இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

அத்தியாயம் 3

Ruthivenkat

Moderator
Staff member
KMK3:

"அச்சோ என்ன சொல்றிங்க? அப்புறம் எதுக்கு இவளை கல்யாணம் பண்ணிங்கண்ணே?!" தவமலரின் வாய் நிற்குமா?! உடனே கேட்டு விட்டாள். ஆனால் அதிர்ந்து பார்க்க வேண்டியவளோ, யோசனையுடன் தாத்தாவின் அறையையே பார்த்து கொண்டிருந்தாள். இங்கிருந்து பார்க்கும் பொழுதே தாத்தா நாட்காட்டியின் தாள்களை அடுத்தடுத்து புரட்டி கொண்டு ஏதோ விவரம் பார்ப்பது நன்றாகவே தெரிந்தது.

"ஏன்னா எனக்கு ஜாமூனை தான் கல்யாணம் பண்ண பிடிச்சுருக்கு சிஸ்டர்? கோல்டியை உங்க எல்லாருக்கும் பிடிக்கும். அவ்வளவு சாஃப்ட் அவ..‌என்ன கொஞ்சம் வாய் தான் ஜாஸ்தி! பேசிட்டே இருப்பா.. இருந்தாலும் அவ பேசுறதை நாள் முழுக்க கேட்டுட்டே இருக்கலாம்.." ப்ரையனின் விளக்கத்தில் பாட்டிக்கு மயக்கம் வராத குறை?!

"எதேய்..." முத்து முத்தாய் வியர்த்து தலைசுற்ற தன்னை‌ சமாளித்து அருகிருந்த தூணின் மேல் சாய்ந்து நின்ற பாட்டியை," ஏய்.. மங்கை..." தக்க சமயத்தில் கீழே விழாமல் பிடித்திருந்தார் அப்பொழுது தான் உள்ளே நுழைந்த வடிவம்மை.

அவரின் சத்தத்தில், ஜமுனாவும் சிந்தனை கலைந்து பாட்டியிடம் வேகமாக செல்ல, அருகிருந்த நாற்காலியில் அவரை அமர வைத்திருந்தார் வடிவு.

"வடிவு.. உன்னால என் பேத்தி வாழ்க்கையே கேள்விகுறியாகிடும் போல இருக்கே? இந்த பையன் ஏற்கனவே எனக்கு ஒரு பொண்ணை பிடிக்கும். வருஷக்கணக்குல அவ என்கூட தான் இருக்கா? இப்ப இங்க வந்துட்டுருக்கான்னு வேற சொல்றானே? அப்ப என் பேத்தி கதி?" முந்தானையில் மூக்கை சிந்தி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட, ' இது என்ன புது குழப்பம்?' என்பதை போல் முழித்தார் வடிவு.

"அய்யோ.. பாட்டி.. முதல்ல அழுகையை நிறுத்து.. அவர் சொன்னது அவர் ஆசையா வளர்க்குற செல்லபறவை கிளியை!!" பாட்டியின் கண்களை துடைத்து விட்டு கிட்டதட்ட கத்தினாள் ஜமுனா.

"உனக்கு எப்படிடி தெரியும்? இன்னைக்கு தானே நீ இவனை பார்க்குற?" பாட்டி சந்தேகத்துடன் கேட்க, இதழ்குவித்து பெருமூச்சு விட்டாள் பேத்தி.

"கல்யாணம் முடிஞ்சதும் என்னை கொஞ்சநேரம் மாலினி அக்கா கிட்ட தானே விட்டுட்டு போன? அப்ப கௌதம் அண்ணாவும் மாலினி அக்காவும் இவங்களை பத்தி எல்லா விவரத்தையும் என்கிட்ட சொன்னாங்க!! இவங்க சம்பந்தபட்ட ஆட்களையும் காண்பிச்சு, இவங்களோட பாண்டிச்சேரி அட்ரெஸையும் வாட்சப் பண்ணிருக்காங்க.. நம்ம வீட்டுக்கு வந்து நம்ம தாத்தாகிட்டயும் உன்கிட்டயும் பேசறேன்னு சொல்லியிருந்தாங்க!!.. அதுக்கு முன்னாடியே இப்படி கலவரம் ஆயிடுச்சே?! இரு நானே காண்பிக்கறேன்... தவம் என் ஃபோனை கொடு புள்ள" தனது அலைபேசியை திறந்து அனைவரையும் காண்பிக்க, கூடியிருந்த அக்கம்பக்கத்தினர் அனைத்தும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

