட்டு வாயிலில் அமர்ந்து விட்டான்.

"என்னடா வரோம்ன்னு இப்படி உக்காந்துட்ட?"

"பின்ன? அவர் பேசும் போது எனக்கு முடியாதுன்னு சொல்ல முடியல. அதான் வரேன்னு சொல்லிட்டு வச்சுட்டேன் அதுக்காக எல்லாம் அங்க போக முடியுமா?"

"அப்போ போவவேணாமா?"

"என்னத்துக்கு போவணும், அதேன் எல்லாம் அங்க உக்காந்துருக்காகளே? பின்ன நம்ம எதுக்கு? போறோம் ரெண்டு கட்டிங் வாங்கறோம் குடிக்கிறோம் கம்முனு படுக்கிறோம்"

"உன் சூர்யாகந்தி தோட்டம் எல்லாம் அதோகதி தானா?"

"ஏன் அதுக்கென்ன?"

"பின்ன அது அவருக்கு சொந்தமானது தானே! "எனும்போது மீண்டும் அலை பேசி அடிக்க," என்னடா புது நம்பரில் இருந்து வருது?! "


"தெரியல, நமக்கு என்ன சிங்கப்பூர் பிரதமரா கூப்பிட போறாரு,அட்டென்ட் பண்ணி யாருன்னு பார்ப்போம்" சுப்ரமணி அழைப்பை ஏற்றிருந்தான்.


"அண்ணே!" என்று செல்வாவின் குரலில் அலைபேசியை வாங்கிய வீரா, "இவனுக்கு யாரு போன் எல்லாம் கொடுத்தது?! டேய் செல்வா உனக்கு ஏதுடா ஃபோனு? எங்கிருந்துடா பேசுற?"விசாரிக்க, "இது அண்ணி நம்பர்ணே"என்றான் அவன்.


"ஏதேய் அண்ணியா? என்னடா சொல்ற?"

"அது கனகவேல் மாமா பொண்ணுண்ணே. அவுக எனக்கு அண்ணி முறை தானே?!"

"ஓ... சரிதான்...சொல்லுடா"

"என்ன அண்ணே நீங்க கல்யாணத்துக்கு வரமாட்டேன் சொல்லிட்டீங்களாம்?!"


"ஆமா அதுக்கென்ன இப்போ?"

"என்ன அண்ணே பிரியாணி கறிக்கோலா,சுக்கானு இம்புட்டும் உனக்கு புடிச்ச ஐட்டமா போடுறாங்களே, உனக்கு புடிக்கும்னு வேற நான் சொல்லி இருக்கேன் போண்ணே"


"ஏதேய் நீ மெனு சொல்ற அளவுக்கு உன் மாமன் வீட்டோட நெருங்கிட்டியாக்கும்?!"

"ஆமா அண்ணே நான் வந்து ஒரு வாரம் ஆவுதுல, இங்கின மாமாவுக்கு ஒத்தாசையா இருக்குனன்னு அம்மா தான் பஸ் ஏத்தி விட்டுச்சு."


"ஓ... குடியிருந்த கோவிலா?!செஞ்சு இருக்கும் நேர்ல இங்க வரட்டும் பேசிக்கிறேன்"என்றவன், "உன்ன நெனைச்சா நெம்ப பெருமையா இருக்கு டா" என்றான்.


" அண்ணே? "

"சரி விடு உண்மையிலேயே அதுதான் மெனுவா? இல்ல நீ சும்மாங்காட்டி சொல்றியா?" வீரா சிரித்தபடி கேட்டான்.

" அண்ணே உண்மையைத்தானே சொல்றேன்"

"ம்ம்ம்... அப்போ ரைட்டு விடு நான் வரேன்"

"சரிண்ணே சீக்கிரம் வா" உடன்பிறந்தவர்களின் சம்பாஷனையை கேட்ட தங்கமயில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

"என்ன மச்சான் சோத்துக்கு செத்த மாதிரி சரின்னு சொல்லிட்ட?!" சுப்ரமணி புன்னகையை அடக்கி கொண்டான்.

" அட விடுடா?! ஆயிரம் இருந்தாலும் யாரு?! நம்ம மாமந்தானே?! வா.. போய் கல்யாணத்துல பந்தியை சிறப்பிச்சிட்டு வருவோம் கிளம்பு "என தந்தையை போலவே துண்டை உதறி போட்டு கொண்டு அவனுக்கு முன்னால் செல்லும் வீராவை,' இவன் என்ன கேட்டகிரி?' என்பது போல் பார்த்திருந்தான் சுப்பிரமணி.
*********************
"ஏன்டா நேரம் என்ன இருக்கும்?"கேட்டு கொண்டே மதுரையில் இறங்கினான் வீரா.

"அது இருக்கும் ஒரு பத்து பதினோன்னு, ஏன்?"

"சரித்தேன், இம்புட்டு சீக்கிரம் அந்த கல்யாணத்துக்கு போய் நம்ம என்ன பண்ண போறோம் வாயேன் ஒரு கட்டிங்கை போடுவோம்"

"டேய் வீரா நம்ம கல்யாணதுக்கு வந்திருக்கோம் டா".

"ஆமா கல்யாணத்துக்கு தான் வந்திருக்கோம்.ஆனா நமக்கு கல்யாணம் இல்லையே,நீ வாடா போய் ஒரு கட்டிங் போட்டுட்டு அப்படியே போய் கறி குழம்பு ஊத்தி சாப்பிட்டு நாளைக்கு காலைலயே பஸ் ஏறி விடுவோம் "

"அப்படிங்கற?"

"ம்ம்ம்.. ஆமாங்கறேன் "

"சரிவா" என இருவரும் முடிந்த அளவு குடித்துவிட்டு, மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

" மச்சான் இப்ப மணி எத்தனை இருக்கும்" என்றான் சுப்பிரமணி. அவனுக்கு நேரத்தோடு சென்று கலை கண்ணில் இந்த நிலையில் பட்டு விட கூடாது என்பதே பெருத்த கவலை.

"இருடா" என வாட்ச்சை பார்த்தவன் "என்ன மச்சான் ரெண்டு முள்ளும் கசமுசா பண்ணிட்டு இருக்கு "என்றான் வீரா.

"என்ன டா உளறிட்டு இருக்க" என கேட்டவன், "மச்சான் உனக்கு அதிகமாயிடுச்சு" என தள்ளாட, "நான் போதையில் இருந்தாலும் தெளிவா இருக்கேன்.நீ வேணா பாரு" என கடிகாரத்தை காண்பிக்க அது நேரத்தில் பன்னிரண்டு என காட்டியது.

" அட ஆமா மச்சான் ரெண்டு முள்ளையும் பாரேன். இத்தனை வருஷம் வாட்ச் கட்டுறேன் இது எனக்கு தெரியல மச்சான், நீ பெரிய ஜிடி நாயுடு யோவ்".

" என்னை இப்படி புகழாதயா மச்சான்" என்றவன் மீண்டும் கடிகாரத்தை பார்த்து "பாரேன் இதுங்களுக்கு கூட நாளுக்கு ரெண்டு தடவ கசமுசா தேவைபடுது" என கூறிய படி "போனை போடு டா"என்றான் வீரா.


"யாருக்கு?"

"உன் மாமானுக்குதேன்"


"யாரு உன் அப்பாவுக்கா? "

"ம்ம்ம்...அவருக்குத்தேன்"

"ஏன்?"

"அடேய் கல்யாணம் எங்கனு தெரியாம எங்க போய் முட்டி நிக்கிறது "என கூறியபின் அவனே சற்று நேரம் கழித்து" வேணா வேணா அந்த ஆள் இந்த நேரம் நம்ம குரலை கேட்டா தண்ணி அடிச்சது கண்டுபிடிச்சு பெல்ட் எடுத்துவாரு.என் உடன்பிறப்பு இருக்கான் பாரு.அவனுக்கு போன் போடு அவந்தேன் கரெக்டா வழி சொல்லுவேன்" என ஏற்கனவே செல்வா அழைத்த எண்ணிற்கு திருப்பி அழைத்தான் வீரா.



ஏனோ தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் விழிகளுக்குள் சந்தோஷே நின்றிருந்தான். அன்று மாலை வரவேற்பில் நிற்கும் போது அவன் முகமும், பதட்டமும் அவளுக்கு சரியாய் படவில்லை. உள்ளுக்குள் ஏதோ ஒன்று நடக்க போவதாய் அறிவுறுத்த, நாளை விடியல் தனக்கு என்ன வைத்திருக்கிறதோ என எண்ணிய படி படுத்திருக்க, அப்போது அவளின் அலைபேசி அழைக்க, யாரென பார்த்தாள்.வீராவின் எண் என்றதும் அதனை ஏற்ற,தங்கமயில் "ஹலோ' என்றாள்.

'என்னடா செல்வா பொம்பள குரல்ல பேசுற"

" ஹலோ" என மீண்டும் தங்கமயில் குரல் கொடுக்க, அதை கவனிக்கும் நிலையில் இல்லை அவன்.

' ஏன்டா தொண்ட சரியில்லையா?. சுடுதண்ணி குடி,சரி சரி கல்யாணத்துக்கு வரணும் அட்ரஸ் கரெக்ட்டா சொல்லு "என கூறவும் அவள் வழியை சரியாக சொல்ல, "சரி சரி" என வைத்து விடவும், அவன் குரலை வைத்து அவன் குடித்திருக்கிறான் என உணர்ந்தவள் "என்ன மனுஷன் இவன், ஒரு கல்யாணத்துக்கு போறோம் அந்த எண்ணம் கூட இல்லாம குடிச்சிட்டு வந்துட்டு இருக்கான்" என எண்ணிக்கொண்டே அவன் நினைப்பிலேயே தூங்கிப் போனாள்.

கல்யாண மண்டபம் உள்ள சாலையில் நுழைய, அங்கே வரிசையாக இரண்டு மூன்று திருமண மண்டபங்கள் இருக்க, அங்கங்கே அதன் வழியில் வெளிச்சங்கள் கண்களை கூசிக் கொண்டு வந்தது வீராவிற்கு.

"என்னத்துக்கு டா மச்சான் இப்படி வெளிச்சத்தை போட்டு கொல்றாய்ங்க? கண்ணெல்லாம் வலிக்குது" என கண்களை மூடித் திறந்தவன், யாரோ மறைவாய் ஓர் இடத்தில் நின்றிருப்பதை பார்த்தான்.

"ஏன் மச்சான் இந்த வெளிச்சத்திலயும் பேய் வரும்? "கேட்டு கொண்டே அருகில் செல்ல ஓரத்தில் நின்ற பெண்ணை கண்டு, "டேய் இது பொண்ணு டா" என்றான் சுப்பிரமணி.


"அப்படியா? "என கேட்டவன், அவள் கால்களை பார்த்து விட்டு "ஆமா! சரி வா நாம இந்த பக்கம் போவோம்" மறுபக்கம் இழுத்தான்.

"நண்பா என்னன்னு கேளு?"

"அது எதுக்காச்சும் நிக்கும் அதெல்லாம் ஏன் நம்ம கேட்டுகிட்டு?"

"ஏன்யா மச்சான் நீ ஒரு பெண்கள் படை காவலன் இல்லையா?"

"ஏதேய் யாரு நானு?"

"பின்ன இல்லையா?எனக்கு நீ அப்படி தான்யா "

"ஓ..சரி சரி நான் தான் நான் தான்" என்றவன்" இப்போ என்ன செய்யணுங்குற?"

"அதுகிட்ட போய் என்ன ஏதுன்னு கேட்போம்யா"

"அப்படிங்கிற" வீரா வேகமாய் அந்த பெண்ணிடம் விரைந்தவன் அவளின் தேம்பல் குரலில் நின்றுவிட்டான்.

"அடேய் மச்சான் அது அழுவுதுயா நம்ம போவலாம் வா, எதுக்கு பிரச்சனை?"


"யோவ் நீ ஒரு பெண்கள் குல காவலன்" சுப்புனி நகரவிடவில்லை.

"இதான்யா உன்கிட்ட?! சரி கேட்போம்.. இந்தாம்மா.. ஏய் பொண்ணு? எதுக்குத்தா அழுவுற?"


அவளோ இவர்களை கண்டு பயந்து நகர",இது எனக்கு தேவையா?" என்பது போல் சுப்பிரமணியை பார்த்தான்.

"மச்சான் என்னன்னு கேளுயா? ஒரு பொம்பள புள்ள நடு ராத்திரி பதினோரு மணிக்கு நின்னு அழுவுது, நீ என்னமோ போவோம் போவோம்ன்னு?"

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் "என்னமா எதுக்கு இப்படி பேய் உலவுற நேரத்தில அழுவுற?"என கேட்டான்.


அவளோ இன்னும் பயந்து போய் "இல்லை ஒண்ணுமில்ல" என அழுது கொண்டே நகர,

"அட என்னமா உன் வயசுல எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா, நான் உன்ன எதுவும் பண்ண மாட்டேன். ஏதோ என் துக்கத்துல கொஞ்சம் குடிச்சிட்டேன், நீ சொல்லு எதுக்கு அழுவுற? வந்த வழி மறந்துடுச்சா? என் கிட்ட சொல்லுத்தா கொண்டு போய் விடுறோம்"

"அவன் எல்லா பிரச்சனையும் சரி பண்ணுவான் சொல்லுமா? " சுப்பிரமணி ஏற்றிவிட,'யாரு நானா 'என்பது போல் திரும்பி பார்த்த வீரா 'சொல்லுமா என்ன பிரச்சனை?" என்றான் அவளிடம் மீண்டும்.

"அண்ணே நான் காதலிச்ச பையனுக்கு நாளைக்கு கல்யாணம்ணே"


"சரி அதுக்கு மொய் வைக்க காசில்லை யா?"

"அச்சோ அண்ணே அதில்ல"

"பின்ன!"

"என்னை காதலிச்ச பையனுக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லை. அவர வற்புறுத்தி கல்யாணம் பண்ண சொல்லிட்டாங்க "

"அப்படியா சரி விடு சனியன் தொலைஞ்சான்னு! அடுத்தது யாராச்சும் கிடைச்சாலும் பார்த்து கட்டு,இல்லனா நான் உனக்கு ஐடியா சொல்றேன் கேளு, யாராவது ஒரு டீச்சர் பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்க"

"இந்தா கிளம்பிட்டாண்டா ஊருக்கே டீச்சர் டீச்சர்ன்னு சொல்லிக்கிட்டு,கொஞ்சம் இவன யாராச்சும் சொல்லி நிறுத்துங்க டா.இல்லையா டீச்சர் புள்ளயா பார்த்து கட்டி வச்சு தொலைங்க டா" புலம்பினான் சுப்னி.

"மச்சான் போற போக்குல அட்வைஸ் பண்ணலாம் தப்பு கிடையாது.. சரி நீ கிளம்புத்தா.."

"இல்ல அண்ணே என்னால முடியாது"

" ஏன்மா? "

"எனக்கு இப்ப மூணு மாசம்" தேம்பி கொண்டே சொன்னவளை கண்டு இருவரும் அதிர்ந்தனர்.

"இரண்டு அடி பின்னால் நடந்தவன் யம்மா தண்ணி வச்சிருக்கியா?"

"ம்ம்ம் "என்றவள் தண்ணியை எடுத்துக் கொடுத்தாள்.

"என்னமா தண்ணி சாப்பாடு எல்லாம் கட்டிட்டு வந்துத்தேன் அழுதுட்டு இருக்கியா?"


"இல்லைண்ணே "

அவள் கொடுத்த தண்ணீரில் மூஞ்சியை கழுவிக்கொண்டு எழுந்தவன் "இப்போ மறுக்கா சொல்லு என்ன பிரச்சனை?"என்றான்.

"மச்சான் ஃபார்ம்க்கு வந்துட்ட போல" சுப்புனி உற்சாகமாக, கடுப்பாகியது வீராவிற்கு.

"உன்ன கொல்ல போறேன் யோவ், பேசாம மூடிட்டு நில்லு "என கூறி அவளை பார்த்து," சரி சொல்லு உன் பேர் என்ன? "என்றான்.

" ரேவதி "

"எனக்கு ரேவதின்னா ரொம்ப பிடிக்கும் மச்சான்"


"ஏதேய்!!" சுப்னியின் அலம்பலில் பொறுமை பறந்தது வீராவிற்கு.

"இல்ல மச்சான் நடிகை ரேவதியை சொன்னேன்"

"உன்ன"என முறைத்து விட்டு, "சரி இப்ப சொல்லுமா? என்ன பிரச்சனை?"

"அண்ணே நானும் அவரும் ஒரே கம்பெனில தானே வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட ஆறு மாசம் லவ் பண்ணிட்டு இருந்தோம். சரினு ஒரு நாள்.." தொடங்கியவளை இடைமறித்தான் வீரா.

" சரி விடு அதெல்லாம் சென்சார் போட்டு கட் பண்ணிடுவோம் மேட்டர சொல்லு"

"நாளைக்கு அவருக்கு கல்யாணம்"

"சரி இங்கின மொத்தம் மூணு மண்டபம் இருக்கு. இதுல எதுன்னு சொல்லு, தூக்கிடுவோம்".

"இல்லை அண்ணே! அவரை வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கன்னு அவர்தான் இங்கே வர சொன்னாரு. நம்ம ரெண்டு பேரும் இங்கிருந்து ஓடி போயிரலாம் சொன்னாரு".

"அவனே வர சொன்னானா?மணி ஒன்னு ஆவுது இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் வரல" இருட்டுக்குள் தேட, வீராவின் கண்ணிற்கு யாரும் படவில்லை.

" மச்சான் அந்த பக்கம் ஒருத்தன் வரான் யா."

"அப்படியா?"

"அண்ணே அவரு தான் "


"ஓ... "எனும் போதே," ரேவா "என ஓடி வந்து கட்டி அணைத்து கொண்டான் புதியவன்.

"அடேய் அங்கிட்டு போய் கட்டி கிட்டி புடிங்கடா" வீராவின் அதட்டலில் அவசரமாய் இருவரும் பிரிந்து நின்றனர்.

"ரேவா யாரு இவங்க?" வந்தவன் புரியாமல் பார்த்தான்.

"நீங்க வரும் வரைக்கும் எனக்கு பயமா இருந்துச்சு இந்த ரெண்டு அண்ணனும் தான். என்னை பத்திரமா பார்த்துகிட்டாங்க "

"அப்படியா ரொம்ப நன்றிங்க "என கூறி விட்டு, "சரி வா நம்ம போவோம் என் அப்பா அது கூட இல்லை என் மாமா அவரை கூட விட்டுரு, பொண்ணு வீட்டு பக்கம் ஒருத்தர் மாமான்னு வந்திருக்காரு பாரு, அந்த ஆளு நொய் நொய்னு எதுனா சொல்லிக்கிட்டு, ஷப்பா முடியல. எல்லாரையும் ஏமாத்தி நான் வராதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு"

வீரா ஏதோ யோசனையில் நிற்க, "யோவ் மச்சான் அவுக கிளம்பறாங்களாம்" சுப்ரமணி காதை கடித்தான்.

