இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் tamilnovelsaksharam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

அத்தியாயம் 1

Ruthivenkat

Moderator
Staff member
KMK1
"நீ கவலைப்படாதடா கண்ணா.. தப்பு உன் பக்கமே இருந்தாலும், இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன்‌" கைலாசத்தின் பேச்சில் கல்யாண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திடலில் சலசலப்பு இன்னும் அதிகமானது.

அத்தனைக்கும் காரணமானவளோ, கண்களில் கலவரத்துடன் எதிரில் நின்றிருந்தவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

"புள்ள.. உனக்கு ஜாக்பாட்டுதேன்... சீமைல இருந்து துரை உன்னை தேடி வந்துருக்காப்புல....என்னா கலரு.. என்னா ஃபிகரு?!.. ஆ.. யம்மா..." தவத்தின் முணுமுணுப்பில் அவளது ஜடைபின்னலை பின்னால் நோக்கி வலிக்க இழுத்திருந்தாள் ஜமுனா. கைலாசநாத தாத்தாவின் செல்ல பேத்தி.. செல்ல ராணி.. ஜமுனா ராணி.. அதை விட செல்லமாக வரும் கண்ணா என்ற தாத்தாவின் விளிப்பு மட்டுமே அவளை சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தது.

"பெரிய மாமா.. நீங்களா இப்படி பேசறிங்க? எத்தனை வருஷமா போராடி இந்த வருஷம் தான் ஆத்தா உத்தரவு கிடைச்சு இந்த கல்யாண ஏற்பாடு நடக்குதுங்கறதை மறந்துட்டு பேசறிங்களா?! ஊர் நல்லதுக்காக நடக்குற விஷயத்துல உங்க பேத்தி இப்படி பண்ணலாமா?! நாம பெரியவங்கன்னு இத்தனை பேரு எதுக்கு இருக்கோம்? இப்ப பாருங்க என் பேத்தி கல்யாணமும் தடைபட்டு நிற்குது!" கவலையில் ஈரம் தோய்ந்த கண்களை முந்தானையில் துடைத்து கொள்ள, ஆறுதலுடன் அவரை தோள் சாய்த்து கொண்டாள் மாலினி. அவரது அக்கா பேரன் கௌதம வரகுணனின் மனைவி. பாட்டியின் விருப்பத்தின் பேரில் நிறைமாதம் நெருங்கும் தருணத்திலும் சென்னையிலிருந்து மனைவியை அழைத்து கொண்டு திருமணத்திற்கு வந்திருந்தான் கௌதமன்.

"வடிவு.. அவுகளுக்கு மட்டும் இப்படி உன்னை கஷ்டப்படுத்தனும்னு ஆசையா என்ன?!" கைலாசத்தின் மனைவி மங்கையர்க்கரசி தன் பங்கிற்கு ஆறுதல் சொன்னாலும், பேத்தியை கண்டிப்புடன் தொட்டு மீண்டது அவரது கண்கள்.

"போச்சு.. பாட்டி உன்னை முறைக்குறாகடி.." தவத்தின் அடுத்த அப்டேட்டில் ஜமுனா சற்றே நகர்ந்து அவள் பின்னால் ஒட்டி நின்று கொண்டாள்.

"ஆனாலும் உனக்கு தில்லுதேன்.. செய்றதெல்லாம் செஞ்சுட்டு கூட்டத்துல தொலைஞ்ச பச்சபுள்ள கணக்கா முகத்தை அப்பாவியா வச்சுகிட்டு நிக்கறவ?"

"ப்ச்.. செத்தநேரம் வாயை மூடுறியா? இவுகள சமாளிக்குறதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லைடி... எதிர்த்தாப்புல நிக்குற வெள்ளை பூச்சாண்டிய நினைச்சாதேய்ன்... எனக்கு பயமா இருக்கு" ஜமுனாவின் பேச்சில் பொங்கி வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அதக்கி கொண்டாள் தவமலர். தங்களுக்குள் குறுகுறுவென்று பேசிக்கொள்ளும் தோழியர் இருவரையும் சுவாரசியத்துடன் பார்த்து கொண்டிருந்தான் ப்ரையன் செல்லமாக ப்ரையன் வில்சன்.. அயர்லாந்து பெற்றோருக்கு ஒற்றை மகனாக பிறந்து இந்தியாவை சுற்றி பார்க்க வந்த இடத்தில் விபத்தில் பெற்றோரை இழந்து.. பாண்டிச்சேரி ஆரோவில்லில் தனது உறவினர்களால் தத்தெடுத்து பராமரிக்கப்பட்டு.. தற்பொழுது ஜி.வி சாம்ராஜ்யத்தின் ஒற்றை வாரிசான கௌதமனிடம் வேலை பார்க்கும் முதன்மை பாதுகாவலன்.

"ஹேய்.. கூட்டத்துல சிரிக்க வச்சு.. என் முதுகுல எல்லாரும் கும்மி எடுக்கணும்னுணே பேசாதடியாத்தா.. சிரிக்க முடியாம ரொம்ப கஷ்டமா இருக்கு புள்ள.. இவருக்கு என்னடி குறைச்ச? ஆளு செமயா ஆறடிக்கும் அதிகமா.. வாட்ட சாட்டமா.. மீசையில்லாத வெள்ளை அய்யனார் கணக்கா இருக்காரு... அழுக்கா இருந்தாலும் வெள்ளையாவே இருக்காரு புள்ள.. " தவத்தின் ஜொள்ளில் மானசீகமாக தலையில் கைவைத்து கொண்டாள் ஜமுனா.