"இதோ பாரு.. தங்கமஞ்சளும் இளம்மஞ்சளும் வெள்ளை மேல கலந்து ஒரு கிளி இருக்கு பாரு... இதுதான் கோல்டி"

"எஸ்..இதுதான் கோல்டி. இந்த ஃபோட்டோ கூட நான்தான் எடுத்தேன் பாட்டி" பாட்டி சேரில் அமர்ந்திருக்க, முட்டிகாலிட்டு அவருக்கு காண்பித்து கொண்டிருந்தவளின் அருகில் தானும் முழங்காலிட்டு அவளருகே அமர்ந்து அலைபேசியை கையில் வாங்கிய ப்ரையனும் சொல்ல, தன் கன்னம் தீண்டும் அவன் மூச்சுக் காற்றில், சட்டென எழுந்த ஜமுனா தவமலரின் மேல் இடித்து நின்றாள்.

"டீ.... காலைல சோப்புக்கு பதிலா ஃபெவிகிக்கை போட்டு குளிச்சிட்டியா? அண்ணே இப்படி உன்னை ஒட்டிக்கிட்டு திரியுறாக?" தோழியின் கலாய்ப்பில் முறைத்தாள் அவள்.

"இரண்டுமணி நேரத்துக்கு முன்னாடி இவர் யாரு என்னண்ணே தெரியாது? எப்படிடி உன்னால இப்படியெல்லாம் பேச முடியுது?"

"அட!! லவ்வுன்னா அப்படிதான் புள்ள! துணில ஒட்டுற சாயமாட்டம் உடனே ஒட்டிக்கும்.. நீங்க இரண்டு பேரும் ஒன்னா கீழ விழுந்ததுல தூசிக்கு பதிலா அவர் மனசுல நீ ஒட்டிக்கிட்டடி?! இது தூர நின்னு பார்க்குற என் கண்ணுக்கே தெரியுது?! உனக்கு புரியலயா என்ன?" என, கலங்கிய முகத்துடன் அவனை தான் பார்த்தாள் ஜமுனா.

ப்ரையனும் அப்பொழுது திரும்பி அவளை பார்த்தவன், புன்னகைத்து விட்டு பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

"பாரு.. நீ பார்த்தா கூட அவருக்கு தெரியுது? உடனே திரும்பி பார்க்குறாரு?!" தவமலர் சிலாகித்து கொள்ள, தோழியை ஆற்றாமையுடன் பார்த்தாள் ஜமுனா.

"ஓ.. அவரு பார்க்குறாரு.. நீ அதை சுவாரசியமா வேடிக்கை பார்க்குற? இங்க என்ன லைவ் ஷோவா நடக்குது?! உன்னோட முடியலைடி..இங்க நான் என்ன ஃபீல் பண்ணிட்டிருக்கேன்? நீ என்ன பேசிட்டிருக்க?..ப்ச்..." தலையை பிடித்து கொள்ள, அங்கிருந்த உறவினர்கள் பார்வை தோழிகள் மீது படிய, அதை கவனித்த தவமலர், மீண்டும் அவளை இழுத்து கொண்டு ப்ரையனோடு அவள் அமர்ந்த இடத்தில் அமர வைத்தாள்.

"ஏய்.. ஜம்மு.. என்னாச்சு உனக்கு?! இவ்வளவு நேரம் தைரியமா தானே இருந்த?! சொல்லப்போனா உன்னைபோல சூழ்நிலையை சமாளிக்குற தைரியம் எனக்கு சுட்டு போட்டாலும் வராதுன்னு உன்னை நினைச்சு பெருமை பட்டுட்டுருக்கேன்? நீ என்னடான்னா இவ்வளவு கலக்கத்தோட நிக்குற?"