"ம்ம்ம்.. தங்கச்சி எதுலம்மா போறீங்க?"

"ஆட்டோல"

"ஏன் நடந்து போயேன்"

"மச்சான் நம்ம மாப்பிள குமாரு இங்கினதானே கார் ஓட்டுறான்."

"ஆமா யா."

"அவனுக்கு போனை போடு" என்றான் வீரா.

சுப்பிரமணி அவனுக்கு அழைத்து வர சொல்ல, அவனும் சிறு மணி துளிகளில் வந்தவன்" என்னயா இந்த நேரத்தில கூப்பியிருக்க?" அங்கிருந்த மண்டபம் ஒன்றில் இருந்து வெளியே வந்தான் வீராவின் மதுரை நண்பன்.

"மாப்பிள இது நம்ம தங்கச்சித்தேன், நீ அவுக சொல்ற இடத்தில பத்திரமா இறக்கி விடு.காசெல்லாம் வாங்காத சொல்லிட்டேன்" விஷயத்தை மேலோட்டமாக சொன்னான்.


"இல்லை சார் வேணாம் "என தொடங்கியவனை கண்டு,"இது தங்கச்சிகாக "என கூற"சார் நீங்க ஒரு ஜெம்" என அவனும் அணைத்து விடுவித்தான்.

"அதென்ன ஜெம்ஸ்னு மிட்டாய் பேர சொல்லிட்டு கிடக்கான்"என்றான் சுப்புனி ரகசியமாய்.

"இப்ப இது ரொம்ப முக்கியம்" நண்பனை பார்த்து வாயில் கை வைத்தவன், ரேவதியை கண்டு "பத்திரமா போத்தா, எப்போவும் உனக்கு ஒரு அண்ணே இருக்கான் மனசுல வச்சுக்கோ " பாசத்துடன் வழியனுப்ப, ரேவதிக்கு கண்கள் கலங்கியது.

"சரி" என தலையசைத்தவள் ஏறி அமர,அவள் பின்னால் வேகமாய் ஏற போன அவளது காதலனை தடுத்து நிறுத்திய சுப்புனி, "உன் பேர் என்னனு சொல்லவே இல்லயே நீ?" கேட்டான்.

"சந்தோஷ் அண்ணே" என காரில் அமர்ந்தான் அவன்!

அவர்கள் சென்றதும்," பேர் நல்லாத்தேன் இருக்கு.ஆனாலும் மச்சான்,நாளைக்கு இந்த பக்கம்மாப்பிள்ள இல்லாம ஏதோ ஒரு கல்யாணம் நிக்க போவுது அதேன்யா கொஞ்சம் சுணக்கமா இருக்கு"

"விடு யா மச்சான். அப்போ எவனாவது திடீரர் மாப்பிளையாவன் பாரு, யாருக்கு விதியோ?! "என சிரித்தவன் அறியவில்லை நாளை அவன் விதி தான் மறப்போகிறது என்பதை!!!
 
ORS:6

"அண்ணே!அண்ணே!! எழுந்திருண்ணே!!" பதற்றத்துடன் எழுப்பினான் செல்வா.

"ப்ச்...உன்ன பெத்தவரை கொண்டு போய் பள்ளிகூடத்துல விட சொல்றா!" திரும்பி படுத்து கொண்டான் வீரா.


"அண்ணே அதுகில்லண்ணே!! சீக்கிரம் எழுந்திரிண்ணே!" அவனோ அதற்கும் அசைவின்றி தூங்கி கொண்டிருக்க, அங்கு வந்த அண்ணாமலை சுப்பிரமணியிடம் "அவனை எழுப்பி விடுங்க மாப்பிள" என கூற, "சரி மாமா" என கூறியவன் கலையை காண, அவளோ அவனை கண்டு முறைத்து திரும்பி கொள்ள,"என்னமோ இவ அண்ணே உத்தமன் மாதிரியும்,நான் அவனை கெடுத்த மாதிரியும் லுக் விடறா பாரு" புலம்பியபடியே நண்பனை எழுப்பினான் அவன்.

"எதுக்குடா இப்ப இவ்வளவு அவசரமா எழுப்புறிங்க?இந்த வீட்ல நிம்மதியா கூட தூங்க முடியல!" முனங்கியவன்," கலை காப்பி கொடுத்தா.." கண்களை கைகளால் கசக்கியடியே எழுந்தமர்ந்தான்.

எதிரில் தெரிந்த தந்தையின் முகத்தை கண்டு," ஆமா இவரு எதுக்கு அங்கவஸ்திரத்தோட இங்க ஷோ காமிச்சுகிட்டு அலையுறாரு?" கண்களை தேய்த்தபடியே திரும்ப அனைவரும் விஷேஷத்திற்கான உடையில் கிளம்பி நின்று கொண்டிருப்பதை கண்டு தான் , அவன் திருமணத்திற்கு வந்திருப்பதே நினைவு வந்து தொலைத்தது வீராவிற்கு.

"சரி என்ன?! இப்போ எதுக்கு இப்படி அய்யனார் கணக்கா முறைச்சிட்டு இருக்கீங்க?எல்லாரும் போங்க நாங்க கிளம்பி வர்றோம்"

"அதானே!" எசை பாட்டு பாடினான் சுப்ரமணி.

"எல்லாரும் முதல்ல நவுருங்க! அவனுக்கு காத்து வராம அடைச்சுகிட்டு?!" என ஆவி பறக்க காபியோடு உள்ளே வந்தார் பாக்கியம்.

"ஆமா ரொம்ப வேலை வெட்டி முடிச்சிட்டு கிடக்காரு.இதுல இவுக விசிறி விட வாராக" மகனை முறைத்துவிட்டு ஜன்னல் பக்கம் நகர்ந்தார் அண்ணாமலை.

"யம்மோவ்!!என்னவாம் இப்போ இவருக்கு?!" அன்னையிடமிருந்து காபி குவளைகளை எடுத்தவன் நண்பனிடம் ஒன்றை திணித்து விட்டு," ஆமா!? ஆளுக்கு முன்னாடி கல்யாணத்துக்கு கிளம்பி வந்துட்டு எதுக்கு எல்லாரும் இங்க நிக்கிறிக?" ருசிக்க தொடங்கினான்.

"அது ஒண்ணுமில்ல அப்பு" பாக்கியம் தொடங்க,வீரா இதழ் அருகில் கொண்டு சென்ற கோப்பையை அப்படியே நிறுத்தினான்.

'என்னமோ பாக்கியம் அம்மா பிளான் பண்ணுது போலவே,ஆக்ட்டிங்க தொடங்கிட்டே!' அன்னையின் முகத்தை கூர்மையாய் பார்த்து வைக்க, வியர்த்தது அவருக்கு.

"என்னத்த ராசா அம்மாவை அப்படி பாக்குற?"

"இல்லை! என்னமோ பெரிசா சொல்ல போற?! ஆனா அது என்னனுதேன் அம்புட மாட்டேங்குது?!அதான் பாக்குறேன்"

"நான் சொன்னனேனில்லங்க?!என் மவன் புத்திசாலின்னு!! ராசா ஒன்ணமில்லயா?" மகனை திருஷ்டி எடுத்துவிட்டு சந்தோஷத்துடன் அருகில் நின்ற மகளிடம் திரும்பியவர்,"அடியே கலை என்னத்துக்கு மசமசனு நிக்கிற,போ அந்த பட்டு சட்டை வேஷ்டியை மாமாகிட்டயிருந்து சுருக்கா போய் வாங்கியா" பணித்தார்.

"ம்மா.. எனக்கு எதுக்கு பட்டு வேஷ்டி சட்டை?!" என கூறியவனும் அப்போது தான் பார்த்தான் அனைவரின் புது உடுப்பை.

"ஓ..உன் நொண்ணன் வாங்கி கொடுத்தத போட்டுகிட்டு சும்மா சிகு சிகுனு மின்னுறியா பாக்கியம்?அதுவும் உன் வீட்டுக்காரருக்கு அந்த அங்கவஸ்திரம் டாப் டக்கர் போ?" நக்கலில் இறங்கியவனை கண்டு மனதுக்குள் கிலியானாலும், வெளிக்காட்டவில்லை.
"யய்யா.. சத்த சும்மா இரு! அவர வேற கிளப்பி விட்டுட்டு?! நான் சொல்ல வாறதை கொஞ்சம் கேளேன் ராசா"

"என்னம்மா?"

"அது நீ கொஞ்சம் சீக்கிரம் குளிச்சிட்டு சுருக்கா மணமேடைக்கு வாயா!"

"ஏன்?ஏன்டா செல்வா நான் இல்லனா மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டாரா என்ன?"

"அச்சோ! என்ன அண்ணே?! நக்கலடிக்கற நேரமா இது?! அங்க வந்து அண்ணி கழுத்துல தாலி கட்டபோறதே நீதாண்ணே!" செல்வா கூற,காபி குடித்து கொண்டிருந்த சுப்பிரமணிக்கு புரை ஏறியது.


"ஏதேய் என்ன டா உளறிட்டு இருக்க?மா என்னமா இது?"அதிர்ச்சியானான் வீரா.

"நீ என்னத்துக்கு டா இப்படி பட்டுனு சொல்ற?நான் பொறுமையா சொல்லிருப்பேன்ல " சிறிய மகனை அதட்டிய மனைவியை ," அடியே எதுக்கு டி இப்போ அவனை அதட்ற?நீ உன் மவனை செல்லம் கொஞ்சி கூட்டிட்டு வர்றதுக்குள்ள நல்ல நேரம் எல்லாம் போய்டும்.டேய் உனக்கு இப்போ கல்யாணம்,கலை அந்த உடுப்ப அவங்கிட்ட கொடுத்தா" கடிந்து கொண்ட அண்ணாமலை , "குளிச்சிட்டு இந்த உடுப்ப போட்டுட்டு பத்து நிமிஷத்துல வர்ற!" தன் வழக்கம்போல் துண்டை உதறி போட்டு கொண்டு சென்றுவிட்டார்.

"யம்மா என்னம்மா சொல்லிட்டு போறாரு இவரு?என்ன நடக்குது இங்க?" வீராவின் பொறுமை பறந்தது.

"ராசா மெதுவாய்யா! நான் சொல்றேன்யா! என் சாமி செத்த பொறுமையா இரு!!..நம்ம தங்கத்துக்கு பார்த்த மாப்பிளை ஓடி போய்ட்டானாம் யா!" வாராத கண்ணீரை துடைத்த அன்னையை கண்டு முறைத்தான் மகன்.


"அதுக்கு நான் என்ன இலவச இணைப்பா போய் நிக்கணுமா என்ன?என் கனவு என்னன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதமா என வீரா வீரஆவேசமாய் பேச, சுப்பிரமணிக்கு எங்கோ பல்ப் எரிய தொடங்கியது.

"அய்யா ராசா அம்மா சொல்றத கேளு சாமி!!.. யய்யா சுப்ரமணி‌ நீ கொஞ்சம் எடுத்து சொல்லேன்"

"சொல்லாலாமே அத்தை!" வீரா பக்கம் திரும்பி," உன் லட்சியம் என்னன்னு எல்லாருக்கும் தெரியும் மாப்பிள" சமயத்தில் வாரும் நண்பனின் குரலில் முறைத்தவன்" என்னால முடியாது மா என்னவோ பண்ணு " வீரா கத்திக் கொண்டிருக்கும் அதே சமயம் பெண்ணவளின் செவிகளில் "அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான். இன்னும் பத்து நிமிஷத்துல ஜாம் ஜாம்னு கல்யாணம் நடக்கும் நீங்க கவலைப்படாம இருங்க " அண்ணாமலை கனகவேலுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பது தெளிவாக விழுந்தது.சற்று முன் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவள் கண் முன்னால் வந்து மறைந்தது.

திருமண நாள் அன்று பெண்களுக்கே உரிய ஏதோ ஒரு உணர்வுகள் சிக்கிக் கொண்டு தன்னை அழகுப்படுத்தும் அழகு நிலைய பெண்களுக்கு தன்னை ஒப்புவித்து அமர்ந்திருந்தாள் தங்கமயில்.


அப்போது "அண்ணே என்ன சொல்றீக?" பாக்கியத்தின் குரலில் பதறிய பெண்ணவள் வெளியே வர, அண்ணாமலை பாக்கியத்தின் கையை இழுத்துக் கொண்டும் கனகவேலையும் அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் செல்ல தங்கமயில் புரியாது பின்னால் சென்றாள்.

"எதுக்குடி இப்படி கத்துற?" அண்ணாமலை மனைவியை முறைத்தார்.

" என்னங்க!! அண்ணே சொன்னத கேட்கலையா நீங்க?மாப்பிள்ளைய காணோமாங்க" விழிகளில் வழிந்த கண்ணீரை பொருட்படுத்தாமல் புலம்பினார்.

"என்ன மச்சான் இவ இப்படி சொல்றா?"அண்ணாமலைக்கும் இப்பொழுது பதற்றமானது.

"ஆமா மச்சான் அப்படித்தான் சோமு சொல்றான். எனக்கு என்ன ஏது பண்றதுன்னு தெரியலயே?அம்மா இல்லாத புள்ள! இப்படி அவ வாழ்க்கைய நட்டாத்துல கொண்டாந்து விட்டுட்டேனே மச்சான்.இதை எப்படி என் பொண்ணு கிட்ட சொல்லப் போறேன் " அழதொடங்கி விட்டார்.

"அச்சோ செத்த சும்மா இருங்க என்ன ஏதுன்னு விசாரிப்போம்?"எனும் போதே "அப்பா" உணர்வுகளை அடக்கிய குரலில் அங்கு வந்து நின்றாள் ஆசைமகள்.

மகளை கண்டவர் "தங்கம் என்ன மன்னிச்சிடும்மா இவன் எப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியலம்மா, என மீண்டும் அழ தொடங்க, அந்த சமயம் உள்ளே வந்த சோமு "டேய் அழாத டா கனகு,எதுக்கும் அழுகாத பொண்ணுமா நீ,நீ போய் அழலாமா? என்றவர்,"கனகு நான் ஒரு விஷயம் சொல்றேன் டா "என தொடங்க, 'என்ன?' என்பதாய் பார்த்தனர் அனைவரும்.

"என்னோட தங்கச்சி பையன் இன்னொருத்தன் இருக்கான் அவேன் ரயில்வேல இருக்கான்" என தொடங்கும் போது,கனகவேல் உடனே "போதுண்டா நீ பண்ண வரைக்கும் போதும். நான் ஏன்டா ஊர்ல மாப்பிள்ளை தேடுறேன்?! என் தங்கச்சி மயன் இருக்கும் போது,பாக்கியம் உம் மவனை இல்லை என் மருமகனை எனக்கு மாப்பிள்ளையா கொடுப்பியாமா? இல்லை என் பொண்ண நீயும் கை விட்டுடுவியாத்தா" அண்ணன் கெஞ்சுவதை பொறுப்பவரா பாக்கியம்?!

" அண்ணே என்னண்ணே இப்படி சொல்ற!? உரிமையா மாப்பிள்ளைய தாலி கட்ட சொல்லுத்தான்னு சொல்லு?!இந்த கல்யாணம் இப்போ நடக்கும்,நான் போய் அவனை கூட்டிட்டு வரேன்" உள்ளே வந்தவர் அனைத்தையும் சொல்லி முடித்தார்.

"அத்தை அந்த மாப்பிள பேரு என்ன சொன்னிங்க?"

"அது என்னமோ விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்ன்னு சொல்ற கணக்கா?! சந்தோஷாம்!! கிரகம் புடிச்சவன் விளங்கவே மாட்டான்" திட்ட தொடங்க, வீரா உக்கிரமாய் சுப்பிரமணியை பார்த்தான்.

"அண்ணே அண்ணி யாருன்னு தெரியாம பேசிட்டு இருக்காதீக?" செல்வா அவன் பங்குக்கு பேச ஆரம்பிக்க, "டேய் உன் அண்ணி என்ன கலெக்டரா பேசாம போடா" வீரா கத்தினான்.

"அவிக ஒன்னும் கலெக்டர் இல்லை போ"

"செல்வா என்ன இங்க என்ன பேச்சு உனக்கு,கலை நீ அவனை கூட்டிட்டு உங்க அண்ணிகிட்ட போ நான் வரேன்" என கூற,அவர்கள் சென்றதும் தம்பி,உன் அம்மாக்காக வாயா என வராத கண்ணீரை துடைத்து கொண்டு செல்ல,வீரா அப்படியே தலையை பிடித்த படி அமர்ந்து விட்டான்.

"நேரமாயிட்டே இருக்கு!! மாப்பிள்ளைய கூட்டிட்டு வாங்கோ,என்ன இது பொண்ணு வந்து உக்காந்தாச்சு இன்னும் மாப்பிள்ளய வர காணோம் " ஐயரின் குரலில் சுப்பிரமணி கையைப் பிடித்து வீராவை அழைத்து கொண்டு வர,பெண்ணவள் விழிகள் வருபவனை நிமிர்ந்து காண,அவனோ அத்தனை உணர்வுகளையும் அடக்கி கொண்டுவந்தமர்ந்தான்.

வீரா அமர்ந்ததுமே அவனுக்கு அருகில் கலகல என பேசிக்கொண்டு அருகில் இருப்பவர்களிடம்" என் அண்ணன் பொண்ணு என் வீட்டுக்கு தான்னு எழுதியிருக்கு! அத யாரு மாத்த முடியும்!?" சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பாக்கியத்தை முறைத்தான் வீரா.

"மாப்பிள்ளை கொஞ்சம் சிரிச்ச மாதிரி போஸ் குடுய்யா.அங்க பாரு போட்டோ எடுக்கறாங்க" குனிந்து கிசுகிசுத்தான் சுப்ரமணி.

"வேணாம்டா.. நானே கொலை வெறில கிடக்கேன். பேசாம இருந்துரு" முனங்கி திரும்பி கொண்டான்.


"ஏய் தங்கச்சி நல்லா தான் இருக்கேன் திரும்பி பாரு" என்றான் மெதுவான குரலில்.

"வேணா ஏதாவது சொல்லிட போறேன் கம்முனு போயிரு, எல்லாமே உன்னால தான் நடந்துச்சு.சிக்குன சிக்ஸ்டி பைவ் தான் பேசாம இரு"என்றான் மீண்டும்.