"ப்ச்.. அம்மா..அந்த பொண்ணு நல்லதுதான் பண்ணிருக்கு.. சொல்லப்போனா ஏற்கனவே பல முறை கல்யாணம் பண்ண பொறுக்கி அவன். விஷயம் தெரிஞ்ச உடனே.. சாமர்த்தியமா இந்த பொண்ணு செயல்பட்டு, இன்னொரு பொண்ணு வாழ்க்கையவும் காப்பாத்திருக்கு. இதுக்கு மேல பிரச்சனையை இழுக்காம... உங்களுக்குள்ள சமரசமா போயிட்டு, கல்யாணங்களை நல்லபடியா நடத்துங்க.. ஏட்டு.. நீயும் ஸ்டேஷனுக்கு கிளம்பி போயா. அந்த பொறுக்கிய இன்னைக்கு விடக்கூடாது. அவனுக்கு கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்கும் போல தெரியுது. இன்னைக்கு அவனை விடக்கூடாது..." காவலுக்கு நின்றருந்த இன்ஸ்பெக்டர் வாயிலில் இருந்த ஏட்டிடம் உத்தரவிட்டு விட்டு ப்ரையனிடம் திரும்பினார்.

"நீங்க இந்த நாட்டு பிரஜையா?! எப்ப இருந்து சார்கிட்ட வேலை பார்க்குறிங்க?" கௌதமனை பற்றி தெரியுமாகையால் நேரடியாக பிரையனிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

"ப்ரையனை பத்தின எல்லா டீடெயிலும் உங்க ஸ்டேஷனுக்கு மெயில் காப்பியா அனுப்பியாச்சு இன்ஸ்பெக்டர்.. அண்ட்.. இவனுக்கு நான் பொறுப்பு.. " கௌதமன் முன்னே வந்து நிற்க, எரிச்சலுடன் அவனை பார்த்தார் கைலாசம்.

"தம்பி... நீங்க பண்றது நல்லா இல்லை?! என்னை மீறி என் பேத்தி இதுக்கு ஒத்துக்க மாட்டா?"

"பின்ன உங்க பேத்தி பண்ணது மட்டும் நியாயமா? பெரியவங்க நாம இத்தனை பேர் இருக்கும் போது அவளா செஞ்ச விஷயம் தான் இப்படி ஒரு இக்கட்டுல வந்து நிற்குறோம்?" வடிவு ஆக்ரோஷமாக கத்தினார்.

"பாட்டி.. அமைதியா இருங்க.. கல்யாணம் நல்லபடியா நடக்கும்... இந்த ஒரு ஜோடிய தவிர்த்து மத்த ஜோடிங்களை மணவறைக்கு போகச்சொல்லுங்க தாத்தா.." நேரடியாக கைலாசத்தை பார்த்தே சொல்ல, ஊர்த்தலைவராக செய்தாக வேண்டிய கட்டாயம் அவருக்கும்.

"மங்கை..." மனைவியை பார்க்க, அனைத்து ஜோடிகளும் அவரவர் இடத்தில் அமர வைக்கப்படனர்.

தங்களது திருமணம் நல்லபடியாக நடக்கப்போகிற சந்தோஷத்தில் அத்தனை ஜோடிகளும் மணமேடையில் அமர, ஜமுனாவின் பதிலுக்காக ஆசையுடன் அவளது முகத்தை ப்ரையன் பார்க்க, கலங்கிய கண்களுடன் தாத்தாவை பார்த்தாள் அவள்.

'என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம விட்டியே கண்ணா?' ஆற்றாமையுடன் பேத்தியின் அருகே வந்து நிற்க, "நான் வேணும்ன்னு இப்படி பண்ணல தாத்தா?!"அழுகையுடன் அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ஜமுனா.

ஒருமணிநேரத்திற்கு முன்பு அவளது வாழ்க்கை இப்படி திசை திரும்பும் என அவள் கனவிலும் நினைக்கவில்லை?!

கொக்குளம்.. மதுரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்.. அங்கு தலைமுறை தலைமுறையாக ஜவுளித் தொழிலிலும், விவசாய ஏற்றுமதியிலும் செழிப்பாக வாழ்ந்து வருவது பாட்டி வடிவம்மையின் குடும்பம். அவரது கணவர் விநாயகத்தின் பாட்டனார் காலத்திலிருந்து, இன்றுவரை கட்டி காப்பாற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் பெற்ற இரண்டு ஆண் மகன்களும் தங்களது குடும்பதொழிலை விருத்தி செய்து வெளிநாட்டில் செட்டிலாகி விட, தனக்கு ஆதரவாக இருந்து, மதுரையில் கட்டி கொடுத்த தனது ஒற்றை மகளுடைய செல்வமகளின் கல்யாணம் கூடிவருவதற்கு அவர் படாதபாடு இல்லை. பெற்ற மகன்கள் சுயநலமாக தன்னை விட்டு சென்றுவிட்டாலும், சிறுவயதிலேயே தனது கணவனை இழந்து, தனது ஒற்றை மகவை உயிராக நினைக்கும் மகளுக்கும் பேத்திக்கும் நல்லது செய்து பார்த்துவிட, கிட்டதட்ட பத்து வருடங்கள் போராடினார் அவர். அப்படி ஒரு ஜாதகம் அமைந்திருந்தது அவரது செல்ல பேத்தி விசாலாட்சிக்கு. தீவிரமான செவ்வாய் தோஷமாக இருக்க, கட்டிக்கொள்ள போகும் கணவன் உயிருக்கு ஆபத்து என்பதில், தோஷம் தீர்த்து அவளை கட்டிக்கொள்ள யாரும் முன்வரவில்லை. ஜாதகம் தோஷமெல்லாம் சுத்த பேத்தல் என்று ஒதுக்கிவிட்டு பெண் கேட்டு வந்தவர்களுக்கோ அவர்களது அளவில்லா செல்வம் தான் முதல் குறியாக இருந்தது.

