Please or Register to create posts and topics.

8-பார்வை பாரடி பெண்ணே

பார்வை -8:

கோவிலுக்கு செல்ல அனைவரும் காரில் அமர்ந்திருக்க,   நேரத்தைப் பார்த்தபடி  சாரதா, “யய்யா ஆகாஷ்… நீ போய் பாப்பாவை கூட்டிட்டு வாயா… நேரமாவுது” என்று கூற, சரி என்பதாய் தலையசைத்தவன், மேலே ஏறும்   நேரம் யாழினி வந்து கொண்டிருந்தாள்.

தமிழ் அவளின் உடையைக் கண்டு “யாழி…. நா உனக்கு இந்த ட்ரெஸ் எடுத்து வைக்கலயே… இதவா போட்டு வர?” என்று கடிய,

“மாம் இதான் எனக்கு கம்ஃபர்டபிலா இருக்கு” என்றாள்.

“சொன்னா கேளு யாழி… இன்னைக்கு கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். இப்படி எப்படி அந்த கூட்டத்துல”  என்று தமிழ் மல்லுக்கு நிக்க,

“இப்போ வரவா வேண்டாமா?” என்று கேட்ட மகளைக் கண்டு, உள்ளுக்குள் தன்னவன் வந்து போக ‘ஷப்பா அப்படியே அவ அப்பா பிடிவாதம்’ என்று எண்ணியவள் முறைத்து பார்த்தாள்.

“விடுடி இதுவும் நல்லாத்தான் இருக்கு, இப்ப இங்கின எல்லா புள்ளைங்களும் இப்படிதேன் போடுதுக, இதுல நீ பாப்பாவை வைய்யாத” என்று கயல் கூற, அவளிடம் ஹய் பய் கொடுத்து வண்டியில் ஏறினாள் யாழினி.

காவி வண்ண சட்டை, அதற்கு தகுந்த வேஷ்டி என்று உடை அணிந்து நின்று கொண்டிருந்தனர் அருளும் சக்தியும்.
“எப்பயும் சே சேன்னு கூட்டம் கூட்டம்மா தான் இருக்கும் நம்ம ஊரு! அதுலயும் இந்த சித்திர திருவிழா நேரம் இண்டு இடுக்குல கூட எம்பதினாயிரம் பேர் நிக்கானுக… பாக்கவே களையா இருக்கு இல்ல” என்று அருள் சொல்ல,

“ம்ம்ம்… ம்ம்ம்…” என்றவன் கண்கள் அங்கும் இங்கும் சுழன்று கொண்டிருந்தது.

“எடே… உன்ன கிட்ட தான பேசுதே! பார்வ அந்த பக்கம் இந்த பக்கம் போகுது என்ன சங்கதி?” என்றான் அருள்.

“என்ன? என்ன?” என்று கேட்டு சக்தி சிரிப்பினை அடக்க,

“டேய் நீ ஒரு மார்க்கமாதேய்ன் சுத்துற, எங்கினையும் என்னையை கோர்த்து விடாத ராசா உனக்கு புண்ணியமா போவும்” என்று அருள் திரும்ப,

“அம்புட்டு புண்ணியம் எனக்கு எதுக்கு உடன்பிறப்பே!” என்று கூறியவன்,
“அந்த பச்சை கலர் தாவணி உன்ன பார்க்குதுடா…” என்றான்.

“ஆத்தி… இவேய்ன் என் சோலி முடிக்க பிளான் பண்ணிட்டான் போலயே” என்று வேறு பக்கம் திரும்பி கொண்டான் அருள்வேல் பாண்டியன்.

நண்பர்கள் படை சூழ பேசிக் கொண்டிருந்தவன், நேரத்தைப் பார்த்துக் கொண்டே “என்னடா திருக்கல்யாணம் சடங்கு ஆரம்பிக்க போறாங்க. இன்னும் ஆச்சி வரல? இரு நான் போன் போட்டு கேட்டு வாரே” என்று சற்று நகர்ந்து சென்று கணேஷ்க்கு அழைக்க,

“சொல்லுயா மாப்பிள்ள?” என்றான்.

