Please or Register to create posts and topics.

மனமேனோ கிறங்குதடி -1

அத்தியாயம்-1
"இன்னைக்கு காலையில எழுந்திருச்சு குளிச்சு முடிச்சு விட்டு..கோவிலுக்கு போகப் போறேன் கடவுளே.. கடவுளே" நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கானக்குரல் திரும்ப திரும்ப கைப்பேசியில் ஒலித்து அதிர்ந்தாலும், அதை சட்டைப்பையில் இருந்து எடுக்காது மிக மும்முரமாக, தன் முன்னால் இருக்கும் அட்டைப் பெட்டியில் கிழிந்த காகித துகள்களையும் வைக்கோலையும் வைத்து, மாம்பழங்களை நிரப்பி கொண்டு இருந்த பிஜூவையே, மாறன் சுற்றி வந்து பார்த்து கொண்டிருக்க, பொறுமையிழந்தவனாய்,

"எந்தா சாரே.. ஃபோன் அடிக்குதில்ல.. எடுக்காம?! இவ்விட என்ன ஆராய்ச்சி?" குனிந்த தலை நிமிராது பிஜூ கேட்க,

"அடடே? இல்லையேடா பிஜூ" அவன் கேட்ட கேள்விக்கு சற்றும் சம்பந்தமில்லாத உற்சாகத்துடன் தன் பின்னாலிருந்த குதித்த மாறனைக்கண்டு விழி பிதுங்கி நின்றான் அவன்.

"என்ன சாரே இல்லை ?! நான் என்ன சொல்றேன் நீங்க என்ன செய்றிங்க?" பதற்றத்தில் தமிழ் சரளமாக வந்தது பிஜூவிற்கு. பின்னே மாறன் தன்னை ஏதோ வைத்து நன்கு ஓட்டப்போகிறான் என்பது அவனை கண்டாலே இப்பொழுது புரிந்தது அவனுக்கு. அதுவும் ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால் தான், பேச்சிலேயே ஒருவழி ஆக்கி விடுவான்!? இன்று மாட்டி விடுவோமோ என்ற கிலியும் அடிவயிற்றில் கிளம்பதான் செய்தது அவனுக்கு.

மாறன் அவனருகே வந்தவன்," அது ஒண்ணுமில்லடா மோனே பிஜூ.. "அவனது இரண்டு காதையும் ஒரு இழு இழுத்து விட , "ஆ.. குருவாயுரப்பா.." வலியில் அலறினான் பிஜூ.

"உன் காது கழுதை காது மாறி நீளமா தான் இருக்கு. ஆனால் உனக்கு கழுதை மாறி வாலும் இருக்கனுமே?! அதைத்தான்டா காணோம்னு உன்னை சுற்றி சுற்றி தேடுனேன்" என்றவனை பார்த்து , வலியில் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே,

"சாரே.. எதா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லனும்" என்றவனின் முன்னால், தனது மேஜை டிராயரை திறந்து அதிலிருந்த நோட்டை எடுத்து அவன் முன்னால் தூக்கி போட்டான் மாறன்.

இப்பொழுது பிஜூவிற்கு காரணம் புரிந்து, திருட்டு முழிமுழிக்க, "நீ எழுதுன கணக்கு தான்டா.. அட்டைப் பெட்டியில மாம்பழம் நிரப்பறதுக்கு, பேப்பர் பிட்டு இரண்டு லோடு எக்ஸ்ட்ரா எழுதியிருக்க??

ஆனால் நான் சரிபார்த்தப்போ குறையுது??அப்போ அந்த இரண்டு லோடு பேப்பரையும் தின்ன கழுதை நீதானேடா மோனே பிஜூ கண்ணா??" என்றவன் அவனது இடது கையை பின்னால் மடித்து இழுத்து, முதுகில் இரண்டு குத்து குத்த,

"சாரே... தெரியாம பண்ணிட்டேன்‌ சாரே!!.. அந்த ஏஜன்சிகாரன் தான் எனக்கு ஆசை‌காட்டினான். அதான் இப்படி பொய் கணக்கு எழுதிட்டேன். மன்னிக்கனும் சாரே" வலியில் அலறிக்கொண்டே அவன் கத்த,

"என்னடா நினைச்ச என்ன? நான் வேணும்னா கணக்குல ஃபெயில் ஆனவனா இருக்கலாம்!! ஆனால் நல்லா கணக்கு படிச்ச பசங்களாதான் தோஸ்தா வச்சுருக்கேன். தெரியுமில்ல?" ஃபெயிலானதையே பெருமையாக சொல்லி காலரை உயர்த்தியவனை கண்டு வாயை பொத்தி சிரித்தபடியே உள்ளே நுழைந்தாள் மனோன்மணி.