பல பிரார்த்தனைகள், தேடல்களுக்கு பிறகு, அந்த கடவுளே அருள்வாக்கு சொல்வபரின் மூலமாக மனமிறங்கி அவள் குறையை நிவர்த்தி செய்ய சொன்ன ஆலோசனை தான்... ஐம்பது ஜோடிகளுக்கு ஜாதி மத பேதமில்லாமல் திருமணம் செய்து, அதில் ஐம்பதாவது ஜோடியாக அவரது பேத்திக்கும் சமரச திருமணம் செய்து வைத்தால் திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்று கூற, ' கண்டிப்பா செய்றேன் சாமி..!" அவர் ஆமோதித்து விட்டு கேரளாவிலிருந்து திரும்பி வந்த மறுநாளே, சற்று தூரத்து சொந்தத்திலிருந்து நல்ல வரனாக தேடி வந்திருந்தது. அதுவும் மாப்பிள்ளை கண்ணப்பன் மருத்துவராக இருக்க, குடும்பமும் நல்ல குடும்பமாக இருக்க, பேத்தியின் திருமணத்தை ஊரே மெச்சும்படி பெரிய திடலில் ஐம்பது ஜோடிகளையும் தேர்ந்தெடுத்து வெகு பாடுபட்டு, தனது தூரத்து உறவுமுறையான ஊர்த்தலைவர் கைலாசத்தின் உதவியுடன் கல்யாண ஏற்பாடுகள் செய்திருந்தார் அவர்.
கைம்பெண்களாக தானும் மகளும் பேத்தியை தாரை வார்த்து கொடுக்க முடியாதென்பதால் , தனது மகன்களை திருமணத்திற்கு அழைக்க, நேரமில்லை என்று முடித்து விட்டனர் அந்த சுயநலவாதிகள். மகள் கலங்கி நிற்பதை பொறுக்க முடியாது, தனது அக்கா மகள் லீலாவதியின் ஒரே மகனான கௌதமை வந்து அண்ணன் முறைக்கு தாரை வார்த்து கொடுத்து திருமணத்தை நல்லபடியாக நடத்தி கொடுக்க சொல்ல, பாட்டிக்காக மனைவியை அழைத்து வந்து விட்டான் அவனும். கலப்பின திருமணமும் நடைபெறுவதால் போலீஸ் பந்தோபஸ்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த வேலையில் தான், பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தாள் ஊர் பஞ்சாயத்து தலைவர் கைலாசத்தின் ஒரே பேத்தியான ஜமுனா.
திருமண ஜோடிகளில் ஒருவனை ஏற்கனவே பல திருமணம் செய்தவன் என்ற விஷயம் அவளுக்கு தெரியவர, அனைவரும் ஹோம குண்டத்தின் முன்பு அமர வைக்கப்படும் போது, வேகமாக வந்து அவனது சட்டை காலரை பிடித்து தூக்கியிருந்தாள்.

"ஹேய்.. பொண்ணு என்ன பண்ற நீ?" கோபத்துடன் அவளை அடிக்க வந்தவனின் கையை பிடித்து தடுத்திருந்தான் ப்ரையன்.

"தாங்க்ஸ்... இப்பவும் நீங்களா?!" அவனை ஏற்கனவே அறிந்த புன்னகையுடன் பதில் சொன்னவள், "தாத்தா இவன் ஏற்கனவே ஏழு தடவை கல்யாணம் ஆனவன்.. அநியாயமா இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் கெடுக்க பார்க்கிறான்" என்றவள் தனது அலைபேசி பக்கத்தை திறந்து ஆதாரங்களை காட்ட, " இல்லை.. இவ பொய் சொல்றா?! எனக்கு இப்போதான் கல்யாணம் நடக்குது" மறுத்தான் அவன்.

"இல்லை .. இவன் வாயாலேயே சொன்னதை வச்சுதான்.. இவனை பத்தி கண்டுபிடிச்சோம்.." என்றவள், சற்று முன்பு நடந்ததை சொன்னாள்.

"ஏய்... தவம்.. இங்க பாருடி.. துரையண்ணே வாழைக்குலையை இறுக்கி கட்டலை.. தாத்தா பார்த்தா அம்புட்டுதேன்.. யார் மேலயாச்சும் விழுந்துட போவுது? சீக்கிரம் போய் அந்த அண்ணனை கூட்டிட்டுவா.." தாத்தாவுடன் சேர்ந்து கல்யாண ஏற்பாடுகளை பார்த்து கொண்டிருந்தவள், சற்று தூரத்திலிருந்த தவத்தை அழைக்க, துரையை கூப்பிட ஓடினாள் அவள்.

"பக்கத்துல ஏதாச்சும் கயிறு கிடக்கான்னு பார்ப்போம்.." தரையில் தேடிக்கொண்டிருந்தாள்.

"என்ன ஜமுனாம்மா.. உனக்கும் மாப்பிள்ளை தேடறியா?! தரையில போய் தேடுறவ? நிமிர்ந்து பார்த்து தேடுத்தா.." மாமன் முறை உறவினர் ஒருவர் கிண்டல் செய்துவிட்டு கல்யாண பந்தலுக்குள் நுழையப்போக," போங்க மாமா... எப்பவும் உங்களுக்கு கேலிதேன்.." முகவாயை தோள்பட்டையில் இடிக்க," கல்யாண பொண்ணை விட நீதான்தா சூப்பரா இருக்க!?" மூன்றுவிரல்களையும் குமித்து உயர்த்தி காட்ட, "அப்ப கட்டிக்கங்க மாமா.. நான் இப்பவே ரெடி.. எதுக்கும் அத்தையையும் ஒரு வார்த்தை கூப்பிடுறேன்?! அத்தை..." கத்த," ஆத்தாடி.. ஆளை விடும்மோவ்..." அவரை துரத்தும் முன் உள்ளே ஓடிவிட்டார் அவர்.

"ஹா...ஹா... அது அந்த பயம் இருக்கட்டும்..." புன்னகையுடன் திரும்பியவளை எதிர்பாரா நேரத்தில் தன்னோடு சேர்த்து இழுத்து கீழே விழுந்திருந்தான் அந்த புதியவன்.

"ஹேய்... யாருய்யா நீ?!" கோபத்துடன் அவள் கத்தும் போதே, அவர்கள் இருவருடன் அங்கிருந்த வாழைமரம் இரண்டும் புழுதி காற்று பறக்க அவளருகே விழ, அதிர்ந்து பார்த்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அதற்குள் அங்கிருந்த சிலரும், அவர்களை தூக்க வர," ஏன் மாமா.. வாழைமரத்தை இந்த லட்சணத்துலயா கட்டி வைப்ப? தாத்தாவுக்கு மட்டும் தெரிஞ்சது?! ஊருக்குள்ள எந்த கல்யாண கான்ட்ராக்டாவது உனக்கு கிடைக்குமா?!" துரையின் மனைவி தூரத்தில் திட்டிக்கொண்டே கணவனுடன் ஓடிவந்தாள்.
தலை முழுவதும் மூடியிருந்த வாழை இலைகளை, விலக்கிய ப்ரையன், எழுந்து, ஜமுனாவையும் கைபிடித்து எழுப்ப, கண்ணில் படிந்த தூசியையும், தாவணியில் இருந்த மண்ணையும் தட்டிக்கொண்டே," தாங்க்ஸ்ங்க...." கலைந்த தோற்றத்திலும் பளிச்சென்ற புன்னகையுடன் நன்றி சொன்னவளின் புன்னகையிலிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை அவனால்.