"தாத்தாவோட மரியாதைய காப்பாத்த சட்டுன்னு‌ முடிவெடுத்துட்டேன்டி. ஆனால் இதுக்கப்பறம் என்ன நடக்கப்போகுதோன்னு எனக்கு உண்மையாவே கலக்கமா தான் இருக்கு?!
உனக்கு தான் தெரியுமே?! எனக்கு கல்யாணத்துக்கு கூட தாத்தா வீட்டோட மாப்பிள்ளையா தான் பார்த்தாரு?! ஆனால் இனி.. இவரு யாரு எப்படின்னு கூட தெரியாம?! தாத்தா பாட்டியை தனியா விட்டுட்டு.. நினைச்சாலே எனக்கு படபடப்பா இருக்கு" ப்ரையனை பார்த்த ஜமுனாவின் பேச்சில் அவளது பயம் தவத்திற்கு நன்றாகவே புரிந்தது. ஏன் அவளுக்கும் கூட கலக்கமாக தான் இருந்தது?! என்ன தான் ப்ரையன் ஜமுனாவை பார்த்த மாத்திரத்தில் விரும்பி திருமணம் செய்திருந்தாலும் அவள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டி விடுவானா என்ன?! அவளும் யோசனையுடன் ப்ரையனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

வடிவம்மையும் மங்கையர்கரசியும் ஒருவரை‌ பார்த்து ஒருவர் புன்னகையுடன் பேசிக்கொண்டிருக்க, இவர்களை நோக்கி எழுந்து வந்தான் ப்ரையன்‌.

வந்தவன் ஜமுனாவை பார்த்த மாத்திரத்தில்," ஆர் யூ‌ ஓகே ஜாமுன்? " என, தலையை மட்டும் அசைத்தாள் அவள்.
அவளது தலையாட்டலை வித்தியாசமாக பார்த்தவன், அடுத்து பேச வரும்முன்," நல்லவேளை வடிவு. சரியான நேரத்துக்கு வந்த?! நான் கூட ரொம்ப பயந்துட்டேன்!" மங்கையர்கரசி அவளது அலைபேசியை கையில் கொடுத்தார்.

"மாலினி தான் இங்க கிளம்பி வர்றதா இருந்துச்சு ஜமுனா. பிள்ளைத்தாச்சிய எவ்வளவு நேரம் அலையை வைக்குறதுன்னு கொஞ்சம் ஓய்வெடுன்னு நான் கிளம்பி வந்துட்டேன். இவரை பத்தின எல்லா தகவலையும் உங்ககிட்ட சொல்லிட்டு, அப்படியே தாத்தாவையும் சமாதானப்படுத்திட்டு வரனும்னு தான் கிளம்பினாங்க.. ஆனாலும் சூட்டு வலி கண்டுடுச்சு.. அதனால அவளை அங்க விட்டுட்டு நான் ஓடி வந்தேன். எந்த கவலையும் படாத ஆத்தா..‌ உன் நல்ல மனசுக்கு நல்ல மாப்பிள்ளையா தான் அமைஞ்சுருக்காரு" ஜமுனாவிற்கும் ப்ரையனிற்கும் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.‌

"நீங்க செஞ்ச உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன். ஜமுனாவும் என் பேத்தி தான். அவளை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு" கலங்கிய கண்களை துடைத்து கொண்டு, ப்ரையனின் கைகளை பிடித்து கொள்ள, புன்னகைத்தான் அவன்.

"ரொம்ப நல்ல பையன் மங்கை.. சாதாரண வேலை பார்க்குறான்னு நினைச்சுடாத.. இந்த வேலை பார்க்கறதுக்குன்னே லண்டன்ல படிச்சுட்டு வந்துருக்காரு.. என் பேரன் அவருக்கு கொடுக்கற சம்பளமே சில லட்சத்தை தாண்டும். சொந்தமா சென்னைல வீடும், சொத்தும் கூட இருக்கு.. நாம தேடிப்பார்த்தாலும் இதெல்லாம் விசாரிச்சு தானே மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து இருப்போம். அதனால எல்லாமே என் பேரன் கௌதம் கிட்ட விசாரிச்சுட்டு தான் வந்திருக்கேன்.. நான் ஒரு கிறுக்கி.. இதையெல்லாம் உன்கிட்ட மட்டுமே பேசிட்டு இருக்கேன் பாரு. மாமாகிட்ட சேர்த்து சொல்லனும்னு தான் கிளம்பி வந்தேன். ஆமா... மாமா எங்க?.. வந்த பிள்ளைங்களை வேற இங்கனயே உட்கார வச்சுருக்க? பாலும் பழமுமாவது குடுத்திங்களா?" கேட்டவரின் கண்கள் சுற்றிலும் பார்த்து கொண்டே இருந்தது.