அவளின் மலர்ந்த முகத்தை கண்ட மறுநொடி மாறனின் முகமும் மலர, அவன் தளர்ந்த அந்த ஒரு நொடி, வேகமாக அவன் பிடியில் இருந்து நழுவி, அவன் கால்களை பிடித்திருந்தான் பிஜூ.

"முதலாளி... இந்த ஒருதடவை என்னை மன்னிக்கனும். இனி இந்த தப்பு நடக்காது" என்று கெஞ்ச, மாறனின் முகமோ உள்ளே அலுவலக அறைக்கு சென்று கணினியை உயிர்ப்பித்து கொண்டிருந்த, மனோன்மணியின் மீதுதான் இருந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாது, அவள்பாட்டிற்கு அவள் வேலையை தொடங்கி விட, அதை கண்டும் காணாதது போல் காண்பிக்க முயன்றாலும், பிஜூ வின் முகத்தில் சிரிப்பின் சாயல் தோன்றிவிட்டது.அவனது காதல் கலாட்டாக்கள் அங்கிருந்த அனைவருக்கும் ஓரளவு தெரியுமாகையால் தன்னால் சிரித்து விட்டான் அவன். அவனது சிரிப்பில் கடுப்பானவனாய், அருகிருந்த வைக்கோல் மூட்டையை மாறன் ஒற்றை கையில் தூக்க, "சாரே.." அடுத்து என்ன செய்யப்போகிறானென்ற அச்சத்துடன் பார்த்தான் பிஜூ.

அவன் அஞ்சியதை போலவே, மூட்டையை பிரித்து ஏற்கனவே பிரித்து வைத்திருந்த காகித துகள்களுடன் மாறன் கலந்தவன்," இன்னைக்கு முழுசும் இந்த பேப்பர் தனியா , வைக்கோல் தனியா பிரிக்கிற.. அதான் உனக்கு வேலை"என்றுவிட , விழி பிதுங்கி நின்றிருந்தான் பிஜூ. இப்பொழுது சிரிப்பை அடக்க பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள் வெளியில் நடப்பதை கண்டும் காணாமல் பார்த்து கொண்டிருந்த மனோன்மணி.

அதில் மனம் இலகுவாக, அவளிருக்கும் அறை நோக்கி எட்டு எடுத்து வைத்தவனை மீண்டும் இழுத்து பிடித்தது, நடிகர் வடிவேலுவின் குரலில் கானம் பாடிக்கொண்டிருந்த அலைபேசி‌.

"எவன்டா அவன்?" புலம்புலுடனே திரையை பார்த்தவன், அழைக்கும் நபரை பார்த்து அழைப்பை துண்டித்து விட்டு நிமிர ,
"வந்துட்டான்டா ரங்கோலி தலையன்" விரல்களால் முகத்தை அழுத்தி துடைத்து கொண்டான். பின்னே அழைத்த நபரே குடவுன் கதவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

' பார்த்துருப்பானோ.. என்ன பண்ணிடுவான்?! சமாளிப்போம்' அலைபேசியை பான்ட் பாக்கெட்டில் விட்டு கொண்டவன்,

"அடடே வாங்க வாங்க... சோட்டா லால்ஜி... என்ன இந்த பக்கம்?" சற்றே உரத்த குரலில் அவரை அழைத்து கொண்டே, வாசலுக்கு செல்ல, அந்த நபரும் சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தார்.

"என்ன மாறன்ஜி.. எவ்வளவு நேரமா வந்து வாசல்ல நின்னுட்டு கால் பண்றேன். நீங்க காலை கட் பண்றிங்களே?" என,

"அட இவ்வளவு நேரமா நீங்கதான் அங்க நின்னுட்டிருந்திங்களா? நான்கூட எவன்டா அது வாசல்ல இருக்க குப்பை டிரம்முக்கு கலர்பேப்பரை சுத்தி வச்சுருக்கானுங்க.. கண்ணு கூசுதுன்னு அந்தப்பக்கம் பார்க்காம இவனுங்களை திட்டிட்டுருந்தேன். ஹோலிக்கு அடிச்ச கலர்ல பாதி உங்க தலைக்கும், மீதியை உங்க சட்டைக்கும் அடிச்சுட்டிங்க போல.. இருந்தாலும் உங்க சட்டை சூப்பர்ஜி" என, அவனது அப்பட்டமான நக்கலில் கோபப்பட வேண்டியவனோ அடக்கமாட்டாது சிரித்து வைக்க,