"சரி சரி" சுப்பிரமணி நிமிர்ந்து நிற்க, எதிரில் தங்கமயில் காக்கி உடுப்பில் இருந்த புகைப்படம் வைத்து பிளக்ஸ் அடிய்திருக்க,அதனை கண்டவன் குனிந்து வீராவை சுரண்டினான்.


"ப்ச்...என்ன இப்ப?" என்றான் கடுப்பாய்.


"டேய் மாப்பிள" என்றான் ரகசிய குரலில்.

"என்ன?"

"அதுவந்து..பொ.. பொண்ணு இல்லை டா.." திக்கி திணறினான் சுப்பிரமணி.

"பின்ன என்ன பேயா!" என வீரா அவனை முறைத்து விட்டு முதல் முறையாய் திரும்பி பெண்ணவளை காண,கொஞ்சம் மாநிறம் தான்.கொஞ்சம் ஒல்லியாய், விழிகள் பெரியதாய் அந்த வெங்காய நிற புடவை அவளை இன்னும் அழகாய் காட்ட,நம்ம அளவுக்கு இல்லாட்டியும் நல்லாத்தேன் இருக்கா என எண்ணியவன் சரி இப்போ என்ன டீச்சர் படிக்காட்டி படிக்க வச்சிட்டா போவுது என எண்ணம் மேலோங்க அவளை ரசித்து பார்த்தான்.

"பார்த்தது போதும் சீக்கிரம் தாலி எடுத்து கட்டுங்க மாப்பிள்ள"என ஐயர் கூற,பெண்ணவள் விழிகளில் நாணம் எட்டி பார்க்க கீழே குனிந்து கொண்டாள்.

'இந்த ஐயர் வேற மானத்தை வாங்குறாரு?' என கழுத்தில் முதல் முடிச்சை போட்டு நிமிர அவனுக்கு எதிரில் இருந்த பிளக்ஸில் பெண்ணவள் முழு காக்கி உடையுடன் நிற்க,"இததேன் அப்படி சொன்னியா நீ?" என்பதை போல் முழு அதிர்ச்சியுடன் திரும்பி சுப்பிரமணியை பார்த்தவன், விழிகளில் கோபம் அதிர்ச்சி என அத்தனை உணர்வையும் தாங்கி அன்னையை தேடினான் வீரவேல்.அவரோ தண்ணீரில் நீந்தும் மீனாய் அவன் கண்ணில் படாது நகர்ந்து செல்ல,கலையை கண்களால் அழைத்தவன்,"உன் அண்ணி போலீசா?"

"ஆமா மதனி போலீஸ்தேண்ணே! சப் இன்ஸ்பெக்டரா இருக்காக சிம்மக்கல்ல" பெருமையாய் கூறினாள்.

"இதுல பெருமை வேற இதுங்களுக்கு?!" நண்பனின் அலைபாறுதலையும் அவனின் அடக்கப்பட்ட உணர்வுகளையும் கண்டு அவன் தவிப்பை உணர்ந்தது போன்று அவன் கைகளை இறுக்கமாய் பற்றி கொண்டான் சுப்பிரமணி.
 
ORS :7

அந்த அறையினை முற்றிலும் நிரப்பியிருந்தது ஊதுபத்தியின் நறுமணம்.அந்த மரக்கட்டிலின் முழுவதுமாய் சிதறி கிடந்த ரோஜா இதழ்கள் சொல்லாமல் சொல்லியது, அன்றைய நாளின் உன்னதத்தை.அதுவும் கட்டிலில் தோரணமாய் வாடி தொங்கி கொண்டிருந்த சூர்யாகாந்தி பூக்களை கண்டதும், அவன் இதழ்கள் அவனையும் மீறி வளைந்தது அன்னையில் நினைவில்.

வீரா ஒன்றும் அத்தனை பிடிவாதக்காரன் இல்லையே?!அதனால் தானோ என்னவோ?! பாக்கியம் சொன்னதும்,தன் விருப்பத்தையும் மீறி திருமணத்திற்கு அவன் சரி என சொன்னது.கூடவே ஏதோ ஒரு விதத்தில் அங்கு நடக்கும் நிகழ்விற்கு சூத்திரதாரி தான் தானே என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்தே தங்கமயில் கழுத்தில் தாலி கட்ட துணிந்ததே!எந்த நொடி அவள் ஒரு காவல் அதிகாரி என தெரிந்ததோ? அந்த நொடி அவனையும் மீறி அவள் மீது ஏதோ ஓர் வித உணர்வு வந்து ஒட்டி கொண்டது.அது பயமா இல்லை மரியாதையா?! என பிரித்தரிய தெரியாது மனதிற்குள் குழப்பிக் கொண்டிருந்தான்.

இதற்கு இடையில் இன்று கல்யாணத்தில் அவன் வீட்டார் செய்த அலப்பறைகள் அனைத்தும் கண் முன்னால் வந்து சென்றது.

"அண்ணி அண்ணி" என செல்வா அவளிடம் பேசியபடியே சுற்றி வருவதும், நெற்றியில் வழிந்த குங்குமத்தை கலை துடைத்து விடுவதுமாய் இருக்க,பாக்கியத்தை பற்றி சொல்லவே வேண்டாம்?! இருக்கும் அனைவரிடமும் சிரித்து சிரித்து பேசி கொண்டே திரிய,தந்தையை கண்டான் அவன்.
அவரோ அந்த அங்கவஸ்திரத்தை சரி செய்வதையே முழு நேர வேலையாய் செய்து கொண்டிருக்க,அருகில் நின்ற சுப்பிரமணியை பார்த்து,"டேய் மாப்ள! என் வாழ்க்கை போச்சு?! அது எப்படியோ போவட்டும்,ஆனா தயவு செஞ்சு உன் மாமனை அந்த அங்கவஸ்திரத்தை தூக்கி போட சொல்லு டா" என பல்லைக் கடித்தான்.

வீராவின் பேச்சில் சிரித்தவன்,"விடு டா ஒரு நாள் தானே இப்படி சுத்திட்டு இருக்காரு" நழுவி கொண்டான் அவன்.

"என்னவோ பண்ணி தொலைங்க டா" என பேசி நிமிர, தங்கமயில் விழிகள் அவனையே பார்ப்பதை கண்டவன் உடல் மொழி சட்டென மாறியது.

என்னவோ அவளை கண்டதும் தயக்கம் ஏறி கொண்டது விழிகளில்,மெல்ல அவன் விழிகள் வேறு பக்கம் திருப்பி கொண்டான்.

"என்னத்துக்கு இப்படி முழிக்கிறான் இவன்?!" சுப்பிரமணி அவன் விழி சென்ற பாதையை தொடர, தங்கமயில் கலையுடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள்.

"டேய் என்ன தங்கச்சியை பார்த்தாவே இப்படி முழிக்கிற?! இன்னும்?!" தொடங்கிய நண்பனின் வாயை மூடியவன், "எல்லாரையும் கூட மன்னிச்சுடுவேன்டா.ஆனா உன்ன குல துரோகி மன்னிக்கவே மாட்டேன்"என அருகிலிருந்தவனை முறைக்க,பாக்கியம் அருகில் நின்ற பெண்ணிடம்," அண்ணி எப்படியாவது முத ராத்திரிக்கு சூரியகாந்தி பூவை வாங்கிட்டு வரச் சொல்லிடுங்க! அவனுக்கு அதேன் புடிக்கும்" மெல்லிய குரல் என அவர் கத்தி சொன்னது அவன் காதில் விழ,சுப்பிரமணி சத்தமாய் சிரிக்க,அவனை முறைத்து கொண்டே "இப்போ இது ரொம்ப முக்கியம்"என்றவன் வாடிய அந்த பூக்களை கண்டவன் இதழ்கள் இப்போதும் முணுமுணுத்தது.


நேற்றைய இரவில் யாரேனும் இதனை பற்றி அவனிடம் சொல்லிருந்தால் சிரித்துவிட்டிருப்பான். ஆனால் இன்று என பெருமூச்சு விட 'நேத்து நீ செஞ்ச வேலைக்கு தான் இன்னைக்கு இங்கன வந்து நிக்கிற ஏன் வென்று!!' அவன் மனம் காரி துப்ப, இதற்கு காரணமான அவன் நண்பனை அலைபேசியில் அழைத்தான்.

"டேய் பங்கு என்ன இந்த நேரத்துல?! தங்கச்சிக்கு உண்மை தெரிஞ்சு, உன்ன இழுத்து ரெண்டு அப்பிருச்சா?" வேகமாய் கேட்டவனை தமிழில் உள்ள கெட்ட வார்த்தை சொல்லி அர்ச்சிக்க தொடங்கினான்.

"டேய் போதும் போதும் காது கூசுது"

"நானே கடுப்புல கிடக்கேன் இதுல உனக்கு நக்கல் எழவு வேற?! "

"எதுக்கு கடுப்புங்குறேன்? நீ ஆசை பட்ட படி கவெர்மென்ட் வேலையில இருக்கிற புள்ளையை தானே கட்டிருக்க?! பின்ன என்னாங்குறேன்?தங்கச்சி நிறம் மட்டுந்தேன் கம்மி மத்த படி புள்ள,நல்லா மூக்கு முழியுமா நல்லாதேன்யா இருக்கு "

"அதெல்லாம் நல்லாத்தேன் இருக்கு,ஆனா நான் கேட்டது டீச்சர் புள்ளய டா?! இவ"

"அதுக்கென்ன மாப்பிள அட்ஜஸ்ட் பண்ணிக்கவேண்டியதேன்"


"டேய் உன்ன செவுலு மேலயே போட போறேன் பாரு, நாயே உன்னால தான் டா இப்படி வந்து நிக்கேன். நேத்தே சொன்னேன் ஒரு ஃபுல் போதும்னு ஆனா நீயி ரெண்டா வாங்கி கொடுத்து. என் சோலியை முடிச்சுட்டியே டா?! போதாகுறைக்கு ரோட்ல யாரோ எவளோ அழுதா நமக்கு என்னன்னு நான் சொல்ல சொல்ல கேக்காம?! நீ என்னை உசுப்பி விட்டு என்னை எங்க வந்து நிறுத்தி வச்சுருக்க பாரு.நண்பனா டா நீயி!மவனே நாளைக்கு காலையில என் கையில சிக்குவல்ல அப்போ இருக்கு டி உனக்கு"


"அதேன் நான் பஸ் ஏறிட்டேன் யோவ்" பின்னால் கன்டக்டரின் விசில் சத்தம் கேட்க, அதிர்ந்து தான் போனான்.

"ஏதேய்,என்னை இங்க விட்டுட்டு எல்லாம் கிளம்பிட்டிங்களா?!"

"ஷாக்கை குறையோவ் மாப்ள!!.. உன் கல்யாணந்தேன் திடிர்னு நடந்துட்டு! நம்ம பக்கம் ஜனக்கட்டுக்கு விஷயத்தை சொல்லி, நம்ம பக்கம் ஏற்பாடெல்லாம் பண்ணி, விருந்தெல்லாம் ஆக்கி போட வேணாமா?!அதேன்,நாங்க எல்லாம் பஸ் ஏறிட்டோம்.நீ நாளைக்கு தங்கச்சியை கூட்டிட்டு, ஜபர்தஸ்தா புதுமாப்பிள்ளையா வாயா விருந்துக்கு!"

"இதெல்லாம் யாரு பிளான் பாக்கியம் பிளானா?! இல்லை உன் மாமனா?"

"மாப்பிள யாருகிட்ட இந்நேரம் பேசிகிட்டு இருக்கீரு?" அண்ணாமலையின் குரலில் கோபம் துளிர்க்க, எதிர்ப்புறம் கத்தினான் வீரா.


"டேய் உன் மாமேன் பிளான் பண்ணி பழி வாங்கிட்டாரு!? அதுக்கு அந்த பாக்கியத்தம்மாவும் சப்போர்டு பண்ணிட்டு சொல்லாம கொள்ளாம கிளம்பிருச்சா?! இருக்கு.. கச்சேரி இருக்குயோவ்.. உங்க எல்லாருக்கும் ஒரு நாளைக்கு!?" என பேசி கொண்டிருந்தவன், கதவு திறக்கும் ஓசையில் "வைடா வந்துட்டா போல" என்றான் பம்மிய குரலில்.

"டேய் பங்கு தங்கச்சிகிட்ட பாத்து சூதானமா நடந்துக்க, எங்ககிட்ட எகிறின மாதிரி எகிறினா?!கோவம் வந்து துப்பாக்கியை நீட்ட போவுது"

"நீ மூடு வென்று" அலைபேசியை வைத்து திரும்ப பெண்ணவள் உள்ளே வர, 'டேய் நீ நீதான்டா புருஷன் கொஞ்சம் அந்த கெத்த மெயின்டெயின் பண்ணு "என உள்ளுக்குள் சொல்லி கொண்டே திரும்ப, பெண்ணவள் உள்ளே வந்து கதவினை தாழ் போட்டுக் கொண்டிருந்தாள்.

ஆணவனோ எச்சில் விழுங்க, விழிகளை இறுக்க மூடிக் கொண்டான்.

'என் முதராத்திரி எப்படியெல்லாம் நடக்கணும்னு நான் வயசுக்கு வந்தொட்டு யோசனை பண்ணி வச்சிருந்தேன்.ஆனா இப்போ..' என நொந்து கொண்டாலும், வெளிக்காட்டி கொள்ளாமல் நின்றிருந்தான்.

உள்ளே வந்தவள் அவன் எங்கே என தேட, கட்டிலுக்கு அந்த பக்கம் நின்றவனை கண்டு எதுவும் பேசாது கட்டிலில் அமர்ந்தாள். அந்நாளின் அயர்வு அவள் விழிகளில் எட்டிப் பார்த்தது.முயன்று விழி விழித்திருந்தவள் அவன் ஏதேனும் கேட்பான் என அவனைப் பார்க்க அவனோ அவள் பக்கம் கூட திரும்பாமலேயே நிற்க, இப்படி இருந்தால் இது சரிவராது என தொண்டையை கனைத்தவள் "உங்க பேர் என்ன?"என்றாள். 'முதல் ராத்திரியில் கேட்கும் கேள்வியா இது?' என எண்ணும்போதே அவளையும் மீறி இதழ்களில் குறுநகை எட்டிப் பார்த்தது.

அவள் கேள்வி கேட்டதும் சட்டென திரும்பி நின்றவனை கண்டு இன்னும் இதழ்கள் விரிய, என்ன என்பதை போல் பார்த்தாள்.

"இல்ல நீங்க ஏதோ கேட்டீங்க!" என வார்த்தைகள் வெளிவராது நின்றவனை கண்டு "உங்க பேர் என்னன்னு கேட்டேன்?" என்றாள்.பெயர் என்ன அவன் ஜாதகமே தெரியுமே அவளுக்கு,இருப்பினும் அவனிடம் பேச வேண்டுமே என தொடர்ந்தாள்.

"வீரா "என்றான் வேகமாய்.

"ஹான்!!"

"வீரா... வீரவேல்"

"என்ன படிச்சு இருக்கீங்க?"

இதென்ன அக்யூஸ்ட விசாரிக்குற கணக்கா விசாரிக்கா என எண்ணி கொண்டே "ஐ. டி. ஐ" என்றான்.

"ம்ம்ம்... என் பேரு என்னனு தெரியுமா?"

"அச்சோ என்னமோ ஒன்னு சொல்லிக் கூப்பிட்டாரு அவங்க அப்பா ஒன்னும் புரியலையே, பத்திரிக்கையில் கூட ஏதோ பேர் இருந்திச்சே?!" சற்று யோசித்து பார்த்து ஞாபகம் வரலையே என உண்மையாக முழித்தவன் மயிலின் மனதில் சிம்மாசனமிட்டிருந்தான்.

அவன் முழித்ததைப் பார்த்தவள் சிரித்துவிட்டு "தங்கமயில்" என்றாள் நிமிர்வான குரலில்.

அவள் இதழ் விரிப்பில் சற்று மாநிறமாய், விழிகளுக்கு மையிட்டு தீர்க்கமாய் பார்த்தவளை கண்டவன்," இன்னும் கொஞ்சம் உடம்பு போட்டுருந்தா அழகா இருப்பா, ப்ச் பரவால்ல இதுவும் அழகா தான் இருக்கா!" என உள்ளுக்குள் ஜொள்ளி கொண்டிருந்தான்.

"பார்த்தாச்சா"

சட்டென இப்படி கேட்பாள் என அறியாதவன்" என்னங்க?" என்றான்.

"இல்லை என்ன பார்த்துட்டு இருந்தீங்களே?! அதான் பாத்துட்டீங்கன்னா தூங்கலாம்"

"ஹான்"

"தூங்கலாம் தானே?" கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என அறியாது விழித்தான் வீரவேல்.

"ஹான் தூ...தூங்கலாம்" என வார்த்தைகள் வராது தடுமாறியவனை இன்னும் பிடித்தது அவளுக்கு!".

மெல்ல எழுந்தவள் ஜன்னலை சாற்றி விட்டு ஏ.சியின் குளுமையை கூட்டி விட்டு,கழிவறை சென்று உடை மாற்றி வர,அதுவரை நின்று கொண்டிருந்தவனை கண்டு "தூங்கலையா நீங்க?" என கேட்க, 'எங்க போய் தூங்க?' வாய் வரை வந்த வார்த்தையை முழுங்கி விட்டு," நான் கீழ படுத்துக்குறேன்" ஒரு போர்வை மற்றும் தலையணை எடுத்து போட்டு படுத்து விட,பெண்ணவள் நிலை தான் ஸ்தம்பித்தது.

புது இடமா இல்லை நெடு நேரம் தூக்கம் வராது புரண்டதாலோ என்னவோ வீரா எழும் போது சூரியன் உச்சத்தில் இருந்தான்.

கண்கள் திறவாமேலே "கலை காபி கொடு" என சத்தமிட்டு கொண்டே கைகள் இரண்டையும் தேய்த்து நிமிர, சில நிமிட அமைதியில் இருக்கும் இடம் புரிந்தது அவனுக்கு!

"ஆத்தி மணி எத்தனை?" பார்க்க அதுவே மதியம் பன்னிரண்டை காட்டியது."அச்சோ என்ன இப்படி தூங்கிருக்கேன் "என அடித்து பிடித்து எழுந்து வெளியில் வர சமையல் அறையில் கனகவேல் எதையோ கிண்டி கொண்டிருந்தார்.

வீட்டின் அமைதி சொல்லாமல் சொல்லியது யாருமில்லையென, அவனுக்கென்ன தெரியும் அவர்கள் இருவரின் பொழுதுகள் எப்போவும் இப்படி தான் கழியுமென்று.

அவன் அரவத்தில் திரும்பியவர் "வாங்க மாப்பிள எழுந்துடிங்களா?காபி தரவா இல்லை தோசை சாப்பிடுறிங்களா?"