"எங்கே தேடுற? பூஜை அறைக்கு எதிர்த்த அறைல தான் உட்கார்ந்துருக்காரு!.. நல்லா கொதிக்கிற நெருப்பு கங்கு கணக்கா முகத்தை வச்சிறக்கவர்கிட்ட போய் பேச எனக்கே பயமாருக்கு? கல்யாணம் முடிஞ்சதும்,கொஞ்சநேரம் மண்டபத்துல நில்லுங்க, அம்மனை தரிசனம் பண்ணிட்டு, நாமளும் ஆசிர்வாதம் பண்ணிட்டு வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்னு சொல்லிட்டு, ஒரு எட்டு அம்மனை பார்க்கதான் இந்த பிள்ளைங்களை கூட்டிட்டு போயிட்டு வந்தேன். வந்தா இந்த மனுஷனை காணோம்!! விருட்டுன்னு நடந்து வந்து எங்களுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல வந்து நிற்கிறாரு?! அதுவும் பேத்தி வீடு வந்து சேர்ந்ததும் என்ன எதுன்னு கூட கேட்கலை?! நேரா அந்த ரூமுக்குள்ள போய் உட்கார்ந்தவரு தான்! வந்த சொந்தக்காரங்களை கூட கவனிக்க வெளியே வரலை!? இப்படி இருந்தா நான் என்ன பண்ண?! இன்னும் சில முக்கியமான விஷயங்கள் வேற பேச வேண்டி இருக்கு?" கணவனின் குணம் அறிந்து, கலக்கத்துடன் பிரையனை பார்த்தவர்,கைகளை பிசைந்து கொண்டு தன்‌ மனப்பாரத்தை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டார் பாட்டி.

"இப்ப என்ன பண்றது?"

"வேற என்ன பண்ண? ஜமுனாவால மட்டும்தான் அவங்க தாத்தாவை சமாதானப்படுத்த முடியும்!" பேத்தியை பார்க்க, எழுந்து நின்றவளோ கலக்கத்துடன் பாட்டியின் கைகளை பிடித்து கொண்டாள்.

"தாத்தா என்ன சொல்வாறோன்னு எனக்கே பயமா தான் இருக்கு பாட்டி?!"

"நான் வேணும்ன்னா பேசறேனே?!" ப்ரையனும் எழுந்து நிற்க, "அய்யோ... வேணாம்.." மூவரும் ஒன்றாக கத்த, வித்தியாசமாக பார்த்தான் அவன்.

"ஏன்? என்ன ப்ராப்ளம்?"

"நீங்கதான் ப்ராப்ளமே?" யோசிக்காமல் சொல்லியிருந்தாள் அவன் விரும்பிய ஆசை மனைவி.

"வாட்?!"..

"ஆமா.. தாத்தாக்கு வெள்ளைக்காரங்கனாலே பிடிக்காது!"

"ஏன்?"

"அது...அது.. அது வந்து..." ஒருவாறு இழுத்து காரணத்தை சொல்லி விட்டாள் ஜமுனா.

"அப்போ உன்னை எனக்கு கொடுக்க மாட்டாரா ஜாமூன்? இந்தியால டேட்டிங் போக தானே விட மாட்டாங்க? கல்யாணம் பண்ணா கூட சேர்ந்திருக்க முடியாதா? இங்கெல்லாம் தாலி கட்டிட்டாலே ஹஸ்பன்ட் வைஃப் ஆயிடுவாங்க தானே? நான் நிறைய மேரேஜஸ் அப்பறம் மூவிஸ்ல பார்த்துருக்கேனே?" அப்போ என் சாக்லேட்டை எனக்கு கொடுக்க மாட்டாங்களா ஏக்கத்துடன் சாக்லேட்டை பார்க்கும் பச்சிளம் பாலகனை போல் தனை மறந்து பேசிக்கொண்டிருந்த ப்ரையன் அங்கிருந்த அத்தனை பெண்மணிகளின் அனுதாப ஓட்டையும் ஒட்டு‌மொத்தமாக அள்ளியிருக்க, தனது ஆசையை இத்தனை வெளிப்படையாக பேசுபவனின் பேச்சில்?! 'அப்படி என்ன கண்டு விட்டான் என்னில்?!'என, முகம் சிவக்க நின்றிருந்த ஜமுனாவை பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு வாய் பொத்தி நின்றாள் தவம்.