"இந்த ஹ்யூமர் தான் மாறன்ஜி உங்ககிட்ட பிடிச்சதே.. அப்பறம் ராவணன் கிட்ட பேசி பார்த்திங்களா? அண்ணனை விட நான் ஒரு மடங்கு நல்லாவே எடுத்து செய்வேன்னு சொன்னிங்களா? இல்லை ராவணன் கிட்ட நான் இன்னொரு முறை பேசி பார்க்கட்டுமா?" என,

'எவ்வளவு கலாய்ச்சாலும் வெ.மா.சூ.சுவே (வெட்கம், மானம், சூடு, சுரணை) இல்லாம காரியமே கண்ணா வந்து நிற்குறானே' மனதிற்குள் நினைத்தவன்,

"அதான் ஏற்கனவே சொல்லியாச்சே.... உங்களை விட உங்க அண்ணன் ராவணனுக்கு நல்ல பழக்கம். அவர் எக்ஸ்போர்ட் விஷயத்தை நல்லா பார்த்துட்டுருக்கும் போது?, இப்ப சமீபமாக நீங்க பிரிஞ்சுட்டிங்கறதுக்காக, உங்களுக்கு எப்படி மாற்றி கொடுக்க முடியும்?" என, அந்த நேரம் அவனை நோக்கி வந்த மனோன்மணி,

"மாறன் சார். இந்த இரண்டு பில்லோட ஒரிஜினல் வேணுமே.. கார்பன் காப்பி தான் இருக்கு. ராவணன் அண்ணா வேற நாளைக்கு தான் வருவாங்க. இது இன்னைக்குள்ள கணக்குல ஏற்றி ஆகனும் " என்றவள் மாறனை பார்த்து பேச, லால்ஜியின் பார்வையோ மனோன்மணியின் மீது விஷமமாக பார்வையை ஓட்ட,

"தப்பான நேரத்துல பெல் அடிக்கிறிங்களே மேடம்‌. நீங்க கிளம்புங்க.. நான் வந்து எடுத்து தரேன். இல்லைன்னா கேஷியர் சுகன்யா வந்ததும் பார்த்துக்கலாம்" வாய் பேசிக்கொண்டிருந்தாலும், ' இப்ப நீ கிளம்புறியா?' என்ற பார்வையை அவன் பார்த்து கொண்டிருக்க, அதை புரிந்தவளாக,

"ம்ம்.. சரி.." மனோன்மணி தனது இடத்திற்கு விரைந்துவிட,

"நீங்க அந்த பொண்ணு கேட்டதை எடுத்துக்கொடுத்துட்டு கூட வாங்க .. நான் வெயிட் பண்றேன்.. ராவணனும் ஊர்ல இல்லை போலவே" என்றவன் பார்வை மனோவை தொடர,

"அதை அப்பறம் பார்த்துக்கலாம் லால்ஜி.. என்னை பொறுத்த வரைக்கும் ராவணன் ஒருதடவை முடியாதுன்னு சொல்லிடான்னா முடியாது தான். திரும்ப திரும்ப அலையறது வேஸ்ட். நீங்க கிளம்பலாம்" நேரடியாகவே பதில் சொல்லிவிட,

"சரி அதை விடுங்க மாறன். ஏதோ ஊருக்கு போயிருக்கறதா அந்த பொண்ணு சொல்லுச்சே? அவர் பொண்டாட்டியை பார்க்கவா? கோபிச்சுகிட்டு போன அவர் மனைவி இன்னும் அவர்கூட சேரலை தானே? இருந்தாலும் செம அழகி.. இவர் கொஞ்சம் விட்டு கொடுத்து போயிருக்கலாம்" அடுத்தவன் மனைவியை விமர்சித்து கொண்டிருந்தவனை, வெளுக்கும் ஆத்திரம் வந்தாலும்,

"யார்ரா அது தெருநாய உள்ளே விட்டது? பாரு எல்லா இடத்துலயும் மூக்கை நுழைச்சுட்டுருக்கு. அடிச்சு விரட்டி விடு பிஜூ" என்று சத்தம் போட, தன்னை நாயாக விளித்ததில் லால்ஜியின் முகம் கோபத்தில் குன்ற, அதை பார்த்து திருப்தியானவனாய்,

"இந்த நாய் தொல்லை தாங்கலை லால்ஜி. வந்த வேலை முடிஞ்சுடுச்சுன்னா நீங்க கிளம்புங்க. இன்னொரு முக்கியமான கால் பேசனும்" வராத காலை வந்ததாக காட்டி கொண்டு, அலைபேசியை காதுக்கு வைத்து கொண்டு அவன் நகர்ந்து விட, நினைத்தது கிடைக்காத ஆத்திரத்துடனேயே கிளம்பியவன்,

"எஸ். எம் மாம்பழ மண்டி, எஸ்.எம் சூப்பர் மார்க்கெட்" பொழிவு குறையாது பளபளத்து கொண்டிருந்த அந்த போர்டிலேயே பார்வையை பதித்திருந்தவன், சில நிமிடங்களில் சென்று விட்டான்.