இந்திய உடை அணிந்திருக்கிறாள் என்று புரிந்தது.. ஆனாலும் அவனுக்கு இது புதிது. புடவை அணிந்த பெண்களை பார்த்திருக்கிறான்.. இருந்தாலும் இது புடவை போல் இல்லையே?! விழுந்து எழுந்ததில் பளிச்சென்ற அவளது இடை தெரிய, வாழை இலையின் ஒரு சிறு துணுக்கு அதில் ஒட்டியிருக்க, சுட்டிக்காட்ட பரபரத்த கைகளை அடக்கி கொண்டு நின்றிருந்தான். படிந்த தூசியை அவள் தட்ட தட்ட, ஒவ்வொரு தட்டும் அவன் இதயத்தை தட்டி பார்ப்பது போலிருந்தது எதிரே நின்றிருந்த அழகியின் செயலில்.
அவளது உடைகூட சற்று ஏடாகூடமாக இருக்க, பாதுகாவலனாய் மனம் ஆராயாமல், அவளை பாதுகாக்க மனம் ஆராய்வது, விசித்திரமாக இருக்க, பார்த்த மாத்திரத்தில் நெஞ்சமெல்லாம் குளுமையாக ஏதோ பரவ, முதல் பார்வையிலேயே காலம் முழுவதும் அந்த புன்னகை தனக்கு சொந்தமாக வேண்டுமென்ற எண்ணம் வலுப்பெற்றது.

தன்னை மறந்து அவளை ஓரடி நெருங்கியவன், " ஆர் யூ ஓகே பெ... " பேச ஆரம்பிக்கும் போதே, " ஜமுனா உனக்கு அடி ஏதும் படலையேம்மா? நல்ல வேளை‌ வந்து காப்பாத்திட்டிங்க தம்பி.." கூட்டத்தில் இருந்த உறவுகள் சிலர், ப்ரையனுக்கு நன்றி சொல்ல, புன்னகையுடன் சமாளித்து தலையசைத்தான்.

"அச்சோ... ஜமுனாம்மா.. உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே? எல்லாம் இந்த மனுஷனால வந்தது?!" துரையின் மனைவி வேகமாக ஓடிவந்து அவளது கையை பிடித்து கொண்டு அழவே ஆரம்பித்து விட்டாள்.

"அக்கா.. இப்ப எதுக்கு அழறிங்க? அதான் எனக்கு ஒண்ணும் ஆகலையே?"

"மன்னிச்சுடும்மா.. கொஞ்சம் வேலை அதிகங்கறதால கவனிக்காம விட்டேன்.. ரொம்ப நன்றி சார்..." துரை மன்னிப்பு கேட்க, அவனை ஆராய்ச்சியாக பார்த்தவனுக்கு," கல்யாண வேலையெல்லாம் பண்றவங்க... ரொம்ப தாங்க்ஸ்.. சரியான நேரத்துல காப்பாத்திட்டிங்க.. " மீண்டும் அதே புன்னகையுடன் பதிலளிக்க,தன்‌ பார்வையை வைத்தே பதிலளிப்பவளின் குரலுக்கு இதயம் தனி லயம் பிடிக்க ஆரம்பிக்க, எதிரில் இருப்பவர்களுக்கு பதிலளித்து கொண்டிருப்பவளையே தனை மறந்து வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் ப்ரையன்.

"கவனமா இருங்கண்ணே.. தாத்தாவுக்கு கவனக்குறைவா இருந்தா பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியுந்தான? வேலை அதிகமா இருக்குன்னா... இன்னும் இரண்டு ஆட்களை சேர்த்து வச்சு வேலை வாங்க வேண்டியதுதானே? சரி சீக்கிரம் இதை சரி பண்ணுங்க.. அங்க முகூர்த்தம் ஆரம்பிக்க போகுது?" மேலாடையை சரியாக இழுத்து விட்டவள், தாவணியை இடுப்பில் செருக, உள்ளே சிக்கி கொண்டது ப்ரையனின் நெஞ்சமும்.

"சரித்தா... இதோ இப்போ இன்னும் பத்து நிமிஷத்துல சரி பண்ணிடறேன்.." துரை துரிதமாக பணியை முடிக்க ஓட, மூச்சுவிட மறந்து நின்றிருந்த ப்ரையனை பார்த்த துரையின் மனைவி,

"எம்மா.. இந்த வெள்ளைக்கார தம்பிக்கு ஏதும் தலைல அடிபட்டுருச்சா? இப்படி பித்து பிடிச்சாப்புல நிக்குறாக? இவரு.. நம்ம பாட்டியோட சொந்தக்காரங்களுக்கு பாதுகாப்பா வந்தவரு தானே? அங்க வேணும்ன்னா யாரையாச்சும் ஆளை கூட்டி வரச்சொல்லுவோமா?" ரகசியமாய் ஜமுனாவின் காதை கடிக்க, கையில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டு கொண்டிருந்தவள், வேகமாக நிமிர்ந்து பார்த்தாள்.

உண்மையில் அவன் அப்படித்தான் நின்று கொண்டிருக்க," சார்.. உங்களுக்கு ஏதும் அடிபட்டு ஏதும் செய்யுதா?" அடிபட்டு விட்டதோவென்ற அக்கறையுடன் தலை முதல் கால் வரை நொடிக்குள் பாய்ந்து மீண்ட அவள் பார்வையில், இன்னும் ஒய்யாரமாக எதிரில் இருப்பவனின் காதல் அரியணையில் அமர்ந்து விட்டாள் பாவை.

மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தவன்," நோ..‌ஐம் ஓகே.." பதிலளிக்கும் போதே, அவனது அலைபேசி ஒலிக்க, கௌதம் தான் அழைத்து கொண்டிருந்தான்.

"எஸ் சார்.. இதோ வந்துட்டேன்.." சற்று தள்ளி விழுந்திருந்த மாலினிக்கான மாத்திரைப்பையை குனிந்து கையில் எடுத்தவன், சொல்லிக் கொண்டிருக்க, அவனை பார்த்து மீண்டும் ஒரு சிநேகப் புன்னகை பூத்த பாவையோ, துரையின் மனைவியுடன் பேசிக்கொண்டு சென்றுவிட, அவளை தொடரும் காற்றுக்கு போட்டியாக ப்ரயைனின் மனதும் அவள் பின்னால் தான் சென்று கொண்டிருந்தது. இருந்தும் கடமையே முதலாக, தனது முதலாளியம்மாவை பார்க்க சென்றவனின் கண்கள் மட்டும் அந்த கல்யாண கூட்டத்தில் மனம் கவர்ந்தவளை தான் தேடி கொண்டிருந்தது.

"சரிம்மா.. இனி நீங்க நிம்மதியா போங்க.. நான் இங்கன வரவேற்புலயே நின்னு எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கறேன்" துரையின் மனைவி வாக்கு கொடுக்க, புன்னகைத்தவளின் கண்கள் தவமலரை தேடியது.

நினைத்தவளும் எதிரே தான் வந்து கொண்டிருந்தாள், கையில் இரண்டு சேமியா ஐஸோடு.

"ஜம்மு.. பார்த்தியா.. செம டேஸ்டா இருக்குடி.. ரொம்பநாள் அப்பறம் கிடைச்சுருக்கு... இந்தாபுடி" தோழியிடம் ஒன்றை நீட்ட, சந்தோஷத்துடன் அதை வாங்க கை நீட்டியவளிடம், முந்திக்கொண்டு, அவளது உடையில் உடைந்து விழுந்து ஒட்டிக்கொண்டது ஐஸ்.

"ச்சே.. என்ன புள்ள நீ? ஒழுங்கா கொடுக்க மாட்டியா?"

"ஹேய்.. நான் வேணும்ன்னு செய்யலடி.. அழகான பாவாடை தாவணி இப்படி அழுக்காயிடுச்சே?"

"அது கிடக்கு.. என்ன நேரத்துல இந்த ட்ரெஸ்ஸ போட்டேனோ அப்ப இருந்தே மாத்தி மாத்தி அழுக்காகிட்டு தான் இருக்கு" அருகில் வந்து வருத்தப்பட்ட தோழியின் கையிலிருந்த மிச்ச ஐஸை பிடுங்கி தனது வாயில் வைத்து சுவைத்து கொண்டிருந்தாள் ஜமுனா.

"நல்லா இருக்குடி நியாயம்... சரி வா.. இதை கழுவிட்டு வருவோம்.. இல்லைன்னா பட்டுபாவாடை முழுக்க கரை ஆயிடும்" சலித்து கொண்டாலும் உரிமையுடன் பிடுங்கி சாப்பிடும் தோழியை ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தாள் தவமலர். இன்று நேற்றல்ல?! தாத்தாவின் கைபிடித்து நடை பழக ஆரம்பித்த காலத்திருந்து இருவரும் மனமொத்த தோழிகள்.

"இருடி.. நிம்மதியா ஐஸை ரசிச்சு சாப்பிட விடுறியா?"

"நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் ரசிச்சு சாப்பிடுத்தா...அங்க முகூர்த்தம் ஆரம்பிச்சுடுச்சு. எப்படியும் தாலி தட்டை கொடுத்து அட்சதை கொடுக்க, உன்னை தான் தாத்தா தேடுவாரு? அப்ப இருக்குடி உனக்கு கச்சேரி?!"

"அச்சோ தாத்தாகிட்ட சிக்குனா அம்புட்டுதேன்.. வாடி போகலாம்..." கடைசி சொட்டு வரை ருசித்த பிறகே குச்சியை தூக்கி எறிந்தவள், ஓய்வறைக்கு ஓட, சில நிமிடங்களுக்கு பிறகு அங்கு வந்து சற்று ஓரமாக வெளியில் நின்று அலைபேசியில் கத்தி பேசிக்கொண்டிருந்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளைகளில் ஒருவன்.

"நான் சொல்றதை கேளு.. கல்யாணம் முடிஞ்சதும்.. கைக்கு பணமா பத்தாயிரமும், பவுன் மோதிரமும் வந்துடும். அடுத்து ஒரு மாசத்துல அந்த பொண்ணோட சொத்து முழுக்க, என் பேர்ல மாத்தி வாங்கிட்டு வந்துடுவேன். அதுவரைக்கும் அந்த சென்னைகாரிய கொஞ்சம் சமாளிடா. கேட்டா அண்ணன் வெளியூர் வேலையா போயிருக்கார்னே மெயின்டெயின் பண்ணு. அடுத்து அவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய், டெல்லில ஒரு பணக்காரனுக்கு விக்கிறது தான் என் வேலை.. ஏழு பேரை கல்யாணம் பண்ணி ஏமாத்துனவனுக்கு இவளை ஏமாத்த முடியாதா? " என்று பேச, தூக்கி வாரிப்போட்டது தோழியர் இருவருக்கும். இத்தனைக்கும் அவன் சற்று தள்ளி தான் நின்றிருந்தான். இருந்தும் அவன் ஆணவத்துடன் பேசுவது, நன்றாகவே காதில் விழ,
"பார்த்தியாடி இந்த ஃப்ராடை?"
கதவை திறக்க போனவளின் கையை பிடித்து தடுத்தாள் தவமலர்.

"இருடி.. அவன் இங்க இருந்து போகட்டும். அதுக்கப்பறம் தாத்தா கிட்ட போய் அவனை பத்தி சொல்லுவோம்"

"லூசு. அவன் போய்ட்டா.. ஆளு யாருன்னு எப்படி அடையாளம் காட்டறது?" தவத்தின் தலையில் கொட்டு வைத்தவள், கதவை திறந்து கொண்டு வெளியேறி‌ இருந்தாள்‌.