"அப்படி போடுங்க பங்காளி.. நவீன நாட்டாமைய பார்க்குற மாதிரியே இருக்கு.. இந்த ஊருக்கு ஏத்த மாப்பிள்ளை நீங்கதான்யா!" தனது உயரத்துக்கு நிகராக, நிறத்துக்கு எதிராக கார்மேக கண்ணனாக சிநேகப் புன்னகையுடன் நின்றிருந்தவனை புரியாமல் பார்த்தான் ப்ரையன்.

"டேய்.. பரிதி...இப்பதான்டா எனக்கு நிம்மதியா மூச்சே வருது?! எப்படா வந்த?" மங்கை அவனின் தாடை பிடித்து கொஞ்ச, "இப்பதான் பாட்டி வந்தேன்.." பாட்டியை தழுவி கொண்டவனை ஜமுனா பார்த்து சிரிக்க,' ம்க்கும்.. வந்துட்டான்..' தவமலரோ அவனை பாராதது போல் முகத்தை வேறு புறம் திரும்பி கொண்டாள்.

"தாத்தாவை எப்படியாவது சமாளிடா?என்ன நடந்ததுன்னா?" மங்கை ஆரம்பிக்க, தடுத்து விட்டான் அவன்.

"கேள்விப்பட்டேன் பாட்டி.. ஊரு முழுக்க இந்த பேச்சு தானே?" என்றவன் ப்ரையனிடம் திரும்பினான்.

"ஹலோ.. மாப்பிள்ளை சார்.. மைசெல்ஃப் பரிதி.. உங்க வைஃப்கு அண்ணன் முறை. தாத்தாவோட ஒண்ணுவிட்ட தம்பியோட பேரன். நமக்கும் இந்த ஊர்தான். ஒரு கான்ட்ராக்ட் விஷயமா திருச்சி வரை போயிட்டு இன்னைக்கு தான் வந்தேன். முதல்ல வாழ்த்துக்கள் உங்க இரண்டு பேருக்கும்" கைகுலுக்க, சந்தோஷத்துடன் புன்னகைத்தான் ப்ரையனும்.

"எங்க பொண்ணை ரொம்பவே பிடிச்சு போச்சு போலவே? எங்க தாத்தாவை மீறி பார்த்த உடனே கல்யாணம் பண்ணிட்டிங்களே?! கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க.. நடந்த விஷயத்துல எல்லாரும் ரிலாக்ஸாக கொஞ்சம் டைம் ஆகும்.."

"அப்போ இதை கொஞ்ச நேரம் கழட்டிக்கலாமா?" தனக்கு ஒரு தோழன் கிடைத்து விட்டதை போல் சகஜமாக ப்ரையன் கேட்டு கொண்டே கழுத்திலிருந்த மாலையை கழற்ற,
"நிச்சயமா.. ஜமுனா மாப்பிள்ளையை உன்னோட அறைக்கு கூட்டிட்டு போம்மா.. கொஞ்சநேரம் ஓய்வெடுக்கட்டும்.. பாட்டி நீங்க தாத்தாகிட்ட போங்க... நானும் வர்றேன்.."

"அண்ணா நானும் வர்றேன். எல்லாத்துக்கும் காரணம் நான்தானே? தாத்தாவை முதல்ல நான் சமாதானப்படுத்துறேன்.. நீங்க மட்டும் போனா அவரை சமாளிக்க முடியாது" ஜமுனா பதற்றத்துடன் சொல்ல, நிர்தாட்சண்யமாக மறுத்தான் பரிதி.

"தாத்தா ரொம்ப கோபத்துல இருக்காரு? என்ன பேசுவாருன்னு தெரியாதுடா? நிச்சயம் நீதான் வந்து அவரை சமாளிக்கும்?! ஆனால் கொஞ்சநேரம் ஆகட்டும்! நீ முதல்ல மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் ரிலாக்ஸாக விடு.. நான் வந்திருக்க ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன்.." முடித்துவிட்டான்.
"ஆமா.. பதட்டத்துல எனக்கும் இது தோணவே இல்லைடா?!.. கூட்டிட்டு போம்மா.." மங்கை பேத்தியிடம் சொல்லிவிட்டு செல்ல, வடிவம்மையும் அவர் பின்னோடு சென்றார்.