இதை மாறனும் தூரத்திலிருந்து கவனித்து கொண்டு தான் இருந்தான்.

"இவனுக்கு இந்த இடத்து மேல எப்பவுமே ஒரு கண்ணு. இது என் நண்பன் எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கின இடம்" என்றவனுக்கு நண்பனின் நினைவுகள் தான்.

"இராஜ மயில் ராவணன்" பெயருக்கு ஏற்றாற் போல் ராஜாவை போன்ற ஒரு மிடுக்கு அவனிடம் எப்பொழுதும் ஒட்டிக்கொண்டிருக்கும்.

சேலத்தில் பிறந்த இராவணனும், மாறனும் பால்ய நண்பர்கள். இதில் மாறனின் பெற்றோர் மட்டும் மதுரையை பூர்விகமாக கொண்டவர்கள், மாறனின் அப்பா அரசாங்க உத்தியோகத்தில் இருக்க, மாற்றலாகி வந்தவர்கள் சேலம் பிடித்து போக, இங்கேயே தங்கி விட்டார்கள். ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாது இருந்து , இங்கு வந்த பிறகு தான் மாறன் பிறந்ததால், இந்த ஊரின் மீது ஒரு தனிப்பிரியம்‌. ஒரே ஏரியாவில் குடியிருந்ததால் இருவருமே இணைபிரியாத நண்பர்கள்.

இராவணனின் பெயர் எப்பொழுதுமே பேசும் பொருளாகவே இருக்கும். அவனுக்கு முன் இரண்டு சகோதரிகள், இவன்தான் கடைப்பிள்ளை. ஐந்து தலைமுறைகளாக ஆண்வாரிசு இல்லாது பிறந்ததால், அவர்களது மூன்று தலைமுறைக்கு முந்தைய தாத்தாவின் பெயரான " மயில் ராவணன்" தான் பெயராக சூட்ட வேண்டுமென்று செந்தில்நாதன் நிற்க, மயூரிக்கோ அவளது அப்பாவின் பெயரான இராஜப்பன் வைக்க வேண்டுமென்று ஆசையாக இருக்க, விளைவு... அன்னையின் இராஜாவாக,"இராஜ மயில் ராவணன்" ஆகி விட்டான்.

ஆம்!! மயில் ராவணனின் பெற்றோர் செந்தில்நாதன்- மயூரி. இவர்களது செல்ல மகள்கள் மூத்தவள் சொர்ணம் மற்றும் இளையவள் பவதி. ஒரே அருந்தவப்புதல்வன் ராவணன். செந்தில்நாதன் நிலபுரோக்கராக இருக்க, எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது காலத்தின் விளையாட்டால் அவரது கை கால்கள்கள் விழும் வரை... அந்த சூழ்நிலையை நினைத்தால் இப்பொழுதும் இராவணனை நினைத்து பாவமாக தான் இருந்தது மாறனுக்கு.

நினைவை இடைமறித்தது போல் எண்ணத்தின் நாயகனே அலைபேசியில் அழைக்க,
"சொல்றா மச்சி.. ஊர் போய் சேர்ந்துட்டியா?" மாறன் கேட்க,
"ம்ம்.. வந்துட்டேன் மாப்ள. நம்ம காதர்பாய் நம்பர் அனுப்பிவிடு. பெங்களூர் வர்றப்போ கண்டிப்பா பார்க்கனும் சொன்னாரு. அவரை ஒரு தடவை பார்த்துட்டு நான் தீக்ஷண்யாவை பார்க்க போறேன்" என்ற இராவணனை, என்ன செய்தால் தகும்? என்றிருந்தது மாறனுக்கு.

"டேய் மச்சி அங்க போயும் பிஸினஸாடா? அந்த ஆளு தான் மாசத்துக்கு ஒரு தடவை சேலத்துக்கு வந்து போறாரில்லை. போனா போன வேலையை பாருடா. தங்கச்சி கால்ல விழுந்தாவது கூட்டிட்டு வரப்பாருடா" என, புன்னகையில் மலர்ந்தது இராவணனின் முகம்.