"ஏய்..ஏய்.. நில்லுடி.." ஜமுனா வெளியே வந்தும் அவன் சென்றிருந்தான். தூரத்தில் யாரோ ஒருத்தரிடம் பேசிக்கொண்டிருந்தவனை, அவன் பின்னோடு சந்தேகம் வராமல் ஓடி, யாரென பார்த்து வரப்போக, மூச்சு வாங்க அவளருகே வந்து நின்றாள் தவமலர்.

"என்னடி பண்ற? எனக்கு பயந்து வருது?"

"பயமா இருந்தா போய் கல்யாணத்துல நில்லு..முதல்ல உன் கைப்பைல இருக்க என் ஃபோனை கொடு.. ஒரு சின்ன வேலை இருக்கு." தோழியிடம் இருந்து அலைபேசியை வாங்கியவள், மீண்டும் அந்த ஏமாற்றுக்காரனின் அருகில் செல்ல, அவளை பிடித்து இழுத்தாள் தவமலர்.

"ஏய்.. மனசுக்குள்ள பெரிய வைஜெயந்தி ஐபிஎஸ்னு நினைப்பா?"

"இப்ப நீ சும்மா இல்லை.. எட்டாவதா உன்னை கட்டிக்கோன்னு அவன்கிட்ட கோர்த்து விட்டு வந்துடுவேன்.." தோழியின் மிரட்டலில் அமைதியாக நின்று கொண்டாள் தவமலர்.

சற்று தெளிவாக அவன் முகம் தெரியும்படி புகைப்படம் எடுத்தவள், நேராக வாயிலில் காவலுக்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரியிடம் சென்றாள்.

"ஏய்.. இப்ப எதுக்குடி போலிஸ்கிட்ட இழுத்துட்டு போறவ? உனக்கு கொண்டு வர்றதுக்கு முன்னாடி டேஸ்ட்டு பார்க்க இரண்டு சேமியா ஐஸை நான் வாங்கிதின்னதை சொல்லாம விட்டது தப்புதேன்.. அதுக்காக போலிஸ் கிட்டல்லாம் மாட்டி விட்டுறாதடி..." பயத்துடன் கையை பிசைந்தவளின் காதை திருகியிருந்தாள் ஜமுனா.

"திருட்டு கழுதை.. உன்னை அப்பறம் வச்சுக்கறேன். அந்த காவாலி பயலை பத்தி அந்த அதிகாரி கிட்ட சொல்ல போறேன்.. அங்க வந்து உன் வாயை திறந்து என்‌ மானத்தை வாங்கிடாத? பேசாம வா"

"டீ.. வா..நாம முதல்ல தாத்தா கிட்ட சொல்லுவோம்." ஜமுனாவின் பேச்சில் குளிர்காய்ச்சல் வரும் போல் இருந்தது. அவளுக்கு.

"தாத்தா கிட்ட சொல்ல நேரமில்லை?! சீக்கிரம் வா?" என்றவள் தனது வேக நடையில் இன்ஸ்பெக்டரை நெருங்கியிருந்தாள்.

"என்னம்மா.. ஏதும் பிரச்சனையா?" தவமலரின்‌ பயந்த முகத்தை பார்த்தவர், ஜமுனாவிடம் விசாரித்தார். தாங்கள் கேட்ட விஷயத்தை அச்சுபிசகாமல் அவரிடம் சொல்லியவள், அவனது புகைப்படத்தையும் அவரிடம் காட்ட, தனது அலைபேசிக்கு அனுப்பி கொண்டார் அவர்.

"இது ஏழாவது கல்யாணம் சொன்னான் சார்? உங்க கிரிமினல் லிஸ்ட்ல இருக்கானான்னு பாருங்க? கொஞ்சம் சீக்கிரம் பாருங்க சார்.. அப்பதான் எங்க ஊர் பெரியவங்க கிட்ட சொன்னா நம்புவாங்க"

"நிச்சயம் பார்க்கறேன்மா." என்றவர் தங்களது டிபார்ட்மென்ட் ஆட்களை அலைபேசியில் அழைத்து விசாரித்து விட்டு வர, அடுத்து ஐந்து நிமிடங்களில் அவனை பற்றிய தகவல் வந்து விட்டது.

"இவன் கிரிமினல் தான்மா. ஏற்கனவே திருப்பூர்லயும் காரைக்குடிலயும் இரண்டு கேஸ் இவன் மேல பதிவாகிருக்கு." உறுதி செய்தார் அவர்.

"அப்போ.. சீக்கிரம் வாங்க சார்.. தாலி கட்டுறதுக்குள்ள அவனை‌ பிடிக்கனும்" என்றவள் முன்னே ஓட, முகூர்த்தத்திற்கான மேளம் அடிக்க வேகமாக ஓடி அவனது சட்டையை பிடித்து எழுப்பியிருந்தாள் ஜமுனா.

அவளது செயலில் அனைவரும் அதிர்ந்து பார்க்க, நடந்ததை கேட்டு பெண் வீட்டாருக்கோ இன்னும் அதிர்ச்சி.

"பார்த்திங்களா? உங்க வறட்டு கௌவரத்தால என்‌ மக வாழ்க்கை நாசமா போக பார்த்துச்சு. முப்பத்தஞ்சு வயசாகியும் கல்யாணம் கூடி வரலைன்னு ஊரே ஒதுக்கி வச்சப்போ, எங்க அண்ணன்‌ அவர் மகனுக்கு எத்தனை தரம் கேட்டு வந்தாரு? அவர் மேல இருந்த குடும்ப சண்டைல அப்ப கொடுக்க ஒப்புக்கிட்டிங்களா? சாதி மதம் எதுவும் இல்லைன்னு இப்படி ஒரு கிரிமினலுக்கு கட்டி கொடுக்க தான் என் பொண்ணை அரும்பாடு பட்டு வளர்த்தேனா?" பெண்ணின் தாயார் அவரது கணவனை‌ பிடித்து கொள்ள, நிமிர்ந்து மனைவியை பார்க்க முடியவில்லை அவரால்.