"அவர் சரியா தான் சொல்றாரு!? நீயும் மாலையை கழட்டிட்டு ரெஸ்ட் எடு ஜாமுன். இதை எங்க வைக்கனும்?!" யோசனையுடனேயே மாலையை கழற்றியவள்," கொடுங்க நானே வைக்கிறேன்.. உங்க ரைட் சைட்ல இருக்கற ரூம்" அவன் கையிலிருந்ததை அவள் வாங்க," கொடுடி.. நான் கூட கொண்டு வர்றேன்.." தவமலர் உதவ முன்வந்தாள்.

"உங்க ஹெல்ப் இனி அவளுக்கு தேவைப்படாது ஃப்ளவர் மேடம்?" அங்கு நின்றிருந்த பரிதி அவள் பின்னால் பேச, அத்தனை நேர இறுக்கம் தளர்ந்து சிரித்தாள் ஜமுனா. அவர்கள் இருவரது சண்டையையும் தினமும் பார்ப்பவளாயிற்றே?! அதுவும் தவம் வீட்டிலிருந்தால் வம்பிழுப்பதற்கென்றே எங்கிருந்து தான் கிளம்பி வருவானோ தெரியாது?!

"அண்ணே?! இன்னைக்குமா? அவளை விட்டுடுண்ணே?" ஜமுனா சகஜமாக பேச, வசீகரிக்கும் புன்னகையுடன் கலகலத்து பேசி கொண்டிருந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் ப்ரையன்.

"அப்ப சரி.. இனி உங்க அண்ணனே எல்லாம் பார்த்துக்கட்டும் புள்ள?! நான் வீட்டுக்கு கிளம்பறேன்"

"அச்சச்சோ..‌ தாத்தாகிட்ட இருந்து என்னை அடிவாங்காம யாரு காப்பாத்துவா?"

"எதேய்.."

"நிசமாதான் ஃப்ளவர் மேடம். ஒருவேளை தாத்தா என்னை புரட்டி எடுக்க வந்தார்னா.. நீங்க தான் ஊடால விழுந்து தடுக்கனும். உங்க உயிர் டோலிக்காக என்னை காப்பாத்த மாட்டிங்களா?"

"ஆத்தாடி.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை... " தவம் ஓட, அவளை துரத்தி கொண்டு ஓடினான் பரிதியும்.

புன்னகையுடன் திரும்பி பார்க்க, ப்ரயைன் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். அவளை ரசித்து கொண்டிருக்கும் அவனது பார்வையை இப்பொழுது நன்றாகவே கண்டு கொண்டாள் பாவை! கண்டவுடன் காதல் என்பதெல்லாம் அவளுக்கு நம்பிக்கையில்லை?! ஆனால் உன்னை மயக்கியே தீருவேன் என நின்று கொண்டிருப்பவன் புதிதாகவும் தெரிந்தான்?! புதிராகவும் தெரிந்தான்?!

அவசரத்தில் அவனுக்கு கொடுக்கப்பட்டிருந்த பட்டு சட்டை அவனது புஜங்களை இறுக்கி பிடித்திருந்தது?! கோடையிலும் குழுமையாக இருக்கும் தாத்தாவின் பழைய முறை முற்றத்து வீட்டில் கூட காற்று பத்தாமல் வியர்த்து ஆங்காங்கே சிவந்திருக்க, முற்றத்தை சுற்றியிருக்கும் நான்கு தூண்களுக்கும் போட்டியாக உயரமாக நின்று கொண்டு, சாக்லேட் ப்ரவுன் கண்களில் மின்னலுடன் தன்னை பார்த்து கொண்டிருப்பவன் மனம் கொய்தாலும், அவன் அருகே வந்தவள், கையை வலப்புறம் நீட்டினாள்.

"அந்த ரூம்.." மாலையுடன் கைநீட்டியவளின் கையிலிருந்த மாலையை," லெட் மீ.." தான் வாங்கி கொண்டவன், " இப்போ போகலாம்.." அவளுக்கு வழிவிட்டு நிற்க, பின்னால் குறுகுறுக்கும் அவன் பார்வையை தாள முடியாது, வேகமாக தனது அறைக்கு செல்ல, பின்னாடு உள்ளே நுழைந்தான் ப்ரையனும்.