"இல்லை நான் மதியத்துக்கு சேர்த்தே சாப்பிடுறேன்.நீங்க உங்க வேலைய பாருங்க" என்றான் அவரிடம்!

"ஓ..அப்படிங்கிறீங்களா மாப்பிள? எழுந்ததும் காபி குடிப்பிங்கன்னு பாக்கியம் சொன்னுச்சு.இருங்க உங்களுக்கு காபி தரேன் "என வேகமாய் உள்ளே சென்று அவனுக்கான காபியை நீட்ட,அதுவும் அவன் குடிக்கும் அதே பக்குவத்தில் இருப்பதை கண்டு,' என் அம்மா என்னை மொத்தமா இவரு கிட்ட வித்துட்டு போய்டுச்சு போலவே?! யம்மா பாக்கியத்தம்மா உன்னால என்ன முடியுமோ அதை பண்ணிட்ட?!இருக்கட்டும் ஊருக்கு வந்து வச்சுக்குறேன் உன்னை!!' எனும் போதே அவன் கண்கள் அவளை தேடியது.

அவன் பார்வையை புரிந்தவராக "தங்கம் கல்யாணதுக்கு ஒரு வாரம் லீவ் போட்டுத்தேன் இருந்துச்சு மாப்பிள,திடீருனு ஏ.சி.பி வராரு ஏதோ கேஸ் விஷயமா ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போவ சொல்லி இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு,அதேன் போயிருக்கு மாப்பிள இப்போ வந்துடும்" என்றார்.

"இருக்கட்டும்" எனும் போதே காக்கி பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்து உள்ளே வந்தவள்," பா தண்ணீர் கொடுங்க" என கேட்கவும் ,அருகில் இருந்த கோப்பையை தள்ளி வைத்தான் வீரா.

"என்னம்மா?போன வேலை முடிஞ்சுதா"

"முடிஞ்சது அந்த டவுரி கேஸ் தான் பா.அந்த பொண்ணோட புருஷனை புடிச்சாச்சு.அந்த என்கொயிரி பைல் என் டேபிள்ள இருந்துச்சு அதான்" என்றாள் விழிகள் முழுவதும் அவனிடமே!

"சரித்தா சீக்கிரம் உடுப்ப மாத்திட்டு வா சாப்பிடலாம்.மாப்பிள்ள பாரு உனக்காக சாப்பிடாம இருக்காக"

"சரிப்பா" உடுப்பை மாற்றி வர,வீரா உண்ண வந்து அமர கனகவேல் இருவருக்கும் தனிமை கொடுத்து அறைக்கு திரும்பினார்.

"நீங்க எங்க போறீங்க? வாங்க சாப்பிடலாம்" அழைத்தான் வீரா.

"இல்லை மாப்பிள நீங்க சாப்பிடுங்க நான் பின்ன சாப்பிடுறேன்."

"ஏன்?"என்றவன் பின் புரிந்து, பாக்கியத்தம்மா உடன்பிறப்புனு நொடிக்கு ஒரு முறை நிருபிக்கிறாரே?! என மூச்சினை விட்டவன் "வீட்ல இருக்கறது மூணு பேரு.ஆக்குனது அரை குண்டான் சோறு.இதில ஆளுக்கு ஒரு நேரமா? பேசாம வாங்க சாப்பிடுவோம்" என்றவன்," அவருக்கும் தட்டை போடு" என்றான் தங்கமயிலிடம்!.

ஏனோ தந்தைக்கும் மகளுக்கும் முகத்தில் அத்தனை நிறைவு.விழிகள் இருவருக்கும் கலங்க,"எதுக்கு இந்த செண்டிமெண்ட் சீனு தெரியலயே,யம்மா தாயே உன் குடும்பமே இப்படி தானா!"என தாயை நினைத்து புலம்ப,அங்கே உண்டு கொண்டிருந்த பாக்கியத்திற்கு புரை ஏறியது.

அவரோ தலையை தட்டி கொண்டே" என் மவந்தேன் நெனப்பான் அத்தாச்சி" பெருமையுடன் செருமி கொண்டார்.

"ஆனாலும் பாக்கியம் நீ இப்படி சட்டுன்னு வீராவுக்கு கல்யாணத்தை முடிச்சிருக்க கூடாது.அவன் அழகுக்கும் நிறத்துக்கும் நம்ம ஜனகட்டுல பொண்ணு ஏது?நான் கூட வெளிநாட்டு பொண்ணு வரும் நெனச்சேன்,பார்த்தா உன் அண்ணன் மவள மருமவளாக்கிட்டு வந்து நிக்கிற"

"யாருக்கு யாருன்னு நமக்கு என்ன தெரியும் அத்தாச்சி?"

"ஆமா அதசொல்லு,என்ன எப்ப வாறாங்களாம் பொண்ணும் மாப்பிள்ளயும்?"

"இன்னைக்கு ராவுக்கு இங்க வந்துடுவோம்னு அண்ணே போன் அடிச்சாக காலையில"

"அதுசரி பொண்ணு எப்படி?போலீஸ்காரியமே!"

"ஆமா "எனும் போதே பாக்கியம் விழிகளில் அத்தனை பெருமை மேலாங்க அந்த நேரம் அங்காயர்கண்ணி அழுத படி பாக்கியம் முன்னால் வந்து நின்றாள்.

"என்ன டி எதுக்கு இப்படி வந்து நிக்கிற?"

"சும்மா இரு அத்தை உனக்கே தெரியும். எனக்கு மாமனை எவளோ புடிக்கும்னு?! ஆனா நீ" என தேம்பி கொண்டே," உன் அண்ணன் மவள கண்டதும் நான் எல்லாம் கண்ணுக்கு தெரியல தானே,என்ன இருந்தாலும் நான் உன் உங்க ரத்தம் இல்லையே!என் மாமனும் இப்படி பண்ணுவாகனு நெனக்கலயே'" ஒப்பாரி வைத்தவளை அதட்டினார்.

"அடியே என்ன பேச்சு பேசுற?அப்படியே ஒன்னு போட்டேன்னா தெரியும் சேதி.வீராக்கு உன்மேல அப்படி ஒரு நெனப்பு இருந்துச்சுனா நான் சொன்னா என்ன?! அந்த கடவுளே சொன்னாலும்,அந்த புள்ள கழுத்துல தாலி கட்டிருக்க மாட்டான் டி.என் மவனை பத்தி எனக்கு தெரியாது.வந்திட்டா அணையை தொறந்து விட்டது கணக்கா அழுதுகிட்டு.சும்மா சலம்பாம,நாளைக்கு விருந்துக்கு வந்து சேரு "என அவளை அனுப்பி வைத்தவர் கலையிடம் "ஏண்டி உன் மதனிக்கு போன் பண்ணி எத்தனை மணிக்கு வராகனு கேளு" என அங்கிருக்கும் அனைவருக்கும் ஆளுக்கு ஓர் வேலை பிரப்பித்து விட்டு,பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் பாக்கியம்.
 
ORS:8


தன் சொந்த ஊரின் அருகே வர வர கனகவேல் மகளிடம் ஆயிரம் கதைகள் சொன்ன படி வந்தார்.அதனை கேட்டும் கேட்க்காது வாகனத்தை செலுத்திய படி வந்தான் வீரவேல்.


அவர்கள் வீடு வந்து இறங்கியதுமே அண்ணாமலை வந்து வரவேற்று 'கலை உன் அண்ணி வந்திடுச்சு பாரு"எனும் போதே செல்வா ஓடி வந்து புன்னகைத்து "அண்ணி வாங்க" என்றான்.

தம்பியின் கையை முறுக்கியவன் "ஏன் உங்களுக்கு இந்த அண்ணேன் வந்தது கண் தெரியலயாக்கும்" என இன்னும் திருக,

"மா" என்றான் அவன் சத்தமாய்,

"அச்சோ செல்வா இந்த பக்கம் வா "என தங்கமயில் அவள் பக்கம் இழுத்து கொண்டாள்."பாருடா"அவர்கள் இருவரின் பாசபிணைப்பை கண்டு வீராவின் புருவம் உயர்ந்தது.


அவர்கள் பேசும் போதே ஆரத்தியுடன் பாக்கியம் வர,மகன் முகம் காணாது மருமகளை பார்த்து புன்னகைத்து இருவருக்கும் ஆலம் சுற்றி திருஷ்டி எடுத்து உள்ளே வர செய்தார்.

கலை தங்கமயில்லை அழைத்து கொண்டு உள்ளே செல்ல,வீரா எதுவும் பேசாது பக்கியத்தை பார்த்த படி நின்றான்.

தங்கமயில் அவனை திரும்பி பார்த்து கொண்டே முன்னால் சென்றவள் அவர்கள் வீட்டினை கண்டதும் அப்படியே நின்றாள்.

"என்ன அண்ணி அப்படியே நின்னுட்டிங்க?உள்ள வாங்க உங்க வீட்டு அளவுக்கு மச்சு வீடு இல்லைனு பாக்குறீங்களா?"என கேட்க,

"ப்ச்...அப்படி எல்லாம் இல்லை.கலை வீடு அழகா இருக்கு" என்றாள்.

"அப்போ வாங்க இந்த அரண்மனையை சுத்தி பார்க்கலாம்"என உள்ளே அழைத்து சென்றாள்.

பாக்கியமோ முடிந்தவரை மகன் முகம் காணாது தவிர்த்தவர்,அதற்கு பின் முடியாது "யய்யா என்ன அம்மாவை அப்படி பாக்குற?"என கேட்க,


"இல்லை உனக்குள்ள எத்தனை கே.ஆர்.விஜயா,சரோஜா தேவி சாவித்ரி எல்லாம் ஒழிஞ்ச இருக்கு பாக்கிறேன்" என்றவன் நக்கலாய் சென்று தொட்டியில் உள்ள ம தண்ணீரீல் முகத்தை அடித்து கழுவி கொண்டே பாக்கியத்தின் அருகில் வர,

பாக்கியம் ஒன்றும் தெரியாது போல் முழிக்க,

"இப்படி முழிக்காதமா எதாவது சொல்லிட போறேன் "என்றான் கடுப்பாய்,

"ராசா அம்மா மேல கோவமா "என்றார்.

"இல்லை உனக்கு எங்கின கோவில் கட்டலாம் யோசிக்கிறேன்."


"ராசா நிஜமாவாயா!" என்றார் விழிகளில் ஆர்வம் மின்ன,

"அம்மா கம்முனு போய்டு" என்றவன் "எனக்கு நீ அப்படி கல்யாணத்தை பண்ணுனதை கூட மன்னிச்சுடுவேன். ஆனா முத ராத்திரி அன்னைக்கு சூரியகாந்தி பூவை சுத்தி கட்டி வைக்க சொன்ன பாரு அத மட்டும் மன்னிக்கவே மாட்டேன்" என்றான் கடுப்பாய்,

"இல்லை ராசா உனக்கு பிடிக்கும்னுதேன்!" என பாக்கியம் இழுக்க,


"ஆமா எல்லாம் இங்க பிடிச்சுதேன் நடக்குது பாரு" என தொடங்க,

"அய்யா மயிலு நல்லா புள்ள சாமி"

"அதுக்கு?"

"இல்லை சொன்னேன்" என்றார்.

"ஆத்தா நீ சொன்ன வரைக்கும் போதும்" என முறைத்தவன்,அவர் பார்வையை கண்டு "என்னத்துக்கு இந்த லுக்கு தெரியலயே?" என்றவன் "சொல்ல வேண்டியதை சொல்லிட்டு கிளம்புத்தா" என்றான்.

"இல்லை உங்க அப்பா உன்கிட்ட ஒன்னு சொல்ல சொன்னாரு"

"என்னனு?"

"அது மயிலுக்கு வேலை அங்கினதேன்!"

"எங்கினத்தேன் "

"மதுரையில"

"ஆமா அதுக்கென்ன?"

"இல்லையா நீ சிங்கப்பூர் போற வரைக்கும் நீயும் அதுகூடவே அங்கேயே" என தொடங்க,

"ஓ...வீட்டோட மாப்பிளையா நான் அங்க கிடக்கணும் அதானே,எல்லாம் உன் புருஷன் ஏற்பாடு,நான் அவரை சொன்னதுக்கு என்னையே போட்டு பாக்குறாரு" என முறைத்தான்.

"இல்லையா எப்படியும் நீ சீக்கிரம் சிங்கப்பூர் போய்டுவ அதுவரைக்கும் மயிலு ஏன் இங்குட்டும் அங்குட்டும் அலைஞ்சுகிட்டு "என மெதுவாய் கூற,

"மவன் மேல அம்புட்டு அக்கறை,ஆமா இது தானா இல்லை இன்னும் எதாவது இருக்கா, முழுசா சொல்லுத்தா,சொல்லி முழுசா என்னை வித்துடு "என கூற,

"யய்யா "என தொடங்க,

"மா" என்றான் பற்களுக்கு இடையே வார்த்தையினை துப்பி,கோவம் மட்டும் மட்டுபாடாது அவன் குரல் உயர,

இவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அத்தனயும் அச்சு பிசாரது பெண்ணவள் செவி தீண்டியது.

வீட்டினை சுற்றி காட்டி கொண்டிருந்த கலை" இதான் அண்ணே ரூமு "என கூற,

அவனின் அறை என்றதும் தன்னையும் மீறி அவ்வறைக்குள் உள்ளே செல்ல,அறை முழுவதும் அவனின் பொருட்கள்,ஒரு சின்ன மரபீரோ,அவனின் புகைப்படம்,கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆள் உயர ஸ்டிக்கர் கதவிற்கு பின்னால் ஒட்டி இருக்க,ஏதோ ஒரு வாசனை திராவியம் கூடவே ஒரு பவுடர் டப்பா ,தன்னை பாதி வரை மட்டுமே காட்டும் கண்ணாடி என அவன் அறையை அலசி ஆராய்ந்துவிட்டாள் விழிகளில்,

"என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க?"என்றாள்.

"ம்ம்ம்..."எனும் போதே அவளையும் மீறிய உணர்வுகள் அவள் மனதில்,கடந்து சென்ற நாட்களாய் இயல்பாய் அனைத்தையும் ஏற்று கொண்டு அவன் நடப்பதை பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்.அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் அவளையும் மீறி அவள் ஆழ் மனது சேமித்து கொள்ளும் மாயமென்ன,

ஏன் சந்தோஷோடு திருமணம் எனும் போது கூட மனம் இத்தனை தவித்தது இல்லையே.ஏன் அவனை பற்றிய எண்ணம் வந்த உடனே அவன் கலவர முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுகளை என்ன என்றே நினைக்க தோன்றியது அவளுக்கு.அவனுடனான திருமண முறிவு கூட அவளை இத்தனை தூரம் பாதிக்கவில்லையே,ஆனால் இவன் முகம் தெரியும் முன்னே அவனை பார்க்க தோன்றிய ஆவலை ஏற்படுத்தியவன்.அவனோடுவான இரு இரவுகளும் கடந்து செல்ல அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை.இருவரும் பேசி கொண்ட வார்த்தைகள் சொற்பம் தான்.ஆயினும் அவள் விழியோடு விழி பார்த்து பேசும் அவனின் திண்மை பிடித்திருந்தது பெண்ணவளுக்கு!

அதுவும் காலையில் காரில் வரும் போது அவன் தலை கோதிய படி காரினை செலுத்த,இடையில் நிறுத்தி கனகவேலிருக்கும் அவளுக்கும் தேநீர் வாங்கி கொடுத்து,அங்கிருந்த படியே அவள் விழி பார்த்து எதுவும் வேண்டுமா என கேட்கவும்,அவன் புருவ ஏற்ற இறக்கத்தில் கிறங்கி தான் போனாள் பெண்ணவள்! அத்தனையும் அச்சு திசராமல் அவள் நினைவடுக்கில் மீளும் நேரம்,

"அண்ணி அண்ணி" என உலுகினாள் கலை.


"ஹான் கலை" என கேட்க,

"என்ன அண்ணி நான் கூப்பிகிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க" என்றாள்.

"தண்ணீ வேணும் "என்றதும் கலை அதனை எடுக்க செல்ல,மெல்ல ஜன்னல் பக்கம் வந்தவளுக்கு எதிர்புறத்தில் வேகமாய் முகத்தை தண்ணீரில் அடித்து கழுவி கொண்டிருக்கும் வீராவை பார்க்க,அவளையும் மீறி ரசனையாய் விழிகள் அவன் மீது பட்டு மீண்டது.

எங்கோ வானொலியில்

"ஒ ரசிக்கும் சீமானே

ஒ ரசிக்கும் சீமானே

வா ஜொலிக்கும் உடையணிந்து

களிக்கும் நடனம் புரிவோம்

அதை நினைக்கும் பொழுது மனம்

இனிக்கும் விதத்தில் சுகம்

அளிக்கும் கலைகள் அறிவோம்

ஒ ரசிக்கும் சீமானே!"

என அவள் செவி வழி தீண்ட அவள் விழிகளோ அவனை அளவிட ம்ம்ம்...ரசிக்கும் சீமான் தான் என இதழ் முணுமுணுக்க,அவனோ முகத்தை தாயின் சேலையிலே துடைத்து விட்டு சுப்பிரமணி அருகில் அமர்ந்தவன் வேகமாய் அவன் மொழிந்த அனைத்தும் தெள்ள தெளிவாய் பெண்ணவளுக்கு கேட்டது.விழிகளில் கண்ணீர் வழிய அதனை கலை பார்க்காது துடைத்தவள் அவள் கொண்டு வந்த தண்ணீரை குடித்து விட்டு அவ்வறையை விட்டு நகர்ந்தாள்.


அவர்கள் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணி "விடு மாப்பிள "என அவன் தோளில் கையை போட்டுக்கொண்டு "ஏன்யா இப்படி அவுகள வையுற?" என்றான்.

"ப்ச்" என வாகாய் தண்ணீர் தொட்டி மேல் அமர்ந்தான் வீரா.

"ஏன்யா உன் மூஞ்சி இப்படி இருக்கு,பவுடர் அடிக்கலயா நீ?"

வீரா முறைக்க,

"இல்லை மாப்பிள நீ க்யூட்டிக்யூரா பவுடர் தானே அடிப்ப,அதான் அங்குன கிடைக்கலயோன்னு கேக்கேன்" என்றான்.

"யோவ் உன்ன கொல்ல போறேன்" என எழ,

"சரி விடுயா "என்றவன் " அத்தை நீங்க உள்ளர போய் வந்தவங்கள கவினீங்க நான் மாப்பிள்ளையை கூட்டியறேன்" என்றான் அவன்.