“இன்னும் அங்க என்ன பண்றீங்க மாமா. இங்க கல்யாணமே முடிஞ்சுடும் போலயே… கொஞ்சம் சுருக்கா தா கெளம்பி வாரது” என்று  கூற,

“இருய்யா உன் அப்பன் இன்னும் படி இறங்கவே இல்ல. உன் ஆச்சி வேற பயங்கர கோவத்துல கிடக்காக” என்று கணேஷ் கூற,

“ஒ... இன்னும் கிளம்பவேயில்லயா… உங்களுக்காக கல்யாணம் நேரத்த தள்ளியா வைப்பாக” என்று சக்தி கூற,

“சரிதேய்ன்… உம்ம கல்யாணம் மாதிரி குதிக்கறீங்க” எனும் போதே வெற்றி வர,
“உங்க அப்பன் வந்துட்டான். நீங்க போனை வைங்க இந்தா கிளம்பிட்டோம் ய்யா” என்று கணேஷ் வைத்ததும்,
‘என்ன தான் பண்ணுவாங்களோ’ என்று சலித்தபடி கைப்பேசியை, சட்டைப் பையில் வைத்தவனின் பார்வையில் விழுந்த்து ஒரு ப்ராக் போன்றதொரு உடை அணிந்து, அதன் மேலே ஒரு லெதர் ஜாக்கெட் சகிதம் வந்து கொண்டிருந்த யாழினியைத் தான்.

உடை என்பது அவர் அவர் உரிமை. அதனை உடுத்துபவரின் உடலமைப்பைப் பொறுத்து மட்டுமே மற்றவர்கள் கண்களுக்கு வேறுபடும். அதுவும் உடுப்பவரின் விருப்பம் என எண்ணுபவன் தான் சக்தி.
அவ்வுடை அவளுக்கு பாந்தமாய் தான் பொருந்தி இருந்தது. இருப்பினும் அவன் கண்கள் முட்டி வரை மட்டுமே தாங்கி நின்ற உடையை கண்டவன், நிமிர்ந்து அவள் முகம் காண, அவளின் சாம்பல் விழிகளோ திமிராய் அவனைத் தீண்டியது.

கயல்விழியால் கர்வமாய் அவள் செய்தி உரைக்க, சரியாய் அது அவனைச் சென்ற அடைந்திருந்தது.

‘அடிங்க இவள…” என்று அவன் கண்கள், ஒரு முறை சுற்றியும் பார்க்க, ஆகாஷ் அவளோடு தான் நின்றிருந்தான்.

‘இந்தத் துடுப்பு இவ கூட தான் இருக்கா?’ என்று எண்ணும் போதே, ஆகாஷ் தன் அலைப்பேசியை  எடுத்துப் பேசிக் கொண்டே திரும்பி யாழினியிடம்
"ஒரு பியூ செகண்ட்ஸ் வந்துடறேன்” என்று நகர்ந்தவன்,

"யாழி கூட்டமா இருக்கு. நீ அம்மா கூட ஜாயின் பண்ணிக்கோ. நான் வரேன்” என்று கூறி விட்டுச் செல்ல,

“சரி” என்று சென்றவளின் கைகளைப் பற்றி இழுத்து, ஒரு மறைவான இடத்தில் நிறுத்தியவன்  அவள் உடையைப் பார்த்து “நேத்தே சொன்னேன்ல” என்று முறைக்க,

யாழினி அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்தாள். சற்று மாநிறம் தான். இரு பொத்தான்கள் அவிழ்த்து விடப்பட்டிருக்க அது கொடுத்த இடைவெளியில் மின்னியது பொன் சங்கிலி. மீசை நுனியினை அவளிடம் பேசும் போது முறுக்கி விட்டு, அவன் கைகளுக்கு நடுவில், அவளை நிறுத்தி நின்ற அவன் தோற்றம் கண்டு “நாட் பேட்” என்றாள்.

“ம்ம்… என்ன?” என்றான் புரியாது.

“ஹீரோவாக ட்ரை பண்றியா?"என்றாள்.

“ஹீரோவா? ஏன்?” என்றவனின் ஒரு விழிப் புருவம் மட்டும் உயர,

“ஹீரோ மாதிரி இவ்வளவு சீன் போடற என் முன்னாடி…  இடியட் கையை எடு மேன்” என்றாள்.