முகூர்த்தத்துக்கு நேரமாவதை உணர்ந்து, அங்கு வந்த வடிவம்மை பாட்டி," கவலைப்படாத ரங்கம். நம்ம ஊர் பசங்கள்ளயே நல்ல பையனா பார்த்து இப்பவே உன் பொண்ணு கல்யாணத்தை நடத்திடலாம்" என்றவர் வேகமாக சுற்றி நின்றிருந்த இளைஞர்களில் சிலரை பார்க்க, அந்த பேச்சே வேண்டாமென்று விட்டார் ரங்கம்.

"வேண்டாம் வடிவம்மா.. என்னை தப்பா எடுத்துக்காதிங்க. எங்க அண்ணன் மகனுக்கு தான் என் பெண்ணை கட்டி கொடுக்க போறேன். நீங்க வேற யாராச்சும் ஜோடியை தேடி கல்யாணத்தை நடத்துங்க. மன்னிச்சுக்கங்க.." என்றவர் மகளை கூட்டி கொண்டு வெளியேறி விட, அனைவரது பார்வையும் இப்பொழுது ஜமுனாவின் மேல்.

"கைலாசம் மாமா.. இனி என் பேத்தி கல்யாணம் எப்படி நடக்கும்? எல்லாத்துக்கும் உங்க பேத்தி தான் காரணம்?"

"வடிவு.. அவ நல்லதுதானே பண்ணிருக்கா?"

"நல்லது தான் பண்ணிருக்கா.. அதை நம்மகிட்ட முதல்ல சொல்லிருந்தா? எப்பாடு பட்டாவது மாத்து ஏற்பாட்டை உடனே செஞ்சுருப்பேன். இப்ப உங்க பேத்தி செஞ்ச காரியத்துக்கு அவதான் இதை சரி பண்ணனும்?"

"அது எப்படி முடியும்?"

"முடியும். ஐம்பதாவது ஜோடியாக உங்க பேத்தி நான் காட்டுற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கனும்" என, அனைவரும் அதிர்ந்தனர்.

"அம்மா.. பாட்டி..." வடிவை சமாதானப்படுத்த அவரது சொந்தங்கள் அனைத்தும் முயல, பிடிவாதமாக நின்றார் பாட்டி.

"இன்னும் கால் மணி நேரம் தான் இருக்கு. அதுக்குள்ள கல்யாணம் நடந்தே ஆகனும்?!"

"என்னை மீறி என் வீட்டு பொண்ணை கேட்க யாருக்கு தைரியம் இருக்கு?! நீ கவலைப்படாத கண்ணா!" கைலாசம தாத்தாவின் ஆக்ரோஷமான பார்வையுடன், அவரது விரலால் முறுக்கப்பட்ட மீசையை போல் தங்கள் கழுத்தும் முறிபடும் என்பதை உணர்ந்த இளவட்டங்கள் யாரும் ஜமுனாவை மணக்க முன்வரவில்லை.

"பாட்டி கொஞ்சம் பொறுமையா இருங்க!! அடுத்த முகூர்த்தம் எப்ப இருக்குன்னு பார்க்கலாம்.. அதுக்குள்ள கொஞ்சம் டைம் கிடைச்சா வேற ஒரு ஜோடியை ஏற்பாடு பண்ணிக்கலாம்.." கௌதமன் முன்னே வந்து சமாதானப்படுத்த, ஒத்துக்கொள்ளவில்லை அவர்.

"இல்லை கௌதமா.. இது எத்தனை வருஷ தவம் தெரியுமா?! இந்த பொண்ணு அசால்டா எல்லாத்தையும் குலைச்சு விட்டுட்டா?" என்றவர் அவன் தோள்சாய்ந்து அழ ஆரம்பித்து விட, அவரருகே சென்றாள் ஜமுனா.

"என்னை மன்னிச்சுடுங்க பாட்டி. ஒரு பொண்ணு வாழ்க்கை பாழாக கூடாதுன்னு தான் இப்படி செஞ்சேன். இந்த அண்ணா சொல்ற மாதிரி கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்"

"என்னை சொல்றதுக்கு பதிலாக? நீ இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கலாமேம்மா?" நனைந்த இமைகளுடன் அவர் பார்த்த பார்வையில் தவித்து போனாள் பேதை.

"பா.. பா.. பாட்டி..."

"நான் இவங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் சார்" யாரும் எதிர்பாராத நேரத்தில் ப்ரையன் திடீரென சொல்ல, கூட்டத்தில் சலசலப்பு.

'ப்ரையன்.. நீயா?' என்பதைப்போல் கௌதமன் மெல்லிய புன்னகையுடன் பார்க்க, அதிர்ச்சியுடன் பார்த்தாள் எதிரே நின்றிருந்தவள்.

"தம்பி..‌எங்க வந்து என்ன பேச்சு பேசறிங்க?" கைலாசம் தாத்தா குரல் உயர்த்த, அதற்கெல்லாம் அசரவில்லை அவன்.

"சார்.. ஐம் சீரியஸ்..‌ நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்"

"வாட்?!?!".... மாலினிக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.

"அப்பாடி.. நீ ஜென்ம ஜென்மத்துக்கு நல்லா இருப்ப தம்பி.. " வடிவு பாட்டி வாஞ்சையுடன் அவனுக்கு திருஷ்டி கழிக்க, கைலாசம்- மங்கையர்க்கரசி தம்பதியினரோ இன்னும் அதிர்ந்தனர்.

"வடிவு இதெல்லாம் நல்லால்ல.. யார் என்னன்னு தெரியாத?! அதுவும் ஒரு வெள்ளைக்காரனுக்கு என் பேத்தியை நான் கட்டிக்கொடுக்க மாட்டேன்...." கைலாசம் தாத்தா சண்டைக்கு வர அவருக்கு ஆதரவாக நான்கு பேர் பேச, வடிவுக்கு ஆதரவாக இருந்தவர்கள் எதிர்த்து பேசவென வாக்குவாதம் முற்றியது.