"ம்ம்.. பார்க்கலாம். முதல்ல பவதி அக்கா போய் பேசிட்டுருக்கட்டும். அடுத்து நான் போயிக்கிறேன்.." என்றவன் சில எக்ஸ்போர்ட் விவரங்களை பற்றி கேட்க,

மாறன் விவரங்களை சொன்னவன், லால்ஜியின் வரவை பற்றியும் சொல்ல, "விடு மாப்ள... கொஞ்சநாள் வந்து பார்த்துட்டு, அவனே போயிடுவான். நான் பாய்க்கு கொடுக்க மாம்பழ பாக்ஸ் நாலு எடுத்துட்டு வந்துருக்கேன்.. மனோவ கணக்குல எடுக்க வேண்டாம் சொல்லிடு.. " என,

"ஏய்யா மச்சி நீயெல்லாம் திருந்தவே மாட்டியா? ஒழுங்கு மரியாதையா ஃபோனை வை. நான் ஏற்கனவே அந்த கலர் ஜிகினா பார்ட்டி வந்து என் கண்ணை அவிச்சுட்டு போனதுல மூட்அவுட்டா இருக்கேன்" என்றவன் வைத்துவிட,

"ராஜா நேரமாகுது கிளம்பலாமா? " பவதி தம்பியை அழைத்து கொண்டிருந்தாள். தேநீர் அருந்தி விட்டு சற்று இளைப்பாற வண்டியை நிறுத்தியிருந்தார்கள்.

"வர்றேன் கா.. " பதில் சொன்னவனுக்கோ மனம் முழுவதும் மனையாளின் மத்தாப்பூ ஜாலங்கள். ஆம்!! பாவனைகளின் அரசி அவள். நினைத்ததை காட்டும் பளிங்கு முகமென்பது சாலப்பொருத்தமானது தீக்ஷண்யாவிற்கே. கோபமோ சிரிப்போ அழுகையோ சுணக்கமோ கொண்டாட்டமோ சூழ்நிலையின் நிலைத்தன்மையை அவளது முகத்தில் நொடியில் கண்டுவிடலாம்.

அவனைப்பிரிந்த அன்றும் அப்படித்தான். அவன் மீதான அதிருப்தியை , அரளிப்பழமாய் சிவந்த அழுத விழிகளுடன் அவனை பிரிந்து சென்ற போது காட்டி விட்டு தான் சென்றாள். அன்றைய சூழலில் அவனும் அமைதியை தான் கடைபிடிக்க வேண்டியிருந்தது அதில் தான் அனைவரின் நலமும் அடங்கியிருந்தது.

அமைதியாக ஏறி காரில் அமர்ந்த தம்பியை கவலையுடன் பார்த்தாள் பவதி. மூத்தவளை விட இளையவளுக்கு தம்பியின் மேல் அலாதி பிரியம். தோழமையுடன் பழகும் பவதியுடன் தான் இராவணனும் சற்று இலகுவாக பேசுவான். சொர்ணத்திடம் தான் அனைவருக்கும் மூத்தவள் என்ற அதிகார உணர்விருக்கும்.

"நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு கேட்கலை ராஜா? அவ மாசமா இருக்கான்னு தெரிஞ்சப்பவே நீ சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துருக்கனும். இப்பவும் பிள்ளை பிறந்து இத்தனை மாசம் கழிச்சு நாம போறது?! எனக்கென்னவோ கஷ்டமா இருக்கு! அத்தை முகத்தில் எப்படி முழிக்கிறது" தீக்ஷண்யாவின் தாய் நல்ல விதமாகவே நடந்து கொள்வார் என்றாலும் , நேரில் பார்க்க வேண்டும் எனும் போது, குற்ற உணர்வாக தான் இருந்தது.

"விடு பவதி. புருஷன் பொண்டாட்டி விஷயத்துக்குள்ள ஓரளவுக்கு மேல நாம கருத்து சொல்ல முடியாது. மச்சான் ஏதாவது காரணமில்லாம இப்படி செஞ்சிருக்க மாட்டான்" மனைவியின் ஆதரவாக தோளோடு அணைத்து கொண்டு, மைத்துனனுக்கு ஆதரவாக பேசினான் பவதியின் கணவன் பைரவன்.

"ஆமா!! உங்க போலிஸ் மூளைக்கு மட்டும் தனியா தெரிஞ்சுதாக்கும்?! " கணவனிடம் சடைத்து கொண்டவள், ' இதென்ன தம்பி முன்னாடி கை போட்டுகிட்டு!! கையை எடுங்க' கையை எடுத்து விட, அடக்க மாட்டாது சிரித்தான் அவளது கணவன்.

"பவிம்மா.. மச்சான் எனக்கும் ஒருபடி மேல... தங்கச்சியை கல்யாணம் பண்ண அன்னைக்கே செருப்பா இடறி சுளுக்காயிடுச்சுன்னு ஆரத்தி எடுக்க எல்லார் முன்னாடியும் அவளை தூக்கிட்டு நின்னவனாச்சே" என்றவன் இன்னும் அழுத்தமாக பவதியின் தோள்மேல் கை போட்டு கொள்ள அவள்பாடு தான் திண்டாட்டமாகி போனது.