அவளின் துடுக்கு தனமான பேச்சில், “ஹீரோ…? ஹீரோ தானே ஆயிட்டா போச்சு! அதுவும் உனக்கு மட்டும் தான்டி” என்ற  சக்தியின் கண்கள்,  அவளை அளவெடுத்தது.
இந்த மாதிரி சூழ்நிலையில், எந்த பெண்ணிற்குமே  தோன்றும் பதட்டம், அவளிடம் இல்லாமல், திமிராய் அவள் நின்ற தோற்றம் அவனை மிகவும் கவர்ந்தது.
‘அந்த சொக்க முன்ன என் அம்ம போய் நின்னா பாரு… அவரு அப்படி மயங்கி நின்னாராம் அது அவ அழகுல இல்ல… வீரத்துல…! தைரியத்துல..! அவர் முன்ன நின்ன திமிருல” ஏனோ சரோஜாவின் மீனாட்சியின் சாயல் அவளுள் உள்ளது போன்றதொரு பிரம்மை!
‘சொக்கா  என்ன முழுசா சாச்சிடுவா  போலயேடா’ என்று உள்ளுக்குள் அவன் மருக,

“ஏய்… கையை எடு மேன்” என்று அவனைத் தாண்டி செல்ல யாழினி முயல,
அவளைப் போக விடாது தடுத்தவன் “என்னடி ட்ரெஸ் இது? என்னப்பாரு என் கால பாருன்னு… இப்படியாடி போட்டு திரிவாக” என்றவன் சொல்லி முடிக்கும் முன்,

“என் ட்ரெஸ் என் இஷ்டம் டா… கை தெரிஞ்சா உனக்கு என்ன? கால் தெரிஞ்சா உனக்கு என்ன?” என்று அவனுக்கு பதில் கொடுக்க,
நக்கலாய் சிரித்தவன் "தெரிஞ்சா எனக்கு என்னவா? அதுசரி… ஏண்டி இப்படியே எல்லாத்தையும் எல்லாருக்கும் காமிச்சுட்டா, புருஷனுக்கு என்னத்தடி காமிப்பீங்க?” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே,

அவன் பேசிய பேச்சு புரியாது "வாட் கம் அகைன்" என்று அவனை அவள் கேட்க,
அவன் சொன்னதை நிறுத்தி நிதானமாய் சொல்ல,

கோபத்தில் அவள் முகம் சிவக்க, “அது உனக்கு தேவையில்லாத *****” என்று ஆங்கிலத்தில் உரைத்தவள், தொடர்ந்து “அது எனக்கும் என் புருஷனுக்குமான *****” திட்டி நகர,
அவள் சொன்ன வார்த்தைகளின் வீரியம், அவனை மூர்க்கனாய் மாற்ற, அவளின் அலட்சிய பாவனைகள்  அவனை இன்னும் தூண்டி விட,
“உனக்கும் உன் புருஷனுக்கும் உண்டானதா?” என்று கேட்டபடி, அருகில் சாமிக்கு வேண்டி வைத்திருந்த மஞ்சள் கயிறு ஒன்றை எடுத்தவன், அவள் சுதாரிக்கும் முன் அவள் கழுத்தில் கட்டியிருந்தான்.

அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விட்டிருக்க, அதே நேரம் மேற்கு வடக்கு ஆடிவீதியில் உள்ள மண்டபத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கனுக்கு சொந்தமாயிருந்தாள் மீனாட்சி…!
அவன் கட்டிய கயிறு என்ன என்பதை யாழினி உணரும் முன்னே,
“சின்னப் பிள்ளைன்னு பொறுத்து போனா, என்ன வார்த்தை சொல்றடி  நீ? இனி இப்படி பேசுவியா? இல்ல நான் யாருன்னு தான் கேட்பியா?” என்று கோபமாய் கூறியவனை முறைத்தவள்,
“வாட் தி ஹெல் யூ” என்று அவன் அணிவித்த கயிற்றை அவிழ்த்து, அவன் முகத்தில் தூக்கி எறிந்து செல்ல முயல, அவள் கைகளை இழுத்துப் பிடித்து முறுக்கினான் சக்தி.

அருள் சக்தியைத் தேடி  வந்தவன், அங்கு கண்ட காட்சியில் “ஏய்… என்னடா பண்ற? விடுடா… விடு அந்த புள்ளைய” என்று பதறி வர, யாழினியோ அவன் பிடித்திருந்த கைகளை விடுவிக்க முயன்று கொண்டிருந்தாள்.

“அடிங்க…” என்று அவள் கைகளை இறுக்கி பிடித்து, அவன் அணிந்திருந்த சங்கிலியை கழட்டி, அதனை அவளுக்கு போட்டு விட்டவன்,
“இனி உனக்கு எப்ப கல்யாணம் சொன்னாலும் என் முகம் தாண்டி முன்னாடி வரணும்!  புருஷன்னு எவன் வந்தாலும் என் முகம் தான் முன்னாடி நிக்கணும்” என்று கூறி அவளை விடுவித்த நேரம், ஆகாஷ் அவளைத் தேடி வந்திருந்தான்.