"ப்ரையன் உங்களுக்கு பிடிச்சா போதுமா? அந்த பொண்ணுக்கு பிடிக்க வேண்டாமா?" மாலினி ப்ரையனிடம் மெல்லிய குரலில் கேட்க, ஒரு நிமிடம் யோசனையுடன் தலைகுனிந்தவன்,

"என்னை பிடிக்க வச்சுடுவேன் மேம்.. அவளை பார்த்ததிலிருந்து எனக்குள்ள ஏதோ ஒரு உணர்வு.. ம்ம்.. அது காதலாவும் இருக்கலாம்.. இல்ல காலத்தின் முடிச்சாவும் இருக்கலாம். எப்பவும் அவ பக்கத்துலயே இருக்கனும் போல இருக்கு. எங்க நாடா இருந்தா தைரியமா அவளை பழக கூப்பிட்டு இருப்பேன். என்னை புரிய வச்சுருப்பேன். ஆனால் இங்க அதெல்லாம் சாத்தியமில்லை..

ம்ம்.. சரியா சொல்லனும்னா.. அட் திஸ் மொமன்ட்... ஐம் வெரி‌மச் இன் லவ் வித் ஹேர்" ஒருவித பரவசத்துடன் நிமிர்ந்து தலையை கோதி கொண்டவன், எதிரில் நின்றிருந்தவளை சுட்டு விரலால் சுட்டி சொல்ல, அவனை பார்த்து கொண்டிருந்தவளுக்கோ இதயம் தொண்டை குழியை தொட்டு விளையாடி கொண்டிருந்தது.

ஜமுனாவை பற்றி பேசும் போது அவன் கண்களில் மின்னும் காதலை பார்த்தவளுக்கோ ஆச்சரியம்?! இந்த காதல் தான் எத்தனை பொல்லாதது? எப்படிபட்ட ஆளையும் அசைத்து பார்த்து விடுகிறதே? வியப்புடன் அவனை பார்க்க, அவன் பார்வையோ எதிரே நின்று தோழியுடன் மென் குரலில் பேசிக்கொண்டிருக்கும் ஜமுனாவின் மீதிருக்க, எதிரில் இருக்கும் தன் கணவனுக்கு அதை கண்ஜாடை காட்டியவள், கண்களை மூடி திறக்க, புரிந்தாற் போல் தலையாட்டினான் அவனும்.

"தாத்தா.. ப்ரையன் நல்ல பையன் தான்.. அவனுக்கு நான் உத்தரவாதம் தர்றேன்.. உங்க பேத்திக்கு சம்மதமான்னு கேளுங்க?" சண்டையை நிறுத்தி, கௌதமன் சமாதானப்பேச்சை எடுக்க, மறுப்புடன் தலையசைத்தார் அவர்.

"தம்பி உங்களுக்கு இந்த ஊரை பத்தியும் என்னை பத்தியும் என்ன தெரியும்? தேவையில்லாத விஷயத்துல தலையிடாதிங்க?"

"அப்போ.. இதுக்கு என்னதான் முடிவு? என் பேத்தி கல்யாணம் நல்லபடியா நடக்கலைன்னா என்னோட பிணம் தான் இந்த இடத்தை விட்டு போகும்?" வடிவு பாட்டி ஆக்ரோஷமான பேசிக்கொண்டே போக,

"நீங்க ஏன் சாகனும்? அவர் பேத்தி செஞ்சதுக்கு அவரை ஊர்மக்கள் முன்னாடி உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க..." தாத்தாவிற்கு எதிரான சில விஷமிகள் கிளப்பி விட,
"எனக்கு சம்மதம் பாட்டி.." கண்களை அழுந்த மூடி திறந்த ஜமுனா, சத்தமாக சொல்லியிருந்தாள்.

"ஜமுனா.. ஆஆ..." அவளது பாட்டி மங்கையர்கரசி அதட்ட அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்‌.

"என்னால் நடந்த பிரச்சனையை நானே முடிச்சு வைக்கிறேன் தாத்தா.." கண்களில் இரைஞ்சலுடன் அவரை பார்க்க, சூழ்நிலையின் கணத்தை தாங்க முடியாமல் அப்படியே அமர்ந்து விட்டார் கைலாசம்.

மணமக்களுக்காக தாங்கள் கொண்டு வந்த மாலையை ப்ரையனின் கையில் கௌதமன் கொடுத்து மணமேடையில் அமர வைக்க, மற்றொரு மாலையை எடுத்து ஜமுனாவிடம் கொடுத்தாள் மாலினி. தவமலர் அமைதியாக ஜமுனாவுக்கு தேவையான உதவியை செய்து கொண்டு அவளருகிலேயே ஆதரவாக நின்று கொண்டிருந்தாள்.

மேள தாளங்களுடன் தாலி கட்டும் நேரம், " எப்படி கட்டனும்... ஜ.. ஜாமூன்?" ஜமுனா சொல்ல வராமல் தடுமாறி அவளிடமே கேட்டவனை கண்டு வந்த புன்னகையை அடக்கியவள்,
"எங்கிருந்து வந்தய்யா நீ? ஜீனி பூதம் கணக்கா உடனே வந்து தாலி கட்ட...? " என, அப்பாவியாய் முழித்தவனின் பார்வையில் பாவையின் மனம் தடுமாறியதென்னவோ நிஜம்?! அவளின் ஆற்றாமைக்கும் மேலாக மங்கள மேளம் ஓங்கி ஒலிக்க, மற்ற ஜோடிகள் அனைவரும் சந்தோஷத்துடன் தாலி கட்டி கொண்டிருந்தனர்.

அட்சதை மழையாய் தெறித்து விழ, "கழுத்தை சுத்தி இரண்டு முடிச்சு போடுங்க ப்ரையன்.. மூன்றாவது முடிச்சு நான் போடறேன்." பின்னால் நின்றிருந்த மாலினி சொல்ல, " மூணும் நானே போடறேன் மேம்.." என்றவனை ஜமுனா நிமிர்ந்து பார்க்க," உனக்கு எல்லாமே நான் தான் செய்வேன் ஜாமூன்..." சொல்லி கொண்டே மூன்று முடிச்சையும் தானே முடிந்து, மனைவியானவளின் மனத்தையும் சேர்த்தே தன்மனதோடு முடிந்திருந்தான் ப்ரையன்.

மின்னும்💖💖💖....
 
Back
Top