உள்ளே நுழைந்தவள் கைகளை கட்டி கொண்டு கட்டிலில் அமர்ந்து ஆழ்ந்த மூச்செடுத்து விட, "ரிலாக்ஸ் ஜாமூன்.. ஏன் இவ்வளவு நெர்வஸா இருக்க?" அங்கிருந்த ஸ்டடிடேபிளில் சாய்ந்து நின்று கொண்டு, சாந்தமாக பேசுபனை கண்டு ரசிக்க முடியாமல் மனம் தாத்தாவையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

"எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும்? நீங்க பண்ணது சரின்னு உங்களுக்கு தோணுதா?"

"அஃப்கோர்ஸ் ஜாமூன். ஐ லவ் யூ.. " தான் செய்யும் அவசர ப்ரபோஸலை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாகவும் சிறுபிள்ளை தனமாகவும் இருந்தது!

"இப்படி ஒரு ப்ரோபசலை யாரும் பண்ணிருக்க முடியாது?!" சற்றுமுன் இருந்த கோபத்தின் வேகம் சுவடே இல்லாமல் ஓடிப்போக, மெல்லிய புன்னகை இழையோடும் அவளது குரலை அவளாலேயே நம்ப முடியாமல், கைகளை கட்டி கொண்டு எழுந்து நின்றிருந்தாள்.

என்ன முயன்றும் பளிங்கு போன்ற அவளது முகம் மலர்ந்திருக்க, அவளருகே வந்தவன், அவள் கழுத்திலும், தலையிலும் ஒட்டியிருந்த அட்சதை அரிசியை தட்டி விட்டான் ப்ரையன்.

"என்ன பண்றிங்க?" அவனது கையை தட்டி விட்டவள் தள்ளி நின்றாள்.

"அந்த எல்லோ ரைஸ் உன் கழுத்துல குத்திட்டிருக்கு ஜாமூன்.."

"ஹய்யோ.. உங்களோட என்னால முடியலை?! இப்படி அறியாப்பிள்ளை மாதிரி பேசியே சாய்ச்சா நான் எப்படி உங்க மேல கோபப்பட?"

"எதுக்கு கோபப்படனும் ஜாமுன்? நான் என்ன தப்பு செஞ்சேன்?!"

"எனக்கு உங்களை பிடிச்சுருக்கா பிடிக்கலையான்னு கூட தெரியாம?! என்னை இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?"

"எனக்கு வேற வழி இல்லையே ஜாமூன்?! நான் உன்னை மேரேஜ் பண்ணலன்னா?! வேற‌ யாராச்சும் பண்ணிருப்பாங்க?! அப்ப நான் என்ன பண்ணுவேன்?!" என்றவனின் பேச்சில் சோப்பு நுரையாக கரையும் மனதை கடிவாளம் பிடித்து இழுத்து கொண்டிருந்தாள் அவள்.

"பார்த்த இரண்டு மணி நேரத்துல உங்களுக்கு காதல் வந்துடுச்சா?"

"ஆமா.. ஜாமூன்.. உன்னை பார்க்க பார்க்க இன்னும் காதலாகுது.. இதோ இந்த கட்டில்ல அழகா செதுக்கப்பட்டிருக்கே இந்த பட்டர்ஃபிளை மாதிரி உன்னை பார்த்ததிலிருந்தே என்னோட ஹார்ட்பீட் படபடன்னு துடிக்கிற மாதிரியே ஃபீல் ஆகுது?! உன்னை மட்டுமே பார்த்துட்டே இருக்கனும் போல தோணுது! உன்னோட ஒவ்வொரு அசைவையும் நொடியும் விடாம என் மனசு பதிய வச்சுட்டே இருக்கு!!! சொல்லப்போனா இந்த உலகத்துல நீயும் நானும் மட்டுமே இருக்கற மாதிரி இருக்கு!"

"போதும் நிறுத்துங்க.. உங்களுக்கு நாம டீன்ஏஜ்ல இருக்கோம்னு நினைப்பா ?"

"ம்ஹூம்... மேரேஜ் பண்ற ஏஜ்ல தான் இருக்கோம்னு தோணுது! சொல்லப்போனா எல்லா விவரமும் புரிஞ்சு சுயமா முடிவெடுக்கற இந்த இருபத்தைந்து வயசுல இப்படி ஒரு ஃபீல்?! தனி கிக்கா இருக்கு ஜாமூன்!!" அனுபவித்து சொன்னவனை பார்க்காது திரும்பி நின்று கொண்டாள் அவள்.