இதான் சாக்கென்று பாக்கியம் வேகமாய் வீட்டின்னுள் நுழைய,அங்கயர்கண்ணி அவனை தேடி வரவும் சரியாய் இருந்தது.

"மாமா" என்றாள்.

"ஏன்மா?"என்றான் நிமிர்ந்து பார்த்து,

"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நானு எதிர்பார்க்கவே இல்லையே!"என்றாள் அழுத படி,

"எப்படி?"

"இப்படி உங்க மாமா பொண்ண கட்டிக்கத்தேன். என்ன வேணாம் சொல்லிட்டீங்களா?" என்றாள் மூக்கினை சிந்தி கொண்டே,

"நீயுமா!" என்ற ரீதியில் சுப்பிரமணி பார்த்து வைக்க,

"யாருமா சொன்னது உனக்கு?"என்றான் வீரா.

"ஊரே பேசிக்குதே!"

"என்னன்னு?"

"போன இடத்தில உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ எசக்கு பிசாக்காகி அதுனாலதேன் அந்த மாப்பிள ஓடிப்போய் நீங்க அவ கழுத்துல தாலி கட்டினிங்கலாம்."

"ஏதே இசக்கு பிசக்கா இப்படி எல்லாம் யாருடா பரப்பி விடறது.அதுவும் ஒரு நாள்ல "என எண்ணி கொண்டு,நண்பனை முறைக்க,

"எனக்கு தெரியாது மாப்பிள்ள"என்றான் வேகமாய் சுப்பிரமணி.


"அப்போ நீதேன்" என்றான் முறைத்து பின் "இல்லை என்னை பெத்த தெய்வம் இருக்கு பாரு அதுவா கூட இருக்கும்" என்றான்.

சுப்பிரமணி முழிக்க,

அவன் விழிப்பதை பார்த்து " அட கிராதாக நேத்து தான டா என்னை மஞ்ச தெளிச்சு ஈர துணியை கழுத்துல போட்டு வெட்டினீங்க இன்னும் என்னடா?"என்றான் பாவமாய்,


"கல்யாணம் ஆனாலும் உன் மவுசு குறையில யோவ் உனக்கு இன்னும் ஏகப்பட்ட ஆஃபர் வருதுயா மாப்பிள",

"நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லன்னு உன்ன கொல்லத்தேன் போறேன்."

"பாரேன் பொண்டாட்டி போலீஸ்னா நீரு பொசுக்கு பொசுக்குன்னு துப்பாக்கியை தூக்கி எங்கள சுடுவீங்களோ!"

"அட கொயால நானே துக்கத்துல தொண்டை அடிச்சு கிடக்கேன்.இதுல நீ சலம்பிகிட்டே திரிஞ்சிட்டு இருக்க,"

இவர்களை பார்த்த படி அழுது கொண்டிருந்த அங்கயர்கண்ணியை கண்டவன்,

"என்ன அங்கு?"

"நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது மாமா,அவ இல்லனா என்னைத்தானே கல்யாணம் பண்ணியிருப்ப இடையில அவ வந்து உன்ன தூக்கிட்டு போய்ட்டாளே!" என்றாள் தேம்பி,

"தூக்கிட்டு போவ உன் மாமன் என்ன வடையாக்கும்" என சுப்பிரமணி முணுமூணுக்க,

அவனை முறைத்து விட்டு" அடியே என்னதுக்கு இப்படி அழுது வடியுற?"என அவள் அருகில் வந்தவன் "இங்க பாரு அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன்.எனக்கு கலை மாறிதேன் நீயும்,இந்த கல்யாணம் நடக்காட்டியும் நான் உன்ன கட்டிருக்க மாட்டேன் டி.இன்னும் சின்ன புள்ள மாதிரி மூக்க சிந்திட்டு கிடக்க இதுல இப்போவே கல்யாணம் தேவையா உனக்கு.போ டி இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும்.நானே நல்ல டீச்சர் மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்கிறேன்" என்ற படி அவள் தலையினில் குட்ட,

"இந்த கிளம்பிட்டான் டீச்சர் டீச்சர்ன்னு அய்யா ராசா விட்டா ஒரு டீச்சர் மாப்பிளைகள் தேவை என்றால் என்னை அணுகவும்ன்னு போட் வச்சுடுவ போல" என சுப்பிரமணி கூற,

அவன் பேச்சை காதில் வாங்கி கொண்டே பெண்ணவள் தலையில் இன்னும் ரெண்டு குட்டு வைக்க "மாமா வலிக்குது" என்றாள் சிணுங்களாய்,

"போடி இனி எங்குட்டாவது நின்னு நின்னு மூக்கை சிந்திட்டு திருஞ்ச உன்ன என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது" என அவளை அனுப்பி விட்டு நண்பன் பக்கம் திரும்ப,

"இப்போ எதுக்கு டேக் டைவர்சன் எடுத்து இங்குட்டு வரான்" என எழுந்தவன் நகர தொடங்க,

"இரு டி மாப்பிள எங்க ஓடுற" என அவனையும் இழுத்து கொண்டு தண்ணீர் தொட்டியில் குதித்தான் வீரா.


பாக்கியம் உள்ளே வந்தவர் கலை அறையில் அமர்ந்திருந்தவளை கண்டு "யாத்தா வா வெளிய வந்து நம்ம ஜாதி சனம் எல்லாத்தையும் பாரு.அம்புட்டு பேரும் சாப்பிட வா இங்க வந்திருக்காக,உன்ன பார்க்க தானே!நீ பாட்டுக்கு இங்கன உக்காந்தா பொண்ணு எங்க எங்கன்னு என் தலையை தானே உருட்டாறாங்க" என தங்கத்தின் கையினை பற்றி அழைத்து சென்றார்.


அவளை அழைத்து கொண்டு போய் பெண்கள் அமர்ந்திருந்த குழுவின் நடுவில் அமர வைத்து 'இந்தாரு மதனி என் மருமவ பெரிய போலீசாக்கும் பார்த்து சூதனமா பேசணும்" என அவரும் ஓர் பக்கம் அமர,

"சரித்தேன் விட்டா இவ,என் மருமவ கீழ உக்கார மாட்டான்னு பட்டு துணி விரிப்ப போலவே" என கூற,

"பின்ன என் மருமவ என்ன உங்கள மாதிரியா "என வியர்வை பூத்திருந்த மருமகள் முகத்தை துடைத்து விட,


அங்கிருந்த அனைவரும் சிரிக்க பெண்ணவளுக்கே அவளையும் மீறி இதழ் சிரித்தது.

அங்கிருந்த கலைக்கும் செல்வாவிருக்குமே புன்னகை தான்.

அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்த கனகவேலிருக்கு ஒற்றை பிள்ளையாய்,சொந்த பந்தம் எதுவுமின்றி மகளை தனித்து வளர்த்தவர் மனதில் எப்போதும் ஓர் ஆசை உண்டு தன் சொந்த பந்ததிற்க்கு நடுவில் மகள் வளரவில்லேயேன அதனால் இந்த நிகழ்வு அவருக்கு அத்தனை நிறைவை கொடுத்தது.

"என்னடி பாக்கியம் என் மவனைதேன் எங்க பக்கம் விடாம உன் சேலைகுள்ள
மறைச்சு வச்சுக்கிட்ட இப்போ என் பேரனையும் கொண்டு போய் உன் அண்ணன் மவளுக்கு கட்டி கொடுத்துருக்க" என்ற படி அமர்ந்தவரை கண்டு,

கலை "ஆத்தி இந்த ஆயா வந்துட்டு டா.இது சும்மா வந்தாலே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை மூட்டி விடும்.இதுல இன்னைக்கு வந்திருக்கே" என கலை முனங்க,

"ஆமா அக்கா இந்த ஆயா பேசுற பேச்சை யாரு நிறுத்த?"என்றான் செல்வா.

"டேய் செல்வா நீ போய் சுருக்கா அண்ணனை கூட்டியா" என்றாள் கலை.

"ஆமாக்கா அண்ணேந்தேன் இந்த கெழவிக்கு சரி" என அங்கிருந்து சென்றான் செல்வா.

"யம்மா நீதேன் என் பேரன் பொண்டாட்டி யா எங்க எழுந்து நில்லு பாப்போம்" என கூற,

என்ன செய்வது என புரியாது பாக்கியத்தை பார்த்தாள் தங்கமயில்.

"இது என் சின்ன மாமியா.ஏதோ உன் மாமனை நான் கடத்திட்டு வந்த கணக்கா எப்போவும் ஏதவாது பேசிட்டே கிடக்கும்.இது வாயில விழாம எழுந்து நில்லு" என்றார் பாக்கியம் மெதுவாய்

பெண்ணவள் எழுந்து நிற்க,

"ம்ம்க்கும் இவ என்னடி இப்படி இருக்கா?" என அருகில் இருந்த பெண்ணிடம் முணுமுணுத்து,"ஏன்டி பாக்கியம் ஊர்ல பொண்ணே இல்லனு கணக்கா இந்த புள்ளயை என் பேரனுக்கு கட்டியாந்துருக்க,அவன் நிறதுக்கும் கட்டழகுக்கும்,அவன் பேச்சுக்கும் எங்க பக்கம் அத்தனை பொண்ணுங்க வரிசை கட்டும் போது நீ போய் இவள கூட்டியாந்துருக்க,என் பேரன் அழகுக்கு சரியாவளா இவ" என தொடங்க,

"அத்தை அவ போலீஸ்ல வேலை பாக்குது."

"அதுக்காக என்ன பண்ண சொல்லுற?பொண்ணுனா நல்லா மூக்கு முழியுமா இருக்க வேணாம்.இவள பாரு ஏதோ கம்பு மாதிரி நீண்டு கிடக்கா.என் பேரன் வாழ்க்கையை இப்படி அள்ளி கவுத்துட்டியே!பேசாம இந்த புள்ளய வெட்டி விடு என் பேரனுக்கு நான் வேற பொண்ண பாக்குறேன்" என்றதும்,


சட்டென ஓர் நிசப்தம் நிலவியது பெண்கள் கூட்டத்தில்,வயதில் பெரியவர் என்பதால் பாக்கியம் எதுவும் பேசாது விழிக்க,கூடவே நாம் ஒன்று சொன்னால் இன்னும் கிளம்புவாளே என அமைதியாய் இருக்க,

அந்த நொடியில் என்ன எதிர்வினையாற்றுவது என்பது கூட புரியாது நின்றிருந்தாள் தங்கமயில்.இது போல் அவள் கடந்து வந்த மனிதர்கள் ஏராளம் தான்.ஆனால் இப்படி பேசுபவர்களை அவர்கள் முகத்திற்கு நேராய் பதில் சொல்லி விடுவாள்.ஆனால் இன்று ஒருவர் அவளை பற்றி இத்தனை பேசியும் தன் கோபத்தை முடிந்த மட்டும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

தூரத்தில் நின்ற கனகவேலிற்க்கோ மகளின் நிலை கண்டு பரிதாவிப்பு தான்.என்ன செய்வது என தவிக்க,

"என்னடி இப்படி அமைதியா இருக்க,என் பேரனுக்கு என்ன வழி?இப்படி அவன் வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்க"எனும் போதே பெண்ணவள் சீற்றம் ஏறி 'வேணும்னா நீயே உன் பேரனை வச்சுக்கோ' என பேச இதழ் திறக்கும் முன் அவள் தோளில் கை போட்ட படி அமர்ந்தான் வீரா.

சட்டென அவனின் ஸ்பரிசத்தை பெண்ணவள் உணரும் முன்னே இன்னும் அவளை நெருங்கி அமர்ந்து" அப்புறம் கெழவி என்ன இங்குட்டு ஒரே சத்தம்?"என்றான் புருவம் உயர்த்தி,

"ஒண்ணுமில்ல ராசா இந்த புள்ளத்தேன் உன் பொண்டாட்டி னு பாக்கியம் சொன்னுச்சு அதேன் என்ன எதுன்னு விசாரிச்ச்சேன்."

"ஓ...எப்படி என் பொண்டாட்டி" என்றவன் கைகள் மெல்ல இறங்கி அவள் இடையினை தொட்டு மீள,

"அதேன் உன் அழகுக்கு இவ" என தொடங்க,

"எனக்கேத்த ஜோடிதானு சொல்ல வந்திருக்க அதானே!"என்றான் அவரை பேச விடாது.

"இல்லப்பு என்ன இருந்தாலும் உன் நிறத்துக்கும் "என மீண்டும் தொடங்கியவரை,

"அட நீ வேற கெழவி நம்மள மாதிரி நிறமா இருந்தா ஏதோ வியாதியாம்.இப்போ வெளிநாட்டுல கண்டு பிடிச்சுருக்காக.அது என்னவோ ஒரு பெரிய வியாதி போல,அதுனால இப்போ எல்லாம் வெளிநாட்டுகாரன் எல்லாம் போய் வெயில்ல படுத்து கிடக்கான் நீ வேற "என அவரை திசை திருப்ப,

"அப்படியா சொல்ற?"

"பின்ன என்ன பொய்யா சொல்ல போறேன் என்றவன் அவர் காதின் அருகில் சென்று "கெழவி என் பொண்டாட்டியை நீ ரொம்ப சாதாரணமா நெனைச்சுட்ட,அவ பெரிய போலீஸ்க்காரி ரொம்ப பேசிட்டே இருந்த சட்டுனு துப்பாக்கியை எடுத்து போட்டுருவா.அப்புறம் அய்யோ ஆத்தானாலும் உசிரு வராது" என்றவன் "மயிலு எழுந்துரு எவ்ளோ நேரம் இப்படி உக்காந்து இருப்ப,கலை மதனியை உள்ள கூட்டிட்டு போ "என்ற படி எழுந்தவன் அவளை நோக்கி கையை நீட்ட,அவன் கைகளை நீடுவான் என எண்ணதவள்,அவன் கரத்தை பற்றி எழுவும் சட்டென விழ போனாள்.

"அட தங்கம் அவன் கையை இறுக்கமா பிடிச்சாதேன் என்ன?"

"அதானே ஏண்டி அவன் கையை தானே புடிக்க சொன்னான்.அதுக்கேவா" என சிரிக்க,

"அத்தாச்சி" என முறைக்க முயன்று அவர்களின் கேலியில் ஆணவனும் சிரிக்க, அவன் அருகில் விடை தெரியாது முழிக்கும் குழந்தை போல் நின்றாள் பெண்ணவள்.

அவள் நின்ற கோலம் கண்டு உதிர்ந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவள் எதிர்பாரா நேரம் அவள் இடை தொட்டு தூக்க,

"அடியாத்தி என்னடி இது கூத்தா இருக்கு.இத்தனை பேருக்கு நடுவுல பொண்டாட்டியை தூக்குறான்"என வாயில் கைவைக்க,

"அடியாத்தி எத்தனை பேருக்கு நடுவுலயும் என் பொண்டாட்டியை நான் தூக்குவேன்.வேணும்னா தாத்தானை விலக்கி விடு நான் வேணா உன்ன தூக்கிட்டே சுத்துறேன்"என்றான் அவரிடம்!

"ம்ம்க்கும் உன் தாத்தன் தூக்கிட்டாலும்" என கூறியவரை கண்டு,

"இரு உனக்கேதுக்கு அந்த குறை என் பொண்டாட்டியை ரூம்ல விட்டுட்டு வரேன்" என அவளை தூக்கி கொண்டே அறையில் விட்டவன் "கலை அண்ணியை என்னனு பாருத்தா" என ஓர் நிமிடம் கூட அவளை காணாது சென்று மறைந்தான் வேலன்.
 
ors:9

அவன் விட்டு சென்ற நொடி நீண்டும் கூட ,பெண்ணவள் இடையில் இன்னும் ஏதோ குறுகுறுப்பு மிஞ்சியது.அவள் முகத்தில் எங்கும் வியர்வை முத்துக்கள்.அதனை துடைக்க கூட தோணாது அவன் கைகள் படர்ந்த இடையில் இன்னும் அவனின் ஸ்பரிசம் தோன்ற,வேகமாய் கைகள் கொண்டு தேய்த்து கொண்டாள்.

"ப்ச்..என்ன பீல் இது", உலகம் சுற்றுவது போன்ற பிரம்மை அவளுள்!சற்று முன் அவன் அவளை தூக்கிய நொடியில் அவள் உலகம் நின்று போனது.அவள் விழிகள் சட்டென மூடிக்கொள்ள, கூட இருந்தவர்கள் பகடியாய் மொழிந்த வார்த்தைகள் எல்லாம், இன்னும் இன்னும் அவளை இப்போதும் இம்சிக்க தான் செய்தது.

அவளோ இப்படியிருக்க, அவனோஅவளை இறக்கி விட்டதும் வேகமாய் வந்தது சூரியகாந்தி தோட்டதிற்கு தான்.வந்தவன் தனக்கென தயாரித்திருந்த சிறு குடிலில் அப்படியே அமர்ந்து விட்டான்.மீண்டும் மீண்டும் அவள் இடையின் மென்மை அவனை இம்சித்தது.என்னடா இது காற்ற தின்னு வாழ்வாளோ? இப்படி இருக்கா?! எனும் போதே இதழ்களின் ஓரத்தில் ஓர் குறுஞ்சிரிப்பு.

'ஆமா அதென்ன டா இப்படி பொசுக்குன்னு அவளை தூக்கிட்ட?" என தன்னை தானே கேள்வி கேட்க, "ஏன் என் பொண்டாட்டி தானே,!" என்றான் அவனிடமே!!

"ஓ...சார்வாள் அப்படி வரீங்க. ஏன் அப்போ நின்னு நிதானமா!" விஷமமாய் சிரித்தது மனம்.

"நின்னு நிதானமா" கள்ள புன்னகையுடன் பிம்பத்தை கண்ணாடியில் கண்டு கண்ணடித்தான்.

"ஓ அப்படி ஒரு நினைப்பு இருக்கோ உங்களுக்கு? நீயெல்லாம் அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்ட வென்று,ஏன் சார்வாள் நின்னு பேசிட்டு வரவேண்டியது தானேன்னு கேட்டேன். இப்ப இவ்வளவு பேசறவன்?! அவளை இறக்கி விட்டதும் ஏதோ நாய் பிடிக்கிற வண்டியை பார்த்ததும் தெறிச்சு ஓடுற நாய் கணக்கா ஓடியாந்த" மனசாட்சி கேலி செய்ய, "அடேய்!!" என தன்னையும் மீறி சத்தமாய் சிரித்து விட்டான் வீரா.


"ஓ...சிரிப்பு?! இருக்கட்டும்?! அதென்ன கன்னம் சிவக்குது?ஓ வெக்கமா? அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும் இருக்கட்டும்"

"ஆனா ஏன்டா அவளை தூக்கினதும் உடம்பு எல்லாம் ஜில்லுனு ஏதோ ஒன்னு உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுச்சு?"