இராவணனுக்கு அந்த நான் நினைவு வந்தது. " பூக்குவியலை அல்லவா கையில் அள்ளி இருந்தான்.. ஒருமுறை அந்தரங்கமான ஒரு தருணத்தில் கூட அவளை கேலி செய்திருக்கிறான். பூசினாப்புல புசுபுசுன்னு முயல்குட்டி மாதிரி இருக்க ஜிங்கிள்ஸ்... ஆனால் உன்னை தூக்கினா வெயிட்டே இல்லையே?! கட்டுச்சோற சாப்பிடறியா? இல்லை காற்றை சாப்பிடறியா?" நினைவுகள் சுகமாய் நிந்தித்தாலும், டிரைவரிடம் வண்டியை நிறுத்த சொல்லியிருந்தவன்,

"மாமா.. ஒரு சின்ன வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு வந்துடறேன். நீங்களும் அக்காவும் முதல்ல தீக்ஷண்யாவை போய் பாருங்க" என்றவனின் பார்வையில் அவள் கணவனுக்கு ஏதும் சங்கேதம் சொல்கிறானோ என்ற ஐயம் பவதிக்கு எழுந்தாலும்,

"இப்ப என்ன ராஜா வேலை? ஒழுங்கா நீ எங்ககூட வா" என,

"விடு பவி. வீடு இங்கிருந்து பத்து நிமிஷம் தானே?! நீ கொஞ்சம் வந்து சீக்கிரம் வந்துருயா மச்சான். நீங்க வண்டி எடுங்க" பைரவனின் ஆணையில் கார் நேராக தீக்ஷண்யாவின் வீட்டின் முன்தான் நின்றது.
வீட்டு வாயிலில் நுழையும் போதே, பிள்ளையின் சத்தம் வீறிட்டு கேட்க,
"அம்மா போதும்மா.. இவ்வளவு சூடா தண்ணி ஊத்தி வேண்டாம்" என்ற தீக்ஷியின் குரலும்,

"தாய் வளர்க்காத பிள்ளையை கூட தண்ணி வளர்க்கும் சொல்வாங்க. நீ சும்மா இரு" மகளை அதட்டினார் மகாலட்சுமி.

மருமகனின் குரல் காதுக்கு இனிமையாக இருக்க, கணவனை சந்தோஷத்துடன் பார்த்தாள் பவதி. மனைவியின் சந்தோஷத்தில் பைரவன் அவளருகே நெருங்கி நின்றவன், " நீ இப்பகூட ஊன்னு சொல்லு அடுத்த வருஷமே நம்ம பிள்ளை ரெடி ஆயிரும் பவிக்குட்டி" என, வெட்கத்துடன் கணவனை பார்த்தவள்,

"உள்ளே வரலாமா?!" சந்தோஷத்துடனே குரல் கொடுக்க,

"அவங்க ஊற்றி முடிக்கிற வரைக்கும் .நீ பிள்ளை பக்கத்துல நில்லு. நான் போய் யாருன்னு பார்க்கறேன்" தீக்ஷியின் அம்மா வெளியே வரும் அரவம் கேட்டது.

வந்தவர் சிரித்த முகத்துடன் நின்றிருந்த பவதியை பார்த்தவருக்கு , அவரது முகத்திலும் ஒரு நிம்மதி கலந்த புன்னகை பரவியது.

"அடடே வாம்மா மருமகளே.. வாங்க தம்பி.. " சந்தோஷத்துடன் வரவேற்க, பவதியின் அலைபேசி அழைத்தது. மாறன் தான் அழைத்து கொண்டிருந்தான்.
அழைப்பை ஏற்றவள்," என்னடா இப்ப கால் பண்ணிருக்க? " என,
"ஏன் உன் புருஷன் அந்த போலிஸ்கார் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்காரா? இங்க பாரு மை ரெண்டாவது டாவு... இருந்தாலும் அந்த போலிஸ் ஓவர் ரொமான்டிக்போலிஸா இருக்காரு... ஏதோ நீ என்னை விட நாலு வயசு மூத்தவளா போயிட்டன்னு உன்னை அந்த ஆளுக்கு விட்டு கொடுத்துருக்கேன்.
என்னை கடுப்பேத்துனாரு.. நானும் ஒரு பொண்டாட்டியை கட்டி!! உங்க முன்னாடி கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சி கடுப்பேத்திருவேன் பார்த்துக்கங்க" என,

"போடா லூசு மண்டையா" சொல்லிவிட்டு அடக்கமாட்டாது சிரித்தாள் பவதி.
மனைவியின் சிரிப்பில்," யாரு அந்த காதல்மன்னனா?" என, சத்தமில்லாது தலையாட்டினாள் பவதியும்.