வந்தவன் அருளையும் சக்தியையும் பார்த்துக் கொண்டே “யாழி ஆர் யூ ஓகே?” என்று கேட்டுக் கொண்டே, அவர்களை முறைக்க,

அரும்பு மீசை முளைத்து குழந்தை பருவத்தில் இறுதியில் இருந்தவனைக் கண்டவன் ‘பாருடா துடுப்பை என்ன பண்ணிருவான் இவன்?’ என்று நக்கலாய் இதழ் விரிக்க,

அதனை கோபமாய்  பார்த்துக் கொண்டே “ஐ அம் ஓகே” என்றாள் யாழினி.

“உன்ன அம்மா கூட தானே ஜாயின் பண்ணிக்க சொன்னேன். நீ இங்க என்ன பண்ற?”

ஒரே மாதிரி உடை, சற்று முக சாயலும் ஒற்று இருக்க, அவர்கள் நின்ற தோற்றம் கண்டு
"அவங்கள பார்த்தாலே ஏதோ ஒரு ரோக் மாதிரி இருக்கு… நீ போய் அவங்க பக்கத்துல நின்னுட்டு இருக்க, ஹியர் ஆல் ஆர் லுக் லைக் திஸ் ஒன்லி, டோன்ட் டாக் டு ஸ்ட்ரேஞ்சர்ஸ் (here all are look like this only, don't speak to strangers)" என்று அழைத்துச் சென்றான்.

நடந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஆவென பார்த்துக் கொண்டிருந்த  அருள்,
“என்னது ரோக்கா? ஒரு வக்கீலைப் பார்த்து என்ன பேச்சு பேசுதான், இந்த சில்லுவண்டு! நீ எல்லாம் என்னடா உடன்பிறப்பு பாத்துட்டு பேசாம இருக்க?” அருள் வேல் பாண்டியன் சக்தியைப் பார்க்க,

அவன் கேட்டதை எதுவும் உணரும் நிலையில் சக்திவேல் இல்லை. அவன் கண்கள் அவனவளயே மொய்த்தது. கோபமாய் செல்லும் அவளைக் கண்டவன், அப்போது தான் உணர்ந்தான் தான் செய்த செயலின் வீரியத்தை…
அவளைக் காணும் போது எல்லாம் ஒரு மாயவிசை அவனை செலுத்தி இருக்க, அதனின் விளைவு!?
‘சக்தி இது நீ எப்போவும் கிண்டல் பண்ணிட்டு கடந்து போற விஷயம் இல்ல. நேத்து பார்த்த பொண்ணுடா அவ… அதுக்குள்ள என்ன வேலை செஞ்சிருக்க?” என்று உள்ளம் எடுத்துரைக்க,

அவள் சாம்பல் நிற விழிகளைக் மீண்டும் காண வேண்டி ‘ஒரு பார்வை பாரடி பெண்ணே’ என்று யாசகானாய் வேண்டி நின்றான் சக்திவேல் பாண்டியன்.

அவள் செல்லும் வழியைப் பார்த்து நின்றவனை “டேய் சக்தி ஏன்டா நீ பாட்டுக்கு பொசுக்குன்னு மஞ்சள் கயிறை கட்டி தொலைஞ்சுட்ட?” என்று அங்கும் இங்கும் நடந்தவன்,
“நல்ல வேளை அந்தப் புள்ள தூக்கி போட்ருச்சு, அது பாட்டுக்கு நம்ம பக்கம் இருக்க புள்ள மாதிரி கண்டேன் கணவனைன்னு உன் பின்னாடியே வந்து இருந்துச்சுன்னா? கணவன் இல்லம்மா… கயவன்னு ஜட்ஜ் உன்ன கிழிச்சு தொங்க விட்டுருப்பாருடா என் உடன்பிறப்பே…” என்று அருள் சக்தியின் கைகளைப் பற்ற,

“ப்ச்...” என்று சற்று முன் அவள் விரல் நகத்தினாள் உண்டாக்கிய கீறல் எரிச்சலை கொடுக்க, “ஸ்ஸ்,... ஆ” என்றான்.