"ஆமா பண்ணுச்சு பண்ணுச்சு!! ஏதோ கொரோனா காலத்துல வந்த காச்சல் கணக்கா?!உள்ளுக்குள்ள இருக்க எனக்கே ஜெர்க்காணுச்சே!"

"ச்சே எனக்கு இப்படி எல்லாம் எந்த பொண்ணு மேலயும் தோணுனதே இல்ல தெரியுமா?நான் அத சொல்ல வந்தா நீ என்னமோ?" தன் மனசாட்சியுடன் மீண்டும் கேள்வி கேட்டான்.

"ஆமா இதுவரைக்கும் எத்தனை வயசு பொண்ணுங்க தூக்கியிருக்க,நீ தூக்குன அம்புட்டும் வயசான கிழடு கட்ட தான் பின்ன எங்க ஊத்து எடுக்க?"

"ச்சே இருந்தாலும் அவளை தூக்கும் போது அவ மீது வந்த அந்த வாசம் இருக்கு பாரு".

'நீ அடிக்கிற பவுடரோட அந்த புள்ள அடிக்கிற பவுடர் காசு கூடவா இருக்கும் டா அதான்!'

"ப்ச்...உன்கிட்ட எப்படி சொல்ல?" தன் உணர்வுகளை தனக்குள் பதியவைத்து கொள்ள முயன்றான்.

"ஏன்? இதுவரைக்கும் மொழி தெரியாமயா பேசிட்டு இருந்தோம்?கிரகம் இதுவரைக்கும் எப்படி பேசுனியோ அப்படியே பேசு" மனசாட்சி கழுவி ஊற்றியது.

"இல்லைடா அவ ஏதோ பண்றா என்னை" வாய்விட்டே பேசிக்கொண்டிருக்க,இவை அனைத்தையும் ஒன்று விடாது சற்று தொலைவில் இருந்து தன் தலையை சொறிந்த படி யோசனையாய் வீராவை பார்த்து கொண்டே வந்தான் சுப்பிரமணி.

"உன் வீணா போன உசுரு எதிர்ல நின்னு நீ பண்ற கூத்தை பார்த்துகிட்டு இருக்கு. நான் வரேன் மிச்சத்தை அவன் கிட்ட பேசு" மனசாட்சி விடை கொடுக்க, சுப்பிரமணியோ நண்பனை பார்த்த படி வந்து கொண்டிருந்தான்.

அருகில் வந்ததும் சுற்றி முற்றி பார்த்து விட்டு "அடேய் இவ்ளோ நேரம் யார்கிட்ட மச்சான் பேசிட்டு இருந்த?அதுவும் சிரிச்சு சிரிச்சு?" சுற்றும் முற்றும் பார்க்க யாரும் தென்படவில்லை.

"ப்ச்...உனக்கு சொன்னா புரியாதுயா?" வீரா அவனை‌ கண்டு கொள்ளாமல் நகர்ந்தான்.

“ஏன்யா எதுவும் வேத்து மொழில பேச போறியா?"

"இதுக்குத்தேன் உன்கிட்ட எதுவும் சொல்றதில்லை", திரும்பியவனுக்கு அருகில் மொட்டாய் இருந்த பூவின் அருகில் சென்றவன், "நல்லா சாஃப்ட்" என்றான்.

"எது?"

'அவ தான்!'

"என்ன?"

"இந்த பூவோட மொட்டை சொன்னேன்" சமாளித்தான் வீரா.

"ஓ... நீர் இந்த விவசாயத்தை ஆறு வருசமா பண்ணி, இந்த அரிய கண்டுபிடிப்பை இப்போதேன் கண்டு பிடிச்சுருக்கீகளோ?!" சுப்பிரமணி கிண்டல் செய்ய, "உன்னோட!!"என்றவனுக்கு மீண்டும் பெண்ணின் நினைவு தான்.சுப்பிரமணி பேசிய எதுவும் அவன் செவி தீண்டவில்லை. அவன் எண்ணமெல்லாம் அவள் அவள் மட்டுமே,அவளின் எண்ணங்கள் தோன்றியதுமே அவன் உடம்பில் ஏதோ ஒர் மாற்றம் நிகழ,என்ன நினைத்தானோ சட்டென அங்கே அருகில் இருந்த கிணற்றில் பாய்ந்து விட்டான்.

"அடேய்,டேய் இவ்வளவு பேசுறேன்?! எதுக்கும் பதில் சொல்லாம காலைல இருந்து குளிச்சுகிட்டே கிடக்க,ஆமா எதுக்கு நீ பொத்துன்னு கீழ விழுந்த?" கிணற்றில் சுப்ரமணியின் குரல் எதிரொலித்தது.

"கிணத்தை பார்த்ததும் குளிக்கணும் தோணுது மாப்பிள அதேன்!" உள்ளிருந்து கத்தியவனை பார்த்து கண்கட்டியது ஆருயிர் நண்பனுக்கு.

"என்ன நினைப்போயா உனக்கு.?! ஏதோ காரண்ட் கம்பியை பார்த்ததும் கால தூக்குற நாய் கணக்கா" என்றவனுக்கு தன் அலைபேசி அழைப்பதை உணர்ந்ததும் யாரென பார்க்க, கலை தான் அழைத்து கொண்டிருந்தாள்.

சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றவன், "அடியே மரிக்கொழுந்து மாமனை பார்க்காம செத்த நேரம் கூட இருக்க முடியலயாக்கும் உனக்கு?" குரல் தானாக கொஞ்சியது.

"ம்க்கும்,ரொம்பத்தேன் கொழுப்பு ஏறி கிடக்கு உங்களுக்கு "

"எல்லாம் என் ஆயித்த ஆக்கி போடுறது தான்டி"

"ம்ம்ம்..ம்ம்..சொல்லிடுறேன்" வெட்கத்துடன் சிரித்தவளின் சிரிப்பு அருகில் வந்த அன்னையை கண்டதும் ஒளிந்து கொண்டது.

"ஏண்டி இன்னுமா அவன் எங்கன்னு கேக்குற?"என்ற பாக்கியத்தின் குரலில்,"அச்சோ அண்ணே உங்க கூட இருக்கா?"என்றாள் வேகமாய்.

"என் கூட இல்லை டி"

"அப்புறம் எங்குன போயிருக்கும்,ஆத்தி இப்போ என்ன பண்ண?"

"ஏண்டி என்னை முழுசா பேச விடு. என் கூடத்தேன் இல்லைன்னு சொன்னேன்.அவேன் தண்ணியில இருக்கான்".

"ஏதேய் இன்னும் ரெண்டு பேரும் திருந்தாமதேன் கிடக்கிங்களா.உங்களுக்கு எல்லாம் எத்தனை தடவ பட்டாலும் புரியாதா.இங்குட்டு வாங்க உங்கள பேசிக்கிறேன்.இங்க என்ன சோலி நடக்குது.இப்போ போய் மதனி என்ன நினைக்கும்?"என்றாள் கோபமாய்.

"இதுக்கு என்ன டி அந்த புள்ள நெனைக்க வேண்டி கிடக்கு?அதுவும் உன் அண்ணே தண்ணியை கண்டதும் விழுந்தா நான் பொறுப்பா?!".

"அப்போ நீங்க அடிக்கலையா?"

"ஏதேய் அடிக்கலயாவா எதை?ஓ...நீ அப்படி நினைச்சுட்டியா டி.ஏண்டி ஏதோ மொடா குடிகார ரேஞ்சுக்கு எங்கள யோசிச்சு வச்சிருக்கியாக்கும்?அம்புட்டு ஒர்த் இல்லைடி யோவ்.உங்க நொண்ணேன் உங்க வீட்டு கிணத்துல ஜலகிரீடைல இருக்கார்".

"என்ன குளிக்குதா?ஏன்?இப்போதானே தொட்டிக்குள்ள ரெண்டு பேரும் விழுந்து எந்திரிச்சிங்க.இப்போ என்ன?கிணத்துல குளிக்குது."

"அதே தான் எனக்கும் தெரியல.எதுவாயிருந்தாலும் குளிக்கிறது நல்லது தானேன்னு விட்டேன்.இரு உன் அண்ணனை இழுத்துகிட்டு வரேன்" சொல்லிவிட்டு வைத்தவன், சொன்னது போலவே வீராவை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.

எதிரில் அவனைக் கண்ட அண்ணாமலை," ஏன்டா இப்ப எதுக்கு குளிச்சிட்டு வந்த?!" தலையை துவட்ட கூட இல்லாது உள்ளே வந்தவனை கண்டு "ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி குளிப்ப" அர்ச்சனையை ஆரம்பித்து விட்டார்.


"ஏன் மச்சான் உன் மாமன் கிட்ட சொல்லு!? கல்யாணமான புதுசுல குளிக்கறது எல்லாம் சகஜம் தான். இதுகூட தெரியாமல் எதுக்கு அங்கவஸ்திரம்?"

" பொண்டாட்டிய இங்குன தனியா விட்டுட்டு அவன் மட்டும் சும்மா சும்மா தண்ணீரில் விழுந்துட்டு வந்தா?!" பேசிக்கொண்டே உள்ளே சென்றவனை முறைத்தவர், சுப்ரமணியை எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.



"யோவ் உன் மாமன் என்னய்யா சொல்லிட்டு போனாரு?! " அறைக்கு வந்த நண்பனை கேட்க, வந்த சிரிப்பை அடக்கினான்.

"அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டு போறாரு"

"ஏதேய் சொல்லிவை?! உன் மாமன் கிட்ட எண்ணி பத்து இல்லை ஒன்பதே மாசத்துல,என் புள்ளைக்கு உன் மடியில வச்சு காது குத்தி அந்த ஆளு வேஷ்டிலயும் ஒண்ணுக்கு போக விடல என் பேரு வீரா இல்லை யோவ்" சபதமிட்டு தொடையை தட்ட திரும்ப, இரு கைகளையும் கட்டியபடி அவனின் மனையாள் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் விழிகளை கண்டதும், மொத்த பேச்சுமின்றி போய் அவன் கைகள் அப்படியே தேங்கி நின்றுவிட்டது.

அதனை கண்டு," யோவ் மாப்பிள வேஷ்டியை இறக்கி விடுயா! தங்கச்சி ஒரு மாதிரி பாக்குது "அவன் காதில் கூறினான் சுப்பிரமணி.

அவன் சொன்னதும் தூக்கி கட்டியிருந்த வேட்டியை இறக்கி விட்டவன் அவள் முகம் காணாது வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

சற்று நேரம் பொறுத்தவள் "ம்க்கும்" என்றாள்.

"மாப்பிள தங்கச்சி கூப்பிடுதுயா"

'என்ன'என்பதை போல் பார்க்க,

"உங்கள சாப்பிட கூப்பிடறாங்க! சீக்கிரம் டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வந்தா சாப்பிடலாம்" என்றாள்.

"உனக்கு பசிக்குதா?!வா சாப்பிடலாம்" வேகமாய் அவள் பக்கம் நகர்ந்தவனை தடுத்து நிறுத்தியவள் "இப்படியேவா?! எனக்கு ஒண்ணுமில்ல!! ஆனா எல்லாரும் ஏதாவது சொன்னா?" கேள்வியாய் அவனை பார்த்தாள்.

தன்னை முழுவதுமாய் பார்த்தவன் ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருப்பதை உணர்ந்து "நீ முன்னாடி போங்க நான் வரேன்" அவசரமாய் உளறிய நண்பனை ஆச்சரியமாய்‌ பார்த்தான் சுப்ரமணி.

அவளும் சரி என்பதாய் தலையசைத்து செல்ல,அவர்கள் சம்பாஷனைகளை 'ஆ' வென கேட்டுக் கொண்டிருந்தான் சுப்ரமணி.

அவள் சென்றதும்,"ஏன்யா மாப்ள? கொஞ்ச நேரம் முன்னாடி இந்த ஒன்பது மாசத்துலன்னு ஏதோ ராஜ்கிரண் கணக்கா தொடையை தூக்கி சபதம் எடுத்தியே?!எல்லாமே இந்த புள்ள தானா இல்லை செகண்ட் சேனல் வச்சிருக்கியா?!" அதிமுக்கியமாய் சந்தேகம் கேட்டவனை தலையில் தட்டினான் வீரா.

"அடிங்க நான் ஏக பத்தினி விரதனாக்கும்."

"ஓ.."

"என்ன ஓ.?"

"இன்னும் தங்கச்சியை நீ ன்னு சொல்றதா? இல்லை நீங்கன்னு சொல்றதான்னு தெரியாம முழிக்கிற?!இதுல உமக்கு சபதம் வேற?!"

"ஆமா மச்சான்! எனக்குமே அவளை பொண்டாட்டியா பாக்குறதா?! இல்லை போலீஸ்காரியா பாக்குறதா தெரியல?!" மிக கடினமான குரலில் கூறியவனை குழப்பமாய் பார்த்தான் சுப்ரமணி.

"மாப்பிள அப்போ உங்களுக்குள்ள"என கேட்ட நண்பனிடம்,எதுவும் பேசாது புன்னகையுடன் நகர்ந்து சென்றான் வீரா.
 
ORS:10
தங்கமயில் இதழ்களில் பாடல் ஒன்றை முணுமுணுத்து கொண்டே தன் காக்கி உடையை அணிந்து கொண்டவள் தன்னை ஒருமுறை பார்த்து கொண்டாள்."ச்சே கொஞ்சம் உடம்பு போட்டுருக்கேன்" எனும் போதே,நேற்று அவளுடன் பணிபுரியும் பெண் ஒருத்தி இதையே சொல்லி சிரித்ததும், கூடவே அனைத்திற்கும் காரணம் வீரா என கூறியதும் நினைவுகளில் எட்டி பார்க்க,"ம்ம்க்கும் இவரு என்ன பண்ணுனாராம் என்னய?"உதடு சுழித்தவள்," மூஞ்சியை தவிர எங்கயும் பார்த்து பேசினது கூட இல்லை.இதுல என் பூரிப்புக்கு அவருதேன் காரணம்னு கிண்டல் வேற?!" எண்ணி கொண்டவளுக்கு,அவனின் முகம் தோன்றி மறைந்தது.

இருவரின் வாழ்க்கையும் இப்போதும் அதே தாமரை இலை தண்ணீர் போல் தான் போய் கொண்டிருந்தது. இருவரின் இதழ் மொழி பேச்சுக்கள் எண்ணி விடலாம்.அதுவும் படுக்கை அறையில் பேச்சுக்கள் முற்றிலும் இல்லை என எண்ணும் போதே அதன் காரணத்தை நினைவடுக்கில் மீட்டது அவள் உள்ளம்.அவளையும் மீறி இதழ் புன்னகை பூத்தது,அன்றைய நாளினை எண்ணி?!
ஊரில் விருந்து முடிந்து திரும்பிய மறுநாள், மீண்டும் மீண்டும் கேட்ட அலைபேசி ஒலியில் அவசரமாய் குளித்து விட்டு அரை குறை ஆடையுடன் நீர் முத்துக்கள் சிதற ஓடி வந்தவள் மெத்தையில் கிடந்த அலைபேசியை வேகமாக எடுத்து அழைப்பை ஏற்றிருந்தாள்.

"எஸ் மேம் இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல ஸ்பாட்டுக்கு போய்டுவேன் மேம்"
அங்கு என்ன சொல்லபட்டதோ,
"ஓகே மேம்" என்றவள்,அலைபேசியை தூக்கி மீண்டும் மெத்தையில் தூக்கி போட்டுவிட்டு "செத்த நிம்மதியா குளிக்கதேன் விடுறாங்களா ச்சே" என நிமிர, அவள் குளித்ததன் பயனாய் அவள் மேலிருந்து விழுந்த நீர்த்துத்துளிபட்டு தூக்கத்திலிருந்து விழித்து பார்த்தவனின் விழிகளுக்கு தெரிந்தது பெண்ணவளின் தரிசனம் தான்.அவள் நின்ற கோலம் கண்டு சட்டென எழுந்து செல்ல ஓர் மனம் உந்தினாலும், எழுந்து செல்ல முடியாது,' நீயே உரிமைபட்டவன்' என அவன் இன்னொரு மனம் இழுத்து பிடித்து அமர வைத்து மக்கர் செய்தது.

பெண்ணவளின் வளைவு சுழிவுகள் எல்லாம் அவன் விழிகளுக்கு விருந்தாகி போக,எச்சில் கூட முழுங்காது அவளை பார்த்த படி இருந்தான்.

அப்போது தான் அவனின் விழியின் கூர்மையில் ஏதோ உணர்ந்து அவன் பக்கம் திரும்பினாள் தங்கமயில்.அவள் பார்வையில் அவன் விழிகள் இன்னும் மாறாது அவள் மேலே நிலைத்து நின்றது.

"ம்ம்க்கும்" என்றாள்.

அவனோ அவளை பார்த்த படி எழுந்து அமர,

"என்ன இவரு இப்படி பாக்குறாரு?"என அவள் எண்ண,அவனோ விழிகள் கூட சிமிட்டாது பார்த்து கொண்டிருக்க, அவனின் மோன நிலையை எப்போதும் போல் அவனின் அலைபேசி கலைத்தது.

அந்த ஒலியில் திடுக்கிட்டவன் யாரென காண,சுப்பிரமணி தான் அழைத்து கொண்டிருந்தான்.

சட்டென அதனை ஏற்றவன் "சொல்லு யா" வேகமாக எழுந்தவன் அவள் முகம் காணாது வெளியே வந்த பின் தான் மூச்சினை விட்டான்.

"ஏன்யா ஏதாவது முக்கியமா வேலை பாத்துட்டு இருந்தியா இப்படி மூச்சு விடுற?'

"ஏன் நண்பா?!எனக்கு இதுவரை எதுனா நல்லது பண்ணிருக்க நீயி?"

"இதெல்லாம் கணக்கா வச்சுக்க முடியும் மாப்பிள?! விடுயா விடுயா!"என்றான் அவன் பெருத்தன்மையாய்.

"அடேய் வேணாம்! என்னை பெரிய இக்கட்டுலயிருந்து காப்பாத்திருக்கன்னு ஒரே காரணத்துக்காக உன்ன உசுரோட விடுறேன். பேசாம போன வச்சிட்டு ஓடிரு சொல்லிட்டேன்" என அலைபேசியை வைத்தவன், தன் தலையில் அடித்து கொண்டே," அறிவு இருக்கா அந்த புள்ள உன்ன என்னனு நெனைச்சுக்கும்,ச்சே ஏதோ பட்டிகட்டான் மிட்டாய் கடையை பாத்த மாதிரி ஆன்னு பாக்குற" தன்னை தானே கடிந்து கொண்டான்.