"என் மேல கோபப்படாதே ஜாமூன். கிவ் மீ ஏ சான்ஸ்.. நம்ம லைஃப் ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஐ ஃபீல் தட் மேஜிக்.. நீயும் அதை சீக்கிரம் ஃபீல் பண்ணுவ?! என்னை பாரேன்" அவளருகே வந்தவன், அவளை தன்னை நோக்கி திருப்ப, கலங்கிய விழிகளுடன் அவனை பார்த்தாள் ஜமுனா.

"என்னை நம்பு ஜாமூன்.. நான் உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்.. அதை நீ நம்புவியா?" தவிப்புடன் அவளது விழிகளை பார்த்து சத்தியம் பேசுபவனை எப்படி நம்பாமல் இருக்க?!

"ப்ளீஸ்.. ஏதாவது பேசு..." கைகளை கிண்ணமாய் குவித்து அவள் கன்னம் ஏந்தி யாசித்து கொண்டிருந்தவனை அதற்கு மேல் தவிக்க விடாது புன்னகைத்தவள்,

"என்னால இப்ப நடக்கறதெல்லாம் நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை!? ஆனால்.. என்னை விடாம துரத்த தான் இந்த ஜீனி இங்க வந்து குதிச்சுருக்கார்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன்?!! பார்த்த சில நொடிகள்ளலேயே என்னை விட முடியாத அளவுக்கு, அவ்வளவு பிடிச்சுருக்கா?" கண்கள் முழுவதும் அவனின் பிம்பமே எதிரொலிக்க, திரும்ப முடியாத காதல் பாதையில் அவன் வழி‌நடக்க முடிவெடுத்தவளாய் தனது சம்மதத்தை மறைமுகமாக சொன்னவளை இறுக கட்டி கொண்டான் ப்ரையன்.

"எஸ்.. ரொம்ப பிடிச்சுருக்கு.. ஜாமுன்... ஆனால் ஒரே ஒரு விஷயம் தான் பிடிக்கலை" சுகமாக அவனது தோள் சாய்ந்திருந்தவளை பிரித்து தன் கைவளைவுக்குள் நிறுத்தி கொண்டான் அவன்.

'என்ன?' என்பதை போல் பார்த்தவளிடம்," நீ முதல்ல போட்டிருந்த காஸ்ட்யூம் தான் ரொம்ப பிடிச்சது?! வெரி ப்ரீஸி... வெயிட்டான இந்த சேலை பிடிக்கலை?"

"யூ நாட்டி... " அவனை தள்ளி விட முயன்றவளை எளிதாக வளைத்தவன், இதழோடு இதழ் பூட்டியிருக்க, அவன் விரும்பும் ஜாமூனாய் குலைந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்.

"பெரிய மாமா நடந்தது நடந்துடுச்சு.. இனி அடுத்து ஆக வேண்டியதை பார்க்கிறது தானே முறை? நான் பேசுன பேச்சுக்கு என்னை மன்னிச்சுடுங்க மாமா?!" வடிவம்மை மனமார மன்னிப்பு கேட்டாலும், நிமிர்ந்து பார்க்கவில்லை கைலாசநாதன். இருந்தும் கௌதம் மாலினி கொடுத்த தகவல்களை எல்லாம் ஒப்பித்து முடித்தார் அவர்.

"ஆமா தாத்தா.. மாப்பிள்ளைய பத்தி விசாரிச்ச வரைக்கும் நல்ல ஆளு தான். குறை சொல்ற மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை!!" பரிதியும் தன் பங்குக்கு எடுத்து சொல்ல, வலது கையால் நெற்றியையும் கண்ணையும் மூடி சாய்வு நாற்காலியில் படுத்திருந்தவர், மெதுவாக எழுந்து அமர்ந்தார். ஆனாலும் எதுவும் பேசவில்லை.

"இந்தாங்கரே!! அவங்கதான் இவ்வளவு பேசறாங்கள்ள? நீங்க இப்படியே உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?!"

"எக்காலத்திலயும் அவனை இந்த வீட்டுக்குள்ள சேர்த்துக்க முடியாதுன்னு அர்த்தம்!" நிதானமாக அழுத்தமாக சொன்னவரின் பேச்சை அதிர்ந்து பார்த்தனர் மூவரும்.

மின்னும்💖💖💖...
 
Back
Top