“என்னாச்சு டா” என்று அருள் காண, அவள் கீறல் தெரிய,
“டேய் அது வெளிநாட்டுக்கார பிள்ளைன்றதனால இதை விட விட்டுடுச்சு, நம்ம ஊரு பிள்ளையெல்லாம் இருந்துச்சுன்னா அருவா எடுத்துருக்கும் டி” என்று முறைத்தபடி அருள்வேல் பாண்டியன் கூற,

“மச்சான்” என்ரு அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யா அவ்விடம் வந்தாள்.

“என்ன ஐசு?” என்றான் அருள்.

“எங்க போனீங்க ரெண்டு பேரும்?  உங்க ரெண்டு பேரையும் ஆச்சி தேடுறாக…”

“ஏன்?” என்று நின்ற சக்தியையும் இழுத்து நடந்து கொண்டே அருள் கேட்க,

“எதுக்கு கல்யாண பாக்கத்தேன். போங்க
மீனாட்சி திருக்கல்யாணமே முடிஞ்சிட்டு” என்று சொல்லிக் கொண்டே நடக்க,

“நானும் தான் கல்யாணத்தை பார்த்தேன்”

“பார்த்தியளா, இங்கனகுள்ள இருந்து நல்லா தெரிஞ்சுச்சா? சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல, எனக்கு அங்கனக்குள்ள இருந்து தெரியவே இல்ல மச்சான்” என்று கூற,

“எனக்கு இங்கன கல்யாணம்ன்னே தெரியாதே” என்று சக்திவேலை முறைக்க,

“என்ன மச்சான் மீனாட்சி திருக்கல்யாணம் தான் ஊருக்கே தெரியுமே!” புரியாமல் ஐஸ்வர்யா கேட்க,

அவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டே, “ஏய் ஐசு  செத்த சும்மா  வரமாட்ட?” என்று சக்தி அதட்ட,

“ஏண்டா பண்ணுனதெல்லாம் நீ… அவளை ஏன்டா திட்டுற?” என்று அருள் சக்தியை திட்டவும்,

“இப்ப என்னதான் பண்ணனுங்குற நீ? அவள கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தனுமா நான் இப்போ?” என்றான் அருள்.

“ஐயாவுக்கு அந்த நினைப்பு வேறயா? நீங்க இப்பதான் காலேஜ் இரண்டாவது வருஷத்தில் இருக்கீங்க சார். அந்த அந்தப் பிள்ள ஏதோ ஸ்கூல் படிக்கிற மாதிரி இருக்கு. இது மட்டும் நம்ம அப்பனுக்கு தெரிஞ்சுச்சு…. அப்பாவ விடு, அந்த புள்ள ஏதாவது கம்ப்ளைண்ட் பண்ணுச்சு பத்து வருஷம் ஜெயில்ல களி திங்கனுண்டி” என்றான் கடுப்படன்.

“அருளு….” என்றான் மொத்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு,
அவர்கள் இருவரின் சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டே வந்த ஐஸ்வர்யா, “மச்சான் உங்க ரெண்டு பேர்க்கும் என்ன ஆச்சு? ஏன் ரெண்டு பேரும் கோபப்படுறீங்க?” என்று வேகமாய் ஓடி வெற்றியிடம் கூற,

“என்னடா இவனுங்க எப்போவும் மத்தவங்க கூட தானே சண்டை போட்டு வருவானுங்க. இப்போ என்ன புதுசா ரெண்டு பேரும் முறைச்சுகிட்டு வரானுங்க” என்று வெற்றி கணேஷிடம் கேட்க,

“அதானே இரு விசாரிப்போம்” என்றவன், வந்தவர்களிடம் “என்ன மாப்பிளைங்களா, எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டவன் மெல்ல சக்தியிடம் “மாப்ள  சம்பவம் ஏதும்  பண்ணிட்டியா?” என்று கேட்க,

“மாமா….” என்று விளித்த சக்தி கணேஷைக் காண,

“எதுனாலும் மாமாட்ட சொல்லிடுய்யா மாமா பாத்துக்குறேன்” என்றான்
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா செத்த  சும்மா இருங்க” என்றான் கடுப்புடன்.

“அப்போ ஒன்னும் இல்ல தானே மாப்பிள்ள… அப்போ சரி கிளம்புவோமா?” என்று அனைவரும் வீடு செல்ல, சக்தியின் கண்கள் மட்டும் சொக்கன்- மீனாட்சியின்  திருமண கோலத்தைக் கண்டு கைகூப்பி நின்றது.