அன்றைய தினத்திற்கு பின் அவள் இருக்கும் போது அறைக்கு வருவதை குறைத்தே விட்டான்.இவளாய் போய் பேச பெண்ணவளுக்கு ஏதோ ஒன்று தடுக்க,வாழ்க்கை இப்படியே போய் கொண்டிருந்தது.

அனைத்தையும் எண்ணி பார்த்து ஓர் நீண்ட பெருமூச்சு பெண்ணவளுக்கு,'மாமா இன்னைக்கு சட்னி செம்ம போங்க" என பாராட்டியவன் இதெல்லாம் உங்க தங்கச்சிக்கும் சொல்லி கொடுத்து வளத்திருந்தா,என் அய்யன் கொஞ்சம் பொழைச்சுருப்பாரு.எங்க நாக்கும் கொஞ்சம் ருசியை அறிஞ்சு வளந்துருக்கும்"

"ஏதேய் மாப்பிள உமக்கு கொழுப்பு கூடி போச்சாக்கும்" என இருவரின் சகஜமான பேச்சுக்கள் அவள் காத்துகளில் விழ,

"மாமனும் மாப்பிள்ளையும் எப்போவும் போல அவுங்க கச்சேரியை ஆரம்பிச்சாச்சு" என தன் உடையை மீண்டும் ஓர் முறை சரி பார்த்து விட்டு வெளிய வர,அவள் அரவம் உணர்ந்தது போன்று அவனின் உடலில் ஏதோ ஓர் உணர்வு பிரதிபலிப்பு,"வந்துட்டா போல" என எண்ணியவனுக்கு அவனை குறித்து அவனுக்கே ஆச்சர்யம் தான்.

இப்போதெல்லாம் அவளை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் அவன் கைகள் எல்லாம் ஜில்லிட்டு போவதை போல் உணர்ந்தான்."இந்தா வந்துட்டா என் மனச கொத்தா தூக்கிட்டு போவ" அவனுக்கு அவனே கவுண்டர் கொடுத்து நிமிர்ந்தவன் முயன்று எந்த உணர்வுகளையும் வெளியே காண்பிக்காதிருக்க படாதபாடுபட்டுவிட்டான்.

எப்போதும் போல் இயல்பாய் இருப்பதை போல் இருவரும் காட்டி கொண்டு கனகவேலின் எதிரில் அமர்ந்தனர்.

அவளுக்கு பிடித்தவற்றை அவள்புறம் தள்ளிய படி "மாமா நான் ஊருக்கு போய்ட்டு நாளைக்கு வரேன்" என்றான்.

பெண்ணவள் கைகள் அப்டியே நின்றது.

"என்னாச்சு மாப்பிள?"

"இல்லை மாமா நம்ம தோட்டத்துல பூ இப்பதேன் பிடிக்க ஆரம்பச்சிருக்கு,இப்போ இருக்குற வெயில்ல மொட்டு கொட்டிடாம இருக்க மருந்தடிக்கணும் மாமா அதேன்"

பெண்ணவள் முகம் சுருங்கி, வாடி பின் இயல்பாய் மாற,அதனை ஆணவன் உணராமல் போனால் கூட தந்தையாய் கனகவேல் உணர்ந்ததின் பயனாய் மகளின் தடுமாற்றத்தை எண்ணி சிரித்து கொண்டார்.

'மாமா அப்ப நான் கிளம்புறேன்' வெளியே செல்ல எத்தனித்தவன் பின் நின்று தன் மனையாளிடம் தலையாட்டி சென்றான்.அன்னிச்சை செயலாய் பெண்ணவள் சிரமமும் தானாய் ஆடியது.

ஊருக்கு சென்றவனுக்கு அங்கு இருப்பு கொள்ளவே இல்லை.சூரியகாந்தி தோட்டத்தினை சுற்றி சுற்றி வர,கையில் சோளத்தை வைத்து கொண்டு கொரித்த படி இதனை பார்த்து கொண்டிருந்தான் சுப்பிரமணி.

"என்ன மாப்பிள ஒரு மார்க்கமா திரியிற நீயி?"

"ஒண்ணுமில்லயா"என்றவன் இதழ்கள் விஷமமாய் விரிந்தது.

"சும்மா சொல்லுயா எதுவும் இல்லாமயா இப்படி சிரிச்சிட்டே இருக்க?"

"எங்க திரும்பினாலும் அவ முகமே தெரியுது யா.இத்தனை வருஷம் இந்த காட்லதானே பொழுதை ஓட்டினோம்.ஆனா இன்னைக்கு ஏதோ புதுசா பாக்குற போல இருக்கு,அதுவும் எல்லாம் அழகா தெரியுது."

"எல்லாம் அழகா தெரியுதா ம்ம்ம்!"

"இன்னொன்னு இருக்கு"

"அதென்ன?! அதையும் சொல்லிடு"

"எங்க பார்த்தாலும் உன் தொங்கச்சி யே தெரியுது யா."

"ஏதேய்!!அந்த புள்ளயா?சும்மாவே உர் உர்னு முறைக்குமேயா,அதுவா தெரியுது'!

"அட ஆமாங்கறேன் ஏன் இந்த மொட்டை பார்த்ததும் அவ சாப்பாடு பரிமாறிகிட்டே கண்ணுல ஒத்த புருவத்த மட்டும் தூக்கிட்டு ஒரு பார்வை பார்ப்பா பாரு யா?! அப்படிஇருக்கும்."

"ஹான் அப்புறம்"

"நான் என்ன கதையா சொல்றேன்"

"அப்போ இல்லையா"

"யோவ்!!"

"பின்ன நீயே அந்த புள்ளைய என்ன சொல்லி கூப்பிடறதுனு தெரியாம வாங்க போங்கனு சொல்லிட்டு திரியுற, இதுல உனக்கு இம்புட்டு பேச்சு?" மிச்சமிருந்த வறுகடலையை மொத்தமாய் வாயில் போட்ட சுப்பிரமணி "யோவ் நீ பாட்டுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருந்ததை உன் அம்மா பார்த்துச்சு உனக்கு வேப்பில அடிச்சுடும்.நல்லா கிளம்புறானுங்க மொட்டை பாக்குறேன் மொகரயை பாக்குறேன்னு " புலம்பி கொண்டு சென்றுவிட்டான்.

"ச்சே இவன்கிட்ட போய் சொன்னேன் பாரு" புலம்பியவன், "இவங்கிட்ட சொன்னதுக்கு அவகிட்டயே சொல்லிருக்கலாம்."

'யாரு நீயி!!" எப்போதும் போல் அவனின் ஆழ் மனம் சிரிக்க, "ஏன் நான் சொல்ல மாட்டேனா?" தனக்குள்ளே சண்டையிட்டவன்," இந்தா போன் பண்றேன்" அவளுக்கு அழைத்தும்விட்டான்.

வெகுநேர அழைப்பிற்கு பின் அதனை அவள் ஏற்கும் போதே பெண்ணவள் ஒருவனை பிடித்து அடித்து கொண்டே,"ஏன்டா பொண்டாட்டியா இருந்தா இப்படி டார்ச்சர் பண்ணுவியா?உன்ன எல்லாம் லாடம் காட்டணும் " பேசி கொண்டே போனில், "சொல்லுங்க யாரு" என்றாள்.

அதை கேட்க தான் அப்பக்கம் அவனில்லை!!போனை வைத்தவன்," ஆத்தி இவ யார சொல்றா தெரியலயே!இனி பண்ணுவ?என்னமோ போ டா!" என போனை வைத்திருந்தான்.
பெண்ணவளோ அவன் அழைத்த அழைப்பை கூட மறந்து போய் அவனை பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள்.ஆயிற்று இத்தோடு அவன் சென்று இரண்டு நாட்கள் கடக்க,தங்கமயிலின் நிலை தான் வார்த்தைகளில் சொல்ல முடியாது போனது.இரவில் அவன் இல்லாது தூக்கம் கூட அவளுக்கு எட்டாகனியாய் போனது. அதுவும் இன்று காலையில் நடந்ததை எண்ணியவள் இதழ்கள் விரிந்தது.கையிலே வண்டியின் சாவியை வைத்து கொண்டு அவள் தேடி கொண்டிருக்க,அவள் தேடியதை கண்ட கனகவேல்,

"தங்கம் என்னத்தமா தேடுற?சொன்னா அப்பாவும் தேடுவேனே?"

"ப்ச் எனக்கு ஸ்டேஷனுக்கு வேற லேட்டாகுது போங்க பா நீங்க வேற" என்றவள் மீண்டும் தேடினாள்‌.

'மா என்னனு சொல்லு டா?"

"பா கொஞ்ச நேரம் அமைதியாத்தேன் இருங்களேன்" என்றவள் 'உங்க மாப்பிள கூட சேர்ந்து சேர்ந்து நீங்களும் எப்போவும் பேசிக்கிட்டே இருக்கீங்க" மீண்டும் தேடி ஓய்ந்தவள் நாற்காலியில் அமர்ந்துவிட்டாள்.

அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவர் "என்னத்த தான் டா தேடுன நீயி?"

"என்னோட வண்டி சாவி பா" என்றாள் தண்ணீரை ஒரு மிடறு குடித்து விட்டு.

"ஓ அப்போ உன் விரல்ல மாட்டி இருக்கியே அது என்ன டா தங்கம்?" என்றார் நிதானமாய்.

அப்போது தான் பார்த்தாள் அவள் விரலில் மாட்டியிருந்த சாவியை "ச்சே கையில மாட்டிகிட்டுத்தேன் இத்தனை நேரம் தேடிட்டு இருந்தேனா?" தலையில் தட்டி கொண்ட மகளை பூரிப்புடன் பார்த்தார் கனகவேல்.

"ம்ம்ம் நல்லா கொட்டிக்கோ இதுல எனக்கும் என் மாப்பிள்ளைக்கும் சேர்த்து திட்டு வேற?"

"போதுமே உங்க மாப்பிள்ளையை சொன்னா உங்களுக்கு கோவம் வந்துடுமே!"சிரித்த படி வந்ததை எண்ணி இப்போதும் இதழ்கள் விரிந்தது.

"ம்ம்ம்..தங்கம் கல்யாணமானதும் உன் நடவடிக்கை ரொம்பதேன் மாறி கிடக்கு"என்றார் அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர்.

"ஆமா மேடம் ரெண்டு நாளா மூஞ்சி வாடுது பின்ன சிரிக்குது,இப்படிதேன் இருக்குது" மற்றொருவர் கூற, அங்குள்ள அனைவரும் சிரித்தனர்.

"மேடம்" என்றாள் தன் உயர் அதிகாரியிடம் சிணுங்கலாய்.

"நானும் உன் ஹஸ்பண்ட்டை இங்க உனக்கு சாப்பாடு கொடுக்க வரும் போது பாத்துருக்கேன்.பார்க்க நல்லாத்தேன் இருக்காரு "

"அச்சோ மேடம் அவரு பாக்க மட்டுமில்ல பேச்சும் அப்படித்தேன்!" என்றார் மற்றொரு பெண் வெக்கமாய்.

"அவ புருஷனை சொன்னா உனக்கு ஏன் இவ்ளோ வெக்கமா வருது" என்றார் உயர் அதிகாரி கேலியாய்.

"அச்சோ மேடம் " இன்னும் அந்த பெண் வெக்கம் கொண்டாள்.

'இன்னும் என்ன என்னடா பண்ணி வச்சுருக்க?'தங்கமயில் எண்ணும் போதே அவளின் எண்ணத்தின் நாயகன் அவள் முன்னே நின்றான்.

"நீ...நீங்க எப்படி?"என்றாள் அவனை கண்டதும் எழுந்து நின்று,

"வா" என்றான்.

"எங்க?"

"சொல்றேன் உடனே கையோட கிளம்பி வா "என்றான்.

"இப்பவேவா" என சற்று தள்ளி இருந்த உயர் அதிகாரியை பார்க்க,அவரும் புன்னகையுடன்" போய்ட்டு வா" என நகர்ந்தார்.

"வா" என இழுத்து வந்தவன் ஏறு என்றான்.

"நான் வேணும்னா என் வண்டில வரட்டுமா?" என்றாள்.

"ப்ச்..மயிலு நிலைம புரியாம கிளம்பு முதல்ல,உன் ஸ்டேஷன் தானே உன் வண்டி இங்கேயே இருக்கட்டும்" அவளை கையோடு அழைத்து சென்றான்.

"என்னாச்சு இவனுக்கு?" எண்ணியவளுக்கு அவனுடனான பயணம் பிடிக்க தான் செய்தது.அவன் இடையை பற்றுவோமா வேண்டாமா என உள்ளுக்குள் பட்டி மன்றம் நடத்த,முடிவாய் பிடிப்போம் என எண்ணி அவன் இடை தொடும் நேரம்,

"மயிலு மயிலு "என்றவன் குரலில்,

"ஹா..ஹான்!!" என்றாள்.

"இறங்கு எவ்ளோ நேரம் கூப்பிடறது?"

அப்போது தான் கண்டாள் வாகனம் நின்று விட்டதை,எங்கே? என பெண்ணவள் விழிகள் சுழல, அது புகழ் பெற்ற மருத்துவமனை என அறிந்த பின், "யாருக்கு என்னாச்சு?" பதற்றத்துடன் இறங்கினாள்.

"ஒன்னும் இல்ல வா"

"எங்க?"

"உள்ளத்தேன் வா" அவளை ஒட்டி நடக்க, அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்து சென்றாள்.

நேராய் இதய நோய் சிகிச்சைகான பிரிவிற்கு உள்ளே நுழைய,உள்ளுக்குள் சற்று படபடப்புடன் நடந்தவள் பாக்யத்தை காணவும்,

"என்ன அத்தை வந்திருக்காக?" சொல்லும் போது அண்ணாமலை அருகில் நிற்க,யாருக்கு என்ன என்று புரியாமலே அவர்களை நெருங்கினாள்.

"யாருக்கு என்னாச்சு அத்தை?" கேள்வியுடன் திரும்பி பார்க்க,அங்கே கனக வேல் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

 
ors :11

காலையில் நன்றாக இருந்த தந்தை இப்போது மருத்துவ உபகரணங்களோடு படுத்து இருப்பதை கண்டு என்ன சொல்வது என தெரியாது கலங்கி போனவள் "எ...என்னாச்சு? " கண்ணாடி தடுப்பில் முகம் பதித்து கனகவேலை பார்ப்பது, அனைவரின் மனதையும் கலங்க செய்தது.

கண்கள் கலங்கி அவள் நிற்க,அதனை கண்டவன் மனது அவளை தாங்க சொல்லி உந்தியது.ஆயினும் ஏதோ ஒன்று தடுக்க,"மா"என்றான் அன்னையிடம்.

மகனின் பார்வையில் தங்கத்தை தன் தோளில் சாய்த்து கொண்டவர் "ஒன்னுமில்லத்தா தம்பி இங்கின கிளம்பி வந்தான்.வந்து பார்த்தா அண்ணே மயங்கி கிடந்துருக்காரு.ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு எனக்கு உடனே போனை போட்டு சொன்னியான்.இப்போதேன் டாக்டர் வந்துட்டு போனாரு.ஒன்னுமிருக்காது.நீயும் அவனும் ஒரு எட்டு போய் என்னனு கேட்டு வா.எதுக்கு இப்படி அழுதுட்டு நிக்க, உள்ளாற போயி பாருத்தா எல்லாம் சரியா போவும். " நம்பிக்கையுடன் பேசினார்.

"அதானே என்னத்தா நீயே இப்படி வெசன படலாமா?உன் அப்பனுக்கு ஒன்னும் நடக்காதுத்தா போ அவன் கூட போயி டாக்டர் என்ன சொல்றாக கேளு?" அண்ணாமலையும் ஆறுதல் கூறினார்.

"இங்க யாருங்க கனகவேல் பேஷன்ட் அட்டென்டர் டாக்டர் கூப்பிறாரு" செவிலி அழைக்க, வீரா அவள் முகம் பார்த்து முன்னால் செல்ல,அவன் பின்னோடு சென்றாள் தங்கமயில்.

மருத்துவர் முன் இருவரும் அமர, "நீங்க பேஷண்ட்க்கு என்ன வேணும்?"என்றார்.

"நான் அவரு பொண்ணு"என்றாள்.

அவளின் காக்கி உடையை கண்டதும் மருத்துவர் முகத்தில் ஓர் மதிப்பு வந்ததை உணர முடிந்தது அவனால்!!

"பாருங்க மேம் உங்க அப்பாக்கு ஹார்ட்ல பிளாக் இருந்துச்சு,அத ஆஞ்சியோ பண்ணி ரிசால்வ் பண்ணிட்டோம்.நவ் ஹீ இஸ் ஆல்ரைட்.இனி அவருக்கு டையட் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க கூடவே டேப்லெட்ஸ் தரேன்" இருவர் முகத்தையும் பார்த்து நிலவரத்தை சொன்னார்.

இன்னும் தெளிவில்லமால் இருந்தவளை கண்டு "ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை மேம்.இப்போ இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.அவரோட பிஸிக்கல் ஹெல்த் இஸ் பெர்ஃபெக்ட்லி பைன்.சோ டோன்ட் ஃபீல்"


இன்னும் அமைதியாய் கலங்கிய கண்களுடன் இருந்தவளை கண்டு "தங்கம்" என்றவன் அவள் கையினை அழுத்தி கொடுக்க, கொஞ்சம் தெளிந்தவள் "ஓகே டாக்டர்" என வெளியில் வர,அங்கே அவள் முகம் பார்த்து நின்று இருந்தனர் அண்ணாமலையும் பாக்கியமும்.

அவர்களை பார்த்தவன் "மா என்னத்துக்கு இப்படி நிக்கிற? அதெல்லாம் உன் அண்ணனுக்கு ஒண்ணுமில்லயாம்.நீயும் அப்பாவும்"என ஆரம்பித்தவன் அருகில் இன்னும் அமைதியாகவே நிற்பவளை‌ பார்த்து‌விட்டு‌,"இல்லை நீங்க மூணு பேருமே வீட்டுக்கு போங்க"என தன்னவளையும் சேர்ந்து கிளம்ப சொன்னான்.

"இ...இல்ல.. நான் இங்க.. அப்பா கூடவே இருக்கேன்"என மறுத்தவளை வேண்டாமென்றான்‌ வீரா.