"சரி என் தோஸ்து அவன் வியாபார கிளையை பரப்பி விட்டு வந்துட்டானா? கொஞ்சம் கால் பண்ணி ஞாபகப்படுத்து.. நான் பண்ணா எடுக்கலை அவன். தீக்ஷிமா நல்லா இருக்கா?" என நலம் விசாரிக்க, இதற்குள் உள்ளே சென்று பிள்ளயை தூக்கி கொண்டு மகளையும் அழைத்து வந்தாள் மகாலட்சுமி.

"வாங்கண்ணா‌..‌" பைரவனை வாய் நிறைய அழைத்தவள், பவதியை பார்த்து
"வாங்க" என்றதோடு முடித்து கொண்டாள் தீக்ஷி.

"இப்பதான் உள்ள நுழைஞ்சுருக்கோம்.. நீ ஃபோனை வை" மாறனின் அழைப்பை துண்டித்தவள், தீக்ஷியின் ஒட்டாத தன்மையை கண்டு கொள்ளாது,

"நல்லாருக்கியா தீக்ஷி?" சிரித்த முகத்துடனே அவளை நலம் விசாரித்தவள், கழுத்திருந்த சங்கிலியை கழற்றி கொண்டே மகாவின் அருகில் சென்றவள், அவர் வைத்திருந்த பிள்ளையின் கழுத்தில் அணிவித்து,

"டேய் மருமகனே " என்று தூக்கி கொஞ்ச, அதை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் பைரவனும். அவளின் செயலில் தீக்ஷிக்கு தான் சங்கடமாகி போனது. தன்னையறியாது கண்கள் வாயிற் புறம் நோக்க, பைரவனின் கண்களுக்கு அது தப்பவில்லை.

அவள் எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றம், அவளது முகத்தில் கோபமாக மாறுவதையும் கவனித்து கொண்டு தான் இருந்தான். இதற்கிடையில் குழந்தையை பவதியிடம் கொடுத்து விட்டு, மகாலட்சுமி அனைவருக்கும் காஃபி கலந்து எடுத்து வர, ஏமாற்றம் தாளாது,
"நான் குழந்தைக்கு பவுடர் அடிச்சுட்டு கொண்டு வரேன் அண்ணி. நீங்க காஃபி எடுத்துக்கங்க" என்றவள் குழந்தையை வாங்கிக்கொண்டு அவளறைக்குள் நுழைய, சரியாக உள்ளே நுழைந்தான் ராவணன்.

"வா ராஜா.."

"வாங்க மாப்பிள்ளை" என்ற அழைப்புகள் அடுத்தடுத்து காதில் விழுந்தாலும், ஒரு இனம்புரியா தவிப்புடன் , கோபமா ஆற்றாமையா? என்று பிரித்தறிய முடியாது அமைதியாக பிள்ளையை தயார் செய்து கொண்டிருந்தாள் தீக்ஷி.

"நல்லாருக்கிங்களா அத்தை" ஆண்மை சுமந்த அவனது குரல் அவள் காது நரம்புகளை மயிர்கூச்செரிய செய்ய, இங்கே கெண்டவனின் நிலையோ?! வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு இருந்தது.

ஹாலில் அத்தனை பேர் இருந்தாலும், தன்னவள் இருந்து சென்றதற்கான அடையாளம் தான் தனியாக தெரிந்ததே?!

வெண்ணிலவு சுமக்கின்ற வெண்ணிலா பவுடரின் சுகந்தம்.. ஆம்!! தீக்ஷண்யா அவள் துணிகளுக்குள் இந்த வெண்ணிலா பவுடரை தான் வாசனை தரும் பொருளாக உபயோகப்படுத்துவாள். சுகந்தத்தின் சுகமோ?! சுமந்தவள் தந்த இதமோ?! ஏதோ ஒன்று வாசனை உணர்ந்த நொடி அவனின் மனம் லேசாக இருப்பதை அவனால் உணர முடிந்தது.

"அது என்னவோ தல!! என் க்ளோஸ் ஃப்ரெண்ட் சௌமியாவோட அப்பா பேக்கரி ஓனர். அவ மேல எப்பவும் இந்த வெண்ணிலா ஸ்மெல் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கு இந்த பவுடர் பிடிக்கும். அவளை பார்த்து எனக்கும் இது பிடிச்சு போச்சு " மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரும்போது தான் அவனை ' தல' என்று கூப்பிடுவாள்.

அவளது அறையே பார்த்து கொண்டிருந்து அப்படியே நின்றிருந்தவனை," உட்காருங்க மாப்பிள்ளை" மகாலட்சுமி இரண்டாவது முறையாக அழைக்க, சற்றே வெட்கத்தின் சாயலுடன் அமர்ந்தான் இராவணனும்.