"எதுக்கு?நீ இங்க யூனிபோர்மோட நிக்கிறதை பார்த்து என் மாமன் ஏதோ பெரிய கள்ள கடத்தல் பண்றவன்னு நினைச்சுட்டு, போற வராது எல்லாம் எட்டி எட்டி பார்த்துட்டு போகுது.இதுல நீ இன்னும் இப்படியே அவரு காவலுக்கு நின்னுட்டு இருந்தா அம்புட்டுத்தேன்.நீ முதல்ல கிளம்பு தா"என கூற,


அதில் அவனை முறைக்க,அவளின் குண்டு விழிகள் உருட்டி விழிப்பதில் அவன் சற்று கிறங்கி போக,"மாப்ள!" என்ற சத்தத்தில் மீண்டும் உயிர் பெற்றான் வீரா.

அந்த அழைப்பில் அனைவரும் திரும்ப அங்கே செல்வம், கலை, சுப்பிரமணி என அனைவரும் நின்றிருந்தனர்.

"எல்லா நேரத்திலயும் நம்மள காப்பாத்தி விடவே இவன பெத்துவிட்டு இருக்காங்க போல"

சுப்ரமணி அருகில் வரும் போதே" யோவ் மச்சான் எனக்கு மயக்கம் மயக்கமா வருது யா?!.. புடியா புடி" அவன் தோள் சரிந்த நண்பனை கொலைவெறியுடன் பிடித்திருந்தான் வீரா.


"ஏதேய்!!யோவ் ஏன்யா?"என்றான் வீரா.

"உனக்கு தெரியாதா?! எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் வாடையே ஒத்துக்காதுனு.என்னய போய் வேணாம் வேணாம்ன்னு சொல்லியும் இழுத்துட்டு வருதுக ரெண்டும்" என மீண்டும் வீராவின் தோளில் நிலையில்லாமல் சாய்ந்து விட்டான்.

"தெரியுந்தேன்... அதுக்கு நீ ஏன் டா புதுசா மசக்கையா இருக்கிறவுக கணக்கா மயங்கி மயங்கி சரியிற?!" என்றான் கடுப்புடன் வீரவேல்.

வீராவின் தோளில் இருந்து நிமிர்ந்து "ஏன் சொல்ல மாட்ட,நீ பாட்டுக்கு பொசுக்குன்னு மாமனையும் அயித்தையும் கூட்டிகிட்ட,இங்க உன் தங்கச்சிக்கும் தம்பிக்கும் பதில் சொல்லி மாளமுடியல" மீண்டும் அவன் தோள் சாய, அவர்கள் அணைத்து நின்று இருப்பதை கண்டு செவிலி ஒரு மாதிரி பார்த்து விட்டு போனாள்.

"அடேய் கம்முனு இரு டா "என்றவன்,
என்ன கலை?"என்றான் தங்கையிடம்.

"இல்லை நான் போன் போட்டேன் யாரும் எடுக்கல,அதேன் நாங்க கிளம்பி வந்திட்டோம்"

"யாரும் எடுக்கலனா எல்லாரும் வேலையா இருக்காகன்னு அர்த்தம்,அதுக்குன்னு இப்படி எல்லாரும் இங்க கிளம்பி வந்தா அங்க தோட்டத்தில யாரு இருப்பா?என்ன இது இன்னும் பொறுப்பில்லாம இந்த மாதிரி பண்ணிகிட்டு" தங்கையை கடிய, அதில் அவள் முகம் வாடியது.

"ப்ச் என்ன டா இப்போ?அதேன் புள்ள வந்திட்டே,இவனுக்கு எப்போவும் அவன் தோட்டந்தேன் கண்ணு,இப்ப என்ன நான் அடுத்த பஸ்ல ஊருக்கு போறேன்" என்றார் அண்ணாமலை.


"நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன சொல்லுறீங்க,நீங்க இருந்து மாமா முழிச்சதும் போங்க" என கூறிவிட்டு செல்வத்தை கண்டு "நீ போய் கேன்டீன்ல எல்லாருக்கும் டீ வாங்கிட்டு உன் அண்ணிக்கு.மட்டும் டிகிரி காபி வாங்கிட்டு வா,சக்கர கொஞ்சம் ஜாஸ்தியா"என்றான்.

"யோவ் எனக்கும் காபியே சொல்லு" மீண்டும் அவன் தோள் சரிந்தான் சுப்ரமணி.

"இவேன் வேற பொசுக்குன்னு பொசுக்குன்னு விழுந்து வாறிட்டு கிடைக்கான்.அடேய் நீ வா யா முதல்ல" அவனை இழுத்து சென்று வாசலில் நிறுத்தினான்.

"மா டீயை குடிச்சிட்டு எல்லாரையும் கூட்டிட்டு கீழ வாங்க நான் வீட்ல விடுறேன் அவர் இங்க இருக்கட்டும் ",அவனின் அலைச்சலை கண்டு பெண்ணவள் "இல்லை நான் கூட்டிட்டு போறேன்" என்றாள் தங்கம்.

அவளை ஏற இறங்க பார்த்தவன்," பரவாயில்ல நானே கூட்டிட்டு வரேன்" என கூறி முடிக்கவும்,அதற்கு மேல் வாக்குவாதமின்றி அவனுடனே சென்று விட்டாள்.


ஆயிற்று இதோடு கனகவேல் வீடு திரும்பி இருநாள் கடந்திருக்க,ஆயிரம் பத்திரம் சொல்லி பாக்கியம் சென்றிருந்தார்.

அவள் எழுந்து வரும் போதே மாமனுக்கு காலை உணவாக சிறுதானிய கஞ்சியை கொடுத்து கொண்டிருந்தான் வீரா.அவன் அலைபேசி அழைக்கவும் அதனை ஏற்று நகர, "சாரி பா கொஞ்சம் லேட்டாயிடுச்சு,சாப்பிடும் முன்னே சாப்பிட வேண்டிய மாத்திரை எல்லாம் சாப்பிட்டிங்களா? " மாத்திரைகளை சரிபார்த்து கொண்டே வந்தாமர்ந்தாள் தங்கம்.

"இருக்கட்டும் தா மாப்பிள கொடுத்துட்டாக"என்றார்.


"ம்ம்ம்..."என்றவள் விழிகள் உண்டு கொண்டே ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவனை அளவிட்டது.எப்போதும் போல் ஓர் வித சாம்பல் நிற வேஷ்டி கூடவே அதற்கு தக்கன ஓர் மேல் சட்டை இரண்டு பொத்தான் அவிழ்த்து விட்ட நிலையில் யாரிடமோ தீவிரமாய் பேசிக்கொண்டிருந்தான் வீரா.

அவன் பேசும் போதே அவன் கை மீசையை முறுக்கி விட,எப்போதும் கண்டுருக்கிறாள் தான்!! அது இயல்பு போல் அவன் கைகள் அதன் பணியை செவ்வென செய்யும்,கொஞ்சம் வெளுத்த நிறம் தான் அவன்!அது இன்னும் அவனை அழகனாய் காட்டியது. கணவன் என்ற முறையில் அவன் பால் சென்ற மனதில்,இப்போது காதலால்,அவனின் பண்பால் அவளை மொத்தமாய் சாய்த்திருந்தான்.அதுவும் கனகவேலின் மருத்துவமனை வாசம்,அந்த சூழ்நிலையை கையில் எடுத்து அவனின் செயல் எல்லாம் கண் முன்னால் வந்து போக,"நமக்குத்தேன் இப்படி தோணுதா?இவனுக்கு அப்படி எல்லாம் இல்லை போல,பொண்டாட்டி தானே நானு?ஏதோ கல்லு மண்ணை பாக்குற மாதிரி பார்த்து வைக்கிறது?இதுக்கும் நானா போய் பேசி வச்சாலும்,ம்ம்ம்..சரின்னு முடிக்க வேண்டியது.என்னவோ போ டி தங்கம்,உன் வாழ்க்கைல கடைசி மட்டும் நீ அவ்வையார் தான் போல"என நீண்ட பெருமூச்சோடு தனக்குள்ளே பேசியவளுக்கு கலை சொன்னது நினைவடுக்கில் தோன்றவும் கூடவே அன்று சுப்பிரமணி சொன்னதும் சேர்ந்து நினைவு வர சிரித்து கொண்டாள்.

கலை சுப்பிரமணியோடு மல்லு கட்டி கொண்டிருக்க "என்னாச்சு?" என அவர்களிடம் வந்தமர்ந்தாள் தங்கம்.

"உங்களாலதேன் அண்ணே என்னை திட்டுச்சு" என்றாள் கோபமாய்.

"அட லூசே உன்ன இங்க வந்ததுக்கு திட்டல அங்க அவனோட சூரியகாந்தி தோட்டத்துக்கு எதுனா ஆயிடுமுனு திட்டினியான்"என்றான்.

"ஏன் சூரியகாந்தின்னா அவளோ பிடிக்குமா என்ன?"மயில் கேட்க,

"பின்ன மாப்பிள மறக்காம இருக்குறது ரெண்டு விஷயம் தான்.ஒன்னு அந்த தோட்டம் இன்னொன்னு எங்ககிட்ட பணம் வாங்கிட்டு ஓடி போன சிதம்பரத்தை" நண்பனை பற்றி சரியாக சொன்னான் சுப்ரமணி.

"ஆமா நானும் கேட்கணும் நெனைச்சேன்? இவ்ளோ விவரமா இருந்துட்டு எப்படி பணத்தை கொடுத்து ஏமாந்து போனீங்க?"

"அது ஒரு பெரிய கதை மா.மாப்பிளைக்கு சிங்கப்பூர் மேல அப்படி பிடித்தம்,கூடவே டீச்சர் மேலயும் தான்."

"டீச்சர் மேலயா?"தங்கம் குழப்பமாக கேட்க, கலை அவன் கூற்றில் இடுப்பில் குத்தினாள்.

ஆ என்றவன் பின் சுதாரித்து "இல்லைத்தா இல்லை நான் வேற ஏதோ சொல்ல வந்து இப்படி சொல்லிட்டேன்.என்ன சொல்ல வந்தேன்னா?! அந்த சிதம்பரம் இங்கையிருந்து ஆட்களை அனுப்புற ஏஜென்ட்,எங்களுக்கு முன்னாடி வர அவேன் அத நல்லத்தேன் செஞ்சுட்டு இருந்தான்.எங்க போதாத காலமா? இல்லை அவன் போதாத காலமோ? எங்ககிட்டயிருந்து பணத்த எடுத்துட்டு ஓடி போய்டியான்.அதுக்கு பின்னதேன் மாப்பிள தோட்டத்துல இறங்கிட்டாரு."

"அப்படியா?"

"அட நீங்க வேற அண்ணி ரெண்டும் ஜாடிக்கேத்த மூடி,இங்க கல்யாணத்துக்கு வரும் போதுதேன் சிங்கப்பூர் போக டெஸ்ட் அடிச்சிட்டு வந்ததுக" சுப்பிரமணியை முறைத்து கொண்டு சொன்னாள் கலை.

'அப்படியா?!' தங்கம் பார்க்க,

"அது ஒன்னும் இல்லை மா,அவனுக்கு அங்க போய் கொஞ்ச நாள் சம்பாரிக்கனும்,அவிக அம்மா அப்பா தம்பி தங்கச்சி எல்லாத்தையும் பார்க்கணும் சொல்லிட்டு கிடப்பான்.அதேன் ரெண்டு பேரும் டெஸ்ட் அடிக்க போனோம்"

சற்று யோசனையோடு அமர்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்த செல்வம்," அதெல்லாம் இல்லை அண்ணி.எங்க அண்ணே எப்போவும் அம்மாகிட்ட நான் சிங்கப்பூர் போவணும்.கொஞ்சம் சம்பாரிச்சுட்டு இங்க அந்த சிங்கப்பூர் சிலுக்கு ஜிப்பா வாங்கிட்டு வந்து ஒரு டீச்சர் புள்ளய கட்டுறோம்னு சொல்லிக்கிட்டு திரியும்" உண்மையை உடைத்து விட்டான்.

"சிங்கப்பூர் போறது கூட சரித்தேன் ஆனா இந்த சிலுக்கு ஜிப்பாவும் டீச்சரும் தான் எனக்கு புரியல?" கேள்வியாய் சுப்பிரமணியை பார்க்க, முழித்தான் அவன்.

"அந்த ஜிப்பா அங்கிருந்து வந்ததும் கடை கண்ணி வச்சு பொழைக்கறதுக்கு என சொல்லியவன்,போதும் தா இதுக்கு மேல ஒன்னும் கேட்காத?", என எழுந்தவன்," அவனுக்கு டீச்சர் புள்ளங்க மேல அப்படி ஒரு கிறுக்கு.கட்டுனா அப்படி ஒரு புள்ளய தேன் கட்டுவேன்னு சொல்லிட்டு திரிஞ்சியான்" விட்டால் போதுமென சொல்லிவிட்டு, வேகமாய் ஓடியதை எண்ணி அவளுக்கு இப்போதும் சிரிப்பு வர கொஞ்சம் சத்தமாய் சிரித்து விட, தூரத்தில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த வீராவின் காதுகளில் விழுந்தது.

அவள் சிரிப்பொலியில் என்வென்று பார்க்க,அவளோ பார்வையை விலக்காது சளைக்காமல் அவனை பார்த்த படி இருந்தாள்.

அவள் பார்வையில் பேச்சை நிறுத்தியவன்," இப்பெல்லாம் இந்த போலீஸு ஒரு மார்க்கமா நம்மள பாக்குற மாதிரி இருக்கே?'என மீண்டும் பார்க்க, அவளோ இப்போது தீவிரமாய் உணவை உண்டு கொண்டிருந்தாள்.

"ச்சே ச்சே இருக்காது நம்ம மனபிராந்தியாத்தேன் இருக்கும் "என மீண்டும் பார்க்க,அவள் அவனை பார்த்து கொண்டே "அப்பா இந்த டீச்சர் வேலையெல்லாம் எப்படி?"

" ஏன்த்தா கேக்குற?"என்றார் புரியாது.

"நேத்து ஒரு கேஸ் அனலாலிஸிஸ்பா,இப்பெல்லாம் கல்யாணம் பண்ணுனா டீச்சரதேன் கல்யாணம் பண்ணனும் சில பேர் எல்லாம் கிறுக்கு பிடிச்சு அலையறாகளாம்."

"அப்படியா?இப்படியுமா இருப்பாக?"

"ம்ம்ம்...அதுக்கு என்ன செய்ய?"

"என்ன செய்ய அவனுங்களை கொண்டு போய் ஏர்வாடி சேர்த்திட்டு வர சொல்லு பிடிச்ச கிறுக்கு தெளியும்"

"செய்யலாம் செய்யலாம்.ஏன் பா உங்களுக்கு அங்க யாரையும் தெரியும்?"வீராவை பார்த்து வினவ, அதிகமாக வியர்ப்பதை போல் சட்டை காலரை பின்னால் இழுத்து விட்டான் அவன்.

"ஆஹா ஏதோ கண்டுபிடிச்சிட்டு போலவே இந்த போலீஸு கிளம்பிடுடா வீரா, " ரொம்ப புழுக்கமா இருக்கு. இந்தா வரேன் மாமா" வேகமாய் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

வெளியே வந்தவன் நண்பனுக்கு அழைத்தான்.

"சொல்லுயா மாப்பிள!"

"யோவ் இந்த போலீஸ் என்ன பத்தி எல்லாம் கண்டு பிடிச்சிட்டு போலயா?"

"ஆரு?"என்றான் சுப்பிரமணி புரியாது.

"எல்லாம் என் வீட்டு போலீஸ்காரம்மாதேன்"

"அப்படி என்னத்த கண்டுபிடிச்சுடுச்சு.உன் திருட்டு தம்மா, இல்லை நீ சரக்கு அடிக்கறதயா,இல்லையே மச்சான் நம்ம சரக்கு அடிக்கிறதுதேன் ஊர் அறிஞ்ச ரகசியமாச்சே!வேற என்னவா இருக்கும் யோவ் வேற எதுவும்? "என இழுத்தவன் "அட உனக்கு பொம்பள சோக்கு கேக்குதா அதுவும் போலீஸ்காரம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு" பேசி கொண்டே செல்ல, கடுப்புடன் பல்லை கடித்தான் வீரா.

"நிறுத்துயா யோவ்!! ஏதோ ஓலை பாயில ஒண்ணுக்கு போற கணக்கா நிக்காம போற,நானு?? பொம்பள சோக்கு?! நீ பார்த்த?! அடேய் கிராதகா?!கட்டுன பொண்டாட்டியேவே தொட முடியாம கிடக்கேன்.இதுல நான் போய்"

அவன் குரலில் இருந்த பேதம் கண்டு "எதேய்.. என்ன யா உங்களுக்குள்ள பிரச்சனை?அந்த பிள்ள உன் மேல பாசமாத்தேன் நடந்துக்குது "

"இருக்கலாம்"என்றவன் கைகள் இப்போது மீசையை திருகி கொண்டது.

"என்னத்த இருக்கலாம்னு இழுக்குற?அதெல்லாம் இருக்குதேன்" என்றான் சுப்பிரமணி.

"ப்ச்...ஆனா நான் நல்ல புருஷனா?"

"என்னயா சொல்ற?உனக்கு உடம்புக்கு எதுவும்?!அதுக்கெல்லாம் நம்ம கைவசம் ஒரு வைத்தியன் இருக்கான்யா,அவன்கிட்ட சொல்லி சிட்டுக்குருவி லேகியம் வாங்கி தரேன் நண்பா..நீ மனச தளர விடாத " தீவிரமாக பேச, வீராவின் பொறுமை பறந்தது.

"யோவ் நிறுத்து யா! சும்மா எதுனா சொல்லிக்கிட்டு,நான் என்ன சொல்ல வந்தேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க?அவ போலீஸ்காரி,இங்கின என் சம்பாதியம் என்ன சொல்லு?இதுல எங்குட்டு போய் அவகிட்ட பேச?அதுக்குத்தேன் இப்போ நம்ம டெஸ்ட் அடிச்ச கம்பெனி ஏஜென்ட்கிட்ட பேசிட்டு வரேன்.இன்னும் மூணு மாசத்துல விசா வந்துடும் சொல்லிட்டியான்.அதுவும் நமக்கு நல்லதுக்குதேன். தோட்டத்துல பூவையும் எடைக்கு போட்டுடலாம்.அதுக்கு பின்ன கிளம்பனும். நீயி மூட்டை முடிச்ச கட்டி ரெடியா இரு" கூறி வைக்க போனவன்" அது சரி உனக்கு எதுக்கு சிட்டுகுருவிலேகியம் செய்யிறவேன் கூட சகவாசம்?! ம்ம்ம்...நீயி கொஞ்ச நாளா ஒரு மார்க்கமாதேன் இருக்க?! இரு டி ஊருக்கு வந்து உன்ன வச்சுக்குறேன் " கூறி வைக்க, அங்கே அலைபேசியை பரிதாபமாய் பார்த்து கொண்டிருந்தான் சுப்பிரமணி.
 
Status
Not open for further replies.
Back
Top