"தேவி தரிசனம் கொடுக்கனுன்னு பக்தன் தான் எதிர்பார்க்கனும். புருஷன் அந்த பரமசிவத்தை போல் டக்குன்னு என்ட்ரி கொடுத்தரனும் மச்சான்" பைரவன் அவனை கலாய்க்க, தம்பியின் பார்வையில் ஏற்கனவே உள்ளே சென்றிருந்தாள் பவதி. இப்பொழுது ராவணனும் உள்ளே செல்ல, காபியுடன் மருமகனை பின்தொடர்ந்தார் மகா.
இராவணன் உள்ளே சென்று அமர, அவன் வரவை உணர்ந்தவளுக்கு இதயம் வேகமாக துடித்தது.. கோபத்தாலா?!
அவன் உள்ளே நுழைய, அப்பொழுது தான் பேச்சை‌ ஆரம்பித்தாள் பவதியும்.
"பிள்ளை பிறந்து இத்தனை மாசம் ஆச்சு. இப்பவாவது கிளம்பி வாம்மா தீக்ஷி" நாத்தனாரின் கோரிக்கைக்கு,

"இருக்கட்டும் அண்ணி. என் மனசுக்கு பிடிக்கறப்போதான் நான் கிளம்பி வருவேன்" தன்னையே பார்த்து கொண்டு எதிரில் அமர்ந்திருக்கும் கணவனை காண விரும்பாதவளாக, அண்ணிக்கும் அவள் சுவற்றை பார்த்து கொண்டே பதில் சொல்ல, கைகளை பிசைந்த வண்ணம் தம்பியை பார்த்தாள் பவதி.

"இந்த பொண்ணுக்கு கிறுக்கு தான் பிடிச்சு போச்சு பவிம்மா. இவ்வளவு பிடிவாதம் ஆகாதுன்னு சொல்லியும் கேட்கலை" வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே பேசினார் தீக்ஷிதாவின் அம்மா.

ஆனால் அவனோ மனைவியையும், கிள்ளை மொழியில் மிழற்றி கொண்டு விளையாடிக் கொண்டிருந்த மகனையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான்.

"நாங்க வேணுன்னா இனிமேல் வீட்டுக்கு வரலைடாம்மா. உனக்கான தனிக்குடித்தனத்திற்கான ஏற்பாடெல்லாம் பண்ணி வைச்சுட்டு தான் வந்துருக்கேன்" என்றவளின் பேச்சில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.

இவளாவது பரவாயில்லை, மூத்த நாத்தனார் சொர்ணம் இருக்கிறாளே?! நினைக்கையிலேயே பித்த உடம்பு தூக்க, தலையை ஆட்டி கொண்ட மனைவியை பார்க்க அவனின் கண்களில் ரசனை கூடியது.

ஏனோ அவன் மனைவி பிடிவாதம் பிடிக்கும் போதெல்லாம் அவனது "ஜிங்கிள்ஸ்" இன் கன்னத்தை சிவக்க கிள்ள வேண்டும் போலிருக்கும்.

"மயிலு என்னடா பார்த்துட்டே இருக்க? இந்த மாசத்தோட புள்ளைக்கு எட்டு மாதம் ஆகப்போகுது? இத்தனை மாசம் கழிச்சு நீங்க இரண்டு பேரும் ஒத்து வரலைன்னா எப்படி? நம்ம வழக்கத்துல ஆறாவது மாசமே முடி எடுத்துடுவோம். இரண்டு பேரும் பிடிவாதமாய் இருந்தா எப்படி?" என்றவள் ஆசுவாசமாய் அருகிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

'பேரை பாரு மயிலு! குயிலுன்னுட்டு' மனதில் அர்ச்சித்தாலும், ஒரு காலத்தில் என் செல்ல மயிலு ... மயில் ராவணா என கொஞ்சியதும் சேர்ந்தே ஞாபகம் வர, அந்த எரிச்சல் அவளது பேச்சிலும் வெளிப்பட்டது.

"போதும் பேச்சை விடுங்க அண்ணி. யாருகிட்டயும் நீங்க கெஞ்ச வேண்டாம்" என்றவளின் பேச்சுக்கு எதிர்பதில் வரவில்லை.

எதிர்சுவற்றில் நிழலாட, எழுந்து வந்திருந்தது அவனே தான்.
"இப்ப என்ன உன் கால்ல விழனுமாடி?" அவனது பேச்சில் தீக்ஷி அதிர்ந்து பார்த்தாள். அதுதானே அவனுக்கு வேண்டியதும்.

#ஈசனின் நேசன் அவன்
என் பிரிய‌ ராஜன் இவன்
என் இராவணன் #
💞💞💞